Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

மண் மலர்களையும் ஏற்கும் அந்த மாலவனைத் தொழுது ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்போம்!

எல்லா நாள்களிலும் இறைவழிபாடு என்பது முக்கியம். அதற்கு ஆங்கிலப் புத்தாண்டு தினமும் விதிவிலக்கல்ல. பொதுவாகவே கொண்டாட்டங்கள் என்பவை நம்மை நாமே ஊக்குவித்துக்கொள்ளும் செயல்பாடு. அப்படிப்பட்ட செயல்பாட்டில் நாம் ஈடுபடுவதில் தவறில்லை. அதுவும் உலகமே ஒன்று திரண்டு கொண்டாடும் நாளில், மானுட சமுத்திரத்தில் நாமும் ஓர் அலையாக ஆர்ப்பரிப்பதில் பிழை ஏதும் இல்லை.

எந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்பதை விட எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதுதான் அந்தக் கொண்டாட்டங்களின் மீதான கசப்புணர்வை உருவாக்குகிறது. ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட ஆரம்பிக்கும் இளைஞர்கள் பலரும் ஒழுக்க விதிகளை மீறுகிறபோது அதன் மீது வீட்டுப் பெரியவர்களுக்கு உருவாகும் வருத்தமே கொண்டாட்டங்களுக்கு எதிராகவும் மாறுகிறது.

இறை வழிபாடு

கொரோனா காலகட்டத்தில் புத்தாண்டில் அல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளுமே நாம் நம்முள் புத்துணர்வு கொண்டு கொண்டாட வேண்டியவை. ஆரோக்கியம் சார்ந்தும் ஆன்மிகம் சார்ந்தும் நமக்குள் பல கருத்துகளை உருவாக்கிக்கொண்டு அதன் படி நடக்க முயல வேண்டும்.

புத்தாண்டில் எதைச் செய்கிறோமோ இல்லையோ கட்டாயம் இறைவழிபாடு செய்ய வேண்டும். அதிலும் வேங்கடவனை மனதில் நினைத்து வழிபட்டால் எல்லா நாள்களுமே இனிய நாள்களாக மாறும். பொன்னை விட மண்ணை மதிப்பவன் வேங்கடவன்.

Also Read: கே.பி.வித்யாதரன் கணித்துள்ள 12 ராசிகளுக்குமான 2021 ஆங்கிலப்புத்தாண்டு பலன்கள் வீடியோ வடிவில்! #Video

பொன் மலர்கள் மண் மலர்களான அற்புதம்!

திருமலையின் மலைப்பாதையில் நாம் சந்திக்கும் ஒரு மண்டபம் குருவ மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த மண்டபம் குருவ நம்பி என்ற ஓர் ஏழைக் குயவனின் காரணமாக ஏற்பட்டதாகும். குருவ நம்பி, பெருமாளின் தீவிரமான பக்தன். ஆனால், கோயிலுக்குள் சென்று பெருமாளை வழிபட முடியாத காரணத்தால், வீட்டிலேயே பெருமாளின் மரச் சிற்பத்தைப் பூஜித்து வந்தான். அந்தப் பகுதியை ஆட்சிசெய்து வந்த மன்னர் தொண்டைமான் தினமும் பெருமாளுக்குத் தங்க மலர்களால் அர்ச்சனை செய்து வந்தார்.

அதேபோல் தானும் மலர்களால் அர்ச்சனை செய்ய விரும்பிய குருவ நம்பி, மண்ணால் ஆன மலர்களைக்கொண்டு பெருமாளுக்கு அர்ச்சனை செய்தான். குருவ நம்பியின் பக்தியின் பெருமையை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய பெருமாள், ஒருநாள் தனக்கு மன்னன் தொண்டைமான் அர்ச்சித்த தங்க மலர்களை மண்ணால் ஆன மலர்களாக மாற்றினார். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.

அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், ‘குருவ நம்பியின் பக்தியை உலகத்தவருக்கு உணர்த்தவே நாம் அப்படி தங்க மலர்களை மண்ணால் ஆன மலர்களாக மாற்றினோம்’ என்று கூறினார். குருவ நம்பி பெருமாளை வழிபட்ட இடம்தான் குருவ மண்டபம்.

திருமலை வேங்கடவன்

பொன்னையல்ல மனதையே விரும்பும் இறைவன்

குருவநம்பி மண் மலர்கள் கொண்டு துதித்தார். அந்த வேங்கடவனோ அதைப் பொன்னினும் மேலாகப் போற்றினார். எனவே நாம் எங்கிருந்து இறைவனை வணங்குகிறோம் என்பதோ எதைக்கொண்டு துதிக்கிறோம் என்பதோ முக்கியமல்ல. எப்படி வணங்குகிறோம் என்பதுதான் முக்கியம். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் அந்த வேங்கடவன் இந்தப் புத்தாண்டில் நாள்தோறும் அந்த ஏழுமலையானை வணங்கி மகிழ்வோம்.

சென்ற ஆண்டில் ஆலய வழிபாடுகள் மிகவும் அருகின. அந்த நிலை மாறி அனைவரும் ஆரோக்கியமும் ஆனந்தமும் பெற்ற வாழ்வைப் பெற அந்த வேங்கடவன் நமக்கு அருள் செய்யட்டும்.

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



source https://www.vikatan.com/spiritual/functions/start-this-new-year-by-praying-to-tirupathi-perumal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக