தங்கத்தை முதலீடாகக் கருதுபவர்களுக்கான திட்டம் இது. இதில் குறைந்தபட்சம் ஒரு கிராம் கூட வாங்க முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் 1, 5, 10, 50 & 100 கிராம் தங்கப் பத்திரங்கள் வாங்க முடியும். நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சம் 4 கிலோ வரையிலான மதிப்புள்ள தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.
தங்கப் பத்திரங்கள் விற்பனை முதலீடு இன்று (டிசம்பர் 28, 2020) தொடங்கியுள்ளது. இந்த விற்பனை 2021 ஜனவரி 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.5,000 (24 காரட் தங்கம் ஒரு கிராமின் விலை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கும்போது கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆரம்ப முதலீட்டுத் தொகைக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். முதலீட்டு நோக்கில் தங்கமாக வாங்கும்போது உள்ள செய்கூலி, சேதார இழப்பு இதில் இல்லை. ஜி.எஸ்.டி வரியும் இல்லை. தங்கத்தின் விலை ஏற்ற லாபத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.5% வருமானம் கிடைக்கும்.
முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்றாலும் 5, 6, 7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்தத் திட்டத்தில் பாண்டு முதலீட்டை திரும்பப் பெறும் போது தங்கமாகத் தரமாட்டார்கள். இது இந்தியாவில் தங்கப் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும், இந்தியாவின் தங்க இறக்குமதியைக் குறைக்கவேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் இந்த நிபந்தனை. தங்கப் பத்திரங்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது, முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை அடிப்படையில் பணமாகத் தருவார்கள்.
இந்த தங்கப் பத்திரங்கள் வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், தபால் அலுவலகங்கள், பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ பங்குச்சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எட்டு ஆண்டுகள் கழித்து முதிர்வில் விற்கும்போது கிடைக்கும் லாபத்துக்கு, மூலதன ஆதாய வரி கிடையாது.
இந்த பத்திரங்கள் டீமேட் மற்றும் காகித வடிவில் கிடைக்கும். இந்த பத்திரங்களை ஒருவர் வாங்கும் கடனுக்கு ஜாமீனாகக் கொடுக்கலாம். ரூ.20,000 வரையிலான முதலீட்டை ரொக்கப் பணம் மூலமும் மேற்கொள்ளலாம். இதற்கு மேல் என்றால் டிடி, செக், இன்டர்நெட் பரிமாற்றம்தான்.
இதர தங்க நகை, தங்க நாணயம், தங்கக் கட்டி, கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வதைவிட கூடுதலாக ஆண்டுக்கு 2.5 சதவிகித வருமானம் கிடைக்கும். பாதுகாப்பு பிரச்னை இல்லை என்பதால் இது லாபகரமான முதலீடு எனலாம்.
source https://www.vikatan.com/ampstories/business/investment/rbi-sovereign-gold-bonds-open-for-subscription-today-should-you-invest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக