Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

நீலகிரி: பேச்சுவார்த்தைக்கு வர மறுத்த வனத்துறை - மறியலில் குதித்த கூடலூர் எம்.எல்.ஏ!

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில், இந்த மாதத்தில் மட்டும் தந்தை, மகன் உட்பட நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கூடலூர் எம்.எல்.ஏ

மனிதர்களைத் தாக்கும் குணம் கொண்ட யானையான ஷங்கர் என்ற ஒற்றை யானையைப் பிடிக்க வனத்துறையினர் களமிறங்கினர். குறிப்பிட்ட அந்த யானை, கேரள அடர் வனத்துக்குள் சென்றுவிட்டதால், அதைப் பிடிக்கும் திட்டத்தை தற்போதைக்கு கைவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் செப்பந்தோடு, குழிவயல் பகுதி கிராமங்களின் அருகில் பத்துக்கும் அதிகமான யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளை கும்கி மூலம் விரட்ட வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், வனத்துறையோ எந்தக் கோரிக்கைக்கும் செவிசாய்க்காமல், இங்கிருந்த கும்கி யானைகளை முகாம்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், நேற்று சேரம்பாடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கூடலூர் எம்.எல்.ஏ மறியல்

இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளூர் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஆனால், வனத்துறை பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தது. இதில், மேலும் ஆத்திரமடைந்த கூடலூர் எம்.எல்.ஏ மற்றும் உள்ளூர் மக்கள், சுங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Also Read: கூடலூர்: `ஒரே வாரத்தில் 4 பேர் பலி’ - தொடரும் யானை - மனித எதிர்கொள்ளலால் கொதிக்கும் மக்கள்

இது குறித்து கூடலூர் எம்.எல்.ஏ (தி.மு.க) திராவிட மணி கூறுகையில், ``கிராமப் பகுதிகளுக்குள் வரும் யானைகளை விரட்டுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் மெத்தனமாக உள்ளனர். பேச்சுவார்த்தைக்கும் வர மறுத்துவிட்டனர். வனத்துறை அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். இதே அலட்சிய போக்குடன் வனத்துறை செயல்பாடு இருந்தால் மேலும் போராட்டம் வெடிக்கும்"என்றார்.

கூடலூர் எம்.எல்.ஏ மறியல்

இது குறித்து வனத்துறையினர்,``ஊருக்குள் நுழையும் யானைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளோம். குடியிருப்புகளை ஒட்டியுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகளையும் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே வருகிறோம்" என்கிறார்கள்.



source https://www.vikatan.com/social-affairs/protest/gudalur-mla-and-public-staged-protest-against-forest-department

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக