Ad

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

“மாஸ்டர் பட சிக்கல்” - முதல்வர் இல்லத்துக்கு நடிகர் விஜய் ரகசிய விசிட்?!

மாஸ்டர் படம் அடுத்த மாதம் திரையிடப்படும் என்று அறிவித்திருக்கப்பட்ட நிலையில் அந்த படம் திரையிடுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக நடிகர் விஜய் தரப்பு ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் தயாராகியது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் குறிப்பிட்ட காலக்கெடுவில் வெளியிட முடியாத நிலை இருந்தது. தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த நிலையில், திரைத்துறைக்குச் சாதகமாகத் திரையரங்குகளையும் திறக்கலாம் என்று அறிவித்தது.ஆனால், திரையரங்கில் ஐம்பது சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமி

இதனால் மாஸ்டர் படம் வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் இருந்தது. இதுகுறித்து விஜய் தரப்பிலிருந்து ஏற்கனவே தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கை வைத்தனர். பாதி திரையரங்கில் மட்டுமே ரசிகர்களை அனுமதித்தால் வசூல் பாதிக்கும். தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதே போல் பெரிய திரைநட்சத்திரங்கள் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகள் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ஒளிபரப்பாகும் அதற்கும் அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இந்த கோரிக்கைக்குத் தமிழக அரசு தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இந்நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருப்பதால், அதற்கு முன்பாக இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட நினைத்தது விஜய் தரப்பு. இதனால் முதல்வரை நேரடியாகச் சந்திக்க முடிவெடுத்து அவரிடம் விஜய் தரப்பிலிருந்து அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டிருந்தனர். ஆனால் முதல்வர் தரப்பிலிருந்து அதற்கும் பதில் இல்லை.

இதனால் விஜய் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் அமைச்சர் வேலுமணியை அனுகியுள்ளார். அவர் முதல்வரிடம் பேசிய பிறகு முதல்வர் நடிகர் விஜயை சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார்.வெளியே இது தெரிந்துவிடக்கூடாது என்று ரகசியமாகவே இந்த சந்திப்பை நடத்த முடிவானது. ஞாயற்றுகிழமை இரவு முதல்வர் வீட்டிற்கு அமைச்சர் வேலுமணியோடு வந்த விஜய் அங்கு அரைமணிநேரம் முதல்வரிடம் பேசியிருக்கிறார்.

விஜய் | மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் முன்பாக திரையரங்குகளில் நூறு சதவீத இடத்தினை நிரப்பிக்கொள்ள அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் அப்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் விஜய்க்குக் கீரின் சிக்னல் கொடுக்கும் மூடில் முதல்வரும் இருக்கிறாராம்.



source https://www.vikatan.com/news/general-news/master-movie-issue-actor-vijays-secret-visit-to-cms-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக