சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்). இவர் பல் மருத்துவ ஆய்வகம் நடத்திவருகிறார். இவரின் மகள் 13 வயது சிறுமி. ராஜாவின் தம்பி மகளுக்கு 7 வயதாகிறது. இந்த இரண்டு சிறுமிகளும் கடந்த 26-ம் தேதி வெளியில் சென்றனர். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. அதனால் சிறுமிகளின் பெற்றோர் பல இடங்களில் தேடியும், அவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து 13 வயது சிறுமியின் தந்தை ராஜா கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் 26-ம் தேதி இரவு 10 மணியளவில் புகாரளித்தார். அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார், இரண்டு சிறுமிகளையும் தேடினர். மயிலாப்பூர் காவல் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் சிறுமியின் செல்போன் சிக்னலைக் கண்காணித்தனர். அப்போது சிறுமியின் செல்போன் சிக்னல் பறக்கும் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டதைக் காட்டியது. இந்தத் தகவலை சைபர் க்ரைம் போலீஸார் கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோட்டூர்புரம் போலீஸார் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதோடு சிறுமிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்களை ரயில்வே போலீஸாரின் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தனர். அப்போது விழுப்புரம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த திருநங்கை ஒருவர், சிறுமி ஒருவர் ரயில் பெட்டியில் அழுதுகொண்டே இருக்கும் தகவலை போலீஸாரிடம் தெரிவித்தார். உடனடியாக ரயில்வே போலீஸார், சம்பந்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியிலிருந்த டிக்கெட் பரிசோதகருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து டிக்கெட் பரிசோதகர், இரண்டு சிறுமிகளையும், அவருடன் பயணித்த இளைஞர் ஒருவரையும் மீட்டு விழுப்புரம் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கோட்டூர்புரம் போலீஸார், விழுப்புரத்துக்குச் சென்று இரண்டு சிறுமிகளையும் இளைஞரையும் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர். சிறுமிகள் காணாமல் போன ஆறு மணி நேரத்திலேயே கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் போலீஸார் சிறப்பாகச் செயல்பட்டு, அவர்களை மீட்டனர். அதனால் கோட்டூர்புரம் போலீஸ் டீம் மற்றும் சிறுமியை மீட்க உதவிய ரயில்வே போலீஸாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், ``காணாமல்போன 13 வயது சிறுமிக்கு சமூக வலைதளம் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இன்ஜினீயரிங் மாணவன் சூர்யபிரகாஷ் (19) என்பவர், சில மாதங்களுக்கு முன் அறிமுகமாகியிருக்கிறார். இவரின் அப்பா ரமேஷ், சென்னை வேளச்சேரியில் துரித உணவுக் கடை நடத்திவருகிறார். சூர்யபிரகாஷும், 13 வயதுச் சிறுமியும் சமூக வலைதளம் மூலம் தகவல்கள், புகைப்படங்களை பகிர்ந்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில் குடும்பத்தினரோடு ஏற்பட்ட பிரச்னை காரணமாக சூர்யபிரகாஷ் வீட்டைவிட்டு வெளியில் வந்திருக்கிறார். அப்போது சிறுமியிடம் போனில் பேசிய சூர்யபிரகாஷ், `நான் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருக்கும் தன்னுடைய தாத்தா வீட்டுக்குச் செல்கிறேன். நீயும் வா’ என்று அழைத்திருக்கிறார்.
Also Read: வேளாங்கண்ணி: 15 வயது சிறுமி கடத்தல்; பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுவன் போக்சோவில் கைது
அதற்கு சம்மதித்த 13 வயது சிறுமி, தன்னுடைய சகோதரியான 7 வயது சிறுமியையும் அழைத்துச் சென்றுவிட்டார். இரண்டு சிறுமிகளையும் ரயில் மூலம் சூர்யபிரகாஷ், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்துச் சென்றபோதுதான், செல்போன் சிக்னல் மூலம் அவர்களைக் கண்டறிந்து மீட்டிருக்கிறோம். சிறுமிகளை அழைத்துச் சென்ற குற்றத்துக்காக சூர்யபிரகாஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 363 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். சூர்யபிரகாஷின் தந்தை அரசியல் கட்சி பிரமுகர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.
Also Read: குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை - காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்!
சிறுமிகள் இருவரும் சேர்ந்து ஒரு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர். 13 வயது சிறுமி எழுதியிருக்கும் கடிதத்தில், தனக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கிறது. அதற்கு அதிக அளவில் மருத்துவச் செலவு ஏற்படுகிறது. அதனால்தான் வீட்டைவிட்டு செல்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 7 வயது சிறுமி எழுதிய கடிதத்தில், `வீட்டில் உள்ளவர்கள் தன்னுடைய 4 வயது தங்கையை மட்டும் கவனிக்கிறார்கள். தன்னை கவனிக்கவில்லை' என்று எழுதியிருக்கிறார். இரண்டு சிறுமிகளிடமும் மகளிர் போலீஸார் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு சிறுமிகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
சிறுமிகளிடம் விசாரித்தபோது இன்னொரு தகவல் வெளியானது. வீட்டைவிட்டுச் செல்லும்போது 13 வயது சிறுமி, ஆன்லைன் படிப்புக்காக வாங்கிக் கொடுத்த செல்போன் ஒன்றையும் எடுத்துச் சென்றிருக்கிறார். ரயிலில் ஏறியதும் அந்த செல்போனிலிருந்த சிம்கார்டை கழற்றியதால், போலீஸாரால் சிறுமியைக் கண்டறிவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது இன்ஸ்பெக்டர் அஜித்குமார், சிறுமிகளைக் கண்டுபிடிக்க அவர்களின் குடும்பத்தினரிடம் ஒரு ஐடியா ஒன்றைக் கூறினார். சிறுமியின் செல்போனுக்கு தனக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் 13 வயது சிறுமியின் தந்தை எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பினார். செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்ததால், அந்த எஸ்.எம்.எஸ்ஸை சிறுமி பார்க்கவில்லை. இந்தச் சமயத்தில் ரயிலில் பயணித்த சிறுமிகள், சில மணி நேரத்துக்குப் பிறகு செல்போனில் வீடியோவைப் பார்க்க சிம்கார்டை போட்டு அதை ஆன் செய்திருக்கின்றனர். அப்போது சிறுமியின் தந்தை அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸைப் பார்த்த சிறுமிகள் கதறி அழுதிருக்கின்றனர். சிறுமியின் செல்போனை சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து கண்காணித்ததால் அவர்களின் இருப்பிடம் உடனடியாகத் தெரியவந்தது. மேலும், வீட்டைவிட்டுச் செல்லும்போது சிறுமிகள், தாங்கள் சேமித்துவைத்த உண்டியல் பணத்தையும் செலவுக்காக எடுத்துச் சென்றிருக்கின்றனர். சிறுமிகள் இருவருக்கும் போலீஸார் கவுன்சலிங் அளித்து வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-rescued-2-girl-child-in-6-hours
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக