Ad

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

`விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை!’- பா.ஜ.க-விலிருந்து விலகிய முன்னாள் எம்.பி

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஹரீந்தர் சிங் கஹல்சா (73), கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்கள் தங்களுக்கு எதிராக இருப்பதாகக்கூறி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று நாடுமுழுவதுமுள்ள பல்வேறு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறனர். அதன் நீட்சியாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்பினர் வரலாறு காணாத வகையில் ஒன்றுதிரண்டு டெல்லியின் தேசிய நெடுச்சாலைகளில் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

இதுதொடர்பாக, மத்திய அரசு விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளிடம் நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், தற்போது போராட்டம் தொடர்ந்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய விளையாட்டு வீரர்களும், தலைவர்களும் பலர் தங்களின் விருதுகளை திருப்பியளித்து வருகின்றனர்.

Also Read: போட்டிப் பேரணி... தலையிடும் நீதிமன்றம்... முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?

இந்நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான ஹரீந்தர் சிங் ஹல்சா, ``மத்திய பா.ஜ.க அரசு விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வீடுகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கடுமையான பனிக்கு இடையிலும் தங்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எவ்வித முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்காததை நான் மிகவும் கண்டிக்கிறேன்.

அதனால், இதற்கு மேலும் இந்தக் கட்சியில் எனது பணியைத் தொடர விரும்பவில்லை” என்று கூறி பா.ஜ.க.விலிருந்து விலகியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியிலிருந்த ஹரீந்தர் சிங் கஹல்சா பஞ்சாப்பிலுள்ள ஃபதேகர்க் சாஹிப் (Fatehgarh Sahib) தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார்.

ஹரீந்தர் சிங் ஹல்சா

இதேபோல், விவசாயிகள் மீதான மத்திய அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதால் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக்தன்திர்க் கட்சி (Rashtriya Loktantrik Party) பா.ஜ.க-வுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் ஹனுமன் பெனிவால், ``மத்திய அரசின் இந்த புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பாக, இதே போன்று அகாலிதளம் கட்சியும் விவயசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க-கூட்டணியில் இருந்து வெளியேறியது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/farmers-protest-ex-mp-harinder-singh-khalsa-quits-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக