Ad

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

வேதாரண்யம்: கடும் பனியால் பாதித்த முல்லை பூ சாகுபடி... நிவாரணம் கேட்கும் விவசாயிகள்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் வேதாரண்யம், கடினல்வயல், ஆதனூர், கருப்பம்புலம் ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 6,000 ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெறுகிறது. இந்த முல்லைப்பூ சாகுபடி சுமார் 80 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாகுபடியை நம்பியுள்ள சுமார் 10,000 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைப்பூ

ஆண்டுதோறும் மார்ச் மாதம் துவங்கி அக்டோபர் வரை முல்லை பூ சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் வரை முல்லை பூ பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது கடும் பனிப்பொழிவால் பூ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 2 டன் பூ மட்டுமே வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சீசன் காலத்தில் கிலோ ரூபாய் 50-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ. 200 முதல் ரூ. 1,000 வரை விற்பனையாகிறது. தற்போது கிலோ ரூ.700 முதல் ரூ. 1,000 வரை விற்பனையாகிறது. பூ அதிகம் விளையாததால் தற்போது விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

முல்லைப்பூ

முல்லைப்பூ விவசாயிகள் சிலரிடம் பேசினோம்.

"ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வங்கி மூலம் நீண்டகால கடனாகத் தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். மேலும் முல்லை பூவிற்கு நிரந்தர விலை கிடைக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு குழுக்களை ஏற்படுத்தி, அந்தக் குழுவிற்கு குளிரூட்டப்பட்ட வாகனத்தை அரசு வழங்கவேண்டும். இந்த பனிக்காலத்தில் பூ உற்பத்தி பாதிக்கப்படுவது மற்றும் அதைத் தடுப்பதற்கு உண்டான வழி குறித்த தகுந்த ஆலோசனைகளை வேளாண்மைத்துறையினர் எங்களுக்கு வழங்கவேண்டும். அரசு மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணமும் நெல் சாகுபடி செய்யும் விவாசாயிகளுக்கு மழை, புயல் பாதிக்கும் காலங்களில்  நிவாரணமும் அறிவித்து வழங்குவது போல வேதாரண்யம் பகுதியில் பனிக்காலங்களில்  பாதிக்கப்படும் முல்லை பூ சாகுபடி செய்யும் எங்களுக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாய் நிவாரணமாக வழங்கவேண்டும்" என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/vedaranyam-farmers-facing-loss-in-mullai-flower-cultivation-because-of-severe-winter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக