Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

திருச்சி: `ஜனவரியில் கூட்டணி அறிவிப்பு; 3-வது அணி வென்றால் நான்தான் முதல்வர்!' - கமல்ஹாசன்

"கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் அறிவிப்பு வெளியாகும். ஒருவேளை 3-வது அணி தேர்தலில் வெற்றி பெற்றால், நான்தான் முதல்வர்" என அதிரடியாகத் தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

திருச்சி வருகை புரிந்த கமலஹாசன்

`தலை நிமிரட்டும் தமிழகம்’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் கமல்ஹாசன், தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், மூன்றாம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டு நாள்களாகத் திருச்சியில் இருந்துவிட்டு, தஞ்சையை நோக்கி புறப்பட்டார். இந்நிலையில், திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ``தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் ஊழல் நடக்கிறது” என்ற பட்டியலை வெளியிட்டார்.

ஊழல் பட்டியலை வெளியிட்ட கமல்

இதன் பின்னர் பேசிய கமல், ``தமிழகம் முழுக்க நடைமுறையிலிருக்கும் லஞ்சத்தின் விலைப்பட்டியல் இதுதான். இதை ஒரு வகையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அது ஆணாக இருக்கும் போது ஒரு விலை, பெண்ணாக இருக்கும் போது ஒரு விலை என்ற முறையில் தொட்டில் முதல் சுடுகாடு வரை இந்தப் பட்டியல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்குப் பெண்ணாக இருக்கும் போது 300 ரூபாயும், ஆண் பிள்ளையாக இருந்தால் 500 ரூபாயும், பிறப்பு சான்றிதழ் பெற 200 ரூபாய், ஆணாக இருக்கும் பட்சத்தில் 500 ரூபாய். ஜாதி சான்றிதழ் பெற லஞ்சம். ஓட்டுநர் உரிமம் பெற லஞ்சம், பெண்களாக இருந்தால் ஆயிரம் ரூபாய் லஞ்சம்.

ஊழல் பட்டியல்

ஆணாக இருந்தால் 5,000 ரூபாய் லஞ்சம். பாஸ்போர்ட் சரிபார்ப்பதற்கு லஞ்சம் 500 ரூபாய். குடும்பத்தினர் சென்றால் 10 ஆயிரம் ரூபாய், தண்ணீர் இணைப்பிற்கு 10,000 ரூபாய், பாதாளச் சாக்கடைக்கு அனுமதி பெற ரூ 5,000, பரம்பரை வாரிசுச் சான்றிதழ் என்றால் 500 ரூபாய், ஓய்வூதியம், விதவை பென்ஷன் 500 ரூபாய், இறப்பு சான்றிதழ் பெற 500 ரூபாய் கொடுக்க வேண்டும். இது எல்லாருக்கும் தெரியும்.

இணையதள வசதியுடன் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கம்ப்யூட்டர் இருக்கும். கணிப்பொறி என்பது இலவசம் அல்ல அது அரசுடைய முதலீடு. அதை அரசு கொடுக்கும். ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு தலைநகர் ஆக்கப்படும். அந்தந்த தொழில் சார்ந்த, துறை சார்ந்த மாவட்டங்கள் தலைநகராக்க மக்கள் நீதி மய்யத்தால் முடியும்" என்றார்.

பிரச்சாரத்தில் கமல்

தொடர்ந்து, `எம்.ஜி.ஆரை மட்டுமே முன்னெடுக்கின்ற நீங்கள் கலைஞரை என் முன்னெடுக்கவில்லை?’ என்ற கேள்விக்கு, `எங்குத் தேவைப்படுகிறதோ அங்கு நான் கண்டிப்பாகக் கலைஞரை முன் வைப்பேன்’ என்றார்.

தொடர்ந்து, "இங்கே நாங்கள் ஒரு பெரிய எழுச்சியைப் பார்த்து வருகிறோம். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் இருப்பது, அதிலும் மகளிர் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.

கமல், மூன்றாவது அணி ஆரம்பிப்பது குறித்துப் பேசுகையில், ``நாங்கள் 3-வது அணியாக உருவாகிவிட்டோம் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் அறிவிப்பு வெளியாகும். ஒருவேளை 3-வது அணி தேர்தலில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு நான்தான் முதல்வர்" என்றார்.

கமலஹாசன்

விவசாயிகளின் போராட்டம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த கமல், ``விவசாயத்தை மதிக்காத நாடு வீழ்ச்சியடையும். அது நம்முடைய நாட்டில் நடைபெறக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் நினைக்கிறது” என்றார். `டார்ச் லைட் சின்னம் உங்களுக்குக் கிடைக்குமா?’ என்ற கேள்விக்கு, ``டார்ச் லைட் எங்களுக்கு உரியது தான். தேவைப்பட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/kamalhaasan-says-in-2021-election-3rd-party-wins-then-he-will-be-the-the-cm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக