Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

கரூர்: `சாதியால் கணவரைப் பிரிச்சுட்டாங்க!’ - கண்ணீர்விட்ட கர்ப்பிணிப் பெண்

காதலித்துத் திருமணம் செய்தபிறகு, சாதிப் பிரச்னையால் தன்னை ஒதுக்கிவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்துள்ள தனது கணவரோடு தன்னை சேர்த்து வைக்குமாறு, இளம்பெண் ஒருவர் கண்ணீரோடு கோரிக்கை வைத்தார். பிரிந்து சென்ற தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, கர்ப்பிணிப் பெண்ணான அவர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அருந்ததி - வினோத்குமார் திருமணம்

திருப்பூர் மாவட்டம், அன்னூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவரது மகள் அருந்ததி (வயது 22). பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். இளங்கலைப் பட்டதாரியான இவர்தான், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Also Read: சிறுகுன்றின் மேல் நிற்கும் வரலாற்று அதிசயம்... சுண்டக்கா பாறையை மீட்டெடுக்கக் கோரிக்கை!

கரூர் மாவட்டம், கடவூர் சுண்டுக்குழிப்பட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான வினோத்குமார் (வயது 26) என்பவர்தான் தனது கணவர் என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தார். வினோத்குமார் மேட்டுப்பாளையம் அன்னூரில் தங்கியிருந்து, வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது, அருந்ததிக்கும், வினோத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்திருக்கிறார்கள்.

தாயுடன் அருந்ததி

மேலும் இதுகுறித்து, பேசிய அருந்ததி, ``வினோத்குமார் வேறுசாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர்கள் வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று வினோத்குமார் சொன்னார். அதனால், எனது பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் அன்னூரில் உள்ள முருகன் கோயிலில் பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் கழித்து, நான் கருவுற்றேன்.

ஆனால், வினோத்குமாரின் பெற்றோர், `கீழ் சாதிப் பெண்ணை எப்படித் திருமணம் செய்யலாம்?' என்று அவரைப் பிரித்து அழைத்துக்கொண்டு கரூர் வந்துவிட்டனர். இதனால், அன்னூர், காவல் நிலையத்திலும், கரூர் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்திலும், எங்களைச் சேர்த்து வைக்கச் சொல்லி, புகார் மனு அளித்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. இதனிடையே, வினோத்குமாருக்கு அவர் சார்ந்துள்ள சமூகத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன், பெற்றோர் திருமணம் முடித்துவிட்டனர்.

வேறு பெண்ணை திருமணம் செய்த விநோத்குமார்

வினோத்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதைத் தடுக்க முற்பட்டபோது, உள்ளூரில் உள்ள ஊராட்சிமன்றத் தலைவர் தூண்டுதலின் பேரில், கரூர் சிந்தாமணிபட்டி காவல்நிலைய போலீஸார் தடுக்காமல், அன்னூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சொல்லி அலைக்கழித்தனர். இதனால், என் கணவரோடு என்னை சேர்த்து வைக்கச் சொல்லி, புகாரளிக்க இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எனது தாயுடன் வந்தோம்" என்றார்.

இந்த நிலையில், 'கணவருடன் என்னைசேர்த்து வைக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறமாட்டேன்' என கூறி, அருந்ததி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாக சென்று புகார் அளிக்குமாறு வலியுறுத்தினர். அதனால், வேறுவழியின்றி அருந்ததி தனது தாயோடு சென்று, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்

பேட்டியளிக்கும் செல்வராணி

அருந்ததியை அழைத்து வந்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமை பிரிவின் மாநிலச் செயலாளர் செல்வராணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,``தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துவிட்டு, அதன்பிறகு சாதிப் பாகுபாடு காட்டி வினோத்குமார் அருந்ததியை விலக்கி வைத்தது கொடுமை. வினோத்குமாரின் பெற்றோர் ஆளும் கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்துகொண்டு, பாதிக்கப்பட்ட அருந்ததிக்கு நேரடியாக மிரட்டல் விடுத்து வருவதால், வேறுவழியின்றி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தோம். ஆனால், அவர்கள் கரூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கச் சொன்னதால், அங்கு சென்று மனுக்கொடுத்தோம். உரிய நடவடிக்கை வேண்டும். இல்லையென்றால், குடும்பத்தோடு போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்" என்றார்.



source https://www.vikatan.com/news/controversy/woman-files-caste-discrimination-complaint-against-husbands-family-in-karur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக