கிரேக்க அதிபர் தேர்தல் - ஜனவரி 2020!
கிரீஸ் நாட்டின் 12-வது அதிபர் புரோகோபிஸ் பவ்லோபூலோஸின் (Prokopis Pavlopoulos) ஆட்சிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், 13-வது அதிபருக்கான தேர்தல் கடந்த ஜனவரி 22-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல் மறைமுகத் தேர்தல் முறையில் நடைபெற்றது. 12-வது அதிபரான புரோகோபிஸ், அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் தகுதியைப் பெற்றிருந்தாலும், அவரை அந்த அரசு பரிந்துரை செய்யவில்லை.
கிரேக்க அரசியலமைப்பின் 32-வது பிரிவின்படி, அதிபரின் பதிக்கலாம் முடியும் ஒரு மாதத்துக்கு முன்பே அடுத்த அதிபரைத் தேர்வு செய்யவேண்டும். அதனையடுத்து, கிரேக்க அரசு கேத்ரினா சாகெல்லரோபவ்லுவை (Katerina Sakellaropoulou) அதிபர் வேட்பாளராகப் பரிந்துரை செய்தது. இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாகாண கவுன்சிலின் தலைவராகப் பதவி வகித்து வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் 261 வாக்குகள் பெற்று 13-வது அதிபராகப் பதவியேற்றார். இதன்மூலம் கிரேக்கத்தின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் - பிப்ரவரி 2020!
டெல்லியின் 7-வது சட்டமன்றத் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 08-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் பிரதான காட்சிகளாகப் பார்க்கப்பட்டன. மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு 36 தொகுதிகள் வெற்றிபெறுவது அவசியமானது. இந்த தேர்தலில் 62.82 சதவிகித வாக்குகள் பதிவாகின.
பிப்ரவரி 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சியும் மீதமுள்ள 8 இடங்களை பா.ஜ.க-வும் கைப்பற்றின. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. மொத்தம் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி 53.57% வாக்குகளையும், பா.ஜ.க 38.51% வாக்குகளையும், காங்கிரஸ் 4.26% வாக்குகளையும் மீதமுள்ள வாக்குகளை இதர கட்சிகளும் பெற்றிருந்தன. ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரைக் கடந்த 2015-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 67 இடங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில் 2020-ம் ஆண்டு 62 இடங்களைத்தான் கைப்பற்றியது. அதேபோல பா.ஜ.க-வைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் மூன்று இடங்களைக் கைப்பற்றிய நிலையில், இந்த ஆண்டு எட்டு இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தென்கொரிய நாடாளுமன்றத் தேர்தல் - ஏப்ரல் 2020!
தென்கொரிய நாட்டின் 21-வது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 300 தொகுதிகளில், ஆட்சியைப் பிடிப்பதற்கு 180 தொகுதிகள் தேவை. தென்கொரியாவில் தேர்தல் அறிவித்தபோது, அந்த நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது. பல நாடுகளும் அங்கு தேர்தல் நடைபெறாது என்று கணித்தபோதும் சொன்ன தேதியில் தேர்தல் நடைபெற்றது. பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த அந்த நாட்டு அரசு 16,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த தேர்தலில் 35-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் போட்டியிட்டாலும், ஆளும் ஜனநாயகக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான யுனைட்டட் ஃபயூச்சர்க்கும்தான் கடுமையான போட்டி நிலவியது. இந்த கொரோனா பேரிடரிலும் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை வாக்குப் பதிவு 66 சதவிகிதம் என்கிற அளவில் பதிவாகியிருந்தது. அதுபோல தென்கொரியாவில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட முதல் தேர்தலும் இதுதான். தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 300 தொகுதியில் ஆளும் ஜனநாயகக் கட்சி 163 இடங்களிலும், அதன் தோழமைக் கட்சியான பிளாட்பார்ம் கட்சி 17 இடங்களிலும் வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தன. எதிர்க்கட்சிக் கூட்டணி 103 இடங்களைக் கைப்பற்றியது. மக்களுக்கு ஆளும் அரசின் மீது பல்வேறு வெறுப்புகள் இருந்தாலும், அந்த அரசு கொரோனவை கையாண்ட விதம்தான் அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.
Also Read: ‘இந்த வருட இறுதியில் மீண்டும் வைரஸ் வெடிக்கும்’ - தென் கொரிய அதிபர் எச்சரிக்கை
சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தல் - ஜூலை 2020!
சிங்கப்பூர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் கடந்த ஜூலை-10 தேதி நடந்து முடிந்தது. சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தல் இது. மொத்தமுள்ள 93 தொகுதிகளில் 2,653,942 வாக்காளர்கள் இருக்கின்றனர். சிங்கப்பூரைப் பொறுத்தவரை 21 வயது பூர்த்தியடைந்தவர்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். கடந்த 55 ஆண்டுகளாக மக்கள் செயல் கட்சிதான் ஆட்சியிலிருந்து வருகிறது. கொரோனா பேரிடர் காரணமாக பிரசாரங்கள் அனைத்தும் இணைய வழியில்தான் நடைபெற்றது. வாக்குச் சாவடிகளில் எண்ணிக்கை 880-லிருந்து 1,100 ஆக உயர்த்தப்பட்டது. அதோடு, அவரவருக்குக் கொடுக்கப்பட்ட நேரங்களில் மக்கள் வந்து வாக்களித்துச் சென்றனர். சில இடங்களில் இரவு பத்து மணியைத் தாண்டியும் மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்துச் சென்றனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் மக்கள் செயல் கட்சி முன்னிலை வகித்து வந்தது. இறுதியில் மொத்தமுள்ள 93 தொகுதிகளில் 83 தொகுதிகளை ஆளும் கட்சி கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. இந்த முறை மக்கள் செயல் கட்சி 61.24 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. இது கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற 69.9% வாக்குகளை விடக் குறைவு. பிரித்தம் சிங் தலைமை வகிக்கும் பாட்டாளிக் கட்சி இந்த முறை 10 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க் கட்சியாகத் தேர்வு செய்யப்பட்டது. கடந்த தேர்தலில் இந்த கட்சி ஆறு இடங்களில் வெற்றிபெற்றிருந்த நிலையில், இம்முறை 10 இடங்களில் வெற்றிபெற்றது.
சிரியா நாடாளுமன்றத் தேர்தல் - ஜூலை 2020!
சிரியா நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பேரிடர் காரணமாக நடைபெறவிருந்த தேர்தல் மே மாதம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஜூலை 19-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 2016-ம் ஆண்டு வெற்றிபெற்ற பஷர் அல் அசாத்தின் கட்சி, இந்த முறையும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததிலிருந்து நாட்டின் பல்வேறு மாகாணங்களில் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த முறை ரக்கா, அல்-ஹசாகா போன்ற மாகாணங்களிலும் தேர்தல் நடைபெற்றது. சிரியா நாடாளுமன்றத்தில் உள்ள 250 இடங்களுக்கு மொத்தம் 1,656 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கொரோனா பேரிடர் காரணமாகத் தேர்தல் தள்ளிப் போன நிலையில், தேர்தல் நடைபெற்ற அன்று சில வாக்குச்சாவடிகளில் குண்டுவெடிப்பு சம்பவங்களும் அரங்கேறின. கொரோனா அச்சம், போர் பதற்றம், வறுமை மற்றும் அரசின் மீதான வெறுப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் தேர்தல் மிகவும் மந்தமாகவே நடைபெற்றது. அந்த நாட்டில் போரின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து, நாட்டைவிட்டு இடம்பெயர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 62,24,687 (33.17%) வாக்குகள் பதிவாகியது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 57 சதவிகித வாக்கு பதிவானதாகத் தேர்தல் கமிஷன் தலைவர் சமர் ஜாம்ரீக் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையின்போது சில வாக்குச் சாவடிகளில் குளறுபடிகள் நடந்தாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை மிகவும் தாமதமானது. சிரியாவில் 2016-ம் ஆண்டு தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நான்கு நாள்கள் நடைபெற்றது. இறுதியாக வெளியான முடிவுகளில் 250 இடங்களில் 177 இடங்களைக் கைப்பற்றி பஷர் அல் அசாத்தின் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - ஆகஸ்ட் 2020!
இலங்கையின்ன் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடந்து முடிந்தது. இங்குள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 225. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 16,263,885. கடந்த ஏப்ரலில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், கொரோன பேரிடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தமுள்ள 225 தொகுதிகளில் 196 இடங்களில் மக்கள் வாக்களித்து வேட்பாளரைத் தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்களில் கட்சியின் வாக்கு சதவிகிதத்தைக் கொண்டு தேசியப் பட்டியல் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி சஜித் பிரேமதாச 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற புதிய கட்சியைத் தொடங்கி களம் கண்டார்.
தேர்தல் முடிந்த அடுத்த நாளே வாக்குகள் எண்ணப்பட்டன. முடிவுகளைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 225 தொகுதிகளில் மகிந்த ராசபக்சே தலைமை வகிக்கும் இலங்கை பொதுஜன முன்னணி தேர்தல் வாக்குகள் மூலம் 128 இடங்களையும் தேசியப் பட்டியல் மூலம் 17 இடங்களையும் என்று மொத்தம் 145 இடங்களைக் கைப்பற்றியது. இலங்கையில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் கூடுதலான இடங்களைக் கைப்பற்றியிருந்தது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களைக் கைப்பற்றியது. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றவில்லை. தேசியப் பட்டியல் அடிப்படையில் ஒரு தொகுதியை மட்டும் பெற்றது. இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அவரின் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இந்தத் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
Also Read: ஈழத் தமிழர் இனப்படுகொலை... தமிழகம் மற்றும் இலங்கை தேர்தல் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன?
நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் - அக்டோபர் 2020!
நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த அக்டோபர் 17-ம் தேதி நடைபெற்றது. 120 தொகுதிகளையும், 48 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களையும் கொண்டுள்ளது இந்த நாடு. செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்தல் கொரோனா பேரிடர் காரணமாக அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான தேசிய கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அந்நாட்டில் பல ஆண்டுகளாகக் கூட்டணிக் கட்சிகளின் துணையோடுதான் ஆட்சியமைக்க முடிந்தது.
நடந்து முடிந்த தேர்தலில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. கடந்த தேர்தலில் 46 இடங்களில் வெற்றியடைந்திருந்த நிலையில், இந்த தேர்தலில் 19 இடங்களைக் கூடுதலாகக் கைப்பற்றியுள்ளது. பதிவான மொத்த வாக்குகளில் 49 சதவிகித வாக்குகளைத் தொழிலாளர் கட்சி பெற்றுள்ளது. அடுத்தபடியாக, 33 (27%) இடங்களைக் கைப்பற்றி தேசியக் கட்சி எதிர்க்கட்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இந்தக் கட்சி 56 இடங்களில் வெற்றிபெற்றிருந்த நிலையில், இம்முறை 23 இடங்களைக் குறைவாகக் கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்து தேர்தலில் 1942-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஒரு கட்சியும் தனித்துப் பெறாத வெற்றி இது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் - அக்டோபர் 28- நவம்பர் 07 - 2020
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆட்சிக்காலம் கடந்த நவம்பர் 29-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்தியாவில் கொரோனா பேரிடர் ஆரம்பித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் இதுதான். மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 7,18,22,450 வாக்காளர்கள் உள்ளனர். எதிர்க் கட்சிகள், கொரோனா காலத்தில் தேர்தல் எதற்கு என்று எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவியது. முக்கியமாக ஜே.டி.யு + பா.ஜ.க கூட்டணி மற்றும் ஆர்.ஜே.டி + காங்கிரஸ் (மகா கூட்டணி) இடையே கடுமையான போட்டி நிலவியது.
தேர்தல் முடிவுகளில் ஜே.டி.யு + பா.ஜ.க கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கூட்டணிக் கட்சியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்தபடியாக ஆர்.ஜே.டி + காங்கிரஸ் (மகா கூட்டணி) 110 இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியானது. இதரக் காட்சிகள் 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்ததன. இந்தத் தேர்தலில் ஆளும் ஜே.டி.யு கட்சி வெறும் 43 இடங்களை மற்றுமே கைப்பற்றியது. கடந்த தேர்தலில் 71 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை 28 இடங்களில் குறைவான இடங்களையே பிடிக்க முடிந்தது. அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க, கடந்த தேர்தலில் 53 இடங்களைப் பிடித்திருந்த நிலையில், இம்முறை 21 இடங்கள் அதிகரித்து மொத்தம் 74 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி 75 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இது கடந்த தேர்தலை விட ஐந்து இடங்கள் குறைவாகும். காங்கிரஸைப் பொறுத்தவரைக் கடந்த முறையை விட 8 இடங்கள் குறைவாக வெறும் 19 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டும் வெறும் 19 இடங்களில் வெற்றி பெற்றது மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
மியான்மர் நாடாளுமன்றத் தேர்தல் - நவம்பர் 2020!
ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் மியான்மரின் இரண்டாவது தேர்தல் கடந்த நவம்பர் 10-ம் தேதி நடந்து முடிந்தது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகள், ஏழு மாநில சட்டப்பேரவை மற்றும் மண்டலங்கள் என்று மொத்தம் 1,171 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. 3.7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை மியான்மர் கொண்டுள்ளது. 90-க்கும் அதிகமான கட்சிகள் இந்தத் தேர்தலைச் சந்தித்தன. கொரோனா அச்சத்துக்கு நடுவிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுத் தேர்தல் நடந்து முடிந்தது.
642 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 396 இடங்களில் ஆளும் ஆங் சான் சூயி (Aung San Suu Kyi) தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. கடந்த தேர்தலை விட இம்முறை 6 இடங்களை அதிகமாகக் கைப்பற்றியுள்ளது. 34 இடங்களைக் கைப்பற்றி யூனியன் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி மியான்மரின் பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் - நவம்பர் 2020
தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் தேர்தலைச் சந்தித்தனர். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 538 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறும். 270 இடங்களில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சியைப் பிடிக்க முடியும்.
பல்வேறு இடர்பாடுகளுக்குப் பின்னர் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப் பதிவு சதவிகிதம் 66.9 என்றளவில் பதிவாகியிருந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில், மிகுந்த தாமதம் ஏற்பட்டது. கடைசியில் மொத்தமுள்ள 538 இடங்களில் ஜனநாயகக் கட்சி 306 இடங்களையும், ஆளும் குடியரசுக் கட்சி 232 இடங்களையும் கைப்பற்றியன. மொத்தம் பதிவான வாக்குகளில் 51.4% வாக்குகளை ஜனநாயகக் கட்சியும், 46.9% வாக்குகளைக் குடியரசுக் கட்சியும் பெற்றிருந்தன. தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப் பெரும் சட்டப்போராட்டம் நடத்தினர். ஆனால், அது எதுவும் அவருக்குப் பயனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்கிறார். உடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணை அதிபராகப் பதவியேற்க இருக்கிறார்.
Also Read: அமெரிக்க அதிபர் தேர்தல் க்ளைமாக்ஸ்... சில சுவாரஸ்யக் காட்சிகள்!
குவைத் நாடாளுமன்றத் தேர்தல் - டிசம்பர் 2020
குவைத் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த டிசம்பர் 05-ம் தேதி நடைபெற்றது. குவைத்தைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் சுயேச்சையாகத் தான் தேர்தலைச் சந்திக்க வேண்டும். மொத்தமுள்ள 50 தொகுதிகளில் 29 பெண்கள் உட்பட 326 வேட்பாளர்கள் தேர்தலைச் சந்தித்தனர். கொரோனா பேரிடர் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்களிக்க ஏதுவாக பள்ளிக்கூடங்கள் பயன்படுத்தப்பட்டன. குவைத்தில் 21 வயது பூர்த்தியானவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாவர். வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,694. குவைத்தில் வசிப்பவர்களின் பெரும்பாலானோர் வேலைக்காக இடப்பெயர்வு ஆனவர்கள் தான்.
நடந்து முடிந்த தேர்தலில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்த 19 நபர்கள் மீண்டும் வெற்றியடைந்துள்ளனர். மேலும் புதிதாக 31 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் ஒரு பெண் வேட்பாளர் கூட வெற்றிபெறவில்லை. வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவரை நாட்டின் பிரதமராக குவைத் அரசர் தேர்வு செய்வர். அவருடன் 15 முதல் 16 அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள். சென்ற முறை பிரதமராகப் பதவி வகித்த ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபாவை (Sabah Al-Khalid Al-Sabah) குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அகமது அல்-ஜபீர் அல்-சபா (Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah) பிரதமராகத் தேர்வு செய்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/election/2020-rewind-world-wide-elections-happened-this-year
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக