சமணர்களின் விழுமியங்களைச் சொல்லும் புராதானச் சின்னங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது, கரூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காபாறை அல்லது குண்டாங்கல் பாறை.
"அந்த வரலாற்றுச் சின்னத்தை அரசு சரிவரப் பாதுகாக்காததால், மது அருந்துபவர்களின் புகலிடமாகவும், அந்தப் பாறையில் தங்கள் பெயர்களைக் கிறுக்குபவர்களின் கூடாரமாகவும் மாறிகொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள சத்தியமங்கலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறிது தூரம் நடந்தால், இந்த குண்டாங்கல் பாறையை அடையலாம். குளித்தலையிலிருந்து மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில், குளித்தலை நகரில் இருந்து 5 கி.மீ தொலைவில் இந்த 'சுண்டக்காபாறை' என்னும் குண்டாங்கல் பாறை அமைந்துள்ளது.
சுண்டக்காய் அமைப்பில் உள்ளதால், அந்தப் பெயரில் இந்தப் பாறை அழைக்கப்படுகிறது. அங்குள்ள ஒரு சிறு குன்றின் முகட்டின் மீது, ஒரு முட்டை வடிவில் இந்த குண்டாங்கல் பாறை அமைந்துள்ளது. ஏறத்தாழ 30 அடி உயரமுடைய இந்தப் பாறையின், ஒரு சிறிய பகுதி மட்டுமே தாங்கு பாறையின் மேல் அழுந்தி நிற்கும் காட்சி, நம்மை அதிசயிக்க வைக்கிறது. எப்படி, இந்த சிறிய பிடிமானத்தில் இத்தனை நூற்றாண்டுகளாக இந்தப் பாறை கீழே கவிழாமல் கம்பீரமாக நிற்கிறது என்ற ஆச்சர்யம் நம்மைச் சூழ்கிறது.
இந்த சுண்டக்காபாறையின் கிழக்கு முகத்தின் பக்கவாட்டில், ஒரு நீள சதுர பகுதி வெட்டுவிக்கப்பெற்று, அதில் உன்னத சிற்பக்காட்சி ஒன்றினைத் தோற்றுவித்திருக்கிறார்கள். இந்த சிற்பம், கி.பி. 4-ம் நூற்றாண்டிலோ அல்லது அதற்கு முன்போ படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள். முக்குடைகளுக்குக் கீழாக, தலைக்குப் பின் திகழும் ஒளிவட்டத்துடன், சிம்ம ஆசனத்தின்மேல் பத்மாசனத் தியானக் கோலத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார்.
கையில் மலரேந்திய வண்ணம் தேவிமார் உடன் நிற்க, இருவர் இருபுறமும் மகாவீரரைப் போற்றி நிற்கின்றனர். மேலே யக்ஷர் இருவர் சாமரம் வீச, இருவர் விண்ணில் மிதந்தவாறு மலர்தூவி மகாவீரரை வழிபாடு செய்கின்றனர். இச்சிற்பங்களின் உருவ அமைப்பும், மகாவீரர் அமர்ந்துள்ள ஆசன அமைப்பும், அமராவதி, கோலி ஆகிய இடங்களில் கிடைத்த பௌத்த சிற்பங்களின் கலையமைப்பைப் போன்றே திகழ்கின்றன என்றும் சொல்கிறார்கள். அதோடு, தமிழகத்தில் கிடைத்துள்ள சமண சிற்பப் படைப்புகள் வரிசையில் மிகப் பழைமையானது, இந்த குண்டாங்கல் பாறையில் உள்ள சிற்பம் என்கிறார்கள்.
அதேபோல், இந்தச் சிற்பத்தைத் தாங்கி நிற்கும் சுண்டக்கா பாறையின் கீழ், சமண முனிவர்கள் படுப்பதற்காக செய்யப்பெற்ற ஐந்து கல் படுகைகள் உள்ளன. அந்தப் படுகைகளுக்கு அருகே தொல் பழங்கால எழுத்துக்களில், 'சீய மித்திரன்', 'வீரமல்லன்' என்ற இருவர் பெயர் பொறிப்புகள் காணப்பெறுகின்றன. இவை, கி.பி. 2 அல்லது 3-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பொறிப்புகளாக இருக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.
இந்தக் கல்வெட்டுப் பொறிப்புகளுக்கு அருகே அதே காலத்தைச் சேர்ந்த, 'யாகரடு' என்ற கல்வெட்டுப் பொறிப்பும், அருகே சில கற்படுகைகளும் காணப்பெறுகின்றன. இப்பொறிப்பால், சுண்டக்கா பாறை என்றும் குண்டாங்கல் என்றும் அழைக்கப்பெறும் அந்த உருண்டைப் பாறை இருக்கும் இடத்தின் பழம்பெயர், 'யாகரடு' என்பதை அறியமுடிகிறது. யாகரட்டில் இருந்து தென்கிழக்கே பார்த்தால், சிறிய அளவிலான மாணிக்கமலை உள்ளது.
இந்த மலையின் மீது வட்ட வடிவில் கிணறு போன்ற இயற்கை மழைநீர் சேமிப்பு சுனை ஒன்றும் உள்ளது. அக்காலத்தில் இதனைச் சமணத் துறவிகள் குடிநீருக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய சிறப்புவாய்ந்த இந்த குண்டாங்கல் பாறை, தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், தகுந்த பாதுகாப்பு இல்லாததால், இந்த வரலாற்றுச் சின்னம் சீரழையும் நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குமுறுகிறார்கள்.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சுந்தர்,
"இந்த சுண்டக்கா பாறையில் சமணச் சிற்பம் அமைந்துள்ளது. இங்கு மதுரையைச் சேர்ந்த சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். இங்கு தொல்லியல் துறையும், புனேயைச் சேர்ந்த சைன சங்கமும் ஆய்வு செய்துள்ளது. நடிகர் நாசர் இயக்கி நடித்த 'அவதாரம்' என்ற திரைப்படத்தில் வரும் இளையராஜா இசையமைத்த சிறந்த பாடல்களில் ஒன்றான, 'தென்றல் வந்து தீண்டும்போது...' என்ற பாடலின் ஒரு காட்சி இங்கே படமாக்கப்பட்டுள்ளது. அப்படி, தமிழ்நாட்டின் தலைசிறந்த சிற்பப் படைப்புகளுள் ஒன்றாக உள்ள இந்த சுண்டக்கா பாறைச் சிற்பம், சுற்றுலா விரும்புவோர், கலை ரசிகர்கள் மற்றும் தல யாத்ரீகர்கள் பார்வையில்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
ஆண்டுக்கு பத்துபேர்கூட இந்தப் பாறையைப் பார்க்க வருவதில்லை. காரணம், இந்தப் பாறை குறித்து அதிகம் வெளியில் தெரியாமல் இருக்கிறது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையினர் தங்கள் சுற்றுலா வரிசையில் இந்த சுண்டக்கா பாறையையும் இணைத்தால், பயணிகள் நிறையபேர் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல், இந்த குண்டாங்கல் பாறையில் நிறைய கல்வெட்டுகள் உள்ளன.
Also Read: மனக்குறைகளை நீக்கும் மகா ருத்ராட்ச அபிஷேகம்... நீங்களும் பங்கு பெறலாம்!
ஆனால், அந்தக் கல்வெட்டுகளைச் சுற்றி, இங்கு வரும் பலரும் கற்களால் தங்கள் பெயரைப் பொறிக்கிறார்கள். இன்னும் சிலர், தங்கள் காதலிகளின் பெயர்களை எழுதி வைக்கிறார்கள். இதனால், பாரம்பர்ய கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் மறைக்கப்பட்டு, தவறான தகவல்கள் பொறிக்கப்படுகின்றன. மாணிக்கமலையில், சிலர் கற்களை வெட்டி எடுத்தனர். தொல்லியல்துறை அதிகாரிகள் தடுத்ததால், கற்களை இப்போது யாரும் வெட்டவில்லை. ஆனால், இந்தp பாறைக்கு அருகிலேயே அரசு மதுக்கடை ஒன்று உள்ளது. அந்த மதுக்கடையில் இருந்து இங்கே வந்து மது குடிக்கும் பலர், காலி மதுப்பாட்டில்களை வீசிச் செல்கின்றனர்.
இதனால், குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். எங்களுடைய முக்கிய கோரிக்கை, இந்த குண்டாங்கல் பாறை சமண சிற்பத்தை தொல்லியல் துறை சார்பாகப் பராமரித்து, சுற்றிலும் தற்போது ஆமை வேகத்தில் நீண்ட காலமாக நடைபெறும் தடுப்புப் பணிகளை விரைந்து அமைத்து, பாரம்பர்யச் சின்னமாக அறிவித்து, சுற்றுலா தலமாக இதை மாற்ற வேண்டும் என்பதாகும். இங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள ஒரு பாதுகாவலரும் எப்போதாவதுதான் இங்கே வருகிறார். அவரை தினமும் இங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும்படி ஆவண செய்ய வேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/archaeology/requests-to-preserve-kundankal-jain-heritage-centre
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக