அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி என்றும், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் அ.தி.மு.க உறுதியாக அறிவித்து, சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது. ஆனால் பா.ஜ.க-வினரோ, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைமைதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று கூறிவருகிறார்கள். இது, அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் மறைமுகமாக பா.ஜ.க-வை அனல் கக்கும் வார்த்தைகளால் விமர்சித்துவருகிறார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, “ஐம்பது ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சியில், தமிழகத்தை சீரழித்துவிட்டதாக சில கருங்காலிகள், சில தேசியக் கட்சிகள், சில சந்தர்ப்பவாதிகள் சொல்கிறார்கள். பெரியார் காலத்திலிருந்து இந்த இயக்கத்தை அழிக்க வேண்டுமென்று ஒரு சமூகம், ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என யார் வந்தாலும் அ.தி.மு.க தலைமையில்தான் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அதற்குத் தேவையும் இல்லை” என்றார்.
அ.தி.மு.க-வுடனான கூட்டணி குறித்து பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைமைதான் முடிவுசெய்யும், முதல்வர் வேட்பாளர் குறித்தும் பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைமைதான் அறிவிக்கும் என்று பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறிவருகிறார். ஊழல் ஆட்சி என்று அ.தி.மு.க அரசு மீது பா.ஜ.க-வின் துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துப் பேசினார். இத்தகைய சூழலில்தான், பா.ஜ.க-வின் பெயரைக் குறிப்பிடாமல் அ.தி.மு.க தலைவர்கள் கடுமையாகப் பேசிவருகிறார்கள்.
இது குறித்து அ.தி.மு.க-வின் செய்தித்தொடர்பாளரான ஜவஹர் அலியிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி. அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளரை அ.தி.மு.க-தான் முடிவுசெய்யும். ஆனால், தமிழக பா.ஜ.க-வின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் சிலர் பக்குவமின்றிப் பேசிவருகிறார்கள். புதிதாக அரசியல் களத்துக்கு வந்திருக்கும் அவர்கள், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்கள். கூட்டணியில் நீடிக்க வேண்டும், கூட்டணி மூலமாகப் பயன்பெற வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
அ.தி.மு.க கூட்டணியில் இருந்தால்தான் அவர்களால் பயன்பெற முடியும். இல்லையென்றால், வெறும் மூன்று சதவிகித வாக்குகளை வைத்துக்குகொண்டு தமிழகத்தில் அவர்களால் என்ன வெற்றியைப் பெற முடியும். மூன்று சதவிகிதம் வாக்குவங்கியை வைத்துக்கொண்டு, தமிழகத்தில் மிகப்பெரிய வாக்குவங்கியை வைத்துள்ள ஒரு கட்சிக்கு உத்தரவு போடுவதும், ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்வதும் வேடிக்கையாக இருக்கிறது.
அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் கொடுக்கக்கூடிய தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு எங்களுடன் கூட்டணி அமைத்தால்தான் அவர்களால் சுமூகமாக வெற்றிபெற முடியும். மாறாக, பேசக்கூடாததையெல்லாம் பேசிக்கொண்டிருந்தால், அ.தி.மு.க-வினர் தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு வேலை செய்யமாட்டார்கள். இரண்டு கட்சிகளின் தொண்டர்களுக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டால்தான் அந்தக் கூட்டணி நல்ல கூட்டணியாக அமையும்.
மேலும், பா.ஜ.க-வின் கொள்கை வேறாக இருந்தாலும், கூட்டணி அமைக்கும்போது திராவிட சித்தாந்தத்துக்கு எதிராகப் பேசுவதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், திராவிட சித்தாந்தத்தில் ஊறிப்போன அ.தி.மு.க தொண்டர்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாடட்டார்கள். அதனால், தேர்தல் நேரத்தில் உங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, அமைதியாகவும் பக்குவமாகவும் கருத்துகளை அவர்கள் வெளிப்படுத்தினால் இருவருமே வெற்றிபெறலாம். இல்லையென்றால், அவர்களுக்கு அ.தி.மு.க தொண்டர்களின் ஆதரவு இல்லாமல் போய்விடும்.
மாறாக, நாங்கள்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், உங்கள் தலைமையில் வேறு கூட்டணியை அமைத்துக்கொள்ளுங்கள். முதல்வர் வேட்பாளராக யாரை வேண்டுமானாலும் அறிவித்துக்கொள்ளுங்கள். பிரச்னை இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அ.தி.மு.க ஜெயித்தாலும் தி.மு.க ஜெயித்தாலும் தனித்து ஆட்சியமைப்பதுதான் வரலாறு. மத்தியில் மட்டுமே கூட்டாட்சி. தமிழ்நாட்டில் கூட்டாட்சி என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்றார் ஜவஹர் அலி.
இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.
“முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு விவகாரம் குறித்து சில ஊடகங்களும் எதிர்க்கட்சியினருமே சர்ச்சையாக்குகிறார்கள். மற்றபடி, இதில் ஒரு பிரச்னையும் இல்லை. அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ குழு தேர்ந்தெடுத்துள்ளது. அதேபோல, தேசிய ஜனநாயக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அந்தக் கூட்டணியின் அதிகாரப்பூர்வ குழு தான் தேர்ந்தெடுக்க முடியும். அதில் அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள்.
அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டதற்கு எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்துள்ளார். எனவே, இதில் எந்தக் குழப்பமும் சர்ச்சையும் கிடையாது. இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்குள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படியிருக்கும் சூழலில், தேர்தல் நெருங்குகிற காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதிப்படுத்தப்படும்போது, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.
எங்கள் கட்சியின் அகில இந்தியத் தலைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களும் இணைந்து அந்த அறிவிப்பை வெளியிடுவார்கள். அதுதான் ஒரு கூட்டணிக்கு பலத்தைக் கொடுக்கும்” என்றார்.
“நீங்கள் சொல்வதைப் போன்ற தெளிவான விளக்கம் பா.ஜ.க-விடமிருந்து வரவில்லையே?” என்ற கேள்வியை நாராயணன் திருப்பதியிடம் நாம் முன்வைத்தபோது, “இப்படித் தெளிவாக நாங்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். இது குறித்து ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் கேட்கப்படும்போது, இதே விஷயத்தைச் சொல்கிறோம். ஆனால், அந்தக் கருத்துகள் ஒவ்வொரு விதமாக ஊடகங்கள் வாயிலாக வெளியாகின்றன. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் இல்லை என்று யாருமே கூறவில்லை. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டும். அவ்வளவுதான்” என்றார்.
அ.தி.மு.க-வின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசிய கருத்துகள் குறித்து நாராயணன் திருப்தியிடம் நாம் கேட்டபோது, “பா.ஜ.க பெயரைக் குறிப்பிட்டு கே.பி.முனுசாமி எதுவும் பேசவில்லை. அப்படி பா.ஜ.க குறித்து ஏதாவது கருத்தை கே.பி.முனுசாமி கூறியிருந்தார் என்றால், அதற்கு பதில் செல்ல வேண்டியவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்தான். அவர்கள்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில், பாஜக-வுடன் கூட்டணி தொடர்கிறது என்று சொன்னார்கள்” என்றார்.
Also Read: பா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி?! -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்?
இந்த சர்ச்சை குறித்து திராவிட இயக்க ஆய்வாளரான துரை கருணாவிடம் பேசினோம்.
“அத்வானி, வாஜ்பாய் காலத்தில் சித்தாந்தம் மற்றும் தத்துவார்த்த அடிப்படையில் செயல்பட்ட பா.ஜ.க., தற்போது சாமர்த்திய, சாதுரிய, சாகச அரசியலைக் கையிலெடுத்துள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று சொல்லி, ஒட்டுமொத்த இந்தியாவையும் தனது ஆளுகைக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ.க செயல்படுகிறது. அதுபோல, கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்ற முழக்கத்தை தமிழகத்தில் பா.ஜ.க முன்னெடுக்கிறது.
தமிழகத்தில் 3 - 4 சதவிகித வாக்கு வங்கியை வைத்துள்ள பா.ஜ.க., தனது தலைமையில்தான் கூட்டணி என்றும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்றும் சொல்வதை அ.தி.மு.க-வினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைமைதான் அறிவிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
அதனால்தான் அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கடுமையான வார்த்தைகளால் பேசியிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில்தான் கூட்டணி என்றால், அ.தி.மு.க இல்லாத கூட்டணியாக அது இருக்கும். பா.ஜ.க-வின் வாக்கு வங்கி எவ்வளவு தமிழகத்தில் இருக்கிறதோ, அதற்கேற்ப தொகுதிகளைக் கொடுக்க வேண்டும் என்றுதான் அ.தி.மு.க-வினர் நினைக்கிறார்கள். இந்த நிலையில், பெரியண்ணன் மனப்பான்மையுடன் பா.ஜ.க செயல்பட்டால், அ.தி.மு.க அதை ஏற்காது என்பதை கே.பி.முனுசாமி மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களின் பேச்சுகள் மூலம் உறுதியாகத் தெரிகிறது.
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதைப் பல மாநிலங்களில் கொண்டுவந்துவிட்டார்கள். ஆனால், தமிழக அரசியல் சூழலில் அவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது. திராவிட பூமியான தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அ.தி.மு.க., தி.மு.க என்கிற இரண்டு திராவிடக் கட்சிகள் தான் ஆண்டுவருகின்றன. இங்கு தேசியக் கட்சி காலூன்றுவதற்கு துளியும் வாய்ப்பு இல்லை. முதல்வர் வேட்பாளரை முடிவுசெய்யவும், அறிவிக்கவும் அ.தி.மு.க-வுக்குத்தான் முழு உரிமை இருக்கிறது. அதைத்தாண்டி யாரும் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-on-announcement-of-admk-chief-minister-candidate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக