Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

சீமந்தம் இன்று... குழந்தைப் பிறந்தது நேற்று... யோகி பாபு செம ஹேப்பி!

நகைச்சுவை நடிகர் யோகி பாபு அப்பாவாகி இருக்கிறார். நேற்று மாலை யோகி பாபு – மஞ்சு பார்கவி தம்பதிக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.

யோகி பாபுவுக்கு இந்தாண்டு தொடக்கத்தில் அதாவது பிப்ரவரி 5-ம் தேதி மஞ்சு பார்கவி என்பவருடன் திருமணம் நடந்தது. மிகவும் எளிமையாக அவரது சொந்த ஊரில் நடந்த இந்தத் திருமணத்தில் யோகியின் வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதனால் திரைத்துறை நண்பர்களுக்காகத் திருமண வரவேற்பை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருந்தார் யோகி பாபு. ஆனால் அதற்குள் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்துவிட திருமண வரவேற்பு நடத்தமுடியவில்லை.

திருமணம் முடிந்த அடுத்த சில மாதங்களில் மஞ்சு பார்கவி கர்ப்பமடைந்தார்.

தற்போது ஊரடங்கிற்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்ட சூழலில், மனைவியின் சீமந்த விழாவையாவது பெரிய அளவில் நடத்தலாமென்று விரும்பினார் யோகி. அதன்படி இன்றைய தினம் (29/12/20) அந்த சீமந்தத்தை தன் வீட்டில் நடத்துவதற்கு பெரிய ஏற்பாடுகள் செய்திருந்தார். நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்து சுமார் 100 பேர் வரை அழைத்திருந்தார். அவர்களுக்காகப் பெரிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மஞ்சு பார்கவி மற்றும் யோகிபாபு

இந்நிலையில், நேற்றே மஞ்சு பார்கவிக்கு பிரசவ வலி எடுக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மகன் பிறந்த மகிழ்ச்சிக்கிடையே, "கல்யாணச் சாப்பாடுதான் போட முடியலை, சீமந்தச் சாப்பாடாவது போடலாமென நினைத்தால் அதுவும் நடக்காமப் போச்சே" என்று நண்பர்களிடம் ஜாலியாகக் கமென்ட் அடித்திருக்கிறார் பாபு.



source https://cinema.vikatan.com/tamil-cinema/yogi-babu-blessed-with-boy-baby

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக