இயற்கை தாத்தா என்று போற்றும் அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இயற்கை வழி வேளாண்மை ஊக்குவித்தவர் வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார். அவரது வழியில் பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகச் செயல்பட்ட நெல் ஜெயராமன். இருவரின் நினைவு நாளை நினைவுகூரும் வகையில் சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் பாரம்பர்ய வேளாண் திருவிழா நடைபெற்றது. இதை, தமிழக பாரம்பர்ய விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்துடன் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி நிறுவனங்கள் இணைந்து நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் பாரம்பர்ய நெல் விதைகள், காய்கறி விதைகள், மரக்கன்றுகள், வேளாண் உபகரணங்கள் எனப் பல்வேறு பொருள்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவசமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ.குமார் குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தார். மேலும், கவிஞர் மருது அழகுராஜ், பாரம்பர்ய விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் மேலூர் அருண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். வேளாண்துறை அதிகாரிகளையும் விவசாயிகளையும் ஒருங்கிணைக்கும் நிகழ்வாக இது இருந்தது. இதில் வேளாண் சிறப்பு திட்டம் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர்.
மேடையில் பி.ஆர்.பாண்டியன்,"சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வறட்சியிலும் வெற்றி காணும் உற்பத்தியாளர்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 20 மாவட்ட விவசாயிகள் நிர்வாகிகள் மூலம் மாபெரும் நிகழ்ச்சியாக முன்னெடுத்து நடத்திய இளம் விவசாயி அருணுக்கு பாராட்டுகள். தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திலும் வீழ்ச்சியடையாத தொழில் விவசாயம்தான். இப்படிப்பட்ட விவசாயத்தை அனைவரும் பாதுகாக்க முயற்சியெடுக்க வேண்டும். வேளாண் சட்டத்தை பொறுத்தவரை முழுமையாக எதிர்க்கவில்லை, அதில் விவசாயிகள் நலன் உறுதி செய்யும்படி மாறுதல்கள் இருக்கவேண்டும் என்றுதான் தெரிவிக்கிறோம். தமிழகத்தில் பருவ காலத்துக்கு ஏற்ப மத்திய அரசு கொள்கைகளைக் கொண்டு வரவேண்டும்" என்றார்.
துணைவேந்தர் நீ.குமார், "இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். பாரம்பர்ய விவசாயத்தைப் பாதுகாக்கவேண்டும் எனப் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளையும் செய்கிறோம். தற்போது திருந்திய மாப்பிள்ளை சம்பா ரகத்தைக் கண்டறிந்துள்ளோம். இயற்கை விவசாயிகளின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்வோம்" என்றார்.
மேலும், அரங்கத்தில் உலகம்பட்டி இயற்கை விவசாயி சிவராமன், சிவகங்கை மாவட்ட இயற்கை விவசாயிகளின் முன்னோடி ஆப்ரஹாம், ஒருங்கிணைந்த பண்ணையை உருவாக்கிய மாணவர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும் நெல் ஜெயராமனின் மருத்துவ உதவிகளைச் செய்ததோடு அவருடைய மகனின் கல்விச் செலவை ஏற்று உதவிகள் செய்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன், சமூக செயற்பாட்டாளர் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுன், மீத்தேன் விழிப்புணர்வு படம் எடுத்த `கத்துக்குட்டி' பட இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர்க்கு நம்மாழ்வார் விருது அறிவிக்கப்பட்டது. விருதை சிவகார்த்திகேயன் நேரில் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளதாகக் கூறினர்.
source https://www.vikatan.com/literature/agriculture/actor-sivakarthikeyan-and-bigg-boss-aari-receives-nammalvar-award
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக