``தமிழகத்தில் தி.மு.க-வை மாதிரி பொய் பேச யாராலும் முடியாது. ஒரு குடும்பம் எத்தனை கோடி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்? கலைஞர் டிவி-யில் எவ்வளவு சம்பாதித்து வருகிறார்கள் ? உதயநிதி ஸ்டாலின் எத்தனை விவசாயிகளுக்கு உதவி இருக்கிறார்?. இவர்கள் என்னமோ விவசாயிகளுக்காக என்நேரமும் உழைப்பதுபோல் தங்களைச் சித்திரித்துக் கொள்கிறார்கள்’’ என தி.மு.க- வை கடுமையாக விமர்சனம் செய்தார் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் திருச்சி மாநகர பா.ஜ.க சார்பில் மகளிர் உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். பின்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார் வானதி சீனிவாசன்.
அவர் பேசுகையில், ``ரத்த உறவுகளுக்குக் கட்சியில் பதவி கொடுப்பதில்லை. உழைப்பு, திறமை, நேரம் யாருக்கு இருக்கிறதோ அவர்களைக் கௌரவப்படுத்தக் கூடிய ஒரே கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. மத்தியில் இருக்கும் அரசாங்கம் எப்படி பெண்களை முன்னிறுத்தி நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்பதைப் பல கூட்டங்களில் சென்று தொடர்ந்து விளக்கி வருகிறேன். தமிழகத்துப் பெண்களிடம் பிரதமர் மோடி எப்படி ஹீரோவாக இருக்கிறார் என்பதை விளக்கி வருகிறோம்.
Also Read: “திருந்துகிறார்கள்... சேர்கிறார்கள்... பா.ஜ.க-வை வளர்க்கிறார்கள்!” - வானதி சீனிவாசன்
பா.ம.க-வினர் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கொடுப்பவர்கள் மட்டுமே கூட்டணி எனக் கூறி உள்ளனர். இதில் பா.ஜ.க-வின் நிலைப்பாடு என்னவென்று கேட்கிறீர்கள். சாதி வாரிக் கணக்கெடுப்புக்காகத் தமிழக அரசு ஆணையம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். அறிவியல் ரீதியாகக் கணக்கெடுப்பு என்பது கண்டிப்பாகத் தேவைதான். பா.ம.க கேட்பது குறித்து மாநிலத் தலைவர் எல்.முருகன் ஏற்கெனவே, தன் கருத்தைக் கூறி விட்டார்.
வேளாண் சட்டங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால், வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். தமிழகத்தில் தி.மு.க-வை மாதிரி பொய் பேச யாராலும் முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரடியாகக் கேட்கிறேன். சன் டிவி குடும்பம் எத்தனை கோடி சம்பாதித்து வருகிறார்கள்? கலைஞர் டிவியில் எவ்வளவு சம்பாதித்து வருகிறார்கள்? உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலின் எவ்வளவு சம்பாதித்திருப்பார்?
மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர், அக்கட்சியின் நிர்வாகிகள் எனப் பலரும் தொலைக்காட்சி, திரைத்துறை, மது உற்பத்தித் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறனர். வேளாண்மைத் துறையில், தி.மு.க இதுவரை செய்த முதலீடு என்ன? விவசாயிகள் சிலர் போராடுகின்றனர் என்பதால் அதை வைத்து தி.மு.க தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.கதான் தலைமை வகிக்கிறது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க அறிவித்துள்ளது. எங்களைப் பொறுத்தவரைக் கூட்டணி குறித்த நிலைப்பாட்டைத் தலைமை முடிவு செய்யும். தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தைக் கூட்டினால்தான் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்போம்’’ என்றார்.
அப்போது கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ``அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.கதான் தலைமை. அதில் மாற்றமில்லை’’ என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/vanathi-srinivasan-speaks-about-nda-slams-dmk-in-trichy-press-meet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக