காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, தனது சொந்த காரணங்களுக்காக நேற்று காலை டெல்லியிலிருந்து இத்தாலி சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளார் என்று எந்த உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை.
நேற்று காலை டெல்லியிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் இத்தாலியின் மிலன் நகருக்கு அவர் சென்றதாகக் கூறப்படுகிறது. இத்தாலியில் மிலன் நகரின் அவரின் தாய்வழி பாட்டி வாழ்ந்து வருகிறார். அவரை சந்திக்க ராகுல் சென்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ``ராகுல் காந்தி, தனது சொந்தக் காரணங்களுக்காக சில நாள்கள் வெளிநாடு சென்றுள்ளார்" என்று கூறினார். அதேநேரம், ராகுல் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளார் என்பதைப் பற்றி அவர் கூறவில்லை.
காங்கிரஸ் கட்சியில் 136-வது நிறுவன நாள், நாடு முழுவதும் இன்று அக்கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, விழாவில் பங்கேற்காமல் வெளிநாடு சென்றிருப்பது குறித்து பா.ஜ.க தரப்பில் கடுமையாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ``காங்கிரஸ் கட்சி 136-வது நிறுவன நாள் விழாவைக் கொண்டாடுகிறது. ஆனால், ராகுல் காந்தியை இங்கு காணவில்லை" என்று ட்விட்டரில் விமர்சித்திருக்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற நிறுவன நாள் விழாவில் பிரியங்கா காந்தியிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் பதிலளிக்கவில்லை. நிகழ்ச்சியில் சோனியா காந்தியும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், ``இந்த நிகழ்ச்சியில் ராகுல் கலந்துகொள்ளாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கக்கூடும். அதைப் பற்றி நாங்கள் யூகிக்க விரும்பவில்லை. அவர் ஒரு செயல் செய்தால், அதற்கு மிகச்சரியான ஒரு காரணம் இருக்கும். இங்கு பிரியங்கா காந்தி இருக்கிறார்" என்று கூறினார்.
Also Read: `வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் வீடு திரும்பப் போவதில்லை!’ - ராகுல் காந்தி
விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைட், ``விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இடத்துக்கு ராகுல் காந்தி வரவில்லை. விவசாயிகள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது" என்று ராகுலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். ``ராகுல் காந்தி, தனது பாட்டியைப் பார்க்கச் சென்றுள்ளார். இது தவறா? தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்ள அனைவருக்குமே உரிமை உண்டு. பா.ஜ.க தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறது. அவர்கள் ராகுல் காந்தியைக் குறிவைக்கிறார்கள். காரணம் ஒரே ஒரு தலைவரைக் குறிவைக்க நினைக்கிறார்கள்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``தேசத்தின் குரலை உயர்த்த காங்கிரஸ் தொடக்கம் முதலே உறுதியளித்துள்ளது. இன்று, காங்கிரஸின் நிறுவன நாளில், உண்மை மற்றும் சமத்துவம் குறித்த எங்கள் உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஜெய் ஹிந்த்!’’ பதிவிட்டிருக்கிறார். விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், ராகுல் வெளிநாடு சென்றது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/politics/rahul-gandhi-skips-congress-foundation-day-celebration-irks-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக