அந்தப் பெண்ணுக்கு வயது 13. இன்ஸ்டாகிராம் மூலம் 19 வயது இளைஞன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நேரிலும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அந்த இளைஞன் இந்தச் சிறுமியை ஒருநாள் அழைத்து தன் தனிப்பட்ட பிரச்னைகள் சிலவற்றைக் கூறி ‘ஊருக்குச் செல்கிறேன்... நீயும் வா’ என்று அழைத்திருக்கிறான். இந்தச் சிறுமி, தான் கிளம்பியது மட்டுமல்லாமல் ஒன்பது வயதான தன் தங்கையையும் கூட அழைத்துக் கொண்டு அவனோடு ரயிலில் கிளம்பிவிட்டாள்.
தன்னுடைய மகள்களை நீண்ட நேரம் காணாததால் அவர்களின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சிறுமிகளின் புகைப்படங்கள் காவல்துறையினரின் வாட்ஸ்அப் குரூப்களில் வேகமாகப் பரிமாறப்பட்டிருக்கிறது. கூட சென்றிருந்த 9 வயது சிறுமி பயணத்தின் நடுவே பயந்து அழத் துவங்கியதால் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையினருக்கு தகவல் வந்து பிறகு அந்தச் சிறுமிகள் 6 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
''என்னாங்க இது... பிக்பாஸ் பற்றி படிக்க வந்தா நியூஸ் வாசிச்சிட்டு இருக்கீங்க?'' என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். காரணமாகத்தான் எழுதியிருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தித்தாள்களில் வந்த மேற்கண்ட செய்தியை நீங்களும் வாசித்திருக்கலாம்.
எந்தவொரு குழந்தையும் பிறக்கும்போது மரபணு உள்ளிட்ட காரணங்களால் சில குணாதிசயங்கள் அவர்களுக்கு தன்னிச்சையாக அமைகின்றன. அவற்றைத் தாண்டி ஒரு குடும்பம் குழந்தையை எப்படி உருவாக்குகிறது என்பதைப் பொறுத்துதான் அந்தக் குழந்தை சமூகத்தில் பழகத் துவங்குகிறது. பிறகுதான் சமூகத்தின் பாதிப்புகள் அதற்குள் வரத்துவங்குகின்றன. ஆக குடும்பம் எனும் நிறுவனம்தான் ஒரு குழந்தையின் ஆளுமையை வடிவமைப்பதில் முதன்மையான காரணியாக இருக்கிறது.
ஷிவானியின் அம்மா வந்து போன சம்பவத்தை முதலில் சற்று விரிவாகப் பார்த்து விடலாம். பிக்பாஸ் வீட்டில் ஷிவானி தனித்தன்மையுடன் செயல்படாதது, பாலாஜியால் அதிகம் இன்ஃப்ளூயூயன்ஸ் ஆவது, அவரின் நிழலாக இருப்பது, டாஸ்க்கிலும் சரி, வீட்டு வேலைகளிலும் சரி ஆக்டிவாக இல்லாமல் சுணக்கமாக இருப்பது போன்ற காரணங்களினால் பார்வையாளர்களின் அதிருப்தியையும் எரிச்சலையும் நன்றாகவே சம்பாதித்துக் கொண்டார்.
உடனே வெளியேற்றப்பட வேண்டியவர்களின் பட்டியலில் ஷிவானி எப்போதுமே இருந்தார். இப்போதும் இருக்கிறார். ஷிவானியின் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் வாக்குகளினால்தான் அவர் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறார் என்பதில் எத்தனை சதவிகிதம் உண்மையிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அது உண்மையாக இருந்தால், ஒருவரை இந்தச் சமூகம் எந்தக் காரணத்திற்காக ஆதரிக்கிறது என்பதில் நாம் இன்னமும் நிறைய பின்தங்கியிருக்கிறோம் என்றே பொருள். ஒரு ஆளுமையின் மீதுள்ள கவர்ச்சியின் காரணமாக அரசியல் அதிகாரத்தையே தூக்கி அவரிடம் ஒப்படைக்கும் அபத்தத்திலிருந்து இன்னமும்கூட நாம் விடுபடவில்லை என்றால் நாம் பெரும்பாலும் அறிவுசார் சமூகமாக இயங்கவில்லை என்றே பொருள்.
“நீ ஏன் தனித்தன்மையுடன் விளையாடவில்லை?” என்பது தொடர்பாக ஷிவானியின் அம்மா கண்டிப்புடன் கேட்ட கேள்விகள் சரி. ஆனால் தன் பெண்ணை அவர் சுயசார்புடனும் தனித்தன்மைகள் உருவாகும்படியும் வளர்த்தாரா என்பது முதல் கேள்வி. இந்த நோக்கில் ஷிவானியின் அம்மாவிற்குத்தான் முதலில் கவுன்சலிங் தேவைப்படுகிறது. ஒருவர் அன்பை வீட்டிற்கு வெளியே தேடுகிறார் என்றால் வீட்டிற்குள் அது போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை என்றே பொருள்.
இரண்டாவது அவர் கேட்ட சில கேள்விகளும் காட்டிய கறார்தனமும் ஓர் எல்லை வரை சரிதான் என்றாலும் அந்த இடமும் சூழலும் அதற்குப் பொருத்தமானது அல்ல. ஓர் அதிர்ச்சி வைத்தியம் தந்து தன் மகளை எழுப்ப வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அதற்காக அவர் பின்பற்றிய தொனியும் எல்லை மீறிய கண்டிப்பும் மிகையானது. சமயங்களில் அது பேக் ஃபயர் ஆகிவிடலாம். ஒரு குழந்தையை மிரட்டி, அடித்து, கண்டிப்பான நோக்கில் எந்த விஷயத்தை நாம் வலியுறுத்துகிறோமோ, நம் தலை மறைந்ததும் குழந்தை அதைத்தான் பெரும்பாலும் செய்யும்.
இதற்கு மாறாக குழந்தையை அமர வைத்து ஒரு விஷயத்தின் சாதக பாதகங்களை பேசி புரிய வைத்து, அன்பு, பொறுமை, நிதானம், மனமுதிர்ச்சி போன்றவற்றால் தொடர்ந்து முயன்றால்தான் மாற்றம் தெரியும். உதாரணத்திற்கு பாலாஜியிடமுள்ள எதிர்மறையான குணாதிசயங்ளை பொறுமையாகச் சுட்டிக் காட்டி மனமாற்றத்தை ஏற்படுத்த முயலும் கமலின் அணுகுமுறையைக் கவனியுங்கள். மிகச் சிறந்த அணுகுமுறை என்பது அதுதான்.
‘'நீ ஏன் தனித்தன்மையுடன் விளையாடவில்லை’' என்று கேட்கும் ஷிவானியின் அம்மா, ஷிவானி முகம் கழுவும் சிறிய விஷயத்திற்கு கூட "அம்மா வரட்டுமா?” என்று அனுமதி கேட்கிறார். அவரும் ‘சரி’ என்று தலையாட்டுகிறார். தவறு எங்கே என்று புரிகிறதா?
இன்னொரு உதாரணம்: போட்டியாளர்களை வாக்குமூல அறைக்கு (ஆபீஸ் ரூம் சம்பவம்) அழைத்து ஊமைக்குத்தாக குத்திய பிக்பாஸ் ‘வெளியில் இதை சொல்லாதீர்கள்’ என்று அனுப்பிய போது ‘உள்ளே ஊசி போட்டார்கள்’ என்று ஒவ்வொருவரும் ஜாலியாக புளுகிய போது ஷிவானியின் உடனடி ரியாக்ஷன் இப்படித்தான் இருந்தது. "என்னது ஊசி போடறாங்களா... அய்யோ என் அம்மா கூட இல்லையே?” என்று அப்போது அச்சப்பட்டார். ஒரு சிறிய விஷயத்தைக் கூட சுயமாக யோசித்து முடிவு எடுக்க முடியாமல் ஷிவானி தடுமாறுகிறார் எனில், இது யார் தவறு?
“அப்ப பாலாஜிக்கு ஊட்டி விட்ட ரொமான்ஸ் காட்சில்லாம் அவங்க அம்மாவா வந்து சொல்லிக் கொடுத்தாங்க. அதெல்லாம் தன்னாலேயே செய்யத் தெரியுதில்ல?" என்று ஒரு கேள்வி எழலாம். அது உடம்பிற்குள் உள்ள வேறு டிபார்ட்மென்ட். இனப்பெருக்கம் எனும் காரணத்திற்காக உடம்பிற்குள் உள்ள ஹார்மோன்களின் குறும்பு அது. தன்னிச்சையாக அவை நிகழும். அதிலிருந்து எவருமே தப்பிக்க முடியாது. மேலும் விடலை வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சி என்பது தன்னிச்சையானது. இதை காதலாகக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதெல்லாம் பாலபாடம்.
இதற்காக ஷிவானியின் அம்மாவை ஒட்டுமொத்தமாக எதிர்மறை சித்திரமாக, வில்லியாக பார்க்கத் தேவையில்லை. அவர் தன் மகளின் மீது அன்பை, அக்கறையின் வளர்ச்சியை இன்னொரு கோணத்தில் ஓவராகக் காண்பித்து விட்டார். அவருடைய வளர்ப்பிற்கான பின்னணியிலும் விடை இருக்கலாம்.
‘'தன் மகள் சிறந்த நடிகையாக வர வேண்டும், போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்'’ என்கிற விருப்பம் ஷிவானியின் அம்மாவிற்குள் இருக்கிறது. அதே சமயத்தில் சமூகம் எதிர்பார்க்கும் விழுமியங்களுக்குள்ளும் தன் மகள் அடங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் கூடவே இருக்கிறது. இதற்கான தத்தளிப்புதான் கோபமாக அங்கு வெளிப்பட்டிருக்கிறது. தனிநபரின் தவறுகளை விடவும் ‘ஊர் என்ன சொல்லும்?' என்கிற அச்சமே ஒரு பெற்றோருக்குள் ஆழமாக இருக்கிறது. ஆணவக் கொலைகளுக்கு கூட இதுதான் பிரதான காரணம். ஏனெனில் மனிதன் ஒரு சமூக விலங்கு. அங்கிருந்து துண்டித்துக் கொண்டு அவனால் வாழ முடியாது.
ஷிவானி மீது தவறே இல்லையா என்கிற கேள்வி எழலாம். அவருடைய வயது பத்தொன்பது என்கிறார்கள். எனில் எந்த அளவிற்கு அவரிடம் மனமுதிர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை. அதிலும் பெரியவர்களே பல விதங்களில் அபத்தமாக இயங்கும் நம் சமூகத்தில் பிள்ளைகளை மட்டும் எப்படிக் குறை சொல்வது?
ஆனால் ஷிவானி சற்று யோசித்திருந்தால் இதைத் தாண்டி வந்திருக்க முடியும். சுற்றி நடக்கும் பல விஷயங்களைப் பார்த்துதான் ஒரு குழந்தை கற்றுக் கொள்கிறது. எனில் சக போட்டியாளர்களின் முணுமுணுப்புகள், புகார்கள், ஆட்டத்தில் அவர்களின் தீவிரமான செயல்பாடுகள், கமலின் வழிகாட்டல், அறிவுரை போன்ற பல விஷயங்களைக் கவனித்து ஷிவானியால் தன்னை சற்று மேம்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அதற்காக எந்தவொரு பெரிய முயற்சியையும் எடுத்ததாக தெரியவில்லை. ‘நான் நானாத்தான் இருக்கேன்’ என்கிற வசதியான காரணத்தைச் சொல்லிக் கொண்டு தன் சொகுசான வட்டத்தை விட்டு தாண்டி வராமலேயே இருக்கிறார்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்தால்தான் வானத்தில் சுதந்திரமாக பறக்க முடியும். பறவைகள், விலங்குகளுக்கு கூட தெரிந்திருக்கும் இந்த அடிப்படையான வாழ்வியல் முறை மனிதனுக்குத் தெரியாமல் இருப்பதுதான் ஆச்சர்யம்.
கடந்த சீசனில் லாஸ்லியாவின் அப்பா வரும் போதும் ஏறத்தாழ இதே மாதிரியான காட்சிகள் நடந்தேறின. ஆனால் லாஸ்லியாவின் மீதிருந்த கோபத்தில் இருந்து உடனே மீண்டு தன் அன்பைக் காட்டினார், அவரின் அப்பா. மிக குறிப்பாக கவினிடம் அவர் தன் கோபத்தைக் காண்பிக்காமல் சற்று பிரியத்துடன் பேசினார். இந்த விஷயத்தில்தான் ஷிவானியின் அம்மா மாறுபட்டார். அவர் ஒரு வார்த்தையாவது பாலாஜியிடம் பேசியிருக்கலாம். தொடர்ந்து பாராமுகமாகவே இருந்தது முதிர்ச்சியான அணுகுமுறை அல்ல.
இன்னொரு பக்கம் பாலாஜி குற்றவுணர்ச்சியால் கலங்கியதைப் புரிந்து கொள்ள முடிகிறது. என்னதான் வீராப்பாகவும் கெத்தாகவும் பேசினாலும் பாலாஜிக்குள் ஒரு குழந்தைமை பத்திரமாக இருக்கிறது. அவர் மனசாட்சி உறுத்தக்கூடிய ஒரு நபர். எனவேதான் ‘'என் செளகரியத்திற்காக அந்தப் பொண்ணை யூஸ் பண்ணிட்டேனோ'’ என்று நேர்மையாகக் கலங்குகிறார். தன்னால்தானே இப்படி நிகழ்ந்தது என்று குற்றவுணர்வு கொள்கிறார். '‘என்னை அவங்க அம்மா திட்டிட்டு போயிருந்தா கூட இத்தனை கஷ்டம் இல்ல'’ என்று பாலாஜி கலங்குவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
“நான் ஷிவானி கிட்ட பல முறை சொல்லியிருக்கேன். உன் தனித்தன்மையைக் காட்டு... நல்லா விளையாடுன்னு... என்னால இவ்வளவுதான் முடியும்ன்னு அவ சொல்றப்ப நான் ஃபோர்ஸா பண்ண முடியும்?” என்று பாலாஜி அனத்துவதில் நியாயமுள்ளது.
ஆனால் பாலாஜி மீதும் ஒரேடியாக தவறில்லை என்று சொல்லி விட முடியாது. தான் ஷிவானியிடம் நெருக்கமாகப் பழகும் காட்சிகள் பிக்பாஸ் எடிட்டிங் வழியாக ஊதிப்பெருக்கப்படும் என்பது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் ஆணை விடவும் பெண் மீதுதான் பழிகள் அதிகம் விழும் என்பது ஓர் ஆணுக்குத் தெரிய வேண்டும்.
தனித்தன்மையோடு விளையாடாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ஷிவானியின் மீது எனக்கும் சில விமர்சனங்களும் எரிச்சலும் இருப்பதை இந்தக் கட்டுரைத் தொடரில் பலமுறை பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இன்றுதான் அவர் மீது நிறைய பரிதாபம் ஏற்பட்டது. “இப்படி நீ பண்ணக்கூடாதும்மா" என்று தன் அம்மாவிடம் ஷிவானி கதறியது நெகிழ்வை ஏற்படுத்தியது. ஷிவானிக்குத் தெரிந்தது கூட அவருடைய அம்மாவிற்குத் தெரியாமல் போய் விட்டது. 85 நாள் ஆத்திரத்தையும் சில நிமிடங்களில் தன் பெண்ணிடம் கொட்டித் தீர்த்துவிட்டார். ஆனால் பிறகு சுதாரித்துக் கொண்டு தன் பெண்ணை அவர் செல்லம் கொஞ்சியது சுவாரஸ்யமான காட்சி. அதுதான் அம்மா!
இந்தக் கட்டுரைத் தொடரை வாசிக்கும் சில நண்பர்கள் நம்புவது போல் நான் ரம்யா ஆர்மியைச் சேர்ந்தவன் கிடையாது. (நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெசம்). பிக்பாஸின் துவக்கத்தில் ரம்யா அணிந்திருந்த கண்ணாடியை நான் தொடர்ச்சியாக கிண்டல் செய்த போது ‘பெண்ணிய நோக்கில்’ ஒரு ஆவேச கமென்ட் வந்திருந்தது. அது சரியானதுதான். எனவே ரம்யாவைப் பாராட்டுவது போல் சில வார்த்தைகளை விளையாட்டாக நான் எழுத ‘ரம்யா ஆர்மி’ என்று சிலர் கமென்ட் பாக்ஸில் ஆரம்பிக்க அப்படியான நண்பர்களுடன் செல்லச் சீண்டல்களுடன் ஒரு விளையாட்டு விளையாடுவதற்காக நான் சிலவற்றைத் தொடர அது வினையாகிவிட்டதுபோல!
எந்தவொரு போட்டியாளராக இருந்தாலும் சரி, அவரைப் பாராட்ட வேண்டிய சமயங்களிலும், விமர்சிக்க வேண்டிய சமயங்களிலும் என்னுடைய நோக்கில், நேர்மையாக என் பதிவுகளை எழுதுகிறேன் என்பதை நீங்கள் நம்ப வேண்டுகிறேன். ஆனால் சம்பந்தப்பட்ட ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒரு சில வரிகளை மட்டும் பிடித்துக் கொண்டு கமென்ட் பாக்ஸில் பொங்குவதைப் பார்க்கும் போது அவர்கள் மீது பரிதாபம்தான் ஏற்படுகிறது. சமூகத்தில் பிரபலமாக இருப்பவரின் மீது நாம் காட்டும் பிரியம் என்பது வேறு. ஆனால் அதுவே மிகையாக, ஆளுமைத் தொழுகையாக, வெறியாக மாறும் போதுதான் பிரச்னை.
ஓகே... எதற்காக இந்த வியாக்கியானம் என்றால், தன் அம்மாவின் கடுமையான வார்த்தைகளால் மனம் புண்பட்ட ஷிவானியை நெருங்கி வந்து சரியான வார்த்தைகளால் முதலில் ஆற்றுப்படுத்தியவர் ரம்யாதான். "உன் நல்லதுக்குத்தானே அம்மா சொல்லியிருப்பாங்க” என்றெல்லாம் பல்வேறு விதங்களில் முதிர்ச்சியுடன் ஷிவானியைச் சமாதானப்படுத்தினார். இது போன்ற சமயங்களில் ரம்யாவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ஒருவர் அந்நிய மனிதர்களுடன் எத்தனை இணக்கமாக பழகுகிறார், சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார், புதிய சூழலுக்குள் பொருந்துகிறார் என்பதைச் சோதிப்பதுதான் இந்த விளையாட்டின் அடிப்படையே. அதில் ரம்யாதான் டாப்பில் இருக்கிறார் என்பதைக் காண முடிகிறது. ஆரி பெரும்பாலான சமயங்களில் நேர்மையாக விளையாடினாலும் கோபமும் சண்டையும் அவருக்குச் சில சமயங்களில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்தத் தடையையும் அநாயசமாக தாண்டுகிறவர் ரம்யா.
கோபத்தில் வார்த்தைகளை இறைக்கிறவரை விடவும் ஒருவரின் தவறுகளைப் புன்னகையுடன் சொல்பவரை நாம் மிக எதிர்மறையாக பார்க்கிறோம் என்றால் பிரச்னை நம்மிடம்தான் இருக்கிறது. என்றாலும் புறணி பேசுதல், ஆரியை டார்க்கெட் செய்தல் போன்ற பலவீனங்கள் ரம்யாவிடமும் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும் மறுப்பதிற்கில்லை. இதர போட்டியாளர்களோடு ஒப்பிடும் போது அவரின் அணுகுமுறை முதிர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்கான உதாரணக்காட்சிகளை இன்று பார்த்தோம்.
“ஷிவானி அம்மா உன்கிட்ட வந்து பேசினா எதுக்கும் ரியாக்ட் பண்ணாதே" என்று பாலாஜியை முன்பே எச்சரித்த கேபியின் அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. "ஷிவானிக்கு ஏன் அட்வைஸ் பண்ணலை?" என்கிற ஆரியின் கேள்விக்கு, "ஒருத்தர் பர்சனலுக்குள்ள நாம ரொம்ப டீப்பா போக முடியாது. அப்படி சில விஷயங்களைச் செய்யப் போய்தான் எனக்கு பிரச்னை வந்தது" என்று ரியோ சொல்வதும் சரியே.
ஆரி ப்ரோதான் சிறந்த போட்டியாளர் என்பதாக ஷிவானியின் அம்மாவின் மனதிலும் பதிந்திருக்கிறது. எனவேதான் ஆரியை உதாரணம் காட்டி, ஆரி சொன்னதை மேற்கோள் காட்டி ஷிவானியைக் கண்டித்தார். போலவே ஆரியிடமும் சென்று ‘'நீங்க நல்லா விளையாடுறீங்க'’ என்று பாராட்டவும் செய்தார். ஒருவன் பரிபூர்ண ஒழுக்கவாதியாக இருப்பது கூட ஒருவகையில் சலிப்புதான். உறுத்தாத குறைகளோடும் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காத பிழைகளோடும் ஒருவர் இயங்குவதுதான் சுவாரஸ்யம்.
சலிப்பாக சென்று கொண்டிருந்த கடந்த சில நாட்களை சுவாரஸ்யம் ஆக்கியது இன்று நடந்த ‘ஃப்ரீஸ் டாஸ்க்’. கொரானோ காரணங்களால் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே வருவார்களோ, இல்லையோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த போது பார்வையாளர்களை ஏமாற்றாமல் பிக்பாஸ் டீம் இதைச் சாதித்தது பாராட்டுக்குரியது.
ஷிவானி எதிர்கொண்ட ‘அமில பரிசோதனை’ குறித்து இந்த வார பஞ்சாயத்து நாளில் கமலுக்குச் சொல்ல நிறைய இருக்கும். இது போன்ற விஷயங்களைக் கையாள்வதில் அவர் கில்லி. எனவே மிகச் சரியாக ஷிவானியை வழிநடத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
ஷிவானியின் விருந்தினர் டிராமாவை அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டது பாலாஜியின் சகோதரர் வருகை. குற்றவுணர்ச்சியால் கலங்கிக் கொண்டிருந்த பாலாஜிக்கு இதுவொரு சிறந்த பரிசு. அவரது அண்ணனே வந்தது அவரது மூடை மாற்றியது. பாலாஜியைப் போலவே அவரது அண்ணனும் சற்று அராத்தாக இருந்தார். (அதே மாதிரியான பூ போட்ட சண்டை). அண்ணன் ரமேஷ் சிரிப்பும் கும்மாளமுமாக பாலாஜியுடனும் சக போட்டியாளர்களுடன் பேசிய அனைத்துமே சுவாரஸ்யமான காட்சிகள்.
“நல்லாத்தான் போயிட்டு இருக்கு. நல்லாத்தான் பண்றே. டைட்டில் அடிச்சிட்டு வா... நீ பழையபடி கொஞ்சம் மாறு. ஒரு முடிவு எடுத்துட்டா அதுல உறுதியா நில்லு. உனக்கும் ஷிவானிக்கும் நடுவுல தப்பா நடக்கறா மாதிரி நெகட்டிவா எதுவும் வெளில தெரியல" என்ற ரமேஷ், "அப்படி ஏதும் இருக்கா என்ன?” என்று மெல்லிய சந்தேகத்துடன் கேட்டது ஜாலி பட்டாசு.
"டேய்... என்னைப் பத்தி உனக்குத் தெரியாதாடா” என்று பாலாஜியும் பதிலுக்கு கேட்டதும் சுவாரஸ்யம். "ஷிவானியின் மீது தனக்கு காதல் எல்லாம் கிடையாது. நாங்கள் நல்ல ஃப்ரெண்ட்ஸ்தான்" என்பதை பாலாஜியும் பல முறை தெளிவாகவே பதிவு செய்திருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் ஷிவானி இத்தனை நாட்கள் போட்டியில் நீடித்ததே பாலாஜி தந்த ஆதரவு மற்றும் உதவியால்தான் என்பதையும் மறுக்க முடியாது.
"ஒரு அண்ணனா... எனக்கு ஏதாவது அட்வைஸ் பண்ணுடா” என்று பாலாஜி விளையாட்டாக கேட்டு வாங்கியதும் "சரி... நல்ல விஷயங்களைச் சொன்னே... காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கறேன்" என்று அவர் குறும்பு செய்ததும் சகோதரர்களுக்குள் மட்டுமே காணக்கூடிய ஜாலியான குறும்புகள். பாலாஜிக்கு நிகரான நகைச்சுவையையும் குறும்பையும் ரமேஷ் வெளிப்படுத்தினார். "சாப்பிடறீங்களா?” என்று ரம்யா கேட்டதற்கு "நீங்க செஞ்ச உப்புமால்லாம் பார்த்தேன். அய்யோ வேணாம்" என்று ஜாலியாக அலறியது சுவாரஸ்யமான காட்சி.
இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் இன்னமும் நிறைய சென்டி டிராமாக்களும் சுவாரஸ்யங்களும் நிகழும் என்று நம்புவோம்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/freeze-task-begins-bigg-boss-tamil-season-4-day-86-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக