ரஜினியின் திடீர் அறிவிப்பு பா.ஜ.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கிவிட்டன. ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க பா.ஜ.க தயக்கம் காட்டிவருகிறது. ` பா.ஜ.க-வைப் பொறுத்தவரை 2021 தேர்தலில் ஐந்து சதவிகித அளவுக்கான எம்.எல்.ஏ-க்களோடு சட்டமன்றத்தில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பலவும் ஆயத்தமாகிவருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிவிட்டனர். அதேநேரம், `அ.தி.மு.க அணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்' என்பதை ஏற்றுக்கொள்ள பா.ஜ.க நிர்வாகிகள் தயாராக இல்லை. இது தொடர்பாக அரியலூரில் பேட்டியளித்த தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், ` கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜ.க தலைமைதான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அ.தி.மு.க தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பா.ஜ.க தலைமையே அறிவிக்கும்' என்றார். முருகனின் இந்தப் பேட்டி, அ.தி.மு.க வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முருகனின் பேச்சுக்கு பதில் கொடுத்த அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, `திராவிட இயக்கம் இந்த நாட்டைச் சீரழித்துவிட்டதாக சில தேசியக் கட்சிகள் சொல்கின்றன. இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக, சீரழித்துவிட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் தமிழக அரசு, மத்திய அரசிடம் விருதுகளைப் பெற்றிருக்கிறதென்றால், இந்த ஆட்சி எவ்வளவு சிறப்பான ஆட்சியாக இருக்க வேண்டும்... கூட்டணியில் எந்த தேசியக் கட்சியும், மாநிலக் கட்சியும் வந்தாலும் அ.தி.மு.க தலைமையில்தான் ஆட்சி. இதில், கூட்டணி ஆட்சி என்பதற்கே பொருள் இல்லை. தேவையும் இல்லை. எனவே, கூட்டணி ஆட்சி அமைப்போம், கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என்ற எண்ணத்தோடு வரும்போது இதைச் சிந்தித்துக்கொள்ள வேண்டும்' என விமர்சித்தார்.
இந்தநிலையில், நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, `தேர்தல் வெற்றிக்கு பிறகு, முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழுதான் கூடி முடிவெடுக்கும்' என்றார். இதை அ.தி.மு.க தரப்பு ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. அதேநேரம், ரஜினியின் முடிவு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்ட ட்வீட்டில், `96-ம் ஆண்டுபோல வாய்ஸ் அரசியலில் ஈடுபடுவார்’ எனக் கூறியிருப்பதும் விவாதமாகியிருக்கிறது.
குருமூர்த்தியின் ட்வீட்டுக்கு பதிலளித்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, `அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விலகுவதாக ரஜினி கூறவில்லை என்று குருமூர்த்தி சப்பைக்கட்டு கட்டுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. முடிவெடுக்க வேண்டியவர் முடிவெடுத்துவிட்டார். தமிழகத்தில் எந்த நிலையிலும் வேரூன்ற முடியாத அளவுக்கு மக்கள் விரோதக் கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வுக்கு உயிர் கொடுப்பதற்கு முனைந்த குருமூர்த்திகளின் முயற்சி கடும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. திரைக்குப் பின்னால் சதித் திட்டம் தீட்டி தி.மு.க - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியும் பகைமையும்கொண்ட குருமூர்த்தி உள்ளிட்டவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப்போயிருக்கிறார்கள். ரஜினி என்கிற சுவரில் சுலபமாகச் சித்திரம் வரைய முற்பட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள்' எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ரஜினிகாந்தை வைத்துக்கொண்டு அவரோடு கூட்டணி அமைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறையை ஏவிவிட்டு அ.தி.மு.க-வை உடைப்பதற்கு குருமூர்த்திகளின் ஆலோசனையின் பேரில் அமித் ஷாக்கள் சதித்திட்டம் தீட்டினார்கள். அதனால்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பகிரங்கமாக அரசு விழா என்றும் பாராமல் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அது குறித்துப் பேசுவதை தவிர்த்தார். அ.தி.மு.க-வின் சுயமரியாதையை இழந்த சரணாகதி அரசியலுக்கு இதுவரை பா.ஜ.க தலைமை பதில் கூறவில்லை. இதற்குப் பின்னால் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ரஜினிகாந்த் என்கிற மையப்புள்ளியின் அடிப்படையில் அந்த சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், ரஜினியின் அறிவிப்பால் பா.ஜ.க-வின் சதித்திட்டம் தவிடுபொடியாகியிருக்கிறது’ என்றார்.
Also Read: `கட்சி தொடங்கவில்லை; கூட வருபவர்களை பலிகடாவாக்க விரும்பவில்லை!’ - ரஜினி
இதையடுத்து, பா.ஜ.க முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். `` நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியால் பெரிய அளவுக்கு பா.ஜ.க-வுக்குப் பலன் கிடைக்கவில்லை. அதேநேரம், தி.மு.க கூட்டணியிலுள்ள சிறிய கட்சிகளெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றன. அதனால்தான் தி.மு.க கூட்டணியில் எந்தவிதச் சலசலப்பும் இல்லை. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை 2021 தேர்தலில் ஐந்து சதவிகித அளவுக்கான எம்.எல்.ஏ-க்களோடு சட்டமன்றத்தில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதாவது, 234 தொகுதிகளில் ஐந்து சதவிகித இடங்களைப் பெற வேண்டும் என்பதுதான் அமித் ஷாவின் திட்டம். அந்த அளவுக்கான இடங்கள் கிடைத்தாலே போதும், அடுத்தகட்ட ஆட்டத்தை டெல்லி தொடங்கிவிடும். மேலும், தி.மு.க-வைக் குறைவான தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்குச் சுருக்கிவிட வேண்டும் என்பதும் முக்கிய அஜெண்டாவாக இருக்கிறது" என விவரித்தவர்,
`` தமிழ்நாட்டில் 60 இடங்களில் வெற்றிக்கான வாய்ப்புகள் இருப்பதாக தமிழக பா.ஜ.க நம்புகிறது. அவ்வளவு இடங்களை ஒதுக்குவதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. 20 இடங்களில் அவர்கள் வென்றாலே பெரிய விஷயம் என எடப்பாடி நினைக்கிறார். இதுதான் பிரச்னைக்கான முக்கியப்புள்ளியாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுத்தாலும், எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. 20 இடங்களில் நிற்பதால் பா.ஜ.க-வுக்கு எந்த லாபமும் இருக்கப்போவதில்லை. இப்படியே நிலைமை நீடித்தால், தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் நேரடிப் போட்டி என்பதுபோல களநிலவரத்தை மாற்றியமைக்கவும் மேலிடம் திட்டமிட்டிருக்கிறது. அதை உணர்ந்துதான் பா.ஜ.க-வுக்கு எதிராக சில அ.தி.மு.க நிர்வாகிகள் பேசிவருகிறார்கள். ஒருவேளை ரஜினி களமிறங்கியிருந்தால், வாக்குகளைச் சிதறடித்து எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் வேலையை மேலிடம் செய்யத் தொடங்கியிருக்கும். தற்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடந்துவருகிறது" என்றார் விரிவாக.
Also Read: அ.தி.மு.க Vs பா.ஜ.க : `வேறு கூட்டணியை அமைத்துக் கொள்ளுங்கள்..’ - முதல்வர் வேட்பாளர் சர்ச்சை!
இது குறித்து, பா.ஜ.க வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளர் ஆர்.சி.பால் கனகராஜிடம் பேசினோம். `` ரஜினியை முன்னிறுத்தி நாங்கள் அரசியல் செய்யவில்லை. அவரை ஒரு கருவியாக வேண்டுமானால் பயன்படுத்த நினைத்திருக்கலாம். ஆனால், முழுக்க முழுக்க அவரை நம்பி பா.ஜ.க இல்லை. அண்மைக்காலமாக பா.ஜ.க நடத்தும் கூட்டங்களில் மக்கள் தாங்களாகவே முன்வந்து கலந்துகொள்கிறார்கள். எங்களின் கட்சிக் கூட்டங்களுக்கு மக்கள் திரள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் மக்கள் செல்வாக்கை முழுமையாகப் பெற்றிருப்பாரா என்பது சந்தேகம்தான். அவர் அரசியலுக்கு வர வேண்டிய காலகட்டம் முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். அவர் வராததால் பா.ஜ.க-வுக்குத் தோல்வி என்பது முற்றிலும் தவறான கருத்து.
அரசியலுக்கு அவர் வந்த பிறகு கணக்குகளைப் போட்டுத் தோல்வியடைந்திருந்தால்கூட விவாதிக்கலாம். அதற்கு முன்பே விமர்சிப்பது சற்றும் ஏற்புடையதல்ல. அரசியலுக்கு வருமாறு ரஜினியிடம் பா.ஜ.க எந்த இடத்திலும் கூறியதில்லை. வெளியில் உள்ளவர்கள் அவர்களாகவே பேசிக்கொள்கின்றனர். ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராமல் போனாலும் எங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை. ரஜினி மூலமாக ஆதரவைத் திரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அவரை வெறுமனே வாய்ஸ் கொடுக்கவைக்க பா.ஜ.க-வால் முடியாதா என்ன?" என்றார் இயல்பாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjps-new-strategy-in-tamilnadu-assembly-election-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக