வானொலி மூலம் மாதந்தோறும் பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார். கொரோனா, ஊரடங்கு, தன்னிறைவு பாரதம், விவசாய திருத்த சட்டம் என 2020 ஆண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் (27.12.2020) பேசினார் பிரதமர் மோடி.
மே மாதம் அறிமுகப்படுத்திய தன்னிறைவு பாரதம் -(ஆத்ம நிர்மான் பாரத்) பற்றிய மக்களின் கடிதங்களைப் பற்றி நிகழ்ச்சியில் பிரதமர் முதலில் பேசினார்.
அப்போது அவர், ``வெளிநாட்டு பொம்மைகளை வாங்கி வந்த டெல்லி மக்கள் ஜண்டேவாலான் சந்தையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ள உள்நாட்டு தயாரிப்பு பொம்மைகளை விரும்பி வாங்குகிறார்கள். வியாபாரிகளும் இது 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமான' பொம்மை என்று பெருமையாக விற்கிறார்கள். தினசரி நாம் பயன்படுத்தும் பொருட்களில் பல அயல்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவற்றுக்கான மாற்றுகள், இந்தியாவிலேயே எளிதாகக் கிடைக்கின்றன. இனி நம் நாட்டு மக்களின் உழைப்பும், வியர்வையும் கலந்திருக்கும் பொருட்களையே வாங்க உறுதி எடுத்துக் கொள்வோம்.
இதனுடன் நமது தயாரிப்பாளர்களும் தங்கள் தயாரிப்புகளில் சற்றுக்கூட தரக்குறைவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பூஜ்யம் பாதிப்பு, பூஜ்யம் குறைபாடு என்ற எண்ணத்தோடு உலகத்தரம் வாய்ந்த பொருட்களை இங்கேயே உற்பத்தி செய்யவேண்டிய வேண்டிய காலம் கனிந்து விட்டது.
புல்வாமா, பட்காவ், கிஷ்த்வாட் போன்ற பகுதிகளில் வளரும் காஷ்மீரி குங்குமப்பூ அதன் மணம், மருத்துவப்பண்பு, சுவை, அடர்ந்த நிறம் ஆகிவற்றிற்காக உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பொருள். அதற்கு இப்போது புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்றுமதி பலமடங்கு அதிகரித்திருக்கிறது. இது தன்னிறைவு பாரதத்திற்கு பெரிதும் உதவும். விவசாயிகளும் இணையம் மூலம் விற்பனை செய்து லாபமடைந்து வருகின்றனர்” என்றார்.
மன் கீ பாத்-ல் மிளிர்ந்த தமிழர்கள்!
விழுப்புரத்தைச் சார்ந்த ஆசிரியை N.K. ஹேமலதா, ஊரடங்கு காலத்திலும் காணொலி மூலம் மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் எடுத்துள்ளார். அதனை தளத்தில் பதிவிட்டால் மற்றவர்களும் பலன்பெறுவார்கள் என்று குறிப்பிட்டார்.
கோவையைச் சேர்ந்த காயத்ரி, தனது தந்தையுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட ஒரு நாயிற்காக சக்கர நாற்காலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். அனைத்து உயிர்களிடத்தும் கருணை காட்டும் மனது படைத்தவர்கள் என்று பாராட்டியுள்ளார்.
கற்கும் பேரார்வம் ஏற்படுத்தும் ஆற்றல் பற்றிய ஒரு எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 92 வயது முதியவர் ஸ்ரீ டீ ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமி பற்றி குறிப்பிட்டுள்ளார். 16 ஆன்மீக நூல்கள் எழுதிய இவர் தனது 86 வயதில் கணிப்பொறி பயன்பாடு கற்று தனது நூலை கணிப்பொறியில் எழுதி முடித்துள்ளார்.
தொடர்ந்து, உலகெங்கிலும் சிறுத்தைப்புலியின் வாழிடமும் எண்ணிக்கையும் குறைந்து வரும் நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மத்திய பகுதியிலும் அதன் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டினார். கடந்த திங்களன்று அரசு வெளியிட்ட 'இந்தியாவில் சிறுத்தைப்புலியின் நிலை அறிக்கை 2018'யின்படி 2014 இல் 7,900 ஆக இருந்த சிறுத்தைப்புலி எண்ணிக்கை 2018ஆண்டின்படி 12,852 ஆக அதிகரித்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் கௌஷாம்பி சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள், பசுக்களைக் குளிரிலிருந்து காக்க வேண்டி, பழைய மற்றும் கிழிந்த கம்பளிகளைக் கொண்டு போர்வையை உருவாக்கி வரும் அன்பை குறிப்பிட்டார்.
ஜார்க்கண்டின் 6,000 மக்கள் தொகை கொண்ட கோர்வா பழங்குடியைச் சேர்ந்த ஹீராமன் 12 ஆண்டுகள் கடும் உழைப்பிற்குப் பிறகு, வழக்கொழிந்து போகும் நிலையிலிருந்த கோர்வா மொழிக்கான அகராதியை ஏற்படுத்தியிருப்பதை பாராட்டினார்.
source https://www.vikatan.com/news/general-news/modi-on-2020s-last-mann-ki-baat
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக