அனிதா இன்று வெளியேற்றப்பட்டார். ஆஜித், ஷிவானி போன்ற சுமாரான போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் போது அனிதா போன்ற ‘ஆக்டிவ்வான’ போட்டியாளர் ஏன் வெளியேற்றப்பட்டார் என்கிற கேள்வி பெரும்பாலோனோர்களின் மனதில் எழலாம். எனக்குள்ளும் எழுந்தது. இதற்கான விடையை யூகிப்பது எளிதானதுதான்.
பிக்பாஸ் விளையாட்டு என்பதே அடிப்படையில் ஒருவரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான். ஒரு புதிய சூழலில் உங்களை எவ்வாறு பொருத்திக் கொள்கிறீர்கள் என்பதற்கான பரிசோதனை விளையாட்டு இது.
உண்மையில் ஒவ்வொரு பெண்ணும் தங்களின் உண்மையான வாழ்க்கையில் எதிர்கொள்கிற பரிசோதனை இது. ஆம். அறிமுகம் அல்லாத ஓர் அந்நிய ஆடவனை திருமணம் செய்து கொண்டு புதிய மருமகளாக ஒரு புதிய சூழலுக்குள் நுழையும் பெண்ணின் நிலைமை என்பது பிக்பாஸ் போட்டியாளரைப் போன்றதுதான். அங்குள்ள சூழல், மனிதர்கள், அவர்களின் குணாதிசயங்கள்... என்று எதுவுமே புதுப் பெண்ணிற்குத் தெரியாது. என்றாலும் தன்னுடைய பொறுமையாலும் சகிப்புத்தன்மையாலும் அந்தச் சூழலுக்குள் மெல்ல அவர் தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டும்.
அனிதா ஒரு சிறந்த போட்டியாளராக இருந்தாலும் கூட அவரிடம் சகிப்புத்தன்மை இல்லாததுதான் அடிப்படையான பிரச்னை. அவரே ஒப்புக் கொள்கிறபடி ‘ஓவர் எமோஷன்’தான் பிரதான காரணம். இம்மாதிரியான மனிதர்கள் அதிகம் ‘கன்டென்ட்’ தருவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் கருவேப்பிலை போல தூக்கி எறியப்பட்டு விடுவார்கள்.
அடிக்கும் பெரும்புயலில் உயர்ந்து வளர்ந்திருக்கும் பெருமரங்கள் கூட சாய்ந்து விடும். ஆனால் நாணற்புல் அழியவே அழியாது. காற்றின் வேகத்திற்கேற்ப அவை வளைந்து கொடுப்பதால்தான் பிழைத்துக் கொள்கின்றன. பிக்பாஸ் வீட்டிற்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கைக்கும் கூட இந்த அணுகுமுறை பொருந்தும்.
இதற்காக நம்முடைய தனித்தன்மைகளை அழித்துக் கொண்டு சமூகத்திற்கான முகமூடிகளுடன் நாடகம் ஆட வேண்டிய அவசியமில்லை. சூழலுக்கு ஏற்ப உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அவற்றை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தும் கட்டுப்பாடு வேண்டும். அதனால்தான் ‘ரம்யா’ போன்ற நாணலால் அங்கு தொடர்ந்து இருக்க முடிகிறது. அனிதா போன்ற வாழைமரங்கள் அடித்துச் செல்லப்படுகின்றன.
"‘எளிதில் கோபப்படாதே, அழாதே’ என்று என் குடும்பத்தார் நிறைய சொல்லித்தான் இங்கு அனுப்பினார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டேன்" என்று அனிதா அவ்வப்போது கலங்குவார். "என் குடும்பம்தான் எனக்கு முக்கியம். அவர்களை அவமதித்தால் பொறுக்க மாட்டேன்" என்று தன் குடும்பத்திற்கு அத்தனை முக்கியத்துவம் தரும் அனிதா, அவர்களின் புத்திமதியைப் பின்பற்றும் முயற்சியையும் கூடவே எடுத்திருக்க வேண்டும்.
‘டைட்டில் வின்னர்’ என்று அனிதா குறித்து ஆரி வாழ்த்து எழுதிய நேரம் கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். பாவம், எழுதப்பட்ட கையோடு வெளியேற்றப்பட்டு விட்டார்.
ஓகே... 84வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.
ப்ரெளன் கலர் கோட்டில் அட்டகாசமாக வந்தார் கமல். ‘இப்பல்லாம் லவ் சாங்காத்தான் கேட்கப் பிடிக்குது’ என்பது போல் இப்போதெல்லாம் கதர் மீது கமலுக்கு நிறைய காதல் வந்திருக்கிறது. எனவே இந்த ஆடையும் கதராகத்தான் இருக்க வேண்டும்.
2020 வருடத்தை சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம் ‘கோவிட்’. இதையே கமலும் சொல்லி விட்டு "வாழ்க்கையில் அடுத்த நிமிட ஆச்சர்யங்களில் நம்பிக்கை கொண்டவன் நான்... என்னடா இது நல்ல நேரத்துல நெகட்டிவ்வா பேசறாரேன்னு நெனக்காதீங்க. இந்தச் சமயத்துல ‘நெகட்டிவ்’தான் பாசிட்டிவ்... இல்லையா?” என்று கேட்டு அவரே சிரித்துக் கொண்டார். (பழைய ஜோக் சாரே!).
அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்த கமல், பந்து பிடிக்கும் டாஸ்க்கில் இருந்து தனது விசாரணையைத் துவங்கினார். “தனியா விளையாடச் சொன்னா டீமா விளையாடறீங்க... டீமா சேர்ந்து விளையாடுங்கப்பா–ன்னா அப்ப தனியா விளையாடறீங்க. எல்லாத்துலயும் ஏடாகூடம்” என்று சலிப்பும் கலாயப்புமாக கமலின் விசாரணை ஆரம்பித்தது.
முதல் சாட்சியமாக கேபி அழைக்கப்பட்டார். “அணி பிரிக்கறதுல இருந்தே பாலாஜியோட ராஜதந்திரம் துவங்கி விட்டது” என்று ஓவராக யோசனை செய்து கேபி புகார்களை அடுக்க ‘இவிய்ங்க என்ன பேசாறங்கன்னே எனக்குப் புரியலை சார்’ என்பது போல் அமர்ந்திருந்தார் பாலாஜி. கமல் வரும் நாட்களில் அர்ச்சனா ஒரு முகத்தை மாட்டிக் கொண்டதைப் போலவே பாலாஜியும் ஒரு ‘கரகாட்டக்காரன் செந்தில்’ முகமூடியை மாட்டிக் கொள்கிறார்.
"அந்த அளவுக்குல்லாம் நான் யோசிக்கலை சார்... என்னையே பாட்டில் சுத்திதான் தேர்ந்தெடுத்தாங்க" என்று அப்பாவித்தனமாக பாலாஜி பதில் சொல்ல. ‘அதானே. குழந்தையைப் போய் எப்பவும் சந்தேகப்பட்டுக்கிட்டு. வா... பப்லு... மம்மு ஊட்டி விடறேன்’ என்று கொஞ்சாத குறையாக பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்தார் கமல். பப்லு ஆர்மியின் பிரதான உறுப்பினராக கமலே இருக்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கு நெடுங்காலமாக இருக்கிறது.
"ரம்யா கூட சோம் டீமிற்கு வந்துடறேன்னு சொன்னாங்க" என்று கேபி தன் புகாரைத் தொடர்ந்த போது, "யார் வேணா... எந்த டீம்ல வேணா போலாம்னுதானே பேசினோம்.. அப்புறம் என்ன?" என்று ரம்யா மடக்க, கேபியால் பதில் சொல்ல முடியவில்லை. வலிமையான போட்டியாளரான ஆரி எதிரணிக்குச் சென்று விட்டதுதான் கேபியின் பிரச்னை.
உயரமும் அகலமுமாக இருப்பதால் பாலாஜி மற்றவர்களுக்கு ஒரு சவாலாக இருந்தார் என்று கமல் சொன்ன கருத்தை மற்றவர்கள் ஒப்புக் கொண்டார்கள். ‘ரெட் பாலை பிடிச்சதை பாலாஜி எப்படி ஸ்ட்டாராட்டஜி என்று சொல்கிறார்’ என்று எனக்கு குழப்பமாக இருந்தது. ஆரியின் விளக்கத்தின் மூலம் ஒருமாதிரியாக பதில் கிடைத்தது. தனது அணியைச் சேர்ந்த பாலாஜியை விட்டுக்கொடுக்காமல் பேசினார் ஆரி.
"சிவப்பு பந்தை பாலாஜி தவறுதலாக பிடித்து விட்டதால் அந்தத் தவறையே பிறகு தனது பலமாக ஆக்கிக் கொள்ளும் அளவிற்கான உத்திகளை பாலாஜி யோசித்தார்" என்பது ஆரியின் விளக்கம். எல்லைக்கோடு தொடர்பாக போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட ‘தள்ளுமுள்ளு’க்களையும் கமல் விசாரித்தார். “தேங்கா பொறுக்கற மாதிரி ஒரு ஃபீல் வந்தது” என்று ரம்யா சொன்னதைக் கேட்டு இந்த டாஸ்க்கை யோசித்த பிக்பாஸ் டீம் ஒரு கணம் பயங்கர காண்டாகியிருக்க வேண்டும்.
"நான் குட்டியா இருந்ததால சரியா பந்து பிடிக்க முடியவில்லை" என்றார் கன்னுக்குட்டி. "சிறப்பா விளையாடியவங்களுக்கு முன்னாடி நிக்க வாய்ப்பு கொடுத்துட்டு நாங்க பின்னாடி நின்னோம்" என்று கெத்தாக சொன்னார் ஷிவானி. (வார்த்தை சாமர்த்தியத்தை கவனிச்சீங்களா..? இவங்க வாய்ப்பு கொடுத்தாங்களாம்!)
இந்த டாஸ்க் முடிந்த பிறகு வரிசைப்படுத்துதல் விஷயத்தில் ஆரிக்கும் ரியோவிற்கும் நடந்த நெடும் விவாதம் பற்றியும் கமல் விசாரிக்க, "நான் கார்னர் பண்றேன்னு அவர் தவறா புரிஞ்சுக்கிட்டார்" என்று ஆரி தனது வழக்கமான பாணியில் நீளமான பொழிப்புரை வழங்க "ஆள விடுப்பா சாமி... நீ சொன்னதுதான் சரி...” என்று சரணாகதி அடைந்தார் ரியோ.
ஒரு விளையாட்டை குழுவாக ஆடுவது எத்தனை முக்கியம் என்பதை தான் பணியாற்றும் சினிமாத்துறையை உதாரணமாகக் கொண்டு கமல் விளக்கினார். இதைப் போலவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னணியிலும் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள் என்பதை கமல் விளக்கும் போது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அதனால்தான் அவ்வப்போது பிக்பாஸ் டீமின் அசாதாரணமான உழைப்பை நான் இங்கு பலமுறை பாராட்டியிருக்கிறேன்.
“அப்புறம் எடுத்துக்கலாம்னு லாக்கர் ரூம்ல பெட்டியை வெச்சுட்டு போற மாதிரி ஆரியும் அனிதாவும் உள்ளுக்குள்ள நெறய பெட்டிங்களை வெச்சிருக்காங்க போல" என்று கமல் குத்தலான நகைச்சுவையை வெளிப்படுத்த "நாங்க அப்படித்தான் சார்... அடிக்கடி ஒருவரையொருவர் திட்டிப்போம். அப்புறம் பிரண்ட்ஸ் ஆயிடுவோம். அண்ணன் தங்கச்சியா இது எங்க ஃபேமிலி பழக்கம்” என்று அனிதா சமாளிக்க, “பழிவாங்கும் ஆட்டம்-ன்னு அனிதா சொன்ன கமெண்ட் என்னை ரொம்ப பாதிச்சது. இந்த வீட்டில எனக்கு பேச யாரு இருக்கா?” என்று பதிலுக்கு நெகிழ்ந்தார் ஆரி.
“ஒரு காலத்துல, ‘உலகத்திலேயே சிறந்த குரல் என் குரல்தான்’னு நெனச்சிருக்கேன். ஆனா மத்தவங்க சொல்றதையும் நாம கேட்கணும்” என்று அனிதாவிற்கு அறிவுறுத்தினார் கமல். (ஆனா அந்த பாலிசில இன்னமும் கூட உங்களுக்கு நம்பிக்கை போகலைன்னு தெரியுது. வாரத்துல வர்ற ரெண்டு நாள்ல நீங்கதான் நெறய பேசிட்டே இருக்கீங்க கமல்).
எந்தவொரு விவாதத்துலயும் தன்னுடைய குரல்தான் கடைசியா ஒலிக்கணும்-ன்ற ஆர்வம் ஒரு கட்டத்தில் சிலருக்கு வெறியாகவே வளர்ந்து விடும். இந்தக் குணாதிசயத்தையொட்டி ‘Last Word Freak’ என்கிற வார்த்தைப் பிரயோகத்தை கமல் உபயோகித்தது சிறப்பு. அனிதாவிற்கு அவசியமான விஷயம் இது.
அடுத்ததாக ‘காலர் ஆஃப் தி வீக்’கில் கோவை ரமேஷ் தொடர்பில் வந்தார். "சினிமா, அரசியல், பிக்பாஸ் –ன்னு சுத்திட்டே இருக்கீங்க. எப்படி உங்களை ஆசுவாசப்படுத்திக்கறீங்க” என்று உலகநாயகனை நோக்கி அவர் கேட்க, “மக்களின் முகங்களை நெருக்கமாக பார்ப்பதில்தான் எனக்கு ஆசுவாசம் கிடைக்கிறது" என்று சென்ட்டியாக சொல்லி அசத்தினார் கமல். (ஒத்துக்கறேன்... நீங்க அரசியல் களத்துலதான் இருக்கீங்க).
“அந்நியன் படத்துல வர்ற அம்பி ரூல்ஸ்ஸா பேசறதால யாருக்கும் அவரைப் பிடிக்காது. அதைப் போல நீங்களும் பிக்பாஸ் வீட்ல ரூல்ஸ் பேசிட்டே இருக்கீங்க. நேர்மையா விளையாடறீங்க. மற்றவர்களுடன் இணக்கமாக இருக்கும் விஷயத்தை இவை பாதிக்காதா?” என்கிற ரமேஷின் கேள்வி ஆரியை நோக்கி அமைந்தது. “இதையெல்லாம் தெரிஞ்சுதானே வந்திருக்கோம். இங்கு நண்பர்கள், பகைவர்கள் என்று எவருமில்லை. கமல் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசும் பல விஷயங்களை நான் முன்பே கவனித்திருக்கிறேன். மத்தவங்களை தகுதிப்படுத்தற வேலையையும் நான் பண்றேன்” என்று கமலையே மிஞ்சும் வகையில் பேசினார் ஆரி. (விரைவில் இவரை ‘மய்யத்தில்’ எதிர்பார்க்கலாமோ?!)
"சினிமா நட்சத்திரங்கள் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று எதற்காக கமல் சொன்னார் என்பது பிற்பாடுதான் புரிந்தது. இப்படி வார்த்தைகளைக் கோத்து கோத்து நிகழ்ச்சியை தள்ளிக் கொண்டு போவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். கமல் அப்படிச் சொன்னவுடன் ‘ஜெயம் ரவி’ வந்தார். அந்நியன் திரைப்படம் பற்றி சற்று முன்னர்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜெயம் ரவியின் லுக்கும் ஏறத்தாழ அந்நியன் மாதிரிதான் இருந்தது.
“நீங்க எது பண்ணாலும் பார்ப்பேன் சார். உங்களோட வெறித்தனமான பக்தன்” என்று அகம் மகிழ்ந்தார் ரவி. (அப்ப ஜெயத்தோட ஓட்டு கமலுக்குத்தான் போல). "உங்க பாதிப்பு இல்லாத நடிகர்களே கிடையாது. அந்த அளவிற்கு டிக்ஷனரியா இருக்கீங்க” என்று ஜெயம் ரவி பாராட்டியதில் மிகையில்லை. ஒரு காலத்தில் எப்படி சிவாஜி சிறந்த நடிப்பிற்கு முன்னுதாரணமாக இருந்தாரோ, அதைப் போல இளைய தலைமுறையினருக்கு கமல் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த அளவிற்கு விதம் விதமான பாத்திரங்களை கையாண்டிருக்கிறார் கமல்.
‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் கமலுக்கே தெரியாமல் உதவியாளராக இருந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார் ரவி. (அந்த ஃபைட் சீன் ரொம்ப ஆபத்தானது. ஆனா ‘நானே பண்றேன்னு சார் சொல்லிட்டாரு... எங்களுக்கெல்லாம் பயமாயிடுச்சு... ஆனா துணிஞ்சு ஆக்ஷன் பண்ணி அசத்திட்டாரு’ என்று இயக்குநர்கள் இன்டர்வியூக்களில் வழக்கமாக பாடும் புராணத்தைப் போலவே ரவியின் புகழுரையும் இருந்தது). அப்போதைய ‘ஆளவந்தான்’ கமல் சைஸில் இப்போது ஜெயம் ரவி இருக்கிறார்.
“சூப்பரா வெளையாடறீங்க... உங்க உண்மையான முகத்தை இப்படியே காண்பிங்க. வெளில நாங்க ‘வேற மாறி’ பார்க்கறோம்" என்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார் ரவி. பிக்பாஸ் நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் ஆர்வத்தினால்தான் கோவிட் டெஸ்ட்டையும் தாண்டி ரவி வந்திருக்கிறார் என்று கமல் அதிக பில்டப் கொடுத்த போதே சந்தேகம் வந்தது. ரவி வந்தது அதற்கு மட்டுமல்ல. விரைவில் வெளியாகவிருக்கும் அவரது புதிய திரைப்படமான ‘பூமி’ படத்தின் டிரெய்லரையும் இங்கு வெளியிட வந்திருக்கிறார்.
டிரெய்லரை முன்பு வெளியிட்ட ரியோவையும் ஆரியையும் பாலா போன்றவர்கள் ‘ஹா’வென்று வியந்து பார்த்தது போல இப்போது ‘ஜெயம் ரவி’யை ரியோவும் ஆரியும் வியந்து பார்த்திருப்பார்கள். டிரெய்லர் நன்றாக வந்திருப்பதாக பிக்பாஸ் மக்கள் பாராட்டினார்கள். பிகிலடித்து கொண்டாடினார் சோம்.
"மத்தவங்களை குறை சொல்லலை. விவசாயத்தை ஊறுகாயா தொட்டுக்கிட்டு சில படங்கள் வந்திருக்கு. ஆனா நாங்க உண்மையாவே அந்த விஷயத்தை கையில் எடுத்திருக்கோம்" என்று ‘ஊமைக்குத்தாக’ சில படங்களை குத்தினார் ஜெயம் ரவி. (பாவம் ‘கத்தி’க்கு ரொம்ப வலிச்சிருக்கும்). விவசாயிகளின் பிரச்னைகளை ‘பூமி’ திரைப்படம் உண்மையான அக்கறையுடன் அணுகியிருக்கிறதா என்பது படம் வந்தால் தெரிந்துவிடும். ‘பூமி’ டிரெய்லரில் ‘பாரம்பரிய விதை நடுவிழா’ என்கிற போர்டை பார்க்க முடிந்தது. திரைக்கதையில் ஆரியின் பங்களிப்பும் இருந்திருக்குமோ?
"விவசாயிகளை ஒரு சமூகம் ஆதரிப்பது மிக முக்கியமானது. அதிலும் இப்போதைய சூழலில் மிக அவசியம்" என்று டெல்லி போராட்டத்தையும் மனதில் வைத்துக் கொண்டு பேசினார் கமல். "ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கும் அனுபவமும் சந்தோஷமும் தனி" என்று கமல் சொன்னது உண்மை. பல கோடி பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்ட திரைப்படத்தைக் கூட மக்கள் இக்கினியூண்டு செல்போனில் பார்க்கும் போது நகைப்பாக இருக்கிறது. சினிமாவின் பல தொழில்நுட்பங்கள் பெரிய திரையை அடிப்படையாகக் கொண்டவை. அதே சமயத்தில் OTT போன்ற பரிணாம வளர்ச்சிகளையும் தடுக்க முடியாது. இவற்றிற்கு ஆதரவான குரலை கமல் எப்போதோ தந்து விட்டார். "இரண்டும் இணைக்கோடுகளாக பயணிக்க வேண்டும்" என்று கமல் குறிப்பிட்டது திருவாசகம்.
"நடிகர்களும் தொடர்ந்து அரசியல் பேச வேண்டும். அதற்காக கட்சி ஆரம்பிக்க வேண்டும், கொடி பிடிக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை" என்று கமல் சொன்னதும் முக்கியமானது. ஹாலிவுட் போன்ற அயல் சமூகங்களில் சினிமா நடிகர்கள் சமூகப் பிரச்சினைகளுக்காக துணிச்சலுடன் ஆதரவு தருவார்கள். இங்கு அது போன்ற போக்கு குறைவு. அதிகாரத்திற்குப் பயந்து பம்மி விடும் நடிகர்களே அதிகம்.
"ஓகே... இப்ப எனக்கு உதவி பண்றீங்களா?” என்று கமல் கேட்க சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டார் ரவி. "யார் காப்பாற்றப்படப் போகிறார்கள்?” என்கிற அறிவிப்பை ஜெயம் ரவியின் மூலம் வெளியிட்டிருக்கலாம். பாவம், இத்தனை தூரம் வந்ததுக்கு, “அங்க ரெண்டு பெட்டி இருக்கும். எடுத்துட்டு வாங்க” என்கிற வசனத்தோடு ரவியை துரத்தி விட முயன்றார் கமல். (பீம்பாய்... பீம்பாய். லாக்கர்ல இருக்கற...)
"சார். இருந்து யார் சேவ் ஆகறாங்கன்னு பார்த்துட்டு போயிடறேன்" என்று ரவி கெஞ்ச வேண்டியிருந்தது. நாமினேட் பட்டியலில் பாக்கியிருந்த நால்வரை இரு ஜோடிகளாக அமர வைத்து பெட்டியை உடைத்துப் பார்த்ததில் கேபியும் ஷிவானியும் காப்பாற்றப்பட்ட விஷயம் தெரிந்தது. ‘தான்தான் போவோம்’ என்பது அனிதாவிற்கு நேற்றே தெரிந்து விட்டது. ‘தனிப்பட்ட குணாதிசயம்’ என்பது இதற்கான வலுவான க்ளூ. எனவே ‘நான்தான் இந்த வாரம் போவேன்’ என்று தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கெத்தாக சொல்ல ஆரம்பித்து விட்டார் அனிதா.
“சரி இருங்க. கொஞ்சம் நேரம் கழிச்சு வர்றேன்” என்ற கமல், ஜெயம் ரவியை வழியனுப்பி வைத்து விட்டு விலகிச் சென்றார். அதற்கு பிறகு நடந்ததுதான் பெரிய காமெடி. “ஒவ்வொரு முறையும் கடைசியா சேவ் ஆகறது எனக்கு வெறுப்பா இருக்கு” என்று ஆஜித் சலித்துக் கொள்ள பிக்பாஸ் வீடே ஒரு கணம் ஆடிப் போயிருக்கும். (சேவ் ஆகப் போறோம்னு ரிசல்ட் வர்றதுக்குள்ளயே பயபுள்ள முடிவு பண்ணிருச்சு!).
“டேய் செல்லம். நீ யாரு... உன் லெவல் என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருடா. மூணாங் கிளாஸ்லயே பெயில் ஆகியிருக்க வேண்டிய பய நீ... ஏதோ அதிர்ஷ்ட அட்டை இருந்ததால அப்ப தப்பிச்சே... ஆனாலும் நீ இவ்வளவு ஆடக்கூடாதுடா தம்பி” என்று ஆஜித்தை சரியாக வழிநடத்தினார் பாலாஜி.
‘நான்தான் போவேன்’ என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த அனிதா, இப்போதோ ‘எனக்கும் மோட்டிவேஷன் கொடு. பாலா’ என்று கெஞ்சிக் கொண்டே வந்தபோது பார்க்க பாவமாக இருந்தது. இதுதான் உண்மையான முகம். இதை வெளிப்படுத்தாமல் ‘வீட்டுக்குப் போகணும்னு முடிவு பண்ணிட்டேன்’ என்கிற பந்தாவெல்லாம் எதுக்கு?
"தொறந்து விட்டா நான் ஓடிடுவேன்” என்று பாலா இப்போது சீன் போட, "டேய் தம்பி. நிறுத்து... ஆஜித்திற்கு ஆறுதல் சொல்லிட்டு இப்ப நீ ஆரம்பிச்சிட்டியா... உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதாடா தம்பி...” என்று ஆரி சரியான விதத்தில் பாலாஜியை கலாய்த்துக் கொண்டிருந்தார்.
மேடைக்கு திரும்பி வந்த கமல் ‘புத்தகப் பகுதி’க்கு வந்தார். ஒவ்வொரு வாரமும் நான் கூட ஆவலாக எதிர்பார்க்கும் பகுதி இதுதான். இந்த வாரம் கமல் அறிமுகப்படுத்திய புத்தகம், அசோகமித்திரன் எழுதிய ‘கரைந்த நிழல்கள்’. நவீன தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர் அசோகமித்திரன். வாழ்வின் கசப்புகளை மென்நகைச்சுவையோடு அபாரமாக வெளிப்படுத்திய எழுத்து இவருடையது.
தமிழின் மிகச்சிறந்த நாவல்களை வரிசைப்படுத்தினால் அதில் ‘டாப்டென்’ வரிசையில் இடம்பிடிக்கக்கூடிய தகுதியைக் கொண்டது ‘கரைந்த நிழல்கள்’. வெளியே பார்ப்பதற்கு பளபளப்பாக தெரியும் சினிமாவுலகின் உள்ளே மறைந்திருக்கும் இருளையும் துயரங்களையும் மிகச் சிறப்பாக பதிவு செய்திருப்பார் அசோகமித்திரன். சினிமாத்துறையில் உள்ள உதிரித் தொழிலாளர்கள், படப்பிடிப்பு ஏற்பாடுகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்களின் சிரமங்கள் போன்றவற்றின் நுண்விவரங்கள் இந்த நாவலில் அற்புதமாக பதிவாகியிருக்கும்.
அசோகமித்திரன் ஜெமினி பட நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். எனவே சினிமாத்துறை சார்ந்து இவர் எழுதிய நாவல்களும் சிறுகதைகளும் கட்டுரைகளும் மிக முக்கியமானவை. இவர் எழுதிய ‘புலிக்கலைஞன்’ ஓர் அற்புதமான சிறுகதை. ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரையை என் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். விரும்புகிறவர்கள் வாசித்துப் பார்க்கலாம். (ஹிஹி... சுய விளம்பரம்தான்!).
கமல்ஹாசனின் இளம் வயதில் அவரது ஆசான்களில் ஒருவராக இருந்த அனந்து (இயக்குநர் பாலச்சந்தரின் வலது கரமாக இருந்தவர்) இந்த நூலைத் தந்து வாசித்துப் பார்க்கச் சொன்னாராம். நாவலை வாசித்து வியந்த கமல், அசோகமித்திரனை தேடிச் சென்று சந்தித்த அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார். (இந்தச் சந்திப்பை அசோகமித்திரன் எப்படி எழுதியிருப்பார் என்று யூகிப்பது இதை விடவும் சுவாரஸ்யமாக இருக்கிறது).
மேடைக்குத் திரும்பி வந்த கமல் ஆஜித் மற்றும் அனிதாவை நோக்கி ஒரு சஸ்பென்ஸ் பார்வை பார்த்தார். முதலில் ஆஜித்தை நோக்கி "ரொம்ப விளிம்புல இருக்கீங்க... முன்னேறணும் தம்பி" என்று சொன்ன போதே அனிதாவிற்குப் புரிந்து விட்டது. ஏனெனில் எவிக்ஷன் ஆகப் போகிறவரின் பெயரை எப்போதும் எடுக்க மாட்டார்கள். "இந்த நியூ இயரை வீட்ல கொண்டாடணும்னு ஆசை வந்துடுச்சு" என்று தன் தோல்வியை வெளிக்காட்டாமல் கெத்து காட்ட முயன்றார் அனிதா.
“அப்படியா. சரி கொண்டாடிக்கங்க” என்பது போல் கமல் எவிக்ஷன் கார்டை சட்டென்று காட்ட அனிதாவின் முகத்தில் அதிக சலனம் இல்லை. அனிதாதான் வெளியேறுவார் என்கிற யூகம் பிக்பாஸ் வீட்டில் ஏற்கெனவே அழுத்தமாகப் படிந்து விட்டதாலோ என்னமோ அங்கும் சலனம் அதிகமில்லை. போலவே மக்களிடமும் அதிக அனுதாபம் இருந்திருக்காது. இது அனிதாவே தேடிக் கொண்ட வீழ்ச்சி.
ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆகும் போதும் தன் உண்டியலில் இருக்கும் காயின்களை வெளியே எடுத்துக் கொண்டு உண்டியலை பாதுகாப்பாக வைப்பது அனிதாவின் வழக்கம். ஆனால் ‘புலி வருது’ கதையாக இம்முறை உண்மையாகவே அவர் வெளியேற வேண்டியிருந்தது. எனவே தன் வழக்கப்படி காயின்களை மட்டும் அனிதா எடுத்துக் கொண்டு உண்டியலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பிக்பாஸ் குறுக்கிட்டு அதை ஆட்சேபித்தார்.
“அனிதா... இந்த வீட்டில் இருந்த வரைக்கும் நீங்க விதிமுறைகளை சரியா கடைப்பிடிச்சிருக்கீங்க" என்று அல்வா தந்து பார்த்தார் பிக்பாஸ். (சும்மா லுலுவாய்க்கு... அனிதா பலமுறை தூங்கி நாய் குரைத்து சாதனை படைத்தவர் என்பது தெரியாதா?!). என்றாலும் பிக்பாஸின் சாதுர்யத்திற்கு அனிதா மசியவில்லை. "உண்டியலை மட்டும் உடைக்கச் சொல்லாதீங்க பிக்பாஸ்" என்று கதறத் துவங்கினார். கிளம்பும்போதும் அழுது ஊரைக் கூட்டுவாரோ என்று கலவரமாக இருந்தது.
என்றாலும் பிக்பாஸ் விடாமல் பாலாஜியின் மூலம் உடைக்கச் சொன்னது அபஸ்வரமாக இருந்தது. அனிதா சென்ட்டிமென்ட்டாக அதை எடுத்துச் செல்கிறார் என்றால் விதிவிலக்காக அனுமதித்திருக்கலாம். இங்கு ஒரு பிளாஷ்பேக். மூன்றாம் சீஸனில் வனிதாவின் வெளியேற்றம் நிகழும் போது விதிப்படி அவர் தனக்கு தரப்பட்ட மெடலை உடைத்து விட்டு வெளியேற வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. "அதெல்லாம் உடைக்க முடியாது. எனக்கு வேணும்... வர்றேண்டா. பிக்பாஸ் தம்பி" என்று கெத்தாக வெளியேறினார். அப்போது பிக்பாஸால் எதையும் செய்ய முடியவில்லை.
வனிதாவிற்கு ஒரு நீதி... அனிதாவிற்கு ஒரு நீதியா... பிக்பாஸ்? (எப்படி ரைமிங்?!)
பிக்பாஸ் கறாராக இருந்ததால், "பத்திரமா தம்பி உடைச்சு தரேன்க்கா" என்று முன்வந்த பாலாஜி, ‘அண்ணே... இதான் மேன்டிலா… இதுல எப்படிண்ணே லைட்டு எரியும்?' என்ற செந்திலைப் போல சற்று மிகையார்வத்துடன் உடைத்ததில் உண்டியல் விரிசல் விட்டது. பாலாஜி உடைக்க ஆரம்பித்த முறை சரியானதுதான். ஆனால் வாய்ப்பகுதி அகலமாக திறந்தவுடன் அப்படியே விட்டிருக்கலாம். உண்டியலில்தான் தன் உயிரே இருக்கிறது என்பதைப் போல் அனிதா பதறி விட்டார்.
‘உண்டி’ என்றால் உணவு என்றும் ஒரு பொருள் இருக்கிறது. உணவு தயாரிப்பதிலும் சரி, உண்டி என்றாலும் சரி. அதன் மீது அனிதா உயிராக இருக்கிறார். (எப்படி பாஸ்.. இப்படில்லாம் கோக்குமாக்கா யோசிக்கறீங்க?!.. ஹிஹி).
வலுக்கட்டாயமாக உண்டியலை உடைக்க வைத்து விட்டு பிறகு ‘ஆல் தி பெஸ்ட் கன்னுக்குட்டி’ என்று வழியனுப்பி வைத்த பிக்பாஸை ‘போடா பன்னிக்குட்டி’ என்று மைண்ட் வாய்ஸில் அனிதா திட்டியிருக்கக்கூடும். “ஓகே... அழாம கிளம்புங்க” என்று மககள் வழியனுப்பி வைத்தார்கள். கிளம்பும் போதும் செய்தி வாசிக்கும் பழக்கத்தை அனிதா விடவில்லை. (சிறந்த போட்டியாளரான அனிதா இன்று வெளியேறினாராம்! இது விளையாட்டுச் செய்தியா மேடம்?!).
மேடைக்கு வந்த அனிதாவை, "வாங்க... ஆஜித்தைப் போலவே நீங்களும் பல வாரங்கள்ல விளிம்புலதான் இருந்தீங்க. நடுவுல ரெண்டு வாரம் மக்கள் உங்களை மேல உயர்த்தி விட்டாங்க. நீங்கதான் காப்பாத்திக்கலை", என்று அனிதாவின் வாக்கு நிலவரப் பின்னணியை விவரித்த கமல் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று அனிதாவின் வெளியேற்றத்தை ரத்தினச் சுருக்கமாக குறிப்பிட்டது சிறப்பு.
“ரெண்டு வாரத்துலயே போயிடுவேன்னு நெனச்சேன்... 80 நாட்களுக்கும் மேலாக தாக்குப்பிடிச்சது பெருமைதான் சார்" என்று அப்போதும் கெத்திலிருந்து இறங்காத அனிதா “மோதிரக்கையால குட்டு வாங்கற மாதிரி உங்க கிட்ட திட்டு வாங்கினதில எனக்குப் பெருமைதான்" என்று பெருமிதம் வழியும் முகத்துடன் சொல்ல ‘நான் உங்களைத் திட்டவேயில்லையே’ என்று சரியாகச் சுட்டிக் காட்டினார் கமல்.
பிக்பாஸ் வீட்டில் பலமுறை நிகழ்ந்த அனிதாவின் உணர்ச்சிரமான வெடிப்புகளை, நடிகர் மார்லன் பிராண்டோ குறிப்பிட்ட ‘neurotic art’ உடன் கமல் ஒப்பிட்டது குறித்து அனிதாவிற்கே ஆச்சர்யமாக இருந்திருக்க வேண்டும். (அப்ப சினிமால நடிக்கப் போகலாமோ?!)
அனிதாவின் பயண வீடியோ ஒளிபரப்பானது. அவரின் பிரத்யேக சிரிப்பு ஒலியை வரிசையாக தொகுத்து முதலில் வெளியிட்ட எடிட்டிங் டீமின் குறும்பு ரசிக்கத்தக்கது. இது போல் ஒவ்வொரு வாரமும் வெளியேறும் போட்டியாளரின் பயண வீடியோவைப் பார்க்கும் போதுதான், "அட... இவரு இத்தனை விஷயம் பண்ணியிருக்கார்ல. இவரை மிஸ் செய்வோம் போலிருக்கே?!” என்று நமக்கே தோன்றுகிறது. அந்த வகையில் அனிதாவின் தொணதொணப்புகளையும் அலப்பறைகளையும் நிச்சயம் நாம் இழப்போம் என்றே நினைக்கிறேன்.
அகம் டிவி வழியாக போட்டியாளர்களைச் சந்தித்த அனிதா ஒரு சம்பிரதாயத்திற்கு வாழ்த்தியதைப் போல்தான் தெரிந்தது. அவரிடம் அதிக உற்சாகம் இல்லை. கிளம்புவதற்கு முன்னால் பார்வையாளர்களை நோக்கி அனிதா சொன்ன இரண்டு விஷயங்கள் உண்மையிலேயே அற்புதமாக இருந்தன.
"இளமைக்காலத்தில் இருக்கும் வறுமையை நினைத்து பயந்து விடாமல் கடினமான உழைப்பைத் தந்தால் நிச்சயம் உயர முடியும்" என்று அவர் சொன்ன செய்தி மிடில் கிளாஸ் மக்களுக்கு நிச்சயம் உத்வேகத்தைத் தந்திருக்கும். இதைப் போலவே திருமணம் ஆன பெண்கள் வீடு என்னும் கூட்டிற்குள் முடங்கி விடாமல் தங்களின் திறமைகளை வெளிக்காட்டும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனிதா சொன்னதும் முக்கியமானது.
அனிதாவின் வேண்டுகோள் படி ‘ஹாய் பிரபா’ என்று அனிதாவின் கணவருக்கு கையசைத்த கமல், அவரை நோக்கி ‘உங்களுக்கு எங்களின் புதுவருட பரிசு’ என்று அனிதாவை முன்னிட்டு சொன்னது அட்டகாசமான சர்காஸம்.
இத்தோடு நிகழ்ச்சி முடிந்து விடும் என்று பார்த்தால் வீட்டில் நடந்த சொச்ச நிகழ்ச்சிகளையும் காட்டி நேரத்தை இழுத்தார்கள். “டேய் அண்ணா... நீ சொன்னதை நான் எப்படா கேட்டிருக்கேன்" என்று பாலாஜியை நோக்கி சிரித்தபடி கேட்டார் ஆஜித். ‘பாலாஜி சொல்றதுக்கெல்லாம் தலையாட்டாம சொந்தமா யோசிச்சு விளையாடு’ என்று அனிதா சொல்லி விட்டுச் சென்றதையொட்டி இந்த எதிர்வினை. அனிதாவின் ஆலோசனையில் உண்மையிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஏன்... பாலாஜிக்கும் ஆஜித்திற்கும் கூட தெரியும். என்றாலும் தெரியாத மாதிரியே பாவனை செய்கிறார்கள்.
அனிதாவின் நிறை குறைகளை தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் ஆரி. "அதான் அவங்க போயிட்டாங்கள்ல. இன்னமும் என்ன ஆராய்ச்சி. நிம்மதியா சாப்பிட விடுங்க" என்பது போல் சலித்துக் கொண்டார் ரம்யா. “இல்லம்மா... வருங்கால சந்ததியினர் இதன் மூலம் பாடம் கத்துக்கணும்" என்று தன் பொழிப்புரையை நிறுத்தாமல் தொடர்ந்தார் ஆரி.
"போன்கால் பண்ணவர் ஆரியை அம்பின்னு சொன்னது செம காமெடி" என்று தொலைபேசி அழைப்பை நினைவுகூர்ந்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார் ரம்யா. அதென்னமோ ஆரியை ரகசிய கிண்டல் செய்வது என்றால் அம்மணிக்கு அத்தனை உற்சாகம் வந்து விடுகிறது. "ஆமாம்... அவர் அம்பிதான். ஆனா ரூல்ஸ் ஃபாலோ பண்ணாத அம்பி" என்று சொல்லி விட்டு வில்லத்தனமாக சிரித்தார் பாலாஜி. ‘நான்தான் அந்நியன்’ என்று அந்த டைட்டிலுக்கு ரம்யாவும் பாலாஜியும் போட்டி போட்டிக் கொண்டிருந்தார்கள். (நீங்க இப்படியே விளையாடிட்டு இருங்க. பிக்பாஸ் டைட்டிலை ஆஜித் தட்டிட்டுப் போகப் போறாரு!).
"இன்னமும் கூட இங்க சில பேர் சேஃப் கேம் ஆடறாங்க... ஷிவானி கூட தன் கருத்துக்களை வெளிப்படையா முன்வெச்சிருக்காங்க” என்று ஷிவானிக்கு வழக்கம் போல் ஆதரவு தந்து கொண்டிருந்தார் பாலாஜி. (அந்தச் சம்பவங்கள்லாம் எப்போ நடந்தது?!).
புதிய கேப்டன் ஆரி தலைமையில் அணி பிரிக்கும் ஆலோசனை நடந்ததோடு இன்றைய எபிஸோட் முடிந்தது. ‘சோறுதான் முக்கியம்’ என்கிற பாலாஜியின் அதே நிலைக்கு ஆரியும் வந்து சேர்ந்திருக்கிறார். அன்னபூரணியான ரம்யாவையே இதற்கு அவர்கள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.
ஆக... போட்டியாளர்களின் எண்ணிக்கை எட்டாக குறைந்திருக்கிறது. இனியாவது கடினமான, சுவாரஸ்யமான டாஸ்க்குகள் வருமா? அல்லது இப்படியே இந்த சீஸனை இப்போது ஒப்பேற்றி முடித்து விடுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/anitha-evicted-bigg-boss-tamil-season-4-day-84-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக