Ad

புதன், 30 டிசம்பர், 2020

290 வகைகள், 5,00,000 செடிகள்... 2021 மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா!

சர்வதேச சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

ஊட்டி தாவரவியல் பூங்கா

கோடை விடுமுறையான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மலர் கண்காட்சியின் போதும் பூங்கா முழுக்க நூற்றுக்கணக்கான வகைகளில், லட்சக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். மேலும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பூந்தொட்டிகளில் பல வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, மலர் மாடங்களில் அழகிய வடிவங்களில் காட்சி படுத்தப்படுவது வழக்கம்.

Ooty Botanical Garden

கொரோனா பெருந்தொற்று காரணமாக கோடை விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மலர் கண்காட்சிகளும் நடத்தப்படவில்லை.

வருகின்ற 2021-ஆம் ஆண்டு கோடை சீசனை நடத்த திட்டமிட்டு நடைபெற இருக்கும் மலர் கண்காட்சிக்கான மலர் நாற்று நடவு பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நாற்று நடவு பணிகளைத் துவக்கி வைத்தார்.

இதுகுறித்துப் பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "கொரோனா பாதிப்பு காரணமா நடப்பு ஆண்டில் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. வரவிருக்கும் 2021-ஆம் ஆண்டு மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த மலர் கண்காட்சிக்கான நடவு பணிகள் துவங்கியுள்ளன.

ஊட்டி தாவரவியல் பூங்கா

இந்தமுறை சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், ஏஸ்டில்மே, அல்கிமில்லா, எரிசிமம், சினரேரியா, ஜெரோனியம், கிலக்ஸ்சீனியா, ரனுன்குலா், ஆர்னமென்டல் கேல், ஓரியன்டல் லில்லி உட்பட 290 வகையான 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட உள்ளன. இவை கோடை சீசனுக்கு தயாராகும்" என்றார்.



source https://www.vikatan.com/news/environment/ooty-botanical-garden-is-getting-ready-for-2021-flower-show

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக