Ad

புதன், 30 டிசம்பர், 2020

ரியோவுக்கு மனைவியின் அட்வைஸ்... ரம்யா அம்மாவின் அன்பு... ஆர் ப்ரோவின் ஹைஃபை! பிக்பாஸ் - நாள் 87

ஒரு முன்குறிப்பு: பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது நமக்கு பல விருப்பு வெறுப்புகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி அவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமில்லாமல் ஒரு தன்னிச்சையான பிடிப்பு உருவாகி விடுகிறது. அந்நியர்களுடன் ஒரே வீட்டில் பழகுவது அவர்கள் மட்டுமல்ல. நாமும்தான். பெளதீகமாக நாம் அங்கு இல்லாவிடினும் நாமும் அவர்களின் நண்பர்களாகி விடுகிறோம் என்று தோன்றுகிறது.

இந்த நோக்கில், இந்தப் போட்டியில் இருந்து கடைசியாக வெளியேற்றப்பட்ட அனிதா அவர்களின் தந்தை இறந்து போன சமீபத்திய செய்தி பெரும்பாலான பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கும். தன் குடும்பத்தின் மீது ஆவேசமான அன்பும் பாசமும் கொண்டிருந்தார் அனிதா. ஆரியுடன் அவர் நடத்திய விவாதத்தில் இதை அழுத்தமாக உணர முடிந்தது.

பிக்பாஸ் அனிதா

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து திரும்பிய அவர், தன் தந்தையுடன் பேசி மகிழ முடியாமல் அவர் உடலைத்தான் காண முடிந்திருக்கிறது என்பது நிச்சயம் சோகமான விஷயம். ஆர்.சி.சம்பத் எழுத்தாளர் என்பதால் சற்று கூடுதலான இழப்பாகவே இதைப் பார்க்கிறேன். உலகத்தின் பல்வேறு ஆளுமைகள் பற்றிய நூல்களை சம்பத் எழுதியிருக்கிறார். அவருக்கு அஞ்சலி. இந்த இழப்பு சார்ந்த துயரத்திலிருந்து அனிதாவின் குடும்பம் விரைவில் வெளிவரட்டும்.

ஓகே... நாள் 87-ல் என்ன நடந்தது?

அதற்கு முன் – ஒரு குழந்தையின் ஆளுமையை வளர்த்தெடுப்பதில் அதன் குடும்பம்தான் பிரதான காரணியாக இருக்கிறது என்று நேற்று எழுதியிருந்தேன். அதற்கான நிரூபணங்களை இன்றும் பார்க்க முடிகின்றன. தன் குடும்பத்தைப் பற்றிய நினைவுகள் வந்தாலே திருவிழாவில் காணாமற் போன குழந்தை மாதிரி ரியோவின் முகம் கலங்கி விடுகிறது. தினமும் காலையில் தன் மனைவி மற்றும் குழந்தையின் முகங்களில்தான் அவர் கண்விழிக்கிறார். இத்தனை சென்டிமென்ட் எங்கிருந்து வருகிறது என்பதை அவருடைய அன்பான மனைவியை இன்று பார்க்கும் போது அறிய முடிந்தது.

இதைப் போலவே ரம்யாவின் நிரந்தர புன்னகை, நகைச்சுவையுணர்வு, மொக்கை ஜோக் போன்றவை எங்கேயிருந்து வந்திருக்கின்றன என்பதை அவருடைய தாயாரைப் பார்த்தவுடன் உணர முடிகிறது. அவர் தன் மகளைப் பார்த்து அழவில்லை. மிகையாக உணர்ச்சிவசப்படவில்லை. ‘இதுதான் யதார்த்தம்’ என்கிற பிரக்ஞை அவருக்குள் இருக்கிறது. ‘'கமல் சார்கிட்ட நன்றி சொல்லிடுங்க...'’ என்று சொல்லிவிட்டு '‘இதை எடிட் பண்ணிடாம போட்டுடுங்க'’ என்று பிக்பாஸ் டீமிடம் வேண்டுகோள் வைக்கிற அளவிற்கு பிராக்டிக்கலாக இருக்கிறார். ரொம்ப க்யூட்டான அம்மா. போலவே ரம்யாவின் தம்பியும் அத்தனை இயல்பாகப் பேசினார்.

பிக்பாஸ் - நாள் 87

‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ திரைப்படத்திலிருந்து ‘என் ஜன்னல் வந்த காற்றே’ என்கிற, மெலடி மற்றும் துள்ளலிசை கலந்த பாடலைப் போட்டார்கள். பாலாஜியும் ஷிவானியும் இப்போது பேசிக் கொள்வதில்லை போல... பாவம்!

ஷிவானியை உற்சாகப்படுத்துவதற்காகவோ என்னவோ ‘ஷிவு’ என்று பிக்பாஸ் அழைக்கிறார். ஹாட்பாக்ஸை சுமந்து கொண்டிருந்த ஷிவானியை ‘ஃப்ரீஸ்’ செய்து விளையாடுகிறார். பாவம் பார்த்து அதை ரம்யா வாங்கிய போது ரம்யாவையும் ‘ஃப்ரீஸ்’ செய்கிறார். இப்படியாக பிக்பாஸின் குறும்புகள் தொடர்கின்றன.

பொங்கலில் பாலா கை வைக்கப்போகும்போது "நாயக்கர் ஐயா... வராதீங்க தப்பிச்சுப் போயிடுங்க” என்று எச்சரிப்பது போல பாலாஜியை ‘ஃப்ரீஸ்’ செய்கிறார் பிக்பாஸ். ‘கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே’ என்று டைமிங்காக கலாய்க்கிறார் ரம்யா. உறைந்திருக்கும் பாலாஜியின் தலையை கலைத்து ஆரி விளையாட அவரையும் ‘ஃப்ரீஸ்’ செய்கிறார்.

"என்னதிது பிரபுவும் கார்த்திக்கும் ஒண்ணாயிட்டிங்க. இந்த சீன் நல்லாயில்லை. நீங்க சண்டை போட்டாத்தான் அழகு” என்று இவர்கள் நிற்கும் கோலத்தை கலாய்க்கிறார் ரம்யா. உண்மையிலேயே இவர்களுக்குள் சண்டை நிகழ்ந்து அதை வைத்து தான் குளிர்காய வேண்டும் என்று ஒருவர் தந்திரமாக நினைத்தால் அதை இப்படி வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்க மாட்டார். எனவே ரம்யாவின் கலாய்ப்பு பாலாஜிக்கும் ஆரிக்கும் புன்னகையை ஏற்படுத்துகிறது.

பிக்பாஸ் - நாள் 87

பிக்பாஸ் போட்டியாளர்கள் மரத்திலிருக்கும் ஒரு காகத்தையும் டார்ச்சர் செய்ய முயன்று அதைப் போலவே கத்திக் கொண்டிருக்க, அதன் நடுவில் கேபியின் வித்தியாசமான கத்தலைக் கேட்டு காகமே மிரண்டு ஓட கேபியை ‘லூப்’ என்கிறார் பிக்பாஸ். ஒப்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கேபியை உறைந்திருக்கும் போது அவரது முகத்தில் ஓவியம் வரைந்து விளையாடுகிறார் சோம். பதிலுக்கு சோம் உறைந்திருக்கும் போது அவருக்கு லிப்ஸ்டிக் வரைந்து ‘செளமியா’வாக மாற்றுகிறார் கேபி. பார்க்க சுவாரஸ்யமான காட்சிகள்.

ஜவுளிக்கடை பொம்மை போல பிக்பாஸ் கதவின் அருகே நின்றிருக்கும் ரம்யாவை உறைய வைத்து விடுகிறார் பிக்பாஸ். ‘உன் கூடவே பொறக்கணும்’ என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க யாரோ வரவிருக்கிறார்கள் என்பதை அந்த வீடு உணருகிறது. வருகிறவர் ரம்யாவின் தம்பி. பாலாஜியை விடவும் உயரமாக, திடகாத்திரமாக இருக்கிறார் பரசு.

பிக்பாஸ் - நாள் 87

ஆஜித்திடம் ‘நான்தாம்ப்பா ஒரிஜினல் தம்பி’ என்று கலாட்டா செய்கிறார். இதர போட்டியாளர்கள் ஜாலியாகக் குறிப்பிடுவது போல பிக்பாஸின் உத்தரவுகள் எதையும் பாலாஜி அதிகம் சட்டை செய்வதில்லை. இடது கையால்தான் ஹேண்டில் செய்கிறார். எனவே அவர் கலைந்து வந்து ரம்யாவின் தம்பியை கைகொடுத்து வரவேற்றார். ‘We are on National Television’ என்று ரியோ கோபத்தில் கத்திய வாசகம் வெளியே கன்னாபின்னாவென்று காமெடியாக பரவியிருக்கிறது போல. ரியோவிடம் அதைச் சொல்லி நக்கலடிக்கிறார் பரசு.

பிறகு "எங்க என் தலைவனைக் காணோம்?” என்று பரசு ஆரியைத் தேடியதும், "என்னது ஆரி உன் தலைவரா? இவன் கிண்டலடிக்கிறானா... உண்மையா சொல்றானா... வெளில அப்படியா பேசிக்கிறாங்க?” என்று ஜாலியாக ஷாக் ஆகிறார் ரம்யா.

பிக்பாஸ் - நாள் 87

பாலாவைப் போல பிக்பாஸின் உத்தரவுகளை ஆரி காற்றில் பறக்கவிடுவதில்லை. கடமை என்று வந்து விட்டால் ஆரியை மிஞ்ச ஆளில்லை. எனவே குனிந்த நிலையிலிருந்து நிமிராமல் உதட்டிற்குள்ளாகவே பரசுவை வரவேற்றார் ஆரி. "என் தம்பி… துபாய் குறுக்கு சந்துல இருந்து வந்திருக்கான்” என்று முகத்தில் பெருமிதம் பொங்க மொக்கை போட்டார் ரம்யா. தன் சகோதரிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அயல் நாட்டிலிருந்து கோவிட் தடைகளைத் தாண்டி வந்திருக்கும் பரசுவின் அன்பு சிறப்பு. அண்ணன் – தம்பியை விடவும் அக்காள் – தம்பி உறவு என்பது ஸ்பெஷல் ஆனது. "சாக்லேட்டை பதுக்கி வெச்சிருக்கீங்களா... இல்ல... சாப்பிட்டிங்களா” என்று சோமை விசாரிக்கும் அளவிற்கு ஜோவியலாக இருக்கிறார் பரசு.

“இங்க எந்த ப்ரோவை பிடிக்கும்?” என்று ரம்யா கேட்டதற்கு, "ஆரி ப்ரோ... பாலா ப்ரோ... கேபி" என்று பரசு சொல்ல, "என்னடா... கேபியை ப்ரோவாக்கிட்டே" என்று மறுபடியும் மொக்கை போட்டார் ரம்யா. இது அவர்களின் குடும்ப பழக்கம் போல. ஆனால் பார்க்க க்யூட்டாக இருந்தது.

சற்று நேரத்தில் ஸ்டோர் ரூம் பெல் அடித்தது. ‘'பேட்டரி வந்திருக்கிறது போல’' என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். ரியோ இயல்பாகச் சென்று கதவைத் திறந்து சற்று திடுக்கிட்டார். உள்ளே ரம்யாவின் அம்மா. "அய்... என்னோட பேட்டரி வந்திருக்கிறது” என்று உற்சாகமானார் ரம்யா. கண்ணீர், அழுகை, சென்ட்டி என்று எவ்வித டிராமாக்களும் இல்லை. தானும் கோவிட் டெஸ்ட்களைத் தாண்டி வந்த கதையை விவரித்தார் சாந்தி. "அம்மா... நான் சாம்பார்லாம் இங்க செஞ்சேன்மா” என்று பெருமிதம் பொங்க தாயிடம் சொன்னார் ரம்யா.

பிக்பாஸ் - நாள் 87

தனியாக இருக்கும் ரம்யாவிடம் தம்பி வந்து அனுமதி கேட்டு விட்டு பிறகு ரகசியம் பேசினார். “நீ இங்க நல்லாத்தான் விளையாடறே. தகுதியான போட்டியாளர் நீ... ஒருமுறை கூட ஜெயிலுக்குப் போகலை. ஆனா இந்த வாரம் நீ வெளியே வந்தேன்னா அது உன் தவறு இல்ல” என்று முன்கூட்டியே அவர் எச்சரிக்கும்போது (வாக்கு நிலவரங்களும் அப்படித்தான் சொல்கிறது) “அப்ப நான் வெளியே வந்துடுவேன்னு சொல்றியா?” என்று தலையை ஒரு வசீகரமான கோணத்தில் சாய்த்து, பதற்றத்தைப் புன்னகையால் மறைத்துக் கொண்டு, ரம்யா கேட்ட காட்சி அத்தனை அழகு.

இவர்கள் ரகசியம் பேசும் சமயத்தில் அசந்தர்ப்பமாக பாலாஜி வந்து நிற்க, “பக்கத்துல பாலாஜி நிக்கும் போதே ரகசியம் சொல்றியே பரசு... அவர் ஒட்டு கேட்டுட மாட்டார்?” என்று தூரத்திலிருந்து குத்தலான நையாண்டியை வைக்கிறார் சாந்தி. (soft hurt-ம் குடும்ப பழக்கம் போலிருக்கு!).

தான் விளையாடும் முறை பற்றி ரம்யா எதையோ கேட்க "அதெல்லாம் சொல்ல முடியாது. சொன்னா உங்களை மாத்திப்பீங்க.. பொதுவா சொல்றேன். யாரும் யாரைப் பத்தியும் புறணி பேசாதீங்க... சம்பந்தப்பட்டவங்க கிட்ட நேரா பேசிக்கிங்க” என்று சொன்னார் ரம்யாவின் அம்மா. அவர் பொதுவாகச் சொல்வது போல் சொன்னாலும், ரம்யா சமயங்களில் ஆரியைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதைத்தான் ஜாடையாக சுட்டிக் காட்டுகிறார் என்பது தெரிகிறது.

மற்றவர்கள் பேசினாலும், துவக்க நாட்களில் யாரைப் பற்றியும் புறணி பேசாத போட்டியாளராகத்தான் ரம்யா இருந்தார் என்பது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் சூழல் அவரை மாற்றி விட்டது.

பிக்பாஸ் - நாள் 87

விருந்தினர்கள் கிளம்பும் நேரத்தை பிக்பாஸ் நினைவுப்படுத்தும் போது கூட பிரிவுத் துயரம் போன்ற எந்த டிராமாவும் இல்லை. பிக்பாஸிற்கும் கமலுக்கும் நன்றி சொல்லி கிளம்பினார்கள். செல்லும் சமயத்தில் ‘வாழைப்பழம் ஒண்ணு எடுத்துக்கலாமா?’ என்று ரம்யாவின் அம்மா கேட்டது குழந்தைத்தனமான குறும்பு. எத்தனை வயது ஆனாலும் தன்னுடைய குழந்தைமையை பத்திரமாக கொஞ்சம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் பாக்கியவான்கள்.

"பிக்பாஸ்... ப்ளீஸ் ரிலீஸ் பண்ணுங்க” என்று உதடுகளுக்கிடையில் வேண்டுகோள் வைத்தார் ரம்யா. ஒரு கட்டத்தில் விடுதலை கிடைக்க ஓடோடிச் சென்று மெயின் கேட் அருகில் தங்களின் குடும்பத்தைச் சந்தித்தார். தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்த சமயத்திலும் கூட ரம்யாவின் அம்மா பொதுவாகத்தான் ‘டிப்ஸ்’ தருகிறார். ‘யாரைப் பத்தியும் யாரும் பேசாதீங்க’ என்று. பிறகு மற்றவர்கள் வந்து இணைந்தார்கள்.

“உண்டியலை இங்கதான் உடைப்பியா?” என்று சாந்தி கேட்க"‘என்னை வெளியே அனுப்பணும்னு நீயே முடிவு பண்ணிட்டே போல” என்று ஜாலியாகச் சிணுங்கினா ரம்யா. பிறகு ரம்யாவின் வேண்டுகோள்படி ‘குரூப் போட்டோ’ எடுத்துக் கொள்ள ‘ஒரு காப்பி வீட்டுக்கு அனுப்புங்க’ என்று ரம்யாவின் அம்மா வேண்டுகோள் வைத்த காட்சியோடு விடைபெற்றார். அம்மா கிளம்பும் சமயத்தில் அவரின் காலில் விழுந்து ரம்யா ஆசிர்வாதம் வாங்கும் காட்சியெல்லாம் ‘யப்பா... உலக நடிப்புடா சாமி…’ என்று புன்னகைக்கத் தோன்றியது.

இங்கு ஒரு விஷயத்தை அடிக்கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன். ரம்யாவின் குடும்பமும் சரி, பாலாஜியின் சகோதரரும் சரி... இவர்கள் வந்த கணங்கள் அத்தனையுமே அத்தனை ஜாலியானதாக இருந்தது. ஒரு நேர்மறையான அலைவரிசை அந்த வீட்டுக்குள்ளும் சரி... நமக்குள்ளும் சரி பரவியது. இந்த இரு விருந்தினர்களுமே தாங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒவ்வொரு கணத்தையும் சுவாரஸ்யமாக்கினார்கள். அதிலும் ரம்யாவின் அம்மா செம க்யூட்டான தருணங்களை உருவாக்கி விட்டுச் சென்றார்.

பிக்பாஸ் - நாள் 87
இந்தச் சமயத்தில் ஷிவானியின் அம்மா வந்த போது ஏற்பட்ட பதற்றமான தருணங்களை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. இதற்காக அவரை நான் குறை சொல்லவில்லை. ‘பெண்களில் கெட்டவர்கள் இருக்கலாம்; ஆனால் தாய்களில் ஒரு கெட்ட தாய் இருக்க முடியாது’ என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. தாயின் உன்னதத்தை அழுத்தமாக விளக்கும் திருவாசகம் அது. ஷிவானியின் அம்மாவும் வெளிப்படுத்தியது ஒருவகை அன்புதான். ஆனால் அது இயக்குநர் பாலா திரைப்படங்களில் வெளிப்படும் அன்பு போல துவக்கத்தில் முரட்டுத்தனமாக இருந்தது.

மறுபடியும் அதேதான். ஒரு குடும்பத்தின் சூழல்தான் ஒரு குழந்தையின் ஆளுமையை முதலில் வடிவமைக்கிறது. பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கும் சூழலில்தான் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமான மனநிலையில் வளர்வார்கள்.

தங்களின் குடும்பத்தினர் கிளம்பிச் சென்றவுடன், "சாரி... லேட்டாயிடுச்சு... உங்களுக்கு சாப்பாடு பண்ணித் தர்றேன்” என்று கிச்சனுக்கு குடுகுடுவென்று ரம்யா விரைந்தது சிறப்பான காட்சி.

இதில் இன்னொன்று கவனித்தீர்களா? ரம்யாவோடு பேசும் போது ஆரியிடம் வெளிப்படும் அதே பிரத்யேகமான புன்னகை, அவரின் தாயாரிடம் பேசும் போதும் வெளிப்பட்டது. ‘ஹைஃபை’ எல்லாம் கொடுத்து ரம்யாவின் தாயாரிடம் சிரித்து இயல்பாகப் பழகிய விதத்தில் இன்னொரு க்யூட்டான ஆரியைப் பார்க்க முடிந்தது.

`ரம்யாவின் தம்பி ஆரியை ‘தலைவன்’ என்று சொன்னதை ரியோ சீரியசாக எடுத்துக் கொண்டாரோ என்னமோ... "ஆரி ப்ரோ இங்க லெங்க்த்தா பேசறதையெல்லாம் பாயின்ட் பாயின்ட்டா மட்டும் வெளில காட்டுறாங்களோ என்னவோ... அவர் பண்றது சிலதுலாம் ஓகேதான். ஆனா மத்தவங்களைப் போட்டு அழுத்திட்டே இருக்காரு. அது உண்மை” என்று சோமிடம் அனத்திக் கொண்டிருந்தார் ரியோ.

இப்போதைய நிலைமையில் டாப் 3 போட்டியாளர்களில் ஆரிக்கு நிச்சயம் இடம் உண்டு. அவருடைய சிறப்புத் தகுதிகளுள் ஒன்று, ஆரம்பத்தில் இருந்தே அவர் எந்த குரூப்பிலும் இல்லை. தவறுகளை உடனடியாக தட்டிக் கேட்கிறார். ‘'நல்ல திறமை இருக்கறவன் கப் அடிக்கட்டும். எனக்கு சந்தோஷம்தான். ஆனா குழுவா சேர்ந்து இன்னொருத்தங்களை குத்தாதீங்க'’ என்று ஆரி சொல்வதும் நல்ல விஷயம்தான்.

பிக்பாஸ் - நாள் 87

ஆரியின் மைனஸ் பாயின்ட்டுகள் என்று பார்த்தால் அவரும் புறணி பேசாமல் இல்லை. பேசுகிறார். ரம்யாவை மாற்றியது போல் சூழல் அவரையும் பிறகு மாற்றியிருக்கலாம். எளிதாக ஹேண்டில் செய்யும் விஷயங்களுக்கு கூட மண்டையில் ‘சுர்’ ஏறி சண்டைக்கோழி போல் அடிக்கடி அவர் சிலிர்த்துக் கொள்வது சலிப்பூட்டுகிறது. இதைப் போலவே மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்வதின் மூலம் தன்னை மேலே பீடத்தில் அமர்த்தி வைத்துக் கொள்கிறாரோ என்னும் சந்தேகமும் தோன்றாமல் இல்லை. ‘மற்றவர்களையும் தகுதிப்படுத்துகிறேன்’ என்று கமல் வந்திருந்த ஒரு நாளில் அவர் சொன்னார். மற்றவர்களை தகுதிப்படுத்துவதற்காக அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வரவில்லை.

ஷிவானியுடன் அமர்ந்து சிக்கனோடு சேர்த்து சுயக்கதையையும் மென்று கொண்டிருந்தார் ரம்யா. "எங்க அம்மா சொல்றாங்க. இந்த வாரம் நான் வெளியே வந்தாலும் வந்துடுவேன்னு" என்று ரம்யா சொல்ல அவரை திகைப்பாகப் பார்த்தார் ஷிவானி. "ஹலோ... நீயெல்லாம் ஃப்ரன்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட். எங்க அம்மா என்னை கழுவி ஊத்தினதை பார்த்தா நான் இந்த வாரமே வெளியே வந்துடுவேன் போல" என்று கண்கலங்க ஷவானி சொன்னது நெகிழ்வை ஏற்படுத்தியது.

கிச்சன் மேடையின் கீழே எதற்காகவோ ரியோ செல்ல அவரை ‘ஃப்ரீஸ்’ செய்தார் பிக்பாஸ். பின்னாடியே கேபியும் அதற்குப் பின்னால் சோமுவும் வர அவர்களையும் அப்படியே சேர்த்து உறைய வைத்தார். மயிலுக்குப் போர்வை தந்த வள்ளலாக மாறி அவர்களின் மீது துணியை போர்த்தி விட்டு அழகு பார்த்தார் ஆரி. இப்போது ரியோவை மட்டும் பிக்பாஸ் ரிலீஸ் செய்ய, "டேய். பின்னாடி என்னடங்கடா பண்ணிட்டு இருக்கீங்க” என்று சைடு கேப்பில் தவழ்ந்து ரியோ வெளியே வந்தது சுவாரஸ்யமான காட்சி.

அதற்குப் பிறகு நடந்ததுதான் பெரும் காமெடி. ‘டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா?' பாடலில் மனிஷாவின் பின்னால் கமல் தபேலா வாசிப்பது போல, கரண்டியை எடுத்து சோமின் பின்பக்கத்தில் ரியோ தட்ட ‘லூப்’ என்று டைமிங்காக பிக்பாஸ் சொன்னது அநியாயமான குறும்பு. ஒரு மிக்ஸட் மார்ஷியல் ஆசாமி இப்படியொரு ‘பின்பக்க’ தாக்குதலை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அனைவரையும் உறைய வைத்த பிக்பாஸ் ‘காதலே... காதலே’ என்று 96 பாட்டைப் போட ரியோவிற்கு அப்போதே புரிந்து விட்டது. மூன்றாம் பிறை க்ளைமேக்ஸ் கமல்ஹாசன், திருவிழாவில் தொலைந்து போன சிறுவன் போன்ற முகபாவங்கள் எல்லாம் கலந்து முகத்தில் பெருகியோடத் துவங்கி விட்டன.

பிக்பாஸ் - நாள் 87

ரியோவின் மனைவி ஸ்ருதி உள்ளே நுழைந்ததும் தம்பதிகள் விரைந்து ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு கண் கலங்கியது நம்மை நெகிழ வைக்கும் காட்சியாக இருந்தது. பிரிவுத் துயரத்தில் இருந்தவர்களால்தான் இந்தக் காட்சியின் பின்னுள்ள உணர்வுகளை அறிய முடியும். ‘சாரி’ என்று சம்பந்தமில்லாமல் ரியோ நெகிழ ‘எதுக்கு சாரி கேட்கற?’ என்று கான்ஷிஸயாக இருந்தார் ஸ்ருதி ‘நான் இங்க வந்திருக்கவே கூடாது’ என்று உணர்ச்சிகளின் பிடியில் நின்று தத்துப்பித்தென்று உளறினார் ரியோ. ஆனால் க்யூட்டான உளறல்.

இங்கு ஒரு இடைச்செருகல். எனக்கு ஒருமுறை அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்த சமயத்தில், மயக்க மருந்தின் பிடியில் இருந்து நான் மெல்ல விடுபடத் துவங்கிய கணத்தில் அருகில் இருந்த மனைவியின் கையில் ‘சாரி’ என்று எழுதிக் காட்டியிருக்கிறேன் போல. இந்தத் தகவலை அவர்தான் பிறகு என்னிடம் சொன்னார். அதுவரை வீட்டம்மணிக்கு நான் இழைத்த கொடுமைகள் எல்லாம் என் ஆழ்மனதில் உறைந்திருந்து ஒரு பாவமன்னிப்பு கேட்ட தருணமாக அது இருந்திருக்கக்கூடும்.

தொடர்பில்லாமல், ரியோ ‘சாரி’ கேட்ட தருணம் இதை்ததான் எனக்கு நினைவுப்படுத்தியது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனைவியைக் கொண்டாடி விடுங்கள். பிறகு என்னைப் போல் லேட்டாக பாவமன்னிப்பு கோரத் தேவையிருக்காது என்பதே இதிலுள்ள நீதி.

ரியோவும் அவரது மனைவியாரும் கண்ணீர் விட்டு செய்து கொண்டிருந்த ரொமான்ஸ்களையெல்லாம் பெட்ரூமில் இருந்து மெல்லிய புன்னகையுடன் பாலாஜி பார்த்துக் கொண்டிருந்தது சுவாரஸ்யமான காட்சி. (உள்ளே இருக்கற ஏக்கம் வெளியே அப்பட்டமா தெரியுது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க... பாலா!). ‘இந்த வீட்ல பிக்பாஸையே மதிக்காத பய இவன்தான்’ என்று பாலாஜியை தன் மனைவிக்கு ஜாலியாக அறிமுகப்படுத்தினார் ரியோ. (லக்ஷுரி மதிப்பெண் வரும் போதுதான் தெரியும்!).

ரியோ ஒரு முறை ரம்யாவை தூக்கியதை பொசசிவ்னஸ்ஸூடன் ஸ்ருதி கிண்டல் செய்த காட்சியும் ரியோ ஆங்கிலம் பேசும் லட்சணத்தை வாரிய காட்சியும் சுவாரஸ்யம். ‘நேஷனல் டெலிவிஷன்’ விஷயத்தை இவரும் கிண்டல் செய்த போது ‘அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சு’ என்று விழித்தார் ரியோ.

பிக்பாஸ் - நாள் 87

தங்களின் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி ஒரு தாயின் பெருமிதத்துடன் சபையில் பகிர்ந்து கொண்டார் ஸ்ருதி. ரியோவிற்குள் இருந்த ஏக்கம் இன்னமும் பெருகியிருக்க வேண்டும். எனவே அதைத் தணிக்கும் விதமாக வீடியோவின் வழியாக குழந்தையைக் காண்பித்த போது நெகிழ்ந்து போனார் ரியோ. ரியோவின் அம்மா மிக மிக இயல்பான தொனியில் "டேய்... ரியோ... அம்மா பேசறண்டா... நல்லாயிருக்கியா... ஜெயிச்சுட்டு வா’"என்று ஏதோ 'கடைக்குப் போய் முட்டை வாங்கிட்டு வா’ என்பது போல் சொன்னது க்யூட்டாக இருந்தது. ரம்யாவின் அம்மா போல இவரும் கூல் அம்மாவாக இருக்க வேண்டும்.

ரியோவின் யூடியூப் நண்பர்கள் ‘யப்பா பழனிச்சாமி…’ என்று ஆரம்பித்து சிக்கன் பிரியாணியுடன் போலிக் கண்ணீர் விட்டு வெறுப்பேற்றிய காட்சி குலுங்கி குலுங்கி சிரிக்க வைப்பதாக இருந்தது. இறுக்கம் கலைந்து ரியோவும் சிரிக்கத் துவங்கினார்.

பின்பு தன் கணவருடன் தனியாகப் பேசிய ஸ்ருதி, “ஆரம்பத்தில் தெரிந்த உன் நகைச்சுவையுணர்ச்சி ஏன் பிறகு காணாமல் போய் விட்டது? மீண்டும் அதைக் கொண்டு வா. இந்த மூஞ்சி உனக்கு செட் ஆகலை" என்பது போல சொன்ன அறிவுரையும் அப்சர்வேஷனும் மிகச் சிறப்பு. அருமையான உபதேசமும் கூட. “நீ ஜெயிக்கிறியோ... இல்லையோ... ஆனா சந்தோஷமா இரு” என்று அவர் சொன்னது திருவாசகம். ரியோவும் ஸ்ருதியும் மிகச் சிறந்த தம்பதிகளாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

‘ஸ்ருதி... நீங்க வெளிய வரலாம்’ என்று பிக்பாஸ் சொன்ன போது குழந்தை போல ஏங்கி விட்டார் ஸ்ருதி. ரொமான்ஸை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாலாஜி அந்த ஏக்கத்தில் தூங்கியே விட்டார் போல. அவரை எழுப்பி விடைபெற்றுச் சென்றார் ஸ்ருதி. "நீங்களும் என் ஹஸ்பெண்டும் சண்டை போடக்கூடாது... சரியா?’ என்று ஆரிக்கு அவர் வேண்டுகோள் வைத்த காட்சியானது ஒரு ஜாலி பட்டாசு. தனது டிரேட்மார்க் வெட்கச் சிரிப்பை வெளிப்படுத்தினார் ஆரி. ‘அது ரொம்பக் கஷ்டம்’ என்று அப்போது ஜாலி கமென்ட் அடித்தது சோமுவாக இருக்க வேண்டும்.

அர்ச்சனா விடைபெற்றுச் செல்லும் போது சோமிடம் தந்து விட்ட ஒரு பச்சைநிறப் பெட்டியின் ரகசியம் இன்றுதான் எனக்குப் புரிந்தது. விபூதி டப்பா. தன் அன்பைக் கரைத்து விபூதியின் வடிவில் அந்த வீட்டில் அர்ச்சனா விட்டுச் சென்றிருக்கிறார் போலிருக்கிறது. அதை பயபக்தியுடன் தன் மனைவிக்கு பூசி மகிழ்ந்தார் ரியோ. தான் தயார் செய்து வைத்திருந்த ‘பாப்பா டிரஸ்’ஸை பரிசாக வழங்கினார் கேபி.

பிக்பாஸ் - நாள் 87

‘நானும் கூட போகட்டுமா?’ என்று ரியோ ஜாலியாக கேட்க தம்பதிகள் பரஸ்பரம் நெகிழ்ந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார்கள். பிறகு மெயின் கேட்டின் அருகே "ரியோ ப்ரோ... பை" என்று பாலாஜியைக் கலாய்த்தது சுவாரஸ்யமான கிண்டல்.

சிறிது நேரத்தில் ‘ரெட்டைக்கதிரே’ என்று மாற்றான் திரைப்படத்திலிருந்து பாடல் ஒலிக்க சோமுவின் சகோதரர் உள்ளே நுழைந்தார். “என்னடா... இப்படி குண்டாயிட்டே" என்று பொறாமையுடன் வரவேற்றார் சோம். ரம்யாவின் சகோதரரைப் போலவே சோமுவின் சகோதரரும் ஜாலியான ஆசாமியாக இருந்தார். ஒவ்வொருவரையும் ‘குமார்’ அடைமொழியுடன் பட்டப்பெயர் சூட்டியது சுவாரஸ்யமான காட்சியாக இருந்தது.

பிறகு சோமுவிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்த தம்பி, ‘நீ இன்னமும் ஓப்பனா வெளியே வரணும்’ என்கிற சரியான உபதேசத்தை தந்து கொண்டிருந்தார். அர்ச்சனா வெளியேறிய பிறகுதான் சோம் பிரகாசிக்கத் துவங்கியிருக்கிறார். இதை அவர் முதலில் இருந்தே செய்திருந்தால் ஆரி, பாலாஜியைப் போன்ற நிராகரிக்க முடியாத போட்டியாளர்களில் ஒருவராக மாறியிருக்கக்கூடும். ‘குட்டு’ உட்பட சோமுவின் குடும்பத்தார் வீடியோவின் வழியாக வந்து வாழ்த்து சொன்னார்கள்.

சோம் பின்னணி இசை சப்தங்களை எழுப்ப ‘ஜூன் போனால்’ பாடலை அருமையாகப் பாடினார் ஆஜித். பாடலை அவர் முடித்த விதம் அத்தனை அட்டகாசம். பிறகு சோமுவின் சகோதரரை குறைந்த நேரத்திலேயே வெளியே வரச் சொன்னார் பிக்பாஸ்.

பிக்பாஸ் - நாள் 87

'‘ஒரு ஹவுஸ்கீப்பிங் கேப்டனா என்னோட கடமையை நான் செஞ்சிதான் ஆகணும்... யாரும் என்னைத் தடுக்காதீங்க. இதுல என் கருத்து என்னன்னா...'’ என்று ஆரி (?) பேசும் பாணியை ஜாலியாக மிமிக்ரி செய்து கொண்டிருந்தார் ஆஜித். இவரும் ஷிவானியும் ‘காக்கா கருப்பு’ என்கிற நர்ஸரி ரைமிங் பாடலைப் பாட நிகழ்ச்சி முடிவடைந்தது.

கமென்ட் பாக்ஸில் கொலைவெறியுடன் கமென்ட்டப்போகிற சில நண்பர்களை நினைத்தால் இப்போதே கலவரமாகத்தான் இருக்கிறது. அம்மாதிரியான நண்பர்களுக்கு மட்டும் ஜாலியாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

“FREEZE”



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/relatives-enter-the-house-bigg-boss-tamil-season-4-day-87-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக