Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

"அப்பா, இப்போ அரசியல் வேண்டாம்" - கெஞ்சும் மகள்கள்... ரஜினியின் முடிவு என்ன?! #Rajini

'அண்ணாத்த' படப்பிடிப்பில் ஏற்பட்ட கொரோனா நோய் பரவல் காரணமாக, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ரஜினி, தற்போது உடல்நலம் தேறி ஹைதரபாத்தில் இருந்து சென்னை வந்துவிட்டார்.

ரஜினிக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள் ஒரு வாரத்துக்கு முழுமையான ஓய்வில் இருக்கவேண்டும், மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழல்களை உருவாக்கிக்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

ரஜினி

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி 'அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினியுடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ்தான் துணைக்குச் சென்றார். ரஜினி கொரோனா பரவல் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டபோதும், அப்பல்லோ மருத்துவமனையிலும் ஐஸ்வர்யாதான் உடனிருந்தார்.

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்திலும் இருந்த தந்தையிடம், "இந்த சூழலில் அரசியல் வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்திருப்பதால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் அது பெரும் ஆபத்தை உண்டாக்கிவிடும். இப்போதைக்கு அரசியல், கட்சிப்பணிகள் என எங்கேயும் வெளியேப்போகவேண்டாம். கட்சி, அரசியல் என யோசிப்பதால்தான் உங்களுக்கு ஸ்ட்ரெஸ் கூடி ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது... அதனால் இப்போது அரசியல் வேண்டாம்பா" என கெஞ்சிக்கேட்டிருக்கிறார் என்கிறார்கள் ரஜினி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்.

ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா தனுஷுடன்...

இதேபோல் இரண்டாம் மகள் செளந்தர்யாவும் ரஜினியிடம் இதே கோரிக்கையை வைத்திருக்கிறார். இருவருமே, "உங்கள் உடல்நிலைதான் முக்கியம்... மற்ற எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தவேண்டாம்" என்று ரஜினியிடம் அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

ஜனவரியில் கட்சி தொடங்கும் நாள் பற்றி டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன் என்று கடந்த டிசம்பர் 3-ம் தேதி அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் இப்போது ஏற்பட்டிருக்கும் உடல்நலப்பிரச்னைகள், மகள்களின் வேண்டுகோள் என அனைத்தையும் பரிசீலித்துவரும் ரஜினி, மேலும் தன்னை மன அழுத்ததுக்கு ஆளாக்கிக்கொள்ளக்கூடாது என்று நினைக்கிறார்.

எம்ஜிஆரின் பிறந்தநாளான ஜனவரி 17-ம் தேதி கட்சி தொடங்கி, முதல் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில் ரஜினி என்ன முடிவெடுப்பார் என்பது எப்போதும்போல இப்போதும் மர்மமாகவே இருக்கிறது!


source https://cinema.vikatan.com/tamil-cinema/no-politics-please-daughters-plea-to-rajini

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக