Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

ராமநாதபுரம்: காரங்காடு படகு சவாரி... புத்தாண்டு முதல் பயணிகளுக்கு அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அலையாத்தி காடுகள், அரிய வகை பறவை இனங்கள் போன்றவற்றை படகில் சென்று கண்டு ரசிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு புத்தாண்டு தினம் முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பின் இந்த சூழல் சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காரங்காடு சூழல் சுற்றுலா மையம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சதுப்புநில காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது காரங்காடு சமுதாயம் சார்ந்த 'சூழலியல் சுற்றுலா' தலம். கடந்த சில ஆண்டுகளாக ராமநாதபுரம் மட்டுமல்லாது தென் மாவட்டம் மற்றும் வட தமிழகத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தது இந்த சூழல் சுற்றுலா. ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் ராமநாதபுரம் - தொண்டி சாலையில் அமைந்துள்ள காரங்காடு சென்று அங்கு படகு சவாரி செய்து சதுப்புநிலக் காடுகளையும் அங்கு வலசை வரும் பறவைகளையும் கண்டு ரசித்து ஊர் திரும்புவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து சூழலியல் சுற்றுலா மூடப்பட்டது. இதனால் கொரோனா ஊரடங்கினால் முடங்கிக் கிடந்த உள்ளூர் மக்கள் முதல் வெளியூர் சுற்றுலா பயணிகள் வரை வெளியிடங்களுக்குச் செல்ல முடியாத நிலை உருவானது. கடந்த சில மாதங்களாக இந்த ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் மக்கள் சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கயாக் படகு பயணம்

இதைத் தொடர்ந்து கடந்த 9 மாத காலமாக தடை விதிக்கப்பட்டிருந்த காரங்காடு 'சூழல் சுற்றுலா படகு சவாரிக்கு' அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி முதல் காரங்காடு சூழல் சுற்றுலா படகு குழாம், மண்டபம் கடல் பகுதியில் உள்ள குருசடை தீவு, கீழக்கரை அருகே கடலின் நடுவே அமைந்துள்ள மணல் திட்டு ஆகியவற்றிற்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செல்ல அனுமதிக்கப்படுவதாக ராமநாதபுரம் உயிரின காப்பாளர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காரங்காட்டில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் படகு சவாரி, கயாக்கிங், நீரில் மூழ்கி அரியவகை தாவர இனங்களை காணுதல் போன்றவற்றை அனுபவிக்கலாம். கொரோனா முன்னெச்சரிக்கை உள்ளிட்ட அனைத்து வகையான பாதுகாப்பு வசதிகளுடன் படகு சவாரி செல்வதற்கு நபர் ஒருவருக்கு ரூ 200 கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கென 7598711620 என்ற சூழல் சுற்றுலா எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் முன் பதிவின் அடிப்படையில் சுவையான மீன் சாப்பாடு, நண்டு சூப், கணவாய் கட்லெட், நன்னாரி சர்பத் ஆகியனவும் சுற்றுலா பயணிகளுக்குக் கிடைக்கும்.

காரங்காடு: மீன் வறுவல்.

''காரங்காடு சூழல் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்கென உயிர் கவசம் (லைஃப் ஜாக்கெட்) அணிந்தபடி படகில் சென்று சதுப்பு நிலக்காடுகள் பற்றியும் அதன் அவசியம் குறித்தும், அக்காடுகளை பாதுகாப்பதற்கான நோக்கம் குறித்தும் அறிந்து கொள்வதுடன் அங்கு உள்ள பல்வகையான பறவைகளை பற்றியும் தெரிந்துகொள்ள இந்த சூழல் சுற்றுலா உதவும்'' என ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் கூறினார்.



source https://www.vikatan.com/news/travel/passengers-allowed-for-ramanathapuram-karankadu-boat-ride-from-new-year

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக