Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

`ரஜினி வாய்ஸ்’: `1996’ தேர்தலில் ஏற்படுத்திய தாக்கம் - ஆடிட்டர் குருமூர்த்தியின் கணக்கு பலிக்குமா?

அரசியல் கட்சி ஆரம்பித்து, 2021-ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக 2017-ம் ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அரசியலுக்கு ரஜினி வருவாரா, வர மாட்டாரா என்கிற விவாதம் தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

ரஜினி

இந்தநிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பாக செய்தியாளர்களைத் திடீரென்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், வரும் ஜனவரியில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், அது தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்போவதாகவும் அறிவித்தார். அப்போது, தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும் இருப்பார்கள் என்று அவர்களை அறிமுகப்படுத்தினார்.

கட்சி தொடங்குவதற்கு ரஜினிக்கு விருப்பமில்லை என்றும், யாரோ சிலரின் நிர்பந்தம் காரணமாகவே கட்சி பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. மேலும், முந்தைய நாள் இரவு ரஜினிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்துதான் திடீரென்று மறுநாள் காலையில் கட்சி தொடங்கப்போவதாக ரஜினி அறிவித்ததாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை போன்றோர் கூறிவந்தனர்.

`டிசம்பர் 31-ம் தேதி கட்சியை அறிவிப்பேன்’ என்று சொல்லியிருந்த ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்று டிசம்பர் 29-ம் தேதி திடீரெனறு அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு, அவரின் அரசியல் வருகையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று நினைத்திருந்த தரப்பினருக்கு ஆறுதலையும், அவரது வருகையால் அரசியல் ஆதாயம் அடையலாம் என்ற கனவில் இருந்த தரப்பினருக்கு ஏமாற்றத்தையும் அளித்தது. அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற ரஜினியின் அறிவிப்பைப் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வரவேற்றிருக்கிறார்கள்.

குருமூர்த்தி

அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்து ரஜினி அறிவித்துவிட்டாலும்கூட, தமிழக அரசியலில் ரஜினி தாக்கம் செலுத்துவார் என்கிற ஒரு குரல் ஒலித்துவருகிறது. அது, பத்திரிகையாளரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தியின் குரல். ரஜினியை அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற பேரார்வத்துடன், அதற்காக மிகவும் பாடுபட்டவர் எஸ்.குருமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலுக்கு வரப்போவதில்லை என்கிற ரஜினியின் அறிக்கை வெளியான சற்று நேரத்தில், எஸ்.குருமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். `உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு ரஜினி தனது முடிவை என்னிடம் தெரிவித்தார். அவரது முடிவு தவிர்க்க முடியாதது.

Also Read: ``அன்புக்கு முன் தோற்றுப்போன அரசியல்” - கடைசி நேரத்தில் ரஜினி எடுத்த கடினமான முடிவு!

ஆனால், அவரது அறிக்கையின் கடைசி பாராவுக்கு முந்தைய பாராவில், `தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ, அதை நான் செய்வேன்’ என்று கூறியிருக்கிறார். எனவே, 1996-ல் ஏற்படுத்திய தாக்கத்தை தமிழக அரசியலில் ரஜினி ஏற்படுத்துவார் என்று கணிக்கிறேன்’ என்று தனது ட்வீட்டில் எஸ்.குருமூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, 1996-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோற்கடிக்கப்பட வேண்டும் என்று `வாய்ஸ்’ கொடுத்தார் ரஜினி. அதேபோல, வரப்போகிற சட்டமன்றத் தேர்தலிலும் ரஜினி வாய்ஸ் கொடுப்பார் என்பது எஸ்.குருமூர்த்தியின் கணிப்பு.

ரஜினி

மேலும், அரசியல் கட்சியைத் தொடங்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்த ரஜினி, அதை அறிவிப்பதற்கு முந்தைய இரவு தன்னிடம் பேசியதாகவும், அப்போது தனது முடிவுக்கான காரணங்களை அவர் தெரிவித்ததாகவும் எஸ்.குருமூர்த்தி தெரிவித்திருக்கிறார். அத்துடன், `உடல்நிலை காரணமாகவே கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி முடிவுசெய்திருக்கிறார். அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தல் பணி, பிரசாரம், எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி போன்ற பணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தாங்கும் நிலையில் ரஜினியின் உடல் இல்லை.

கொரோனா பிரச்னையும் அவரது இந்த முடிவுக்கு ஒரு காரணம். அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று கூறியிருக்கிறாரே தவிர, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விலகுவதாக அவர் கூறவில்லை. அரசியலில் தனது நிலைப்பாடு பற்றிய தனது கருத்தை ரஜினி கூறுவார் என்றே நினைக்கிறேன்’ என்றும் எஸ்.குருமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

எஸ்.குருமூர்த்தி சொல்வதைப்போல, வரப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் `வாய்ஸ்’ கொடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். ``ரஜினி இனிமேல் வாய்ஸ் கொடுப்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. வாய்ஸ் கொடுப்பது போன்ற அரசியல் செயல்பாட்டுக்கு அவர் தயாராக இருக்கிறாரென்றால், நேரடியாக அவர் அரசியலுக்கு வந்திருப்பாரே... 1996-ல் அ.தி.மு.க-வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததைக்கூட, அது தேவையில்லாத ஒன்று என்று இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி உணர்ந்திருக்கிறார்.

2006-ல் அ.தி.மு.க-வுக்கு எதிராக எல்லோரும் பேசினார்கள். ரஜினியும் பேசினார். அவ்வளவுதான். அதையும்கூட மறுபரிசீலனை செய்யக்கூடிய நிலை ரஜினிக்கு ஏற்பட்டதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்துவிட்டு, மீண்டும் வந்து வாய்ஸ் கொடுப்பார் என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்தார்கள். `ஜெயலலிதா ஆட்சி எப்போது முடிவுக்கு வரும்...’ என்று எல்லோரும் நினைத்தார்கள். குறிப்பாக, சுதாகரன் திருமணத்துக்குப் பிறகு அந்த எதிர்ப்புணர்வு மேலும் அதிகரித்தது. எனவே, அ.தி.மு.க அப்போது தோற்றதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. செல்ஃப் எடுக்காத ஒரு லாரியை பத்துப் பேர் சேர்ந்து தள்ளும்போது, `நான் கை வைத்ததால்தான் லாரி ஸ்டார்ட் ஆனது’ என்று ஒருவர் சொல்வதைப்போலத்தான், அன்றைக்கு ரஜினி வாய்ஸ் கொடுத்ததைப் பார்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரின் தொண்டர்கள் சிலர் தீக்குளித்தார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் அது போன்ற சம்பவங்களைப் பார்க்க முடிந்தது. ஆனால், ரஜினிகாந்த் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அப்படியான எந்தச் சம்பவமும் நிகழவில்லை. மற்றபடி, நல்ல மனிதர் என்கிற இமேஜ் ரஜினிக்கு இருக்கிறது. அதற்காக அவர் சொல்கிற கட்சிக்கு மக்கள் வாக்களிப்பாளர்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதற்குச் சாத்தியம் கிடையாது.

ரஜினி

தமிழக அரசியலில் ரஜினி தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது எஸ்.குருமூர்த்தியின் ஆசை. அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவருவது என்பது பா.ஜ.க-வின் அரசியல் ஆபரேஷன்களில் ஒன்று. அந்த ஆபரேஷன் ஃபெயிலியர் ஆகிவிட்ட நிலையில், அடுத்த ஆபரேஷனுக்கு பா.ஜ.க தயாராகும். அது என்ன மாதிரியான ஆபரேஷன் என்பது எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.

Also Read: ரஜினியின் முடிவு: வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்குச் சாதகம்?#TNElection2021

இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகரும், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளருமான செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். ``எஸ்.குருமூர்த்தி, தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பார் என்பதும், இல்லையென்றால், பா.ஜ.க-வின் திட்டப்படி புதிதாக ஓர் அணி உருவானால், அந்த அணிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுப்பார் என்பதும் எஸ்.குருமூர்த்தியின் எதிர்பார்ப்பாக இருக்கலாம்.

செந்தில் ஆறுமுகம்

அல்லது `நாங்களும் திராவிடக் கட்சிதான்’ என்று சொல்லி தி.மு.க ஆதரவு வாக்குகளைப் பிரிப்பதற்கு முயலும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுப்பார் என்பதும் எஸ்.குருமூர்த்தியின் கணிப்பாக இருக்கலாம்” என்றார் செந்தில் ஆறுமுகம்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் கருத்தை அறிவதற்காக அதன் செய்தித் தொடர்பாளர்கள் சிலரைத் தொடர்புகொண்டபோது, ``ரஜினி பற்றியும், கூட்டணி பற்றியும் ஊடகங்களிடம் கருத்து எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று எங்கள் கட்சி மேலிடத்தில் அறிவுறுத்தியிருக்கிறார்கள்” என்று கூறி, பதில் சொல்ல மறுத்துவிட்டனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-rajini-lend-support-to-any-faction-in-2021-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக