Ad

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

திருச்சி: `பிரசாரம் தொடங்கும் முன்பே உடைந்த கண்ணாடி!’-தொண்டர்கள் மனநிலையை மாற்றிய கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் மூன்றாம் கட்ட தேர்தல் பிரசாரத்திற்காக இரண்டு நாள்களாகத் திருச்சியில் மையம் கொண்டுள்ளார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை சென்றவர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி மொரைஸ்சிட்டி மைதானத்தில் தரையிறங்கினார். கமலுடன் அவரது இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனும் வந்திருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. `தலைநிமிரட்டும் தமிழகம்’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் கமலஹாசன், தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

திருச்சி வந்த கமல்

நூற்றுக்கணக்கான வாகனங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கமலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு திருச்சி காஜாமலையில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் கமல் தங்கினார். ஹோட்டலுக்குள் அவர் நுழைந்தபோது, அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஹோட்டலுக்குள் நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் ஹோட்டலின் நுழைவுப் பகுதியில் இருந்த முன்பக்கக் கண்ணாடிக் கதவு ஒன்று சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது.

உடைந்த கண்ணாடிக் கதவு

தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பே கண்ணாடி உடைந்ததை மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கவலையோடு பார்த்தனர். அதற்குக் கமல், `தொண்டர்கள் கூடினால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும். அதற்காக நாம் எதையும் யோசிக்கக்கூடாது’ என கமெண்ட் அடித்து தொண்டர்களின் மனநிலையை மாற்றி பிரசாரத்துக்குக் கிளம்பினார்.

பிரசாரத்தில் பேசிய கமல், ``மக்கள் மாற்றத்துக்குத் தயாராகி விட்டனர். அமைச்சர்கள் சேர்த்த கூட்டம் காசு கொடுத்துச் சேர்த்த கூட்டம். ஆனால், இங்குக் கூடியிருக்கிற கூட்டம் நேர்மையாகச் சேர்ந்த கூட்டம். நான் ஒன்றும் சினிமா நட்சத்திரம் அல்ல. நான் உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய சிறிய விளக்கு. இந்த விளக்கு உங்கள் வீட்டுக்கு வெளிச்சத்தையும் மாற்றத்தையும் மட்டுமே தரும். தீங்கு செய்யாது.

கமல்ஹாசன்

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே அரசு என்னை மொத்தமாகத் தெருவில் நிறுத்தத் திட்டம் போட்டது. எனக்கு அன்று உதவியது திருச்சியிலிருந்த என்னுடைய வீடுதான். நீங்கள் தமிழகத்தைச் சீரமைக்கப் புறப்படுங்கள். நானும் புறப்படுகிறேன். அரசின் செயல்பாடுகளையும், திருட்டுத்தனத்தையும் மறைக்க முடியாது. அவர்கள் செய்த அட்டிராசிட்டியையெல்லாம் இன்னும் தெளிவாகப் பேச உள்ளோம்.

Also Read: ``ரஜினி-கமல், அ.தி.மு.க-வுக்கு வாக்கு சேகரிக்கிறார்கள்!''- சீமான் சொல்லும் ரகசியம் என்ன?

யார் யார் எவ்வளவு கொள்ளையடித்தார்கள் எனப் பட்டியல் போடுவதில் சந்தோஷம் இல்லை. நாங்கள் அந்த வழியில் செல்லப்போவதுமில்லை. நான் நாகரிக அரசியல் செய்ய நினைக்கிறேன். உடல் ஊனமுற்றோரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற, உடல் ஊனமுற்ற ஒருவரைச் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம்.

கமல்

அவர்களை வெற்றிபெற வையுங்கள். உங்களுக்கு உண்டான தேவைகளை அவர் செய்துகொடுப்பார். நேர்மையானவர்கள் கூட்டத்தில் பேசுவதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. தமிழகம் ஒரு புரட்சிக்குத் தயாராகி விட்டது. அதற்கான அடையாளமும் இங்கே தெரிகிறது. இதற்காக அரை நூற்றாண்டாகக் காத்திருக்கிறோம்.

இந்தத் தலைமுறைக்கு நல்லது ஏற்பட வேண்டும். எங்கு சென்றாலும் மகளிர் கூட்டம் இருப்பது பெரும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. பெண்கள் நினைத்தால் ஆட்சியை மாற்ற முடியும். முகக்கவசம் இல்லாமல் தாய்மார்கள் குழந்தையைக் கூட்டத்துக்குக் கூட்டி வர வேண்டாம்.

கமல்ஹாசன்

`கொரோனா காலத்தில் எதற்காகக் கூட்டத்தில் போகிறீர்கள்’ என்று சொன்னார்கள். நான் கூட்டத்துக்கு நடுவில் போகவில்லை; குடும்பத்துக்கு நடுவே போகிறேன். தமிழகத்தைச் சீரமைக்கும் பணி தொடங்கிவிட்டது. மாற்றத்திற்கான விதையை நீங்கள்தான் தூவவேண்டும். அதற்கான தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. தீமைக்கு எதிராகக் குத்துங்கள் உங்கள் ஓட்டை. விரைவில் எது என்று சொல்கிறேன். நாளை நமதே’’ என்று கமல் பேசினார்.



source https://www.vikatan.com/news/politics/mnm-chief-kamals-election-campaign-in-trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக