Ad

புதன், 30 டிசம்பர், 2020

துவர்ப்புச் சுவை முதல் எண்ணெய்க் குளியல் வரை... 2021-ல் இந்த உறுதிமொழிகளை எடுப்போமா?

புத்தாண்டு பிறக்கப்போகிறது என்றாலே உறுதிமொழிகளை நாம் எக்கச்சக்கமாக எடுக்க ஆரம்பித்துவிடுவோம். `டைரி எழுத வேண்டும்’, `அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்’, `கோபப்படக் கூடாது’, `ஜிம்முக்குச் செல்ல வேண்டும்’ என்பது போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. ஆனால், இதுபோன்ற மேம்போக்கான, பொதுவான உறுதிமொழிகளை எடுப்பதைக் காட்டிலும் உறக்கம், உணவுப்பழக்கம் போன்ற வாழ்க்கைமுறை சார்ந்த பிரத்யேகப் புத்தாண்டு உறுதிமொழிகளை எடுப்பது சரியானது. இப்படி எடுக்கும் உறுதிமொழிகளைக் காற்றில் பறக்கவிடாமல் தொடர்ந்து பின்பற்றினால் அதனால் கிடைக்கும் நற்பலன்கள் ஏராளம் என்கின்றனர் நிபுணர்கள்.

New Year Resolution

அப்படி புத்தாண்டில் எடுக்க வேண்டிய வாழ்வியல் சார்ந்த உறுதிமொழிகள் குறித்த அவர்களின் ஆலோசனைகள் இதோ உங்களுக்காக...

எம்.ஹேமமாலினி, பொது மருத்துவர்

  • ``இந்தப் புத்தாண்டில் டயட்டில் அக்கறை எடுக்க ஆரம்பிக்கலாம். குறிப்பாக, வயதுக்கும் உடலின் தன்மைக்கும் ஏற்ற உணவுகளை எடுக்க உறுதி பூணலாம்.

  • சிலருக்கு கீரை பிடிக்காது. இன்னும் சிலர் கேரட், பீட்ரூட் சாப்பிட மாட்டார்கள். இன்னும் சிலர் பாகற்காய் என்றாலே காததூரம் ஓடிவிடுவார்கள். அப்படிப்பட்ட இயல்புள்ளவர்கள் ஆரோக்கியம் கருதி, `இனி வாரம் இருமுறை பிடிக்காத காய்கறிகளையும் கட்டாயம் சாப்பிடுவேன்' என்கிற உறுதியை எடுக்கலாம்.

  • பீட்சா, பர்கர் போன்ற குப்பை உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்துவது மிகவும் நல்லது. முடியவில்லை என்றால் அடிக்கடி அவற்றை சாப்பிடும் பழக்கத்தையாவது நிறுத்தலாம். உதாரணத்துக்கு, `இனி வருடத்துக்கு மூன்று முறை மட்டுமே அவற்றைச் சாப்பிடுவேன்’ என்பது போன்ற இலக்குகளை நிர்ணயித்து உறுதிமொழி எடுக்கலாம்.

  • வேலைக்குச் செல்லும் ஆண்களும் சரி, பெண்களும் சரி... எவ்வளவுதான் அலுவலக வேலைகள் இருந்தாலும் வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கத்தை இந்தப் புத்தாண்டு முதல் ஏற்படுத்திக்கொள்ளலாம். மிகக் குறிப்பாக, ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து உண்ணும் போக்குக்கு முற்றிலும் விடை கொடுத்தால் அதைவிட உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது செய்யும் விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது.

  • இந்தப் புதுவருடம் முதல் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தலாம். `டின்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஜூஸ் போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க மாட்டேன். நானே குழந்தைகளுக்கான உணவைப் பிரத்யேகமாகத் தயாரித்துக் கொடுப்பேன்' என்கிற உறுதிமொழியைப் பெற்றோர் எடுக்கலாம்.

  • புத்தாண்டு முதல், உடலில் நீண்டகாலமாகத் தொடரும் பிரச்னைகளைப் புறக்கணிக்காமல் அதற்கான தகுந்த மருத்துவ ஆலோசனையை எடுத்துக்கொள்ள உறுதி எடுக்கலாம். 30 வயதைக் கடந்தவர்களாக இருப்பின் 6 மாதங்களுக்கு ஒருமுறை முழு உடற்பரிசோதனை செய்துகொள்ளத் தீர்மானம் எடுக்கலாம்.

New Year Resolution
  • 35 வயதைக் கடந்த பெண்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை போன்ற மிக முக்கியப் பரிசோதனைகளை தயக்கம் அல்லது நேரமின்மை போன்ற காரணங்களைக் காட்டித் தள்ளிப்போடாமல் உடனே செய்துகொள்ள உறுதிமொழி எடுக்கலாம்.

  • ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு போன்ற பிரச்னை உள்ளவர்கள் அவற்றை கட்டுக்குள் கொண்டுவரவும், சீரிய இடைவெளிகளில் அவற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உறுதிமொழி எடுக்கலாம்.

  • வீட்டில் இருக்கும் வயதானவர்களின் உடல்நலனில் கூடுதல் அக்கறைகாட்ட இப்புத்தாண்டில் சபதமெடுக்கலாம். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல் இப்புத்தாண்டு முழுக்க உங்கள் அன்பையும், உங்கள் அருகிலும் அவர்களுக்கு வழங்க முடிவு செய்தால் இதைவிடச் சிறந்த புத்தாண்டு உறுதிமொழி வேறு எதுவும் இருக்க முடியாது'' என்கிறார் பொது மருத்துவர் எம்.ஹேமமாலினி.

சித்த மருத்துவர் விக்ரம் குமார்

  • ``தமிழ்ச் சமூகம் கிட்டத்தட்ட கைவிட்ட பழக்கங்களில் ஒன்று, எண்ணெய்க் குளியல். இந்தப் புத்தாண்டு முதல் எண்ணெய்க் குளியலை மீண்டும் வழக்கத்துக்குக் கொண்டு வர உறுதி எடுக்கலாம்.

  • அதிகாலையில் எழுவது என்பது இன்னும் பலரால் செயல்படுத்த முடியாத ஒரு புத்தாண்டு உறுதிமொழியாகவே இருக்கிறது. இந்தப் புத்தாண்டு முதலாவது, நேரத்தோடு தூங்கி நேரத்தோடு எழுவதை பழக்கமாக்கிக்கொள்ளலாம்.

  • காற்று மாசுபாடு, கொரோனா பெருந்தொற்று போன்ற பல பிரச்னைகள் நம்மை சூழ்ந்துள்ளன. எனவே, பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இப்புத்தாண்டில் தீர்மானம் எடுக்கலாம்.

Yoga
  • பாரம்பர்யம் நோக்கித் திரும்ப இப்புத்தாண்டை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். உடலில் ஏற்படும் சின்னச் சின்ன உபாதைகளுக்கு சமையலறையில் உள்ள அஞ்சறைப்பெட்டிப் பொருள்களையே மருந்தாகப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டுவரலாம். முடிந்த அளவுக்கு மருந்தை நோக்கிப் போகாமல் வாழ்வியல் முறைகள் மூலமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உறுதிமொழி எடுக்கலாம்.

  • அறுசுவை நிறைந்த உணவே உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை. ஆனால் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு இதைத்தாண்டி துவர்ப்பு என்கிற ஒரு சுவையை உணவில் நாம் சேர்த்துக்கொள்வதேயில்லை. இப்புத்தாண்டு முதலாவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவும் துவர்ப்புச் சுவையுள்ள காய்கறிகளான வாழைப்பூ, சுண்டைக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்கத் தீர்மானம் எடுக்கலாம்.

  • திருமணம் போன்ற விழாக்களில் மட்டுமே வாழை இலையில் சாப்பிடும் பழக்கத்தை நாம் வைத்திருக்கிறோம். ஆனால், தினமும் முடியாவிட்டாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது மூன்று வேளையும் வாழை இலையில் உணவு உண்ணும் உறுதிமொழியை இப்புத்தாண்டில் எடுக்கலாம்.

  • தமிழர்கள் கைவிட்ட பழக்கங்களில் ஒன்று, நிலாச்சோறு சாப்பிடுவது. எனவே, எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் குடும்பமாக மொட்டைமாடியில் அமர்ந்து, சிரித்துப் பேசி, நிலாச்சோறு சாப்பிட இப்புத்தாண்டில் சபதமெடுக்கலாம். வேலை, படிப்பு என்று பரபரவென ஓடிக்கொண்டே இருப்பதால் உண்டாகும் மன அழுத்தத்தைப் போக்க நிலாச்சோறு மாமருந்தாக அமையும். அப்படி இலகுவான மனதுடன் உண்ணும் உணவும் எளிதில் செரிமானமாகும்.

  • வெயில்காலத்தில் எப்போதும் ஏ.சி அறையிலேயே அடைந்துகிடக்க மாட்டேன் என்கிற உறுதிமொழியையும் இப்புத்தாண்டில் எடுப்பது நல்லது. வெட்டிவேர் விசிறியைப் பயன்படுத்துவது, வெட்டிவேர் கொண்டு செய்யப்பட்ட தட்டியை வீட்டில் தொங்கவிடுவது, வெட்டிவேரால் செய்யப்பட்ட பாயில் உறங்குவது, மண்பானைத் தண்ணீர் பருகுவது போன்ற உடலைக் குளுமையாக்கும் இயற்கை வழிகளை வெயில்காலத்தில் பின்பற்றவும் தீர்மானம் எடுக்கலாம்.

மண் பானைத் தண்ணீர்
  • உணர்வுகளைத் தேக்கித் தேக்கி வைப்பதே மன அழுத்தத்துக்கான மூல காரணமாக இருக்கிறது. இப்புத்தாண்டு முதலாவது, `எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் குடும்பத்தினரிடமோ, உற்ற நண்பர், தோழியிடமோ மனம் விட்டுப்பேசி அதற்கான சரியான தீர்வைப் பெறுவேன்' என்கிற மிகமிக முக்கியமான உறுதிமொழியை எடுக்கலாம்.

  • இந்தப் புத்தாண்டு முதல் வீட்டில் சின்னதாக ஒரு மூலிகைத் தோட்டம் போடவும் தீர்மானம் எடுக்கலாம். எங்கள் வீட்டில் அவ்வளவு இடமெல்லாம் இல்லை என்பவர்கள் வீட்டின் பால்கனியில் கற்பூரவல்லி, துளசி, தூதுவளை போன்றவற்றையாவது வளர்க்க ஆரம்பிக்கலாம்.

  • இறுதியாக, வாரத்தின் ஆறு நாள்கள் மாங்குமாங்கென்று உழைத்தாலும் ஞாயிற்றுக்கிழமையை உங்கள் குடும்பத்துக்காக மட்டுமே ஒதுக்கச் சபதம் எடுங்கள். சேர்ந்து சமைத்து, சேர்ந்து உண்டு மகிழ்ந்து களித்திருங்கள். பாட்டுப்பாடுவது, குடும்பமே ஒன்றாகச் சேர்ந்து நடனமாடுவது, முடிந்தால் குடும்பத்துடன் குட்டிக் குட்டி பிக்னிக் செல்வது என்று வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்“ என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.

யோகா ஆசிரியர் சினேகா ஸ்ரீனிவாசன்

  • ``தினசரி முடியாவிட்டாலும், `வாரத்தில் மூன்று நாள்களாவது உடற்பயிற்சி செய்வேன்' என்று உறுதி எடுக்கலாம்.

  • `எனக்கு யோகா தெரியும்' என்று சொல்வதைவிட, `நான் தினமும் யோகா பயிற்சி செய்கிறேன்' என்பதே சிறப்பானது. எனவே, `தினமும் யோகப் பயிற்சிகளை மேற்கொள்வேன்' என்கிற தீர்மானத்தை எடுக்கலாம்.

  • ஜிம் அல்லது உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குக் குனிந்து, நிமிர்ந்து வீட்டு வேலை செய்வதும் உடலுக்கு அவசியம். வீடு பெருக்குவது, வீடு துடைப்பது, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, பைக் மற்றும் கார் கழுவுவது, செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டுவது, தோட்டத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை ஆண், பெண் பாகுபாடின்றி செய்ய இப்புத்தாண்டில் உறுதிமொழி எடுக்கலாம்.

உடற்பயிற்சி
  • நாள் முழுக்கக் கணினியில் அமர்ந்தபடி வேலைசெய்பவர்கள் அவ்வப்போது இருக்கையில் இருந்து எழுந்து சிறிது தூரம் நடந்துவிட்டு, பின்னர் வேலையைத் தொடரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடிவெடுக்கலாம்.

  • கொரோனா பெருந்தொற்று இன்னும் எத்தனை நாள்களுக்குத் தொடரப்போகிறது என்று தெரியவில்லை. எனவே, இப்புத்தாண்டில் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும் உணவுகளை உண்ண உறுதி ஏற்கலாம். கொரோனாவுக்கு மட்டுமல்ல, எந்த நோய்த்தொற்றுக்கும் அது அரணாக அமையும்.

  • 40 வயதைக் கடந்தவர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை உண்ண உறுதிமொழி எடுக்கலாம். `தவிர்க்க முடியவில்லை, இன்று மட்டும் பீட்சா சாப்பிட்டேன்', `மகனின் பிறந்தநாள் என்பதால் பர்கர் சாப்பிட்டேன்' என்று சாக்குப்போக்கு சொல்லாமல் நோ என்றால் நோதான் என்ற கண்டிப்புடன் அந்த உறுதிமொழியைப் பின்பற்ற வேண்டும்.

  • பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் புத்தாண்டு உறுதிமொழிகளை எடுக்க வைக்கலாம். நிறைய வீடுகளில் குழந்தைகள் எழுந்தவுடன் பல் தேய்க்காமல் பெட் காபி குடிக்கிறார்கள். இப்படிச் செய்வதால் உடலுக்கு உண்டாகும் தீமைகள் குறித்துக் குழந்தைகளுக்குப் புரியவைப்பதோடு இப்புத்தாண்டில் பெட் காபிக்கு குட் பை சொல்வதற்கான உறுதிமொழியையும் எடுக்க வைக்கலாம்.

Resolution
  • பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் யோகா வகுப்புகளில் சேர்த்துவிட பெற்றோர் உறுதி எடுக்கலாம். சிறுவயது முதலே யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளும் குழந்தைகளின் உடலும் மனமும் சிறப்பாவதோடு அவர்கள் பெரியவர்களாகும்போது ஆரோக்கியமாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடரவும் அவர்களால் முடியும்.

  • கடைசியாக ஒன்று. சதா சர்வகாலமும் குழந்தைகள் ஸ்மார்ட்போன் போன்ற மின்னணு சாதனங்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். அவற்றிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்க உறுதி எடுங்கள். இதுவே, எல்லாவற்றிலும் மிகமிக அவசியமான புத்தாண்டு உறுதிமொழியாக இருக்க வேண்டும்” என்கிறார் யோகா ஆசிரியர் சினேகா ஸ்ரீனிவாசன்.

2021-ல் நம் வாழ்க்கை முறையை மேம்படுத்துவோம் ஆரோக்கியமாக!



source https://www.vikatan.com/health/healthy/experts-suggests-healthy-resolutions-you-should-take-on-this-2021-new-year

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக