Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

`பிரசாரக் களத்தில் பம்பரமாக எடப்பாடி' - அ.தி.மு.கவுக்கு எந்தளவுக்குக் கைகொடுக்கும்?#TNElection2021

பா.ஜ.க பா.ம.க போன்ற கூட்டணிக் கட்சியினரிடம் மட்டுமல்ல, தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளிடம் கூட கலந்தாலோசிக்காமல் கடந்த 19-ம் தேதி, சேலத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒருபுறம் கூட்டணிக் கட்சியினர் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருக்க, மறுபுறம் 'அ.தி.மு.க இரண்டாக உடையப் போகிறது' என எதிர்க்கட்சித் தலைவர் சொல்லிக்கொண்டிருக்க, அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

ஸ்டாலின்

இப்போது மட்டுமல்ல, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், ஒரு மாதத்துக்கு முன்பாகவே பிரசாரத்தைத் தொடங்கி பம்பரமாகச் சுழன்று வந்தார். தி.மு.க தலைவர் ஸ்டாலினின் விமர்சனங்களுக்கும் ஆங்காங்கே பதிலடியும் கொடுத்து வந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையவில்லை. அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலோடு நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அ.தி.மு.க. அதற்கடுத்தகாக நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடத்தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இந்தநிலையில், எடப்பாடியின் இந்த அதிரடி பிரசார வியூகம் வரும் தேர்தலில் அவருக்கு எந்தளவுக்குக் கைகொடுக்கும், மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம்.

ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்)

''கருணாநிதி, ஜெயலலிதா மாதிரி தன்னை ஒரு தலைவராகத் தகவமைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார். அந்த விஷயத்தில், எந்தவித காம்ப்ரமைஸும் இல்லாமல் மிகக் கடுமையாக உழைத்து வருகிறார். நிலையான ஆட்சியைக் கொடுத்ததை முன்வைத்து தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். தலைமைக்கு வேறு யாரையும் அவர் அனுமதிக்கவே மாட்டார். சசிகலா, தினகரன் போன்றவர்களை எல்லாம் அவர் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார். இரட்டை இலைச் சின்னத்துக்கு கையெழுத்துப் போடும் உரிமை, ஓ.பி.எஸ்ஸுக்கும் இருப்பதால் அவருக்கு உரிய மரியாதைக் கொடுப்பார்.

தன்னுடைய ஆட்சியின் சாதனைகளை முன்வைத்து வாக்குகள் கேட்டுவருகிறார். இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு விழும் வாக்குகள் என்பது எடப்பாடி தலைமைக்கு விழக்கூடிய நேர்மறையான வாக்குகளே. அது அ.தி.மு.க ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கான வாக்குகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக வரக்கூடியதற்கான வாக்குகளாக இருந்தாலும் சரி. கூட்டணியைப் பொறுத்தவரை அவரும் பன்னீர்செல்வமும் இணைந்து முடிவு செய்வார்கள். ஓ.பி.எஸ் கொஞ்சம் பா.ஜ.க ஆதரவுநிலையில் இருக்கிறார். ஆனால் கூட்டணி உருவாக்கம் குறித்து நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். தேர்தல் முடிவுகளும் அப்படித்தான்''

ரவீந்திரன் துரைசாமி

ப்ரியன் (மூத்த பத்திரிகையாளர்)

''நான்காண்டு காலத்தில் கட்சியையும் ஆட்சியையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார். நாளை, அ.தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால், அது என்னால்தான் என கிரடிட் எடுத்துக் கொள்வதற்காகவே அவர் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். நிச்சயமாக இது அவர்களின் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். பிரசாரத்திலும் பொங்கல் பரிசு, 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என தன் ஆட்சியில் சாதனைகள் குறித்துப் பேசும் அதேவேளையில், தி.மு.கவையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த நான்காண்டுகளில், முதல் இரண்டு ஆண்டுகளில் ஆட்சியிலும் அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் கட்சியிலும் தன்னை தக்கவைத்துக் கொண்டார்.

Also Read: `கழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி?' - அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்!

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரையும் ஓரங்கட்டிவிட்டார். கூட்டணியே இன்னும் முடிவாகாத நிலையில், கூட்டணிக் கட்சிகள் இவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத போதும் நம்பிக்கையோடு பிரசாரம் செய்து வருகிறார். ஒருவேளை நாளை வெற்றி பெற்றாலும், 'கூட்டணிக் கட்சிகளால் இல்லை, என்னுடைய பிரசாரத்தால்தான் வெற்றிபெற்றோம்' என தன்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போவதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டார். ஜெயலலிதாவும் இப்படித்தான் களத்தில் இறங்குவார். மற்றொரு பக்கம், தி.மு.க-வும் களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்தவும் மட்டுப்படுத்தவும் இவர் கூட்டணி குறித்து யோசிக்காமல் களத்தில் இறங்கித்தான் ஆகவேண்டும். ஆனால், நம்பிக்கையோடு பணியாற்றி வருகிறார் எடப்பாடி. ஆனால், அது தேர்தலில் எந்தளவுக்கு பலன் கொடுக்கும் என்று தற்போது சொல்லமுடியாது''

ப்ரியன்

எஸ்.பி.லட்சுமணன் (மூத்த பத்திரிகையாளர்)

''இந்தத் தேர்தலில் எடப்பாடிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அவரை முதலமைச்சர் வேட்பாளராக கூட்டணிக் கட்சிகளே இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. பா.ஜ.க தடாலடியாக சில நடவடிக்கைகளில் இறங்கினால், தற்போது செய்யும் பிரசாரம் எல்லாம் ஒரே நாளில் காணாமல் போகும். முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க வேறு யாரையும் தேர்ந்தெடுக்கச் சொன்னால், இவரால் என்ன செய்யமுடியும்? ஒன்று, அவர்களுக்கு அடிபணிந்து போகவேண்டும். இல்லை, துணிந்து எதிர்க்கவேண்டும். ஆனால், எடப்பாடி துணிந்து எதிர்த்தால் கட்சியை உடைப்பதற்கான, இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதற்கான வாய்ப்பிருக்கிறது. இதுகுறித்த பீதி அவர்களுக்கே இருக்கிறது.

Also Read: ரஜினி அறிவிப்பு; ஸ்டாலினுடன் போட்டி - அ.தி.மு.க-வை விடுத்து சீமான் தி.மு.க-வை டார்கெட் செய்வது ஏன்?

பா.ம.க-வை பிரசாரக் கூட்டத்துக்கு அழைத்தார்கள், ராமதாஸ் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். தே.மு.தி.கவை அழைக்கவே இல்லை. பா.ஜ.க, முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இப்படி பிரதானக் கூட்டணிக் கட்சியினரின் எந்த ஒத்துழைப்பும் இல்லாமல் பிரசாரம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? தொடக்கமே சரியில்லாமல் இருக்கிறது'' என்றவரிடம், இடைத்தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வெற்றிகள் குறித்துக் கேட்க,

எஸ்.பி.லட்சுமணன்

''இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது, பா.ம.க, பா.ஜ.க கூட்டணியில் இருந்தது. ஆனால், தற்போது நிலை அப்படி இல்லையே. தனித்து நின்று வெற்றிபெறக் கூடிய ஆற்றல் இருக்கிறது என்று சொல்லும் தைரியமும் அவர்களுக்கு இல்லை. அதனால்,எடப்பாடி தற்போது செய்யும் பிரசாரம் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. கூட்டணிப் பிரச்னைகளைச் சரி செய்தால் கண்டிப்பாக தி.மு.க-வுக்கு சவால் விடக்கூடிய அணியாகத்தான் அ.தி.மு.க அணி இருக்கும். ஆனால், தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். இது தொண்டர்களை மனச்சோர்வில்தான் ஆழ்த்தும். இது அ.தி.மு.க-வுக்கு நல்லதல்ல'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/to-what-extent-will-edappadis-election-campaign-lend-a-hand-to-the-aiadmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக