``தேர்தலை மனதில் வைத்தே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என அ.தி.மு.க அரசு அறிவித்திருக்கிறது என்று சொல்கிறார்களே?’’
``இந்தப் பணம் வாக்குகளாக மாறும் என்று நாங்கள் செய்யவில்லை. மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். அமர்த்தியா சென் முதல் இங்குள்ள ஸ்டாலின் வரை பலரும் மக்களுக்கு நேரடியாகப் பணம்தர வேண்டும் என்று சொன்னார்கள். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இதில் தவறு எதுவுமில்லை.''
``ஜெயலலிதா இருந்தபோது வெறும் 100 ரூபாய்தான் பொங்கல் பரிசாகக் கொடுத்தார். இப்போது 2500 ரூபாய் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?''
``ஆமாம். அம்மா இருக்கும்போது பொங்கல் பரிசாக 100 ரூபாய் கொடுத்தார்கள். அதன்பின் வந்த அண்ணன் எடப்பாடியார் 1,000 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தார். இப்போது 2,500 ரூபாயாக மேலும் உயர்த்திக்கொடுக்க இருக்கிறார். கொரோனா காலத்தில் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது. வாங்கும் சக்தியை அதிகரிக்கும் கருவியாகத்தான் இந்த பொங்கல் பரிசைப் பார்க்கிறோம். அதுதான் அந்த அரசாணையிலும் உள்ளது.''
``வாங்கும் சக்தியை அதிகரிக்க `ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தில் கூட மத்திய அரசாங்கம் மக்களுக்கு நேரடியாகப் பணம் தர முன்வரலையே? அப்படியிருக்கத் தமிழக அரசு ஏன் தர வேண்டும்?"
``நாங்களும் `ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தில் இதையெல்லாம் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அரிசி, கொண்டைக்கடலை கொடுப்பதுபோலத்தான் அறிவிப்புகள் வந்தன. அதனால், பொங்கல் சமயத்தில் கொடுத்தால் மக்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். நல்ல தொடக்கமாகவும் இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.''
Also Read: `கழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி?' - அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்!
``கொரோனா காலகட்டத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று கொடுக்கிறீர்கள் என்றால், தீபாவளியின்போதே கொடுத்து இருக்கலாமே?"
``அப்பப் பணம் இல்லையே தம்பி...''
``அப்போது அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் மட்டும் எப்படி 5,600 கோடி ரூபாய் வந்தது?''
``எவ்வளவு கடன் வாங்கலாம் என்ற அளவை மத்திய அரசாங்கம் அண்மையில்தான் வெளியிட்டார்கள். அதன்படி திட்டமிட்டுக் குறைந்த வட்டியில் கடன் வாங்கிதான் மக்களுக்குக் கொடுக்க இருக்கிறோம். தீபாவளி சமயத்தில்தான் கொரோனாவுக்காக தமிழக அரசு கிட்டத்தட்ட 10,000 கோடிகளுக்கு மேல் செலவு செய்திருக்கிறது. அப்படி இருக்கும்போது அப்போது ஏன் கொடுக்கவில்லை... இப்போது ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டால் என்ன செய்வது?"
``உங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க-வின் துணைத்தலைவர் அண்ணாமலை, `கொள்ளையடித்த பணத்தைத்தான் மக்களிடம் தருகிறார்கள்' என்று விமர்சனம் செய்து இருக்கிறாரே?"
``அவர் அர்த்தமில்லாமல் விமர்சனம் செய்கிறார். அது அரசாங்கத்தின் பணம். அரசாங்கம் கடன் வாங்கிக் கொடுக்கிறது. அப்படியிருக்கும்போது அது எப்படி கொள்ளையடித்த பணமாகும்? தனிப்பட்ட முறையில் யாராவது கொடுத்தால், இந்த விமர்சனத்தை அவர் முன்வைக்கலாம். அவர் புரிதலே இல்லாமல் பேசுகிறார்.''
``ஸ்டாலின், 2500 ரூபாய் போதாது, 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாரே..."
``அவர் 10,000 கூட கொடுக்கலாம் என்று சொல்வார்... அவர் உட்பட எதிர்க்கட்சிகளுக்கு நாங்கள் திரும்ப வந்துவிடுவோமோ என்ற பயத்தில், எதற்கெடுத்தாலும் விமர்சனம் செய்கிறார்கள். அதுவும் தி.மு.க-வுக்கு எங்கள்மேல் அதிக பயம். நாங்கள் என்ன செய்தாலும், அதற்கு ஏதாவது சொல்லிக்கொண்டே, புலம்பிக்கொண்டே இருப்பார்கள். பொதுமக்கள் இதை நல்ல நிதிநிலை மேலாண்மையாகத்தான் பார்ப்பார்களே தவிர, வாக்குக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று யாரும் நினைக்கமாட்டார்கள். இது தேவையற்ற கருத்துருவாக்கம் என்று நினைக்கிறேன்.''
source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-ma-foi-pandiarajan-speaks-about-tn-government-pongal-gift-scheme
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக