Ad

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

500 வகையான ரகங்கள்... வேலூரில் களைகட்டிய காய்கறித் திருவிழா!

வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழாவை தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு நேற்று முன்தினம் (26.2.23) நடத்தியது.

மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா

இந்தத் திருவிழாவில் வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு மரபு விதைகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். இந்த மாபெரும் திருவிழாவில் 80 வகையான கிழங்குகள், 70 வகையான தக்காளிகள், 45 வகையான பூசணிக்காய், 40 வகையான சுரக்காய்கள், 30 வகையான கத்திரிக்காய்கள், 65 வகையான மிளகாய்கள் என சுமார் 500 வகையான பாரம்பர்ய மரபு ரகங்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததால், இந்த மாபெரும் மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா களைகட்டியது. பொதுமக்கள் வரிசையாக இந்த மரபு ரகங்களைப் பார்வையிட்டு ஆங்காங்கே நின்றிருந்த விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் இந்த மரபு ரகங்களைப் பற்றியும் இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

103 கிலோ வெற்றிலைவள்ளிக் கிழங்கு...

இந்த திருவிழாவில் சக்கரைவள்ளி கிழங்கு, காட்டுவள்ளிக் கிழங்கு, வெற்றிலை வள்ளிக் கிழங்கு, கொடி உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு என சுமார் 80 வகையான கிழங்கு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் காவிதண்டலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் என்பவரின் தோட்டத்தில் இரண்டு ஆண்டுக் காலம் விளைந்த சுமார் 103 கிலோ எடை கொண்ட வெற்றிலைவள்ளிக் கிழங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த கிழங்கு அறுவடை செய்த போது சுமார் 120 கிலோ எடை இருந்ததாகவும், அறுவடை செய்து சில நாட்கள் ஆனதால்  நீர்சத்து சற்று குறைந்து தற்போது 103 கிலோ எடை இருப்பதாகவும் இந்தக் கிழங்கை விளைவித்த விவசாயி விஸ்வநாதன் தெரிவித்தார்.

மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா

பூசணி, தக்காளி, கத்திரி, மிளகாய்கள்...

இந்தத் திருவிழாவில் குடம் பூசணி, நாம பூசணி, சிட்டு பூசணி, கூம்பு பூசணி, வரி பூசணி என சுமார் 1 கிலோ எடை கொண்ட பூசணி முதல் 15 கிலோ எடை கொண்ட பெரிய பூசணி வரை 45 வகையான பூசணிக்காய்களும், கறுப்பு வால் தக்காளி , சிவப்பு வரி தக்காளி உள்ளிட்ட நாம் அன்றாட வாழ்வில் பார்க்காத பல வகை தக்காளிகள் காட்சிப்படுத்தப்பட்டது நம்மை பிரமிக்க வைத்தது.

கோவை வரி கத்திரி, பச்சை தொப்பி கத்திரி, இலவம்பாடி முள் கத்திரி உள்ளிட்ட நம் மரபு கத்திரிக்காய்கள் பார்க்கும்போதே நம் நாக்கில் சுவை எட்டிப் பார்க்கிறது. மேலும் இந்த திருவிழாவில் பல வகை சுரக்காய்கள், மிளகாய்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தத் திருவிழா குறித்து விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உழுது உண் சுந்தர் கூறுகையில் "கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து அழிவின் விளிம்பில் இருந்த பல்வேறு மரபு காய்கறிகள் மற்றும் விதைகளை மீட்டெடுத்து வருகிறோம். நாங்கள் மீட்டெடுத்த விதைகள் மற்றும் காய்கறிகள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை எடுத்துகூறி அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் நோக்கத்தில்தான் இந்த திருவிழாவை நடத்துகிறோம்.

மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா

அடுத்த தலைமுறை நஞ்சில்லா உணவை உட்கொள்வதற்கும் , ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கும் இது போன்ற திருவிழாக்கள் முக்கிய காரணியாக இருந்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்த திருவிழாவிற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். நம் மரபு விதைகள் தமிழ்நாடு முழுவதும் பரவ வேண்டும் என்பதற்காக திருவிழாவில் பங்கேற்ற விவசாயி களுக்கு மரபு விதைகளை இலவசமாக வழங்கி அந்த விதையை வைத்து அவர்கள் மூலமாக ஒரு நாலு விவசாயிகளுக்கு மரபு விதைகளைக் கொடுக்க அறிவுறுத்தி வருகிறோம்" என்றார்.

விழாவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த மரபு விவசாயிகள், மரபு விதைகள் முக்கியத்துவம் பற்றியும், அதை விளைவிப்பது பற்றியும் தங்களுடைய கருத்துகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா

இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இன்றைய இளம் தலைமுறை இளைஞர்கள் இந்தத் திருவிழாவில் அதிக அளவில்  கலந்துகொண்டு நம் மரபு விதைகள் மற்றும் காய்கறிகள் பற்றி தெரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் மரபு விதைகளையும் அதிக அளவில் வாங்கிச் சென்றது நமக்கு பெரும் நம்பிக்கை அளித்தது.



source https://www.vikatan.com/agriculture/organic-farming/500-varieties-of-traditional-varieties-weeded-vegetable-festival-in-vellore

லம்போகினி காரை வெறும் 100 ரூபாய்க்கு வாங்கிய ஸ்காட்லாந்துகாரர்! ஆனால் அதன் பின்பு நடந்த சோகம்?!

‘லம்போகினி கார் யாருக்கெல்லாம் பிடிக்கும்; கை தூக்குங்க’ என்றால், நிச்சயம் அந்த லிஸ்ட்டில் நீங்களும் இருப்பீர்கள்! அந்தக் காளையின் லோகோவைப் பார்த்தாலே முதுகு சில்லிடும்!

5,000 சிசி இன்ஜின்… V10… அதாவது 10 சிலிண்டர் (நாம் ஓட்டுகிற சாதாரண காரில் 4 தான் பாஸ் இருக்கும்!)... 471 குதிரை சக்தி… என்று டெக்னிக்கல் அம்சங்களிலேயே புல்லரிக்க வைக்கும். இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 3 கோடியில் இருந்து 4 கோடி வரை. அப்படிப்பட்ட லம்போகினியில் வெரைட்டியான மாடல்கள் இருப்பது பலருக்குத் தெரியும். ஆனால், மேலே சொன்ன டெக்னிக்கல் அம்சங்களைச் சொன்னதும், அட ‘ஹூராகேன்’ என்று நிமிர்ந்து உட்கார்வார்கள் கார் ஆர்வலர்கள். அப்படிப்பட்ட லம்போகினியை வாங்குவது… இல்லை இல்லை ஒரு தடவையாவது ஓட்டிவிட வேண்டும் என்று வாழ்நாள் லட்சியம் கொண்டவர்களெல்லாம் இருக்கிறார்கள்!

‘பில்ட்அப் விடாம விஷயத்துக்கு வா தம்பி’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த க்ராண்ட் பர்னட் என்கிற 24 வயது இளைஞர் ஒருவர், 99 Pence இங்கிலாந்து காசில்… அதாவது இந்திய மதிப்பில் 100 ரூபாய் மட்டுமே செலவழித்து ஒரு லம்போகினி காரை வாங்கியிருக்கிறார். எப்புட்றா?
விபத்துக்குள்ளான லம்போகினி

அதாவது, ஒரு வீக் எண்டில் சும்மா 100 ரூபாய்க்கு ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கியவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். ஆம், அவருக்குப் பரிசாக விழுந்தது 4 கோடி ரூபாய் லம்போகினி கார். அவர் லாட்டரியில் பரிசு வென்றதை அடுத்து, ஒரு லம்போகினி ‘ஹூராகேன்’ (Huracan) ஸ்போர்ட்ஸ் கார் அல்லது 1,00,000 யூரோ – இரண்டில் ஏதாவது ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என அவருக்கு இரண்டு விருப்பங்கள் கொடுக்கப்பட்டன. பர்னட், தனது டிரீம் காரான லம்போகினியை இதில் தேர்ந்தெடுத்தார்.

கிராண்ட் பர்னட் இதை வெகுவிமர்சையாகக் கொண்டாடும் வகையில், ஷாம்பெயின் பாட்டிலைக் குலுக்கியபடி அந்த 2 சீட்டர் லம்போகினி ஸ்போர்ட்ஸ் காரைப் பிரமாண்டமாக டெலிவரி எடுக்கும் நிகழ்வைத் தனது சமூகவலைதளப் பக்கங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். அவர் நினைத்ததுபோலவே இது மிகவும் வைரலாகப் பரவியது.

சில வாரங்கள் கழித்து, தனது பக்கங்களில் சோகமாக பர்னட்டின் பதிவு ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ‘என்னாச்சு’ என்று பார்த்தால்… புது லம்போகினி சில்லுச்சில்லாய் நொறுங்கியிருந்தது. ‘‘வாங்கி 2 மாசம்கூட முடியலை… இந்த விபத்து எப்படி?’’ என்று வலைதளங்களில் வைரலாய் கமென்ட்கள் வர… ‘நடந்தது இதுதான்’ என்று அவர் ஒரு பதிவிட்டிருந்தார்.

சாலையில் சென்று கொண்டிருந்தபோது மாடு ஒன்று குறுக்கே வந்ததாகவும், அப்பொழுது எதிர்பாராதவிதமாக விபத்து நடந்துவிட்டதாகவும், தனது உடைந்த லம்போகினியுடன் வருத்தமாக நின்று கொண்டிருந்தார் பர்னட். 

ஆனால், வலைதளங்களில் பர்னட் சொன்னதை யாரும் நம்பவில்லை.

Grant Burnet with Lamborghini

‘லம்போகினியைக் கன்ட்ரோல் பண்ணத் தெரியாமல் ஆக்ஸிடென்ட் பண்ணிட்டு நடிக்கிறியா?’... 

‘‘ஆடத் தெரியாதவனுக்கு எதுக்கு சலங்கை? ஓட்டத் தெரியாதவனுக்கு எதுக்கு லம்போகினி?’’

‘‘அநியாயமாக மாடு மேல் பழி போடாதீர்கள்’’ 

‘‘அர்ப்பனுக்கு அர்த்த ராத்திரியில் வாழ்வு வந்தா இப்படித்தான்’’ 

– எனும் ரீதியில் பர்னட்டுக்கு எதிராக கமென்ட்கள் குவிய ஆரம்பித்திருக்கின்றன. 

‘‘நானே லம்போகினி போயிடுச்சேனு நொந்து போயிருக்கேன். சொன்னா நம்புங்கப்பா" எனும் ரீதியில், உண்மையிலேயே மாடு முட்டித்தான் தனது லம்போகினிக்கு இப்படி ஆகிவிட்டது என்பதை விளக்கப் போராடி வருகிறார் க்ராண்ட் பர்னட். 

4 கோடி ரூபாய் கார், வெறும் 100 ரூபாய்க்குக் கிடைப்பதெல்லாம் யாருக்கு பாஸ் அமையும்! அதேநேரத்தில், இப்படி ஒரு துரதிர்ஷ்டமும் யாருக்கும் அமையாது!


source https://www.vikatan.com/automobile/car/scotland-man-bought-four-crores-worth-lamborghini-for-100-inr-but-crashes-it

அன்பு வணக்கம்!

எந்த கார், பைக் கம்பெனியானாலும் அவர்களின் கவனம் இப்போது மின்சார வாகனங்களின் மீதுதான். இதற்கான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில்தான் அந்நிறுவனங்கள் தீவிரமான கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் அறிமுகமான ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகனமான அயனிக் 5, கார் ஆர்வலர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. காரணம் - மின்சார வாகனங்களுக்கான குறிப்பிடத்தக்க உச்சமாக அது அமைந்தது. 631 கிமீ ரேஞ்ச் என்பதும், 10-80% சார்ஜ் செய்ய 18 நிமிடங்கள் போதும் என்பதும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மினிமலிஸ்டிக் டிசைன், விதவிதமான அம்சங்கள் ஆகியவை இன்னொருபுறம் பரசவத்தை ஏற்படுத்தின.

அயனிக் 5 ஆச்சரியம் அடங்குவதற்குள், முதல் முறையாக நம் நாட்டில் நடந்த மின்சார கார்களுக்கான Formula E பந்தயம் இந்தப் பரவசத்தை மேலும் பரவலாக்கியது. இது ஃபார்முலா 1 நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அகில உலக ரேஸ் என்பது முக்கியக் காரணம். இந்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதியன்று மெக்சிகோ நகரில் துவங்கிய ஃபார்முலா E பந்தயத்தின் நான்காவது சுற்று ஹைதராபாத் நகரின் உசேன் சாகர் ஏரியைச் சுற்றியிருக்கும் சாலையில் ஸ்ட்ரீட் ரேஸாக பிப்ரவரி 11-ம் தேதி நடந்தபோது, கரகோஷமிட்டு பந்தயத்தை ரசித்த ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் இந்தப் பரவசத்தைப் பார்க்க முடிந்தது.

பந்தயத்தில் யார் முதலில் வருகிறார்கள் என்பது மட்டும் முக்கியமல்ல; ரேஸின் முடிவில் போட்டியாளர்களின் கார் பேட்டரிகளில் எவ்வளவு சார்ஜ் எஞ்சியிருக்கிறது என்பதும் கணக்கில் கொள்ளப்பட்ட பந்தயம் இது. போட்டியின் கடைசி லேப்பில், ஒரே ஒரு சதவிகித பேட்டரி சார்ஜோடு சீறிப் பாய்ந்த கார்கள் கொடுத்த த்ரில் வேற லெவல். இந்தியக் கம்பெனியான டிசிஎஸ் ஸ்பான்சர் செய்த ஜாகுவார் அணியின் இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது ரசிகர்களின் உற்சாகத்தைச் சற்றே குறைத்தது. அதேபோல இந்தப் பந்தயத்தில் பங்கு பெற்ற மஹிந்திரா அணியின் ஆலிவர் ரோலாண்டின் கார் விபத்துக்குள்ளான போதும் ஆறாவது இடம் பிடித்தது. இப்படி இந்த மின்சார கார் பந்தயத்தில் பல `திக் திக்’ நிமிடங்கள்.

இதில் கலந்துகொண்ட 11 அணிகளைச் சேர்ந்த 22 டிரைவர்களும் ஓட்டிய 22 கார்களுமே 350Kw பேட்டரி கொண்ட கார்கள். இதில் அடங்கியிருக்கும் இன்னொரு பொறியியல் ஆச்சரியம் என்னவென்றால், கார்களை ஓட்டும்போது உற்பத்தியாகும் ரீஜெனரேட்டிவ் பவர் என்பது ஏறக்குறைய 250Kw. இந்தக் கார்களின் டாப் ஸ்பீடும் 320 கிமீ!

`கார்களுக்கான பரிசோதனைச் சாலைகள்' என்று ரேஸ் ட்ராக்கைக் குறிப்பிடுவார்கள். இது எத்தனை பொருள் புதைந்த வாக்கியம் என்பதை, ஃபார்முலா E பந்தயம் மேலும் ஒரு முறை நினைவுபடுத்தியது.

நன்றி!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/editorial/editor-page-15

01.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March - 01 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/01032023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

``திமுக-வுக்கு நம்பிக்கை இருந்தால், எதற்காகப் பரிசுப்பொருள்களைக் கொடுக்க வேண்டும்?”- வானதி சீனிவாசன்

மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த 'ஒருகோடி பெண்களுடன் செல்ஃபி’ என்ற நிகழ்ச்சியை பா.ஜ.க மகளிர் அணி நாடு முழுவதும் நடத்துகிறது. இதை மதுரையில் தொடங்கிவைத்த பா.ஜ.க மகளிர் அணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நிகழ்ச்சியில் பேசும்போது, "பெண்கள் தலைமை ஏற்கும் வகையில் முன்னேற்றம் வேண்டும் என்று பிரதமர் மோடி நினைப்பதால் ஆவாஸ் திட்டத்தில் 2 கோடி மக்களுக்கு வீடு வழங்கும்போது அதில் 85 சதவிகிதம் பெண்கள் பெயரிலேயே கொடுத்திருக்கிறார். இதனால், பெண்களை ஆண்கள் துன்புறுத்துவது குறைந்திருக்கிறது.

வானதி சீனிவாசன்

இன்று எல்லோருக்கும் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. எல்லாத் திட்டங்கள், மானியங்கள் மக்கள் கணக்குக்கு நேரடியாக வருகிறது. வங்கிக்கணக்கு உள்ள 48 கோடி பேரில் 55 சதவிகிதம் பெண்கள். புதிதாகத் தொழில் தொடங்கியிருக்கிற 1.66 கோடி பேரில் 85 சதவிகிதம் பெண்கள்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நம் நாட்டில் அதிகமான பெண் குழந்தைகள் பிறக்கத் தொடங்கியிருக்கிறது. பெண்களிடம் பணம் கொடுத்தால் அது குடும்பத்தைப் பாதுகாக்க உதவும் என்பதால், கொரோனா காலத்தில் பிரதமர் மோடி பெண்களுக்கு பணம் கொடுத்தார். அவர்கள் குடும்பத்தையும் நாட்டையும் முன்னேற்றுவார்கள்" என்று பேசியவர் பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நிகழ்ச்சியில்...

"பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம், இலவச சமையல் எரிவாயு, கழிப்பறை வசதி, ஜன் தன் வங்கிக்கணக்குகள் எனப் பல திட்டங்களால் பயன்பெற்ற ஒரு கோடி பயனாளிகளுடன் செல்ஃபி எடுக்கும் நிகழ்ச்சியை மகாராஷ்டிராவில் அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கிவைக்கிறார். இதுபோல் நாடு முழுவதும் மகளிர் அணியினர் நடத்துகிறார்கள். மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில் நான் தொடங்கிவைத்திருக்கிறேன். மத்திய அரசின் திட்டங்களால் அதிக அளவுக்குப் பெண் பயனாளிகள்தான் பயன்பெற்றிருக்கின்றனர்" என்றவரிடம்,

"மருத்துவ கல்வியில் மாற்றம் தேவை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளாரே?" என்ற கேள்விக்கு,

"உச்ச நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து, தீர்ப்பாக மாறாது. உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள். அதனால் நீட் தேர்வு தீர்ப்பு வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என்றார்.

வானதி சீனிவாசன்

"நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் ஆதரவைக் குறிவைத்து இது போன்ற நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கிறீர்களா?"

''அதெல்லாம் இல்லை, பிரதமர் மோடி ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதை மக்களிடம் கொண்டுசெல்லத்தான் இந்த நிகழ்ச்சி."

"அதேநேரம் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்களே?"

"பெட்ரோலிய பொருள்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாவதால் நம்மால் விலை நிர்ணயம் செய்ய முடியாது. ஆனாலும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்."

செல்ஃபி எடுக்கும் வானதி சீனிவாசன்

"ஈரோடு கிழக்குத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?"

"தி.மு.க-வினர், வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருள்களை வழங்கி அடைத்துவைக்கின்றனர். மக்களைச் சுற்றுலா அழைத்துசெல்லும் புதிய யுக்தியைக் கையாண்டு வருகின்றனர்."

"அ.தி.மு.க-வினர் மீதும் இது போன்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?"

"அதைத்தான் சொல்ல வருகிறேன். மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்ததாக சொல்லும் தி.மு.க-வுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் எதற்காகப் பரிசுப்பொருள்களைக் கொடுக்க வேண்டும்... ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது."

"பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கவிருப்பதாக தி.மு.க அறிவித்திருக்கிறதே?"

"தி.மு.க அரசின்மீது மக்களின் அதிருப்தி் கடுமையாக உள்ளது அதைச் சரிகட்டப் பார்க்கிறது. ஆனால், அது நடக்காது."

"பாலியல் துன்புறுத்தலால் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கிறதே?"

"இது போன்ற சம்பவங்களில் தமிழக அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் சிறுமி கூட்டுப் பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது"

" மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கப்படுமா... மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ்கள் முடிக்கப்பட்டு விட்டதே?"

"மற்ற திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இது பெரிய அளவிலான திட்டம். அதனால், ஜப்பான் நிதி நிறுவனம் விரைவில் நிதி வழங்கியதும் வேலைகள் தொடங்கும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vanathi-srinivasan-press-meet-at-madurai-after-selfie-program

திங்கள், 27 பிப்ரவரி, 2023

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெற்றால் பணி நீக்கம்… ஆட்சியர் அதிரடி!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாதத்தில் ஒரு நாள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண்மை துறை சார்ந்த பல அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வழிவகை செய்வர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அந்த வகையில் இந்த மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுகாவில் இருந்து 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்கு மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் வரை பணம் வசூலிக்கிறார்கள், மேலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

விவசாயிகளின் புகாரைத் தொடர்ந்து கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலிக்கப்படுவது குறித்து விவசாயிகள் எழுத்துபூர்வமாக புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட ஊழியரை உடனடியாக களை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங் களில் சட்டத்துக்குப் புறம்பாக பணம் வசூலிக்கப்பட்டால் தற்காலிக பணிநீக்கம் முதல் அனைத்துவித ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் உடனடியாகக் கடிதம் அனுப்ப உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர்

இதையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளும் கரவொலி எழுப்பி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/agriculture/government/mayiladuthurai-collector-has-warned-in-the-agricultural-grievance-redressal-meeting

"`எனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன் நிலைமை என்னாகும்'ன்னார். அப்படியே நடக்குது!"- ராஜசேகர் மனைவி தாரா

`நிழல்கள்' படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய ஹீரோ, சினிமா உதவி இயக்குநர், சின்னத்திரை நடிகர் எனப் பல முகங்களைக் காட்டி விட்டு மறைந்த ராஜசேகரின் (ராபர்ட்) மனைவி தாரா குடியிருந்து வரும் வீடு ஏலத்துக்கு வரவிருப்பதால், `அடுத்து எங்குச் செல்வது' எனத் தெரியாமல் கலங்கியபடி இருக்கிறார்.

'என்ன நடந்தது' எனக் கேட்டோம்.

"ஒளிப்பதிவாளராகத்தான் சினிமாவுக்குள் நுழைஞ்சார். 'ஒரு தலை ராகம்' படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான். பிறகு ராபர்ட்டுடன் சேர்ந்து படங்கள் இயக்கினார். 'பாலைவனச் சோலை', 'மனசுக்குள் மத்தாப்பூ'ன்னு சில படங்கள் இவர் இயக்கி ஹிட் ஆகின. பிறகு 'நிழல்கள்' படத்துல ஹீரோவா நடிச்சார்.

சினிமாவுல பிஸியா இருந்த காலத்துல சம்பாதிச்சதை குடும்பத்துக்காகச் செலவு செய்தார். அவருடைய சொந்தத் தங்கச்சியை நிறைய நகை போட்டு எம்.ஜி.ஆர். உறவினர் குடும்பத்துல கட்டிக் கொடுத்தார். நண்பர்களுக்காகவும் நல்லா செலவு செய்தார்.

முதல்ல நடிகை சரண்யாவைக் கல்யாணம் செய்து அந்தக் கல்யாணம் விவாகரத்துல முடிய இரண்டாவதா என்னைக் கட்டிக்கிட்டார்.

ராஜசேகர்

நல்லா சம்பாதிச்ச நாள்கள்ல சிக்கனம், சேமிப்புனு எதுவும் பண்ணலை. சினிமா ஓய்வு கொடுத்த சமயத்துலதான் திரும்பிப் பார்த்தா சொந்தமா வீடு கூட இல்லை. காசு, பணம்ன்னு கையில பெரிசா எதுவும் இல்லை.

அப்பத்தான் அவருக்கு ஒரு பயம் வந்தது. அது கூட அவர் குறித்த பயம் இல்லை. என்னை நினைச்சு வருத்தப்பட்டார்.

'நாளைக்குத் திடீர்னு எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, உன் நிலைமை என்னாகும்'னு புலம்பத் தொடங்கினார். காலம் கடந்த பின்னாடி புலம்பி என்ன ஆகப் போகுது?

அதனால 'விடுங்க, நடக்கறது நடக்கட்டும்'னு சொன்னேன்.

ஆனாலும் 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட சில சீரியல்கள்ல நடிச்சதுல கிடைச்சக் கொஞ்சம் காசை எடுத்துகிட்டு  மீதிக்கு வங்கியில கடன் வாங்கி வடபழனியில ஒரு ஃபிளாட்டை வாங்கினார்.

ஆனா அந்த வீட்டுக்கு முறைப்படி பால் காய்ச்சி குடிவர்றதுக்கு முன்னாடியே அவர் இறந்துட்டார். அவருடைய உயிரற்ற உடலைத்தான் கொஞ்ச நேரம் அந்த வீட்டுல வச்சுட்டு எடுத்துட்டு அடக்கம் பண்ணினோம்.

அவர் இறந்த ரெண்டாவது மாசமே வங்கியில இருந்து வந்துட்டாங்க. 'மீதிக் கடனை எப்படிக் கட்டுவீங்க'னு அவங்க கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கும் தெரியலை.

ஆனாலும் எனக்கு அங்கங்க இருந்து கிடைச்சதையெல்லாம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா ஆறு லட்சம் ரூபாய் வரை வங்கியில கட்டினேன்.

ராஜசேகர்

வீட்டின் மொத்த மதிப்பு 60 லட்சம். ஆரம்பத்துல 30 லட்சம் ரூபாய் கட்டினோம். பிறகு நான் கட்டினதையும் சேர்த்தா 35 லட்சத்துக்கு மேல கட்டியாச்சு. மீதிப் பணத்துக்கு நானும்தான் எங்க போவேன். எனக்கும் வயசு ஆகிடுச்சு. இனி என் சாப்பாட்டுக்கே என்ன பண்றதுனு தெரியாத ஒரு சூழல்தான்.

அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்த வாடகையை வாங்கி குறைஞ்ச வாடகையில ஒரு வீட்டைப் பிடிச்சு இருந்துட்டு வர்றேன்.

இப்படியான நிலைமையில இப்ப வீட்டை ஏலத்துக்கு விடறதை விட வேற வழி கிடையாதுன்னு வங்கியில சொல்லிட்டாங்க.

நடிகர்கள், இயக்குநர்கள், சின்னத்திரை நடிகர்கள் சங்கம்னு எல்லா சங்கத்துலயும் ராஜசேகர் உறுப்பினரா இருந்தார். அதனால ஆர்.கே.செல்வமணி சார் ஆபீஸ், டிவி நடிகர் சங்கம்னு பல இடங்களுக்கு உதவி கேட்டுப் போனேன். எங்கேயும் எதுவும் நடக்கலை. என்னுடைய நிலைமையை விளக்கி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தேன். ஆனாலும் இந்தத் தேதி வரை எதுவும் நல்லது நடக்கலை.

ரெண்டு நாளைக்கு முன்னாடி வங்கியில இருந்து பேசினாங்க. வங்கி அசோசியேஷன்ல இருக்கிற ஒருவரே அந்த வீட்டை ஏலத்துல எடுக்க முன் வந்திருக்கிறார். அதனால நீங்க முறைப்படி வீட்டை காலி செய்து தந்திடுங்க, அல்லது போலீஸைக் கொண்டு வந்து வெளியேத்த வேண்டி இருக்கும்னு சொன்னாங்க.

அவர் பயந்தது போலவே நடக்குது. இப்ப எனக்கு இந்த ஒரு வீடுதான் வாழ்வாதாரமா இருக்கு. இந்த வீட்டை இழந்துட்டா அடுத்து எங்க போறதுன்னே தெரியலை. ராஜசேகருடனான திருமணத்தை எங்க வீட்டுல யாருமே ஆதரிக்கலைங்கிறதால சொந்தக்காரங்க ஆதரவுன்னெல்லாம் எதுவும் எனக்கு இல்லை.

ஆதரவில்லாம இருக்கேன். உதவி கேட்டுப் போன சில இடங்கள்ல 'இவ்ளோ பெரிய தொகையை யாருங்க தருவாங்க'ன்னு கேட்டுட்டாங்க.

தாரா

எனக்கு ஒரேயொரு கேள்விதான். அதை அவர் உயிருடன் இருந்தப்ப அவர்கிட்டயே கேட்டேன். வயசான காலத்துல எதுக்குக் கடன் வாங்குறீங்க. இருக்கிற பணத்துக்கு வீட்டை வாங்கலாமேனு சொன்னேன். அவர்தான் வங்கியில லோன் தர்றதாச் சொல்றாங்கன்னு வாங்கினார். வங்கியும் இவர் எப்படித் திரும்பக் கட்டுவார்னு யோசிக்காம அன்னைக்குக் கடனைக் கொடுத்துட்டு இப்ப வந்து வீட்டை எடுத்துக்கறோம்னு சொல்றாங்க.

வங்கியில கடனை வாங்கிட்டு திரும்பச் செலுத்தக் கூடாதுங்கிற எண்ணம் இல்லை. வருமானத்துக்கு வழியே இல்லைங்கிற போது என்ன செய்றதுன்னே தெரியலைங்க.

எந்த நேரத்துலயும் வீடு என்னை வெளியில தள்ளி ரோட்டுல கொண்டு வந்து நிறுத்திடலாம்கிற நிலையில கடைசி வேண்டுகோளா சினிமா தொடர்புடையவர்களுக்கும் முதலமைச்சருக்கும் கண்ணீருடன் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். 'இந்தப் பிரச்னையில இருந்து என்னை மீட்டு மிச்சமிருக்கிற நாள்களை நான் நிம்மதியா வாழ உதவி செய்யுங்க'ங்கிறதுதான் அந்தக் கோரிக்கை" என்கிறார் தாரா ராஜசேகர்.



source https://cinema.vikatan.com/television/director-rajasekar-wife-thara-talks-about-her-situation

சிவகாசி: அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக பெண் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை!

சிவகாசி மாநகராட்சியில் கடந்த 2022 நவம்பர் 29-ந் தேதி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகாசி மாநகராட்சி 5-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் இந்திராதேவி, ``மாநகராட்சி வருவாய்பிரிவு அதிகாரிகள் சொத்துவரி தீர்வை மாற்றத்திற்கு லஞ்சம்கேட்டு எனது வார்டை சேர்ந்த பொதுமக்கள் அளித்த முறையீட்டு மனுவை பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பொதுமக்களிடம், அதிகாரிகள் கேட்ட லஞ்சப்பணத்தை மொத்தமாக நானே தந்துவிடுகிறேன்” எனக்கூறி தான் வைத்திருந்த பையிலிருந்து ரூ.1 லட்சத்து 10ஆயிரத்தை எடுத்து அதிகாரிகளை நோக்கி நீட்டினார்.

இந்திராதேவி

இந்தச்சம்பவம் குறித்து 43-வது வார்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ரவிசங்கர், நகராட்சிகள் நிர்வாக இயக்குனர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், தலைமை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்ட 7 அரசு உயர் அமைப்புகளுக்கு புகார் மனு அளித்துள்ளார்.

அந்தப்புகாரில், "மாநகராட்சி கூட்டத்தில் 5வது வார்டு கவுன்சிலர் இந்திராதேவி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது, பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது செய்த சத்தியப்பிரமாண உறுதிமொழி மற்றும் மாமன்ற மரபை மீறி செயல்பட்டதாகும். எனவே, கவுன்சிலர் இந்திராதேவி, மரபுகளை மீறி செயல்பட்டதால் அவரின் கவுன்சிலர் பதவியினை ரத்து செய்யவேண்டும்" என குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென நகராட்சி நிர்வாக இயக்குனரகம் உள்ளிட்ட அலுவலகங்களில் இருந்து சிவகாசி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் வரப்பெற்றதாக மாநகராட்சி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநகராட்சி

அதன்பேரில், கவுன்சிலர் இந்திராதேவி மீது நடவடிக்கை எடுப்பதற்கு சட்டரீதியான ஆலோசனை வழங்குமாறு உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மற்றும் மாநகராட்சி அரசு வழக்கறிஞருக்கு ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். சிவகாசி மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலரின் பதவியை ரத்து செய்யக்கோரிய புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கக்கோரி மாநகராட்சி ஆணையர், வழக்கறிஞர்களிடம் கேட்டுள்ளது கவுன்சிலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/governance/sivakasi-corporation-commissioner-discuss-to-disqualifying-dmk-councilor

இந்த வார ராசிபலன்: பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன்
மேஷ
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்


source https://www.vikatan.com/spiritual/astrology/weekly-astro-predictions-for-the-period-of-february-28th-to-march-5th

28.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February - 28 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/28022023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

வாகனங்களில் பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்பினால் ஆபத்தா? - இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!

சில நாள்களுக்கு முன்பு, `பாரத் பெட்ரோலியம் எச்சரிக்கிறது' என்ற ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் வலம் வந்தது. அதில், ``வரும் நாள்களில் வெப்பநிலை உயரும் என்பதால் அதிகபட்ச வரம்புக்குள் உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப வேண்டாம். இது எரிபொருள் தொட்டியில் வெடிப்பை ஏற்படுத்தும், தயவு செய்து உங்கள் வாகனத்தில் பாதி நிரப்பி காற்று வருவதற்கு இடம் அளிக்கவும். இந்த வாரம் அதிகபட்சமாக பெட்ரோல் நிரப்பியதால் ஐந்து வெடி விபத்துகள் நடந்துள்ளன. தயவுசெய்து பெட்ரோல் டேங்க்கை ஒரு நாளைக்கு ஒருமுறை திறந்து உள்ளே உள்ள வாயுவை வெளியேற்றுங்கள்" என்று குறிப்பிட்டு இருந்தது.

பாரத் பெட்ரோலியம் பெயரில் பேனர்...

இதுபோன்ற நம்பகத்தன்மையற்ற செய்திகள் வாட்ஸ்அப்பில் வலம் வருவது வாடிக்கை என்றாலும், இந்த முறை பாரத் பெட்ரோலியம் பெயரில் பேனர் இருந்தது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இப்படி சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில்...

``வெயில் காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம். டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வெடித்துவிடும் என பரவும் செய்தியில் உண்மையில்லை" எனத் தெரிவித்துள்ளது.

``வாகனங்களின் செயல்திறன் தேவைகள், பாதுகாப்பு காரணிகளுடன் சுற்றுச்சூழல் நிலைமைகளை கவனத்தில் கொண்டே ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வாகனங்களை வடிவமைக்கின்றனர். எனவே, குளிர்காலம் அல்லது கோடைக்காலம் எதுவாக இருந்தாலும், உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்ட முழு வரம்புக்குள் வாகனங்களில் எரிபொருளை நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பானது" என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த கோடைக்காலத்திலும் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/fill-gasoline-in-the-vehicle-dont-be-afraid-in-summer-iocl-description

Doctor Vikatan: காய்ச்சல் அடிக்கும்போது குழந்தைகளுக்கு தயிர்சாதம் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் 6 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் பாதிப்பு வருகிறது. குழந்தையின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க மருந்துகள் கொடுக்கலாமா? காய்ச்சல் அடிக்கும்போது தயிர்சாதம் கொடுக்கலாமா?

சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நல மருத்துவர் பத்மப்ரியா.

குழந்தைகள்நல மருத்துவர் பத்மப்ரியா | சென்னை

குழந்தையின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க மருந்துகள் இருக்கின்றனவா என்ற கேள்வி பல பெற்றோர்களுக்கும் இருக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதில் உணவுகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும்தான் பெரும்பங்கு இருக்கிறது.

எனவே உங்கள் குழந்தைக்கு தினமும் சரிவிகித உணவு கொடுத்துப் பழக்குங்கள். சரிவிகித உணவு என்றால் அதில் காய்கறிகள், பழங்கள், நட்ஸ், அசைவ உணவுக்காரர்கள் என்றால் முட்டை என கொடுத்துப் பழக்குங்கள். குழந்தைகள் விஷயத்தில் அவர்கள் நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை ஒரேடியாகத் தடை செய்ய முடியாது.

எனவே, என்றோ ஒருநாள் அவர்கள் விரும்பும் நொறுக்குத்தீனிகளைக் கொடுக்கலாம். ஆனால் அந்த உணவுகளைத் தெருவோரக் கடைகளிலும், சுகாதாரமற்ற கடைகளிலும் வாங்கிக் கொடுப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.

அதுபோன்ற கடைகளில் புதிய எண்ணெயைப் பயன்படுத்துவார்களா என்பது சந்தேகமே... பலமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

சமையல் எண்ணெய்

தவிர அவர்கள் சமைக்கப் பயன்படுத்தும் பொருள்களின் தரம் எப்படிப்பட்டது என்பதும் தெரியாது. சமைக்க உபயோகிக்கும் நீரில் எலியின் சிறுநீர் கலந்திருந்தால் அது லெப்டோஸ்பைலோசிஸ் (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சலைக்கூட ஏற்படுத்தலாம். தவிர டைபாய்டு உள்ளிட்ட பாதிப்புகளும் வரலாம். வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் வரலாம்.

எனவே எப்போதும் வீட்டிலேயே ஃப்ரெஷ்ஷாக தயாரிக்கப்பட்ட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே நோய் எதிர்ப்புத்திறன் சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். சூப் போன்ற திரவ உணவுகளைக் குடிக்கவும் பழக்குங்கள்.

தயிரிலும் மோரிலும் உள்ள புரோபயாட்டிக் கிருமிகள் குடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியவை. குழந்தைக்கு காய்ச்சலடிக்கும்போது தயிர், மோர் கொடுக்கலாமா என்று பல பெற்றோர் கேட்கிறார்கள். தாராளமாகக் கொடுக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்காத, அறை வெப்பநிலையில் உள்ள தயிர், மோர் கொடுப்பதில் பிரச்னையே இல்லை.

காய்ச்சல் | மாதிரிப்படம்

காய்ச்சலின்போது தயிர்சாதம், வாழைப்பழம் எல்லாம் கொடுத்தால் ஜன்னி வந்துவிடும், சளி பிடித்துவிடும் என்றெல்லாம் பயப்படுகிறார்கள். இதெல்லாம் மூட நம்பிக்கையே. அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாதவை. வைட்டமின் சி அதிகமுள்ள கொய்யா, சாத்துக்குடி போன்றவற்றையும், வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ள பப்பாளி, மாம்பழம், கேரட் போன்றவற்றையும், கீரைகளையும் கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறனை இயற்கையாகவே மேம்படுத்தலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-can-you-give-curd-rice-to-children-when-they-have-fever

``20 நாள்கள்தான் டைம்; அதற்குள் நிறுத்தவில்லை என்றால்..!" - தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில், கனிம வளக் கொள்ளையைக் கண்டித்து, பா.ஜ.க சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``சூரியன் அஸ்தமனம் ஆகிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இங்கு நிலநடுக்கம் வராது என்று இல்லை... எங்கு வேண்டுமானாலும் வரலாம். கடந்த 70 ஆண்டுகளில், இந்தப் பகுதிகளிலுள்ள குவாரிகளில், 75 அடி வரை தோண்டப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், இந்தப் பகுதியில் இருக்கும் குவாரிகளில், 220 அடிவரை தோண்டப்பட்டு கனிம வளங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் விளைவு தற்போது தெரியாது, 20 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தெரியும்.

தமிழக அரசின் ஆண்டு வருமானம் 1,80,000 கோடி ரூபாய். ஆனால் கனிம வளத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் 900 கோடிதான் என்று கூறியது தமிழக அரசு. சில தனியார் நிறுவனங்கள், அரசால் வழங்கப்பட வேண்டிய ட்ரிப் ஷீட்டை தானாகவே அச்சடித்துக் கொள்கின்றன. இந்தப் பகுதியிலிருந்து மட்டும், 12,000 யூனிட் மணல் சட்டவிரோதமாக கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது.

கேரள அரசு உஷாராக இருக்கிறது... அங்கு மணல் எடுத்தால் குண்டாஸ் சட்டம் பாயும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று துணை பிரதமர் ஆகிவிடலாம் என்ற நப்பாசையில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காகவே, கனிம வளங்களை கேரளாவுக்கு விட்டுக் கொடுக்கிறார் ஸ்டாலின். கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படும் கனிம வளங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால், ஒவ்வொரு செக்போஸ்டிலும் 100 பா.ஜ.க தொண்டர்கள் ஷிப்ஃட் முறையில் அமர்வோம்.

என்னுடைய ஷிப்ஃட் வரும்போது நானும் அமர்வேன். கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த 20 நாள்கள்தான் டைம். தடுத்து நிறுத்தவில்லை என்றால், 21-வது நாள் முதல் லாரியை நானே தடுத்து நிறுத்துவேன்" என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஈரோட்டில் நடந்து சென்றாலே, பாக்கெட்டில் பணத்தை வைத்து அனுப்புகின்றனர் தி.மு.க-வினர். கனிம வளக் கொள்ளை மற்றும் மதுபானத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மக்களை விலைக்கு வாங்குகின்றனர். நாம் ஆடுகளுக்கு பட்டி வைத்துப் பார்த்திருப்போம். முதன் முறையாக மனிதர்களுக்கான பட்டியை அறிமுகப்படுத்தியிருக்கிறது தி.மு.க.

நம்மைவிட பின்தங்கிய நாடான ஆப்பிரிக்காவில்கூட மனிதர்களுக்கு பட்டிகள் அமைத்ததில்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியில், அனைத்து பூத்களிலும் பட்டி... வருபவர்களுக்கு காலையில் பணம், மதியம் உணவு, மாலையிலும் பணம் வழங்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும் என்று பரப்புரையின் கடைசி நாளில் அறிவிக்கிறார். காஸ் மானியம், மாதம் ஆயிரம் ரூபாய் என 22 மாதங்களுக்கும் சேர்த்து கணக்கு போட்டால்... 24,200 ரூபாய் வருகிறது. அந்தத் தொகையை பெண்களுக்கு வழங்க வேண்டும்" என்று கூறி முடித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-tamilnadu-leader-annamalai-warns-state-government-on-mineral-theft-issue-in-kovai

27.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February - 27 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/27022023-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

சனி, 25 பிப்ரவரி, 2023

'சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி' - சத்திய மூர்த்தி பவனில் தொடங்கியதா வார்?

கடந்த 4-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்தார். இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளைய தினம் பிப்.27 வாக்குப்பதிவும், மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகின்றன. தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

அங்கு காங்கிரஸுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான வார் தொடங்கியிருக்கிறது. எனவே என்னதான் நடக்கிறது என சத்திய மூர்த்தி பவன் வட்டாரத்தில் விசாரித்தோம்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், ``சட்டமன்றத்தில் தி.மு.க, காங்கிரஸைத் தாண்டி செல்வப்பெருந்தகை செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆளுநர் விவகாரத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்தது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. குறிப்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. இப்படியான சூழ்நிலையில்தான் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய மகன் இறந்த சோகத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்ததால், அவர் தேர்தலில் களம் காண்பதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆனால், தி.மு.க தலைமை விடுவதாக தெரியவில்லை. முதல்வரே நேரடியாக வீட்டுக்குச் சென்று சமாதானம் செய்தார்.

பின்னர் இளங்கோவனும் ஒருவழியாக சம்மதம் தெரிவித்துவிட்டார். தற்போது தேர்தலும் நடக்கவிருக்கிறது. இதில் எப்படியும் இளங்கோவன் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இளங்கோவனின் ஆதரவாளர்களுக்கு இருக்கிறது. இதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவரை கொண்டு வருவதற்கான வேலையில் இறங்கிவிட்டனர். டெல்லிக்கு புகார் கடிதங்களை அனுப்ப தொடங்கியிருக்கிறார்கள். தி.மு.க தலைமையும், காங்கிரஸ் தலைமையும் இதையே விரும்புவதால் தேர்தலில் ஒருவேளை வெற்றிபெற்றால், அவருக்கு சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி வழங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது" என்றனர்.

கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை

இது தொடர்பாக அழகிரியின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். "தலைவர் அழகிரிக்கு, செல்வப்பெருந்தகைக்கும் இடையேயான மோதல் போக்கு நீண்ட நாள்களாகத் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சத்திய மூர்த்தி பவனில் சமீபத்தில் தலைவர் பதவியை பிடிப்பதற்காக நடந்த மோதலுக்கு செல்வப்பெருந்தகைதான் காரணம் என்று அழகிரி நம்புகிறார். அந்த நேரத்தில் அழகிரியை மாற்ற வேண்டும் என முன்னாள் தலைவர்கள் புகார் கடிதங்களை கொடுத்தார்கள்.

அதற்கும் செல்வப்பெருந்தகைதான் காரணம். எனவே எப்படியாவது அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என அழகிரி யோசித்து வந்த நிலையில்தான், ஈரோடு தேர்தல் கை கொடுத்தது. இதை சாதகமாகப் பயன்படுத்தி விரைவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பதவி வாங்கி கொடுத்துவிடுவார். இதையெல்லாம் புரிந்துகொண்ட செல்வப்பெருந்தகை தனக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டும். அவ்வாறு கொடுத்தால் மட்டுமே தற்போது வகிக்கும் பதவியைவிட்டு தருவேன் என தன்னுடைய ஆதரவாளர்கள் மூலமாக டெல்லிக்கு தூது அனுப்பியிருக்கிறார். எப்படியோ விரைவில் ஒரு முடிவு தெரியும்" என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-assembly-congress-leader-pots-war-begins-in-tamilnadu-congress-committee

கூட்டாளி மூலம் கிடைத்த தகவல்; தாவூத் இப்ராஹிம் ஆட்களைத் தேடி துபாய் விரைந்த தேசிய புலனாய்வு ஏஜென்சி!

மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய தாவூத் இப்ராஹிம், தற்போது பாகிஸ்தானில் பதுங்கி வாழ்கிறான். தாவூத் மட்டுமல்லாது அவன் கூட்டாளிகள் அனைவரும் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு ஏஜென்சி மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளின் ஆட்களுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். இதில் தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்க்கரின் மகன், தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டாசகீல் மைத்துனர் சலீம் புரூட் உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர். இதில் சலீம் புரூட் தாவூத் இப்ராஹிமிடமிருந்து பணத்தை வாங்குவது மற்றும் இங்கிருந்து பணம் அனுப்புவது போன்ற வேலையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

என்.ஐ.ஏ

இதையடுத்து சலீம் புரூட், சபீர் ஷேக் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர். சலீம் புரூட்டிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக தாவூத் இப்ராஹிமுக்கு துபாயிலுள்ள தொடர்புகள் குறித்த முக்கியமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சபீர் ஷேக், மும்பையில் இறைச்சி ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்கிறார். இதில் கிடைக்கும் பணத்தை சபீர் ஷேக் துபாய்க்கு அனுப்பி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அந்தப் பணம் பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராஹிமுக்கு அனுப்பி வைக்கப்படும் விவரமும் தெரியவந்திருக்கிறது. துபாயில் தாவூத் இப்ராஹிம் போதைப்பொருள் கடத்தல், ஹவாலா உட்பட பல்வேறு விதமான தொழில்களை செய்து வருகிறான் என்று தெரியவந்திருக்கிறது.

தாவூத் துபாயில் தனது தளத்தை அமைத்து அங்கிருந்து செயல்படுவதும், மும்பையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது. துபாய் மட்டுமல்லாது சவுதி அரேபியாவிலும் தாவூத் இப்ராஹிம் தனது தொழிலை நடத்தி வருகிறான். இது தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதால், தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தனிப்படை ஒன்று துபாய் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. இந்தப் படை துபாய் போலீஸாருடன் இணைந்து தாவூத் இப்ராஹிமுக்கு இருக்கும் தொடர்புகள், கூட்டாளிகள், தொழில்கள் குறித்து முக்கிய விசாரணை நடத்தவிருக்கிறது. தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளும் இதில் சிக்குவார்கள் என்று கருதப்படுகிறது.



source https://www.vikatan.com/crime/nia-has-launched-a-search-for-the-business-and-associates-of-dawood-ibrahim-who-is-wanted-in-the-mumbai-serial-blasts

`கொடநாடு பெயரைச் சொல்லி பூச்சாண்டி காட்டுவது இனி செல்லாது!' - ஈரோட்டில் கொதித்த எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து நேற்றைய தினம் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருங்கல்பாளையத்தில் பேசுகையில், ``அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்காேவன் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்து, இந்த ஈரோடு கிழக்குத் தாெகுதிக்கு என்ன செய்தார். அவர் வெற்றி பெற்றால் அவரை இங்கு காணமுடியாது. தி.மு.க ஆட்சிக்கு வந்து 22 மாதங்களாகியும் இந்தத் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. இதைக் கேட்டால் கொடநாடு பிரச்னையை கையில் எடுக்கிறார்கள். கொடநாடுக்கும், ஈரோடுக்கும் என்ன சம்பந்தம். கொடநாட்டில் நடைபெற்ற திருட்டில் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் கைதுசெய்தோம். ஆனால் அந்தக் கொலையாளிகளுக்கு ஜாமீன் பெற்றுத் தந்தவர்கள் தி.மு.க-வினர். கேரளாவில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் என கடும் குற்றங்கள் புரிந்த அவர்களுக்கு ஆதரவாக வாதாடுபவர் தி.மு.க-வின் எம்.பி என்றால் அதற்கு என்ன காரணம்?

பிரசாரம்

கொடநாடு பெயரைச் சொல்லி சும்மா பூச்சாண்டி காட்டுவது இனி செல்லாது. ஐ.ஜி தலைமையிலான விசாரணை கமிஷன், இந்த வழக்கை 90 சதவிகிதம் விசாரித்து நீதிமன்றத்தில் 750 பக்க அறிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில், எதற்காக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி மாற்றினீர்கள், இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. குற்றவாளிகளுக்கும், தி.மு.க-வுக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்ற செய்தியை இந்த நேரத்தில் பதிவுசெய்கிறேன்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு தி.மு.க எதையும் செய்யவில்லை. ஆனால், நாங்கள் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை இந்தத் தொகுதிக்காக செய்து தந்திருப்பதால், நெஞ்சை நிமிர்த்தி உங்களிடம் வாக்குகளைக் தைரியமாக கேட்கிறோம். 7.50 லட்சம் முதியோர்களின் உதவித்தொகையை தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. உழைக்கும் திறனற்ற முதியோர்களின் உதவித்தொகையை நிறுத்தியவர்தான் இந்த சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின்" என்றார். நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி கூறியதைக் கேளுங்கள் எனக் கூறி எல்.இ.டி திரையில் நளினி, `சிதம்பரம் நீட் தேர்வு இனி ரத்து ஆகாது' என்று கூறிய பேட்டி ஒளிபரப்பப்பட்டது. அதேபோல, `ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்துசெய்வோம்' என்று முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பேசிய காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி மேலும் பேசுகையில், ``நீட் தேர்வை ரத்துசெய்வதாகக் கூறியதை கேட்டு 12 மாணவர்களின் உயிர் போனது. அவர்கள் உயிர் போனதற்கு தி.மு.க அரசுதான் பொறுப்பு. இதற்கு யார் காரணம்.

மக்களை ஏமாற்றியவர்களுக்கு தோல்வியைப் பரிசாக அளிக்க வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை அளிப்பதாகக் கூறியவர்கள், இதுவரை தரவில்லை. இரண்டு நாளுக்கு முன்பு இங்குப் பேசிய உதயநிதி ஸ்டாலின், `இப்போதுதான் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் 6 மாதங்களில் வழங்கி விடுவோம்' என்றார். ஆனால், ஈரோட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், `மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவித்து விடுவோம்' என்கிறார். அப்பாவும், மகனும் கூறுவது அனைத்தும் பொய். 22 மாதங்களாக தராதவர்கள் இப்போது தந்துவிடவா போகிறார்கள்,
மின்கட்டணம் 12 முதல் 54 சதவிகிதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள். சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 25 கொலைகள் நடந்திருக்கின்றன. 13-ம் தேதி ஒரே நாளில் 9 கொலைகள் நடந்திருக்கின்றன. தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறை மானியக் கோரிக்கையில்  2,136 பேர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பவர்கள் என்று கணக்கெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தனர். இவர்களில் 148 பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

மற்றவர்கள் எல்லாம் தி.மு.க-காரர்கள். இதை நான் சொல்லவில்லை. அவர்கள் கொடுத்த மானியக் கோரிக்கை தொடர்பான புத்தகத்தில்தான் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஈரோட்டில் பேசிய ஸ்டாலின் பேச்சுவாக்கில், அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்று பேசிவிட்டார். உண்மையில் அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத்தான் ஸ்டாலின் இப்போது திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்பதை ஸ்டாலினே ஒப்புக்கொள்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஏற்கெனவே ரூ.55 கோடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு மண்டபம் கட்டினீர்கள். அதை தவறு என்று கூறவில்லை. ஆனால் ரூ. 81 கோடி செலவில் எழுதாத பேனாவை கடலில் வைப்பதால் யாருக்கு என்ன பயன், இது மக்களின் வரிப்பணம். மண்டபம் முன்பு ரூ. 2 கோடியில் பேனாவை வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை மாணவர்களுக்கு எழுதும் பேனாவை வாங்கிக் காெடுங்கள். 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் 7 சட்டக் கல்லூரிகள், 76 கலை அறிவியல் கல்லூரிகள், 3 கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தலைவாசலில் ரூ.1,000 கோடி செலவில் பிரமாண்டமான கால்நடை மருத்துவப் பூங்கா கொண்டு வந்தோம். ஏராளமான பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் கட்டித் தந்தோம். இதன் காரணமாக இந்திய அளவில் உயர்கல்வித் திட்டத்தில் தமிழகம் முதலிடத்தை பெறச் செய்தோம்.

2011-ம் ஆண்டில் தி.மு.க ஆட்சி முடியும்போது, 100-க்கு 32 பேர் மட்டுமே உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தனர். இப்போது 100-க்கு 54 பேர் படிக்கிறார்கள். இதைப்பற்றி படித்தால்தான் இதெல்லாம் தெரியும். தனது குடும்பத்தை பற்றி மட்டுமே கவலைப்படுபவர்தான் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல், `கண் தெரியாத கபோதி' என்று என்னைப் பற்றி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னிடம் இருக்கின்றன. இதெல்லாம் நீங்கள் கொடுத்த கோரிக்கைகள். இதை நிறைவேற்றவில்லை என்று கூறியதற்காக என்னை கண் தெரியாத கபோதி என்கிறார். உங்கள் கோரிக்கையை சொன்னதற்காகதான், அவர் அப்படி கூறியிருக்கிறார். எனவே அவர் என்னைச் சொல்லவில்லை. மக்களாகிய உங்களைத்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார்.

அ.தி.மு.க. தொண்டர்

ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான் ஸ்டாலினின் சாதனை. வரி மேல் வரி போட்டதுதான் மக்களுக்காக இவர்கள் செய்தது. ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதாகக் கூறி அதை செய்யவில்லை. கைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் தருவதாகக் கூறி அதையும் தரவில்லை. இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சாரக் கணக்கெடுப்பு என்று சொன்னதை செய்தீர்களா. பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் என்று கூறிவிட்டு இந்தத் தொகுதியைச் சேர்ந்த 2,000 தூய்மைத் தாெழிலாளர்களை பணியிலிருந்தே நீக்கிவிட்டார்கள். அரசு ஊழியருக்கு பென்சன் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறி அவர்களையும் ஏமாற்றி விட்டார். படித்தவர்களையும், படிக்காதவர்களையும் ஏமாற்றி பட்டை நாமம் அடித்தவர் ஸ்டாலின். 3 கூட்டத்தொடர்களில் 6 முறை சட்டப்பேரவையில் நான் பேசினேன். 2 மணி நேரம், இரண்டரை மணி நேரம் வரை புள்ளிவிவரத்தோடு பேசினேன். அத்தனையும் ஒளிபரப்பு செய்திருந்தால் நீங்கள் டெபாசிட்கூட வாங்க மாட்டீர்கள். ஆனால், மக்களுக்காக நான் பேசியதை ஒளிபரப்பாமல் தடுத்துவிட்டனர்.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயலலிதா பற்றி அறிக்கை விடுத்திருக்கிறார். ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் ஜெயலலிதா. இப்படியொரு பெண்ணைப் பார்க்க முடியாது. தனிப்பெண்மணியாக பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கி ஆட்சியை திறம்பட செய்தார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். ஜெயலலிதாவின் ஆட்சியை ரஜினிகாந்த்கூட புகழ்ந்திருக்கிறார். ஆனால் ஸ்டாலின் மட்டும் அ.தி.மு.க ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று கூறுகிறார். அ.தி.மு.க ஆட்சியே பொற்கால ஆட்சி. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உணவு உற்பத்தியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறோம். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரையும் ஏமாற்றிய தி.மு.க ஆட்சியை நீங்கள் புறக்கணியுங்கள்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-palaniswamy-slams-dmk-government-in-erode-east-election-final-campaign

அவரை மாதிரி ஒரு ஹீரோவ நான் பார்த்ததே இல்ல; அவ்வளவு நல்ல மனுஷனா இருக்கமுடியுமா?! - பிரபுதேவா ஷேரிங்ஸ்



source https://cinema.vikatan.com/kollywood/actor-prabhudeva-interview

பஞ்சாங்கக் குறிப்புகள் - பிப்ரவரி 27 முதல் மார்ச் 5 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்


source https://www.vikatan.com/spiritual/astrology/panchangam-details-for-the-period-of-february-27th-to-march-5th