இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) பயணக் காப்பீட்டுத் திட்டத்திற்கான பொது நெறிமுறைகளைக் கொண்ட வரைவு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
இந்தியாவில் ஏராளமான பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தாலும், அதைப் பற்றிய புரிதலோ, ஆர்வமோ மக்களிடம் பெருமளவில் இல்லை. மேலும்,ஒவ்வொரு காப்பீடு நிறுவனமும் பல வகை பயணக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குவதால், சிறந்த காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது வாடிக்கையாளர்களுக்குச் சவாலான ஒன்றாக மாறிவிட்டது. பயணக் காப்பீட்டின் பயன்பாட்டை விரிவுபடுத்தி, பயணிகள் தங்களுக்குத் தேவையான காப்பீட்டுத் திட்டத்தை சரியாகத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்துடன் ஐ.ஆர்.டி.ஏ.ஐ இவ்வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதன்மூலம் இந்தியா முழுவதும் ஒரே வகையான பயணக்காப்பீடுதான் இனி பயன்பாட்டில் இருக்கும்.
புது வழிகாட்டு நெறிமுறையின்படி, காப்பீட்டாளர் குறைந்தபட்சம் 18 வயதுடையவராக இருக்கவேண்டும். நகரத்திற்குள் எந்தவொரு பொதுப் போக்குவரத்தின் மூலமும் பயணம் செய்பவர்களும் நகரத்திற்கு வெளியே பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்களும் உள்நாட்டில் ரயில்வழி, வான்வழி மற்றும் நீர்வழி பயணம் மேற்கொள்பவர்களும் பயணக் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். வெளிநாடுகளுக்கு சாலை, நீர், வான் மற்றும் ரயில் வழியாகச் செல்லும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் இக்காப்பீட்டின் மூலம் பயன் பெறலாம்.
Also Read: ஆயுள் காப்பீடு... சிக்கலின்றி க்ளெய்ம் செய்ய சிறப்பான வழிகள்! - பாலிசிதாரர்களுக்கு இது தெரியுமா?
இக்காப்பீடுகளை தனிநபராகவோ அல்லது மொத்த குடும்பமாகவோ எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் முழுக் குடும்பத்திற்கான பயணக் காப்பீட்டை ஃபேமிலி ஃப்ளோட்டராக (family floater) எடுத்துக்கொள்ளலாம். ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டத்தில் ஒரே ப்ரீமியம் செலுத்தி மொத்தக் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வெளிநாட்டு பயணக் கொள்கையைப் பொறுத்தவரையில், பாலிசிதாரரின் பயணத்தின் கால அளவும் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் காலத்தையும் பொறுத்து காப்பீட்டு தொகை மாறும்.
மேலும், வெளிநாட்டுப் பயணத்திற்கான காப்பீடு, பயணிக்கும் நாடு மற்றும் தங்குமிடத்தின் விதிகளின்படி பிரீமியம் தொகை நிர்ணயம் செய்யப்படும்.
ஆக, இந்த புதிய பயணக் காப்பீட்டு நெறிமுறைகளின்படி, பயணக் காப்பீட்டை எடுக்கும்போது இருக்கும் குழப்பங்கள் நீங்கி, ஒரே மாதிரியான பாலிசியை பாலிசிதாரர்கள் தேர்ந்தெடுக்க முடியும். மேலும், பயணத்தின்போது ஏற்படும் இடர்பாடுகளையும் இந்த வகை பாலிசிகள் மூலம் களையலாம்.
source https://www.vikatan.com/business/news/irdai-proposed-new-standard-travel-insurance-policy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக