Ad

புதன், 30 டிசம்பர், 2020

மதுரை: `எம்.ஜி.ஆர் மடியில் இருந்தவர்கள் எல்லாம் அவர் வாரிசாக முடியாது!’ - செல்லூர் ராஜூ

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சவாரியை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

செல்லூர் ராஜூ

அப்போது அவர், ``மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மதுரை மக்களுக்கு மெரினாவாக மாறியுள்ளது" என்றவர், ``அ.தி.மு.க இரண்டாக உடையும் என்று கட்சியின் செல்வாக்கை சீர்குலைக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அ.தி.மு.க-வில் இரு பெரும் தலைவர்கள் உருவாகியுள்ள நிலையில் அது நடக்காது.

பொங்கல் தொகுப்பு டோக்கனை அ.தி.மு.க-வினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறுவதில் சிறிதும் உண்மையில்லை. ரேசன் கடை ஊழியர்கள்தான் வழங்குகிறார்கள். ரேசன் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது. சீருடை இல்லாமல் கடையில் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாரியம்மன் தெப்பக்குளம்

நடிகர் ரஜினி ஆழமாக சிந்தித்து முடிவு எடுக்க கூடியவர் என்பதால் நல்ல முடிவு எடுத்துள்ளார். தன்னை நம்பியுள்ள ரசிகர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக ரஜினி எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன்.

Also Read: `ஒரு அரசியல் புரட்சி உங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது!’ - பரமக்குடியில் கமல்ஹாசன்

திரைத்துறையில் தமிழகத்திற்கு பல்வேறு பெருமைகளை சேர்த்தவர் கமல்ஹாசன். அவர் சினிமாவில் மாற்றத்தை உருவாக்கலாம். அரசியலில் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது.

படகு சவாரி செய்யும் செல்லூர் ராஜூ

கமல்ஹாசனுக்கு வராததை விட்டுவிட வேண்டும். நடிகர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. எம்.ஜி.ஆர் மடியில் இருந்தவர்களெல்லாம் அவர் வாரிசாக முடியாது" என்றார்.

பின்பு மதுரை கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், மீனாசியம்மன் கோயில் அதிகாரிகளுடன் சேர்ந்து படகில் பயணித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.



source https://www.vikatan.com/news/politics/minister-sellur-raju-slams-kamal-and-stalin-in-madurai-press-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக