Ad

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

வெளியேறும் அனிதா; புது கேப்டன் `பாலா'ஜியின் அடிகள்! பிக்பாஸ் – நாள் 83

பிக்பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த சர்ச்சைகளைப் பற்றி “ஏண்டி... கதை கேளேன்…..” என்று இழுவையுடன் நீளமாக இழுத்துப் பேசி கிராமத்துக் கிழவிகள் கூடி வம்பு பேசுவதைப் போல் நிகழ்ச்சி பூராவும் கமல் விசாரணை செய்து கொண்டிருப்பது ஒருவகையில் சலிப்பை ஏற்படுத்துகிறது. மாறாக இந்த விசாரணையை வெறும் உரையாடலாக மட்டுமல்லாமல் இன்னபிற வழிகளில் மாற்றி நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டலாம். கமல் அடிப்படையில் சுவாரஸ்யமான உரையாடலை நிகழ்த்துபவர் என்பது சரி. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் ‘பருப்பும்’ வெறுப்பாகி விடுகிறது.

"ஒருவரின் மீது அன்போ மரியாதையோ செலுத்தி விட வேண்டுமென்று நினைத்தால் அதை உடனே செய்து விடுங்கள்" என்கிற முன்னுரையுடன் வந்தார் கமல். அதற்குக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் மறைந்த திறனாய்வாளர் தொ.பரமசிவனை பாராட்டி ஒரு விழா எடுக்க கமல் நினைத்திருந்தாராம். கொரானா உள்ளிட்ட பல காரணங்களால் அது தள்ளிப் போய் விட்டதாம்.

இந்த நிகழ்ச்சியில் கமல் அறிமுகப்படுத்தும் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களைக் கூட மேடையில் வரவழைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஏற்பாடுகள் கூட நடந்து கொண்டிருக்கிறதாம். ஆனால் நடைமுறைச் சிரமங்களினால் அது நிகழவில்லையாம். இது கமலின் ஆதங்கம்.

பிக்பாஸ் – நாள் 83

கமல் அறிமுகப்படுத்திய புத்தகங்களுள் ஒன்று தொ.பரமசிவன் எழுதிய ‘அழகர் கோயில்’ என்கிற ஆய்வு நூல். வீடியோ வழியாக வந்த தொ.ப. அந்த நூலைப் பற்றி சில வார்த்தைகளும் அப்போது சொன்னது நினைவிருக்கலாம். இந்த வகையில் சம்பந்தப்பட்ட ஆய்வறிஞருக்கு கமல் ஏற்கெனவே மரியாதை செலுத்திவிட்டார் என்று ஆறுதல் கொள்ளலாம். கமலும் இதையே குறிப்பிட்டார்.

"பல அறிவுரைகளுக்குப் பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் நிலைமை சற்று மேம்பட்டிருக்கிறது. என்றாலும் சில விஷயங்கள் அடிப்படையில் இன்னமும் மாறவில்லை" என்று ஆதங்கப்பட்ட கமல் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார். ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்திலிருந்து ‘என்னை மட்டும் லவ்வு பண்ணி புஜ்ஜி்’ என்கிற கருத்துள்ள வரிகளைக் கொண்ட பாடல் காலையில் ஒலிபரப்பானது.

‘யார் வெளியேறுவார்’ என்று ஆரூடம் சொல்லும் வேலையை ஆஜித்திடமிருந்து ரம்யா எடுத்துக் கொண்டார் போலிருக்கிறது. இந்த வாரம் ‘அனிதா’தான் போவார் என்பது ரம்யாவின் அனுமானமாம். இந்த விஷயத்தை ஆஜித்திடம் சங்கடத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் அனிதா.

அதென்னமோ பிக்பாஸ் எவிக்ஷன் பற்றி பிக்பாஸ் டீமிற்கு முன்பே வெளியுலகத்திற்கு தெரிந்து விடுவது ஆச்சர்யம். (என்னத்த சீக்ரெட் மெயின்டெயின் பண்றாங்களோ?!).

கிச்சன் மேடை சிக்கன் உறித்த இடம் போல எப்போதும் கண்றாவியாக இருப்பதைப் பற்றி சோமிடம் புலம்பிக் கொண்டிருந்தார் கேபி. "வெறும் சோறு வடிச்சா கூட எப்படி அசுத்தமாகும்?” என்பது அவரின் அனத்தல். அசுத்தமாக இருக்கிற இடத்தை அப்படியே விட்டு விட்டு செல்ல எப்படித்தான் இவர்களுக்கு மனது வருகிறது என்று தெரியவில்லை.

பந்து பிடிக்கும் டாஸ்க்கில் இவர்கள் கடின உழைப்பைச் செலுத்தியதற்காக லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்கள் 1800 கிடைத்தன. சரியாகத் திட்டமிட்டு குழப்பம் ஏதும் ஏற்படாமல் கச்சிதமாக ஷாப்பிங் செய்தார்கள். (சிக்கன் 3 கிலோ).

பிக்பாஸ் – நாள் 83

புகார் பெட்டியில் கேப்டனின் செயல்பாடுகளைப் பற்றி மற்றவர்கள் கடிதம் எழுதிப் போடலாம். ஆனால் ராஜமுந்திரி பாலாஜிதான் எதையும் வித்தியாசமாக யோசித்து செய்பவர் ஆயிற்றே? தானே கேப்டனாக இருந்தாலும் அவரும் ஒரு கடிதம் எழுதிப் போட்டார். விஷயம் ஒன்றுமில்லை. அது கமலுக்கு எழுதிய கடிதமாம். கமல் பாலாஜியை ஒரு முறை கூட ‘பாலா’ என்று சுருக்கமாக அழைக்கவில்லையாம். இனிமேலாவது செல்லமாக ‘பாலா’ என்று ஆசையாக அழைக்க வேண்டுமாம். (இதற்கு பிறகு கமல் அடித்த கமென்ட் ரகளையானது).

நாள் 84-ன் காட்சிகளும் காட்டப்பட்டன. சமையல் எக்ஸ்பர்ட் ஆன அனிதா அன்று ரவா உப்புமா செய்திருந்தார். ரவா உப்புமா என்ற வஸ்து சாதாரணமாகவே மனிதர்களை முகம் சுளிக்க வைப்பது. அப்படி ஒரு வஸ்துவை வறுக்காத ரவையைக் கொட்டி, ஒரு புறம் மட்டும் வேக வைத்து உப்பில்லாமல் தாளித்தால் எப்படியிருக்கும்? இப்படி செய்தது மட்டுமல்லாமல் பரிசோதனை எலி போல சோமுவிற்கும் கொடுத்து அழகு பார்த்தார் கேபி. "என்னாதிது...” என்று சோம் முகம் சுளித்தவுடன் வேறு மாற்றி உப்பு போட்டிருக்கிற பக்கத்தை அவருக்கு அனிதா தர ‘கடனே’ என்று சாப்பிட்டுத் தொலைத்தார்.

மீண்டும் மேடைக்கு வந்த கமல், "பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் – சென்னை உட்பட கரையோரக் கிராமங்களை ஆழிப்பேரலை தாக்கியது. பல உயிர்கள் மடிந்தன. பெருத்த சேதம் ஏற்பட்டது. ஒரு காலத்தில் பூம்புகார் என்கிற நகரையே சூறையாடிய விஷயம் இது" என்றெல்லாம் சொல்லி ‘பீகாரில் வெள்ளம்’ நியூஸ் ரீல் வாய்ஸ் ஓவர் போல கமல் பேசிக் கொண்டு போனார். ‘நாம் இன்று உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம்தான் போல’ என்கிற பீதி கலந்த ஆறுதல் அப்போது ஏற்பட்டது.

கடல் பற்றிய ஆழ்ந்த அறிவுள்ள அறிஞர்களின் துணைகொண்டு கடல் வளத்தை இனியாவது காக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் கமல்.

அகம் டிவி வழியாக கமல் உள்ளே சென்ற போது ‘ஸ்மார்ட்டா இருக்கீங்க’ என்கிற பரஸ்பர புகழ்தல் சம்பிரதாயம் நடைபெற்றது. திருவிழா கண்ணாடியை பாலாஜியிடமிருந்து வாங்கி ஆரி அணிந்து விநோதமாக அமர்ந்திருந்தார். "இருங்க... டிரஸ் பத்தி நான் ஒரு விஷயம் சொல்றேன்" என்று கமல் ஆரம்பித்ததுமே முந்திரிக்கொட்டை மாணவன் மாதிரி, "சார். நீங்க போட்டிருக்கிறது கதர் ஆடை” என்று கரெக்ட்டாக கண்டுபிடித்து விட்டார் பாலாஜி. (கடந்த வார அனுபவத்தை வைத்து பாலாஜி இந்த விஷயத்தை கச்சிதமாகப் பிடித்தது சிறப்பு).

பிக்பாஸ் – நாள் 83
அடக்கம், பணிவு, அஹிம்சை, கதர் என்று வரவர பாலாஜி காந்தியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நினைத்தால் புல்லரிக்கிறது. நமக்கு அடுத்த தேசத் தலைவர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒரு தலைவர் கிடைப்பார் என்பதை நினைக்கவே கொலைவெறி அதிர்ச்சியாக இருக்கிறது.

"நலிந்து கொண்டிருக்கும் கதர் ஆடை நெசவாளர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை" என்று கடந்த வாரம் சொன்ன விஷயத்தை இந்த வாரமும் கமல் வலியுறுத்தியது சிறப்பு. "தறி கெட்டுப் போய்க் கொண்டிருக்கும் தறி நெசவாளர்களை ஆதரிப்போம்" என்று வார்த்தை விளையாட்டில் அடித்து விளையாடினார் கமல். "சார்... எங்களுக்கும் வாங்கிக் கொடுங்க.. நாங்களும் ஆதரிக்கிறோம்" என்று ஆரி கேட்டவுடன் "அடப்பாவிய்ங்களா. ஒரு உபதேசம் சொன்னது குத்தமாடா?!" என்பது போல் ஒரு கணம் திடுக்கிட்ட கமல், பிறகு "சரி வாங்கித் தர்றேன்" என்றதும் மக்கள் உற்சாகமானார்கள். கமல் ஃபேஷன் துறையிலும் இறங்கப் போகிறாராம்.

‘பாலும் தெளிதேனும்’ என்கிற ஒளவையார் பாடலை கமல் ஏன் சம்பந்தமில்லாமல் சொல்கிறார் என்று முதலில் தோன்றியது. ஆனால் அதில் ‘பருப்பு’ என்கிற வார்த்தை இருந்ததுதான் காரணம் என்பது பிறகு தெளிவாகி விட்டது. பருப்பு என்கிற வார்த்தையைக் கேட்டவுடன் ‘நான்தானா பலியாடு?’ என்று திடுக்கிட்டார் பாலாஜி. ஆனால் அது தனக்கான அம்பு என்பது அனிதாவிற்குப் புரிந்து விட்டது. "பருப்புக்கும் எனக்கும் பல ஜென்மப்பகை போல சார். ‘விடாது கருப்பு’ மாதிரியே பருப்பு என்னைத் துரத்திட்டு வருது" என்று சமாளிக்க முயன்றார்.

"நான் போன வாரம் மேடையை விட்டு இறங்கறதுக்குள்ளேயே... ‘அடுத்த வேளை சோத்துக்கு என்ன பண்றது?’ன்னு பாலாஜி கவலைப்பட ஆரம்பிச்சிட்டார்" என்று பாலாஜியைக் கிண்டலடித்த கமல், "குட்... அப்படித்தான் இருக்கணும். சோறுதான் முக்கியம்" என்று பாராட்டினார். அதென்னமோ இன்று பாலாஜிக்கு கமலிடமிருந்து பல வகைகளில் பாராட்டு கிடைத்துக் கொண்டேயிருந்தது. ஒரு பயங்கர குற்றவாளியை திருத்தி நல்லறிஞராக்கும் வரையில் கமல் ஓயமாட்டார் போலிருக்கிறது. ‘கரகாட்டக்காரன்’ செந்தில் போல பாலாஜியும் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டு இந்த விளையாட்டிற்கு நன்கு ஒத்துழைக்கிறார்.

பிக்பாஸ் – நாள் 83

"இந்த வாரம் கிச்சன் டீம் எப்படியிருந்தது கேப்டன்?” என்று கமல் விசாரணையை துவக்கியதும் ‘கடலைப்பருப்பு’ மேட்டரை சபையில் அவிழ்த்தார் பாலாஜி. "‘It happens’-ன்னு அனிதா சொன்னதுதான் அதிர்ச்சியா இருந்தது" என்று பாலாஜி வைத்த புகாருக்குப் பதிலாக, 'சார்... மூணு நாள் ஊறின பருப்பை வெச்சு கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கலாம். ஆக்சுவலி நான் அந்த ஆராய்ச்சிலதான் தீவிரமா ஈடுபட்டுட்டு இருந்தேன். பாவிப்பசங்க. என் ஆராய்ச்சியைக் கெடுத்து நோபல் பரிசு வாங்க விடாம தடுத்துட்டாங்க...' என்று கூட அனிதா சொல்லி விடுவாரோ என்று தோன்றியது. அந்த அளவிற்கு சமாளிப்புத் திலகமாக இருந்தார்.

"அந்தப் பருப்பை வெச்சு வடை, கூட்டுல்லாம் செய்யலாம்னு பிளான் பண்ணோம்" என்று அனிதா சொல்லிக் கொண்டிருந்த போதே, "அதெல்லாம் உங்களுக்கு செய்யத் தெரியுமா?” என்று சர்காஸ்டிக்காக கமல் குறுக்கிட்டது சுவாரஸ்யம். அதற்கும் எதையோ சொல்லி அனிதா சமாளிக்க முயல, "அதான் நீங்க உப்புமா செஞ்சதை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தமே... பாதிக்கப்பட்டவரையே விசாரிப்போம்... என்ன சோம்?” என்று கமல் சோமைப் பார்க்க ‘உவ்வேக்’ என்று அந்த உப்புமாவின் நினைவு வந்து வாந்தியெடுக்காத குறையாக முகத்தை சுளிப்புடன் மாற்றிக் கொண்டார் சோம். “அந்த ஆயுதத்தை தயாரித்தவர் அனிதா சார். வெப்பன் சப்ளையர் கேபி சார்" என்று சபையில் போட்டுக் கொடுத்தார் சோம்.

"பருப்பு விசாரணையிலேயே எனக்கு வெறுப்பு வந்துடுச்சு சார். இனி எதைப் பத்தி கேட்டாலும் பிரச்னையாகிடுமோன்னு பயமா இருந்தது” என்று அழாத குறையாக சொன்னார் பாலாஜி.

பிக்பாஸ் – நாள் 83

அடுத்து ‘பால்’ பிரச்னைக்கு வந்த கமல் அதைப் பற்றி பாலாஜியிடம் விசாரிக்க, "இந்த வீட்டிற்கு வந்த பால் பாக்கெட்டுங்கள்ல எத்தனை துளி இருக்கு... அதுல எத்தனை சதவிகிதம் புரோட்டின் இருக்கு... தண்ணி கலந்திருக்கு... எத்தனை நாளைக்கு வரும்ன்ற கம்ப்ளீட் டேட்டா பேஸ் என்கிட்ட இருக்கு. அந்த அளவுக்கு ரிசர்ச் பண்ணியிருக்கேன். ஆனா அந்த பிளான்ல ஷிவானி பால் ஊத்தி காலி பண்ணப் பார்த்தாங்க” என்று விளக்கம் தர ஷிவானியின் கண்கள் விரிந்தன.

“என்ன ஷிவானி முறைக்கறீங்க?” என்று ஷிவானியின் பக்கம் வண்டியைத் திருப்பினார் கமல். “ஆக்சுவலி... மில்க் ஷேக் சாப்பிட்டு கிச்சன் டீமிற்கு உதவி பண்ண வந்த வாலன்டியர் நான்... உதவி செய்ய வந்தவருக்கு உபத்திரவம் தந்தவுடன் எனக்கு கோபம் வந்துடுச்சு" என்று சுமாராக விளக்கம் தந்துவிட்டு மீண்டும் சைலன்ட் மோடிற்கு திரும்பினார் ஷிவானி. (என்ன இருந்தாலும் விளக்கம் தர்றதுல அனிதாவை யாரும் மிஞ்ச முடியாது).

"ஒரு தலைவனா அவர் பொறுப்பை பாலாஜி சரியா செஞ்ச மாதிரிதான் எனக்குத் தெரியுது" என்று கமல் ஆதரவு தந்தவுடன் பாலாஜியின் கண்கள் கலங்கின. “ரம்யா உடனே சாரி கேட்டாங்க. கவனிச்சீங்களா?" என்று சொன்ன கமல், அனிதாவை அர்த்தம் பொதிந்த பார்வையுடன் பார்க்க அனிதா ஒரு மைல் நீளத்திற்கு இதற்கு விளக்கம் சொன்னார். 'தெரியாம கேட்டுட்டேன்... சாரி' என்று கமலே இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய அளவிற்கு நிலைமை போய் விடும் போல் இருந்தது.

"மத்தவங்க கிட்ட எப்படி வேணா பேசட்டும். ஆனா அக்கா கிட்ட பாலாஜி பம்மிதான் பேசுவான். அன்னிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. கேப்டன் ஆன திமிரில் என்கிட்ட ரூடா பேசினான்" என்று புகார் சொல்லிக் கொண்டிருந்தார் அனிதா. உண்மையில் மிக நிதானமாகத்தான் பாலாஜி தன் விசாரணையை அன்று ஆரம்பித்தார். அனிதாவின் அலட்சியமான பதில்கள்தான் அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

“இதுக்கே பாலாஜி ரூடு–ன்னு சொன்னா... ஒரு காலத்துல இந்த ஏரியாவோட கிங்கு அவரு... ஞாபகம் இருக்குல்ல?" என்று கமல் நினைவுப்படுத்தியவுடன் 'பாட்ஷா' படத்தில் நெகட்டிவ் ஷேடில் ரஜினி வருவதைப் போன்று பாலாஜி வந்த காட்சிகள் நினைவில் வந்து போயின.
பிக்பாஸ் – நாள் 83

“பாலுன்றது வெள்ளையா இருக்கும். டிகாக்ஷன்றது டார்க் பிரெளனா இருக்கும். ரெண்டையும் கலந்தா காபி... அவ்வளவுதான்னு நான் நெனச்சிட்டு இருந்தேன்" என்று கமல் சொல்லிக் கொண்டிருந்தது, ‘எனக்கு காபி போடத் தெரியாது’ என்று எஸ்கேப் ஆகிக் கொண்டிருந்த அனிதா குறித்த கிண்டல்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

“இல்ல சார்... வீட்லகூட நான் காபி போட்டா எப்பவுமே சரியா வராது... எடுத்து கீழே ஊத்திடுவாங்க” என்று அனிதா விளக்கம் தர “பார்த்தீங்களா... ஆக்சுவலி காபி போடாம அனிதா உங்களுக்கெல்லாம் உதவிதான் பண்ணியிருக்காங்க. உப்புமாவுக்கே இந்தக் கதின்னா... காபி சாப்பிட்டா நீங்கள்லாம் என்ன கதிக்கு ஆளாவீங்க?” என்று கமல் விளக்கிய பின்புதான் அந்த விபரீதத்தின் ஆழம் பிக்பாஸ் வீட்டிற்குப் புரிந்தது. 'மகராசி... நீ கிச்சன் பக்கமே வராதம்மா' என்று காலில் விழாத குறையாக எல்லோரும் திரும்பி அனிதாவைப் பார்த்தார்கள். ‘'என்னைக் கலாய்க்காதீங்க சார்'’ என்று வழக்கம் போல் வெட்கத்துடன் சிணுங்கினார் அனிதா. (ஆக்சுவலி... இதுக்கு நீங்க வருத்தப்படணும் சென்ராயன்... வெட்கப்படக்கூடாது!).

‘கிச்சன் டீம் முழுவதையும் கேட்டிருக்கணும்’ என்று கடலைப் பருப்பு மேட்டரில் முதலில் புகார் சொன்ன அனிதா, இப்போதோ "ஒரு கேப்டனா என்கிட்டதான் கேட்டிருக்கணும்... ரம்யா கிட்டதான் பாலாஜி முதல்ல விசாரித்தார்" என்று சொன்ன போதுதான் பிரச்னையின் காரணம் புரிந்தது. அனிதாவின் ஈகோதான் பிரச்னை.

"சரி... கிச்சன் டீம்ல வேற என்ன பிரச்சினை. குறைகளைக் கொட்டுங்க பார்க்கலாம்" என்றவுடன் அனிதா டீம் செய்த பல சேஷ்டைகளை ‘it happens’ என்று தான் கடந்து போனதை சர்காஸ்டிக்கான கிண்டலுடன் அடுக்கினார் பாலாஜி. கிச்சன் டீமில் இல்லாத மற்றவர்களும் புகார்களை அடுக்கினார்.

"இங்க நிறைய பேருக்கு இன்வால்மெண்ட் இல்ல சார். சாப்பிட மட்டும் வர்றாங்க. வேலை செய்யறதுக்கு ஆள் இல்லை" என்று ஆரி ப்ரோ ஒரு பொழிப்புரையே நிகழ்த்தி விட்டார். “பாலாஜி கேப்டன் ஆனப்புறம்தான் பால் ரேஷன் பத்தின ஐடியாவே அவருக்கு வந்தது” என்று போகிற போக்கில் பாலாஜியைத் தட்டி விட்டு செல்லவும் ஆரி தவறவில்லை. “எல்லோரும் எல்லார் டீமிலயும் வேலை செய்யணும்” என்று ஆரி சொன்ன கருத்தை கமலும் வழிமொழிந்தார்.

பிக்பாஸ் – நாள் 83

"யாரெல்லாம் அனைத்து அணிகளிலும் வேலை செஞ்சிருக்கீங்க?” என்று கமல் விசாரித்த போது அனைவருமே கைதூக்கினார். "அனிதாக்கா பாத்ரூம் டீமிற்கு போனதே இல்லை. ஒரே ஒரு நாள்தான் பண்ணாங்க. டீம்ல இருந்ததில்லை” என்று அனிதாவை போட்டுக் கொடுத்தார் பாலாஜி.

"பாத்ரூம்ல வேலை கம்மின்றதால அதுக்குதான் எல்லோரும் போட்டி போடுவாங்க. என் சமையல் திறமையைப் பார்த்து எப்பவும் என்னை கிச்சன் டீம்ல இழுத்துப் போட்டுடுவாங்க. நானும் பாத்ரூம் கழுவி காந்தியம் பக்கம் போகலாம்னு பார்க்கறேன். ஆனா இந்த கேடு கெட்ட சமூகம் என்னைத் தியாகியாக விடாம தடுத்துட்டே இருக்கு" என்று நீளமாக அனிதா சொன்ன விளக்கத்தை, “கேட்கறதுக்கு நம்பற மாதிரியே இருக்குல்ல" என்கிற ஒரே சர்காஸ்டிக் கமென்ட்டில் ஜாலியாக காலி செய்தார் கமல்.

"ஆண்களுக்கு சமையல் தெரியாது. அதனால் பெண்களுக்குத்தான் சமையல் டீமில் டிமாண்ட் அதிகம்" என்று அனிதா சொல்லும் விளக்கம் ஒருவகையில் ஏற்கத்தக்கது. போட்டியாளர்கள் குறைவாக இருக்கும் தற்போதைய சூழலில் அனிதா சொல்வது ஓகே. ஆனால் சமையல் தெரிந்த பெண்கள் அதிகமிருந்த முந்தைய சூழலில் கூட அனிதா பாத்ரூம் பக்கம் செல்லாமல் டபாய்த்துக் கொண்டே இருந்ததைப் போல்தான் தெரிகிறது.

“தெரியாத விஷயத்தை மெனக்கிட்டு கத்துக்கறதுதான் நல்லது” என்ற கமல்... “அது சரிங்க ஆரி... இவ்வளவு சொல்ற நீங்க. இந்த வாரமும் அனிதாவை கிச்சன் டீம்லதான் போட்டிருக்கீங்க” என்று சொல்லி, 'சரியாகப் பாடும் வரை ஒரு பாகவதரை பாட வைத்த’ ஜோக்கை சொன்னார். அதென்னமோ இன்று அனிதாவிற்கு நாள் முழுவதும் ஊமைக்குத்துகளாக விழுந்து கொண்டேயிருந்தன.

பிக்பாஸ் – நாள் 83

"சமையல் தெரிஞ்சவங்களைத்தான் இப்ப நம்பியிருக்கோம். அடுத்து எங்க தலைவி ரம்யாதான் எங்களுக்கு இனி அன்னபூரணி" என்று ஆரி பாசம் காட்டியதற்கு வெட்கப்பட்டு சிரித்தார் ரம்யா. "கேபி கூட சமையல் கத்துக்கிட்டாங்க போலிருக்கே. வெளியே போகும் போது ஒரு திறமையோட போறாங்க. குட்" என்று கமல் கேபியைப் பாராட்டிய போது மூக்கால் சிரித்து மகிழ்ந்த கேபி, திடீரென்று சுதாரித்து, "என்னது... வெளியே போகும் போதா?” என்று ஜாலியாக ஷாக் ஆனார். (இந்த வார பலியாடு நான்தானா?!).

ஏகலைவன் மாதிரி அர்ச்சனாவிடமிருந்து சமையல் திறமையைக் கற்றுக் கொண்ட கேபியை பிறகு ரியோவும் ஆஜித்தும் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். “நீ திறமையோட இன்னிக்கு வெளிய போற" என்று கமல் சொன்னதை குத்தலான நகைச்சுவையுடன் ரியோ கிண்டலடித்தார்.

"நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள்ல இருந்தே உணவு ரேஷன் பத்தி யோசிச்சிட்டுதான் இருந்தேன். ஏதோ இப்பத்தான் எனக்கு ஞானம் வந்த மாதிரி ஆரி ப்ரோ ஒரு குத்து குத்திட்டாரு" என்று ஆஜித்திடம் பிறகு அனத்திக் கொண்டிருந்தார் பாலாஜி.
வேறு யாருக்காவது கமல் பொறி வைக்கும் போது அதில்தானே வந்து சிக்கிக் கொண்டு சின்னா பின்னாமாவது ரியோவின் வழக்கம். இம்முறையும் அது போலவே நடந்தது. அகம் டிவி வழியாக திரும்பி வந்த கமல் ‘Baggage’ பற்றி எதையோ சொல்ல ஆரம்பிக்க தன் ‘பாக்யராஜ்’ எக்ஸ்பிரஷன்களின் மூலம்தானே மாட்டிக் கொண்டார் ரியோ. ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்கிற பழமொழியை கமல் நமட்டுச் சிரிப்புடன் சொன்னவுடன் ‘டேக் இட்டு’ என்று தன் முகத்தில் தானே உமிழ்ந்து கொண்டார் ரியோ.

ஆரிக்கும் அனிதாவிற்கும் நடந்த ஆக்ரோஷமான சண்டைக்கு வந்த கமல், "TRP-ன்றது அப்படி ஒண்ணும் கெட்ட வார்த்தை இல்ல" என்று தொலைக்காட்சி வணிகத்திற்கு சாதகமாகப் பேசினார். "ஒரு விஷயத்தை செயற்கையாக பரபரப்பாக்குவதுதான் சரியல்ல என்கிற நோக்கில்தான் ஆரி சொன்னாரோ" என்று கமல் எடுத்துக் கொடுத்தவுடன் அதைப் பற்றிக் கொண்டார் ஆரி.

"எதிராளியை பேச விடாமல் தடுப்பதை அனிதா ஒரு உத்தியாகவே பயன்படுத்துகிறார்" என்று ஆரி சொன்ன புகார் சரியாகவே இருக்கலாம். ஏனெனில் ஸ்பேஸ் விடாமல் அனிதா நீளமாக விளக்கம் தரும் போது, ‘ஙொய்' என்ற சத்தத்துடன் காதருகில் தொடர்ந்து பறக்கும் கொசுவின் மீது ஏற்படும் கொலைவெறி உணர்வு நமக்கும் ஏற்படுகிறது. அத்தனை தொணதொணப்பு விளக்கம்.

பிக்பாஸ் – நாள் 83

ஆரியின் புகாருக்கு விளக்கம் தர அனிதா முனைந்த போது, "நான் உங்களுக்காகத்தான் பேசப் போறேன். இல்லைன்னா நீங்களே பேசிக்கங்க" என்று கமல் சற்று முறைப்புடன் சொன்னபோது ‘நீங்களே பேசிடுங்க’ என்று சரணாகதி அடைந்தார் அனிதா. “அனிதா பர்சனலா சொன்ன விஷயத்தை நீங்க பொதுவில் சொன்னது சரியல்ல" என்று ஆரிக்கு கமல் மெல்லிய குட்டு வைத்தபோது, "ஆமாம். அப்படிப் போடுங்க" என்று அனிதாவின் தலை உற்சாகத்துடன் ஆமோதித்தது.

ஆனால், ஏன் அப்படி கமல் செய்தார் என்பதற்கான சூட்சுமம் பிறகு புரிந்தது. ஆரியைக் குட்டு வைத்த கமல், அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு அனிதாவின் பக்கம் வந்த போதுதான், 'ஓ... மனுஷன் இதுக்காகத்தான் அப்படிச் செஞ்சாரா?’ என்று ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் அந்த விஷயத்தை அனிதா சொல்லுவார் என்று கமலுக்கு முன்பே தெரியும் போல.

எதிராளியை பேச விடாத அனிதாவின் தொணதொணப்பு பாணியை ரியோவும் ஆமோதித்தார். ‘பாலா என்னும் பாலாஜி’ என்று சர்காஸ்டிக்காக கமல் அழைக்க சபையே வெடித்து சிரித்தது. “மரியாதை குறித்து பாலாஜி அதிகம் கவனம் கொள்வார். அதனாலதான் ஜி போட்டு கூப்பிட்டேன்" என்று கமல் அடித்த கமென்ட் அட்டகாசமானது.

அனிதாவின் தொணதொணப்பு பாணியை மற்றவர்கள் குற்றம் சாட்டியபோது அதற்கு விளக்கம் தருவதற்காக ‘இப்ப பேசுங்க’ என்று அனிதாவை கமல் அனுமதித்தார். இதற்கு நீளமாகவும் உணர்ச்சிகரமாகவும் அனிதா சொன்ன விளக்கமானது... மற்றவர்கள் சொல்லும் புகார் உண்மைதான் என்பதற்கு சாட்சியமாக இருந்தது. “ஏங்க... ஆரி அப்ப தன் பேச்சை முழுசா முடிக்கலையே. அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்?" என்று அனிதாவிடம் சரியான கேள்வியை எழுப்பினார் கமல். "உங்க கோபத்தைப் பார்த்தா டி.ஆர்.மகாலிங்கத்தோட ஹை-பிட்ச் பாட்டுத் திறமை நினைவிற்கு வந்தது" என்று கிண்டலடித்தார்.

பிக்பாஸ் – நாள் 83

"என் குடும்பம் பத்தி யாராவது தப்பா பேசினா நான் டென்ஷன் ஆயிடுவென். அப்படி பண்றது தப்புன்னா. அந்த தப்பை தொடர்ந்து செய்வேன்" என்று கமலைக் கூட பேச விடாமல் எக்ஸ்பிரஸ் ரயில் போல விளக்கம் அளித்தார் அனிதா. பிறகு துணி துவைக்கும் பிரஷ் கொடுத்து ஆரியிடம் சமாதானம் ஆன விஷயத்தையும் அனிதா கலங்கிய கண்களுடன் சொல்ல, "சரி. பழம் விட்டுட்டே இருங்க. இதோ வந்துடறேன்" என்று சென்றார் கமல். "குடும்பன்றது பலவீனமா இருக்கக்கூடாது. பலமா இருக்கணும்" என்று கமல் சொன்னது திருவாசகம்.

கமல் சென்ற பிறகும் அனிதாவின் எனர்ஜி குறையவில்லை. பாலாஜியுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். "இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை-ன்னு ஆஜித் சொன்னதுக்கு உனக்கு கோபம் வரலை. நான் சொன்னதுக்குத்தான் உனக்கு கோபம் வந்தது" என்று பாலாஜியிடம் அடுத்த எக்ஸ்பிரஸ் ரயிலை சோர்வே இன்றி ஓட்டினார் அனிதா. ப்பா... எத்தனை எனர்ஜி?! கமலுக்கு அளித்த விளக்கத்தில் ‘தென்னைமரக்கதையை’ குளறுபடியுடன் மாற்றிச் சொன்னார் அனிதா.

திரும்பி வந்த கமல், "ஆரிக்கு ஒரு பரிசு கொடுத்தீங்களே. அந்தக் கதை என்ன?” என்று அனிதாவை விசாரிக்க, இப்போது அதற்கும் ரிவர்ஸில் உணர்ச்சிவசப்பட்ட அனிதா “ஆரியை எனக்கு ரொம்பவும் பிடிக்குங்க...” என்று ஆரம்பித்து தன்னுடைய பரிசுக்காரணங்களை அழுகையுடன் சொன்ன போது ஏனோ பரிதாபமே வரவில்லை.

அனிதா தனக்கு பரிசளித்த விஷயத்தை நெகிழ்வுடன் ஆரியும் பிரதிபலித்தார். "அதுல டைட்டில் வின்னர்-னு எழுதியிருந்தீங்களே” என்று கமலும் எடுத்துக் கொடுத்தார். "அந்தப் பாராட்டு காமெடியா இருந்தது" என்றார் அனிதா. உண்மைதான்.

பிக்பாஸ் – நாள் 83

நீண்ட காலம் திருமணம் ஆகாமல் தாமதமாக திருமணம் செய்து விட்டு புது மனைவியிடம் அடிக்கடி இடியும் அடியும் வாங்கும் ஆசாமியைப் போல ‘புது கேப்டன்’ பாலாஜி படும் அவஸ்தைகளைப் பற்றி கமல் விசாரிக்க ஆரம்பிக்க சபையே வெடித்து சிரித்தது. “'வீடு தீ பிடித்து பரபரப்பா ஒரு தருணம் வரும்ல. அப்ப அண்ணன் என்ட்ரி வரும்டா தம்பி...'ன்னு முன்ன கெத்தா சொன்னாரு… ஆனா கேப்டன் ஆனப்புறம் மூலைல உக்காந்து புலம்பிட்டு இருக்காரு" என்று ஆஜித் சொல்ல சபை மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் நிச்சயம் வெடித்து சிரித்திருப்பார்கள். பாலாஜி கேப்டன் ஆன லட்சணம் அப்படி.

பாலாஜியின் கேப்டன்சி பற்றி சில குறைகளும் நிறைகளும் மற்றவர்கள் சொன்னார்கள். "முன்னாடி இருந்த கேப்டன்களுக்கு ஒரு சல்யூட் சார். குறிப்பா ஆரிக்கு... என்னமோ இப்ப கேப்டன் விஜய்காந்த் மேல கூட எனக்கு மரியாதை வந்துடுச்சு சார். அந்த அளவிற்கு இந்த பொறுப்பு டென்ஷன் தந்தது” என்ற பாலாஜி “கேப்டனா இல்லாதப்ப நான் செய்யாத வேலைக்கு கூட best perfomer-ன்னு சொன்னாங்க... ஆனா நான் கேப்டனா விழுந்து விழுந்து வேலை செய்தப்ப ஜெயிலுக்குப் போற அளவுக்கு நிலைமை ஆயிடுச்சு" என்று பாலாஜி சொன்னது சிறந்த நகைச்சுவை. யோசிக்க வேண்டிய விஷயமும் கூட!

இத்தனை உரையாடல்களைக் கடந்த பிறகு இன்றைய நாளின் முக்கியமான விஷயத்திற்கு கிளைமாக்ஸில்தான் வந்தார் கமல். எவிக்ஷன் பட்டியலில் இருப்பவர்கள் அனிதா, ஆஜித், ஷிவானி, கேபி மற்றும் ஆரி.

இதில் ஆரி நிச்சயம் தப்பி விடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியே ஆயிற்று. ‘அனிதா ஆக்ரோஷமாக சண்டையிட்ட போதும் பெரிதாக எதிர்வினை செய்யாமல் புன்னகைத்த ஆரி’ காப்பாற்றப்பட்ட செய்தியை சொன்னார் கமல்.

பிக்பாஸ் – நாள் 83

இந்த வார வெளியேற்றத்தில், "ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயங்கள்தான் முக்கியமான காரணியாக அமையும்" என்று கமல் அளித்த ‘க்ளூ’ அனிதாவை நிரம்பவும் பாடுபடுத்தியது. "நான்தான் போவேன்" என்று அனத்த ஆரம்பித்து விட்டார். "இரு... ரிசல்ட் வரட்டும்" என்று ரம்யா சொன்ன சமாதானத்தையும் அனிதா ஏற்கவில்லை. உணவு மேஜையில் சோம் எதையோ கேட்டபோது, "எனக்குத் தெரியாது. இதுக்குத்தான் நான் கிச்சன் கேப்டனா வர்றதில்ல. நான்தான் சரியா வேலை செய்யலைல்ல" என்று எரிந்து விழுந்தார்.

அனிதாவிற்கு சமையல் தெரியாது என்பது பிரச்னையில்லை. இங்கிதம் தெரியவில்லை என்பதுதான் பிரச்னை. ‘அன்பு கேங்’கில் இருந்து ஒவ்வொருவராக அனிதா காலி செய்யும் போது அனிதா மீது பார்வையாளர்களுக்கு பாசம் பெருகிற்று. அவர் அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். மறுபடியும் பழைய ‘மோடிற்கு’ செல்வதின் மூலம் ‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி... பானையைப் போட்டு உடைத்தாண்டி’ கதையாக தன் இமேஜை தானே கெடுத்துக் கொள்கிறார் அனிதா.

ஓகே... இந்த வாரம் யார் வெளியேற்றப்படவிருக்கிறார் என்கிற தகவல் வழக்கம் போல ஏற்கெனவே வெளியாகி விட்டது. ஒரு கடினமான க்ளூவைத் தருகிறேன். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
பிக்பாஸ் – நாள் 83

அவரின் பெயர் ‘அ’வில் ஆரம்பிக்கும். ‘தா’வில் முடியும். நடுவில் ‘னி’ என்று வரும்.. என்னது?.. இன்னமும் தெரியவில்லையா? ‘என் வீட்டு கன்னுக்குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி’ என்கிற பாடல் வரியும் ஒரு க்ளுதான்.

என்னது... இன்னமும் தெரியலையா... சரி. சரியான விடையை கமென்ட் பாக்ஸில் சொல்பவர்களுக்கு ‘கடலைப்பருப்பு’ ஒரு கிலோ பாக்கெட் பரிசாக அனுப்பப்படும்.

என்னது... இன்னமும் கூட கண்டுபிடிக்க முடியலையா..?! அடப் போங்க... நீங்க அவரோட ஆர்மி ஆளா இருக்கணும். அதான் கண்டுபிடிக்க முடியாத மாதிரியே நடிக்கறீங்க..!



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/performance-of-balaji-as-captain-bigg-boss-tamil-season-4-day-83

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக