Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

2020 Rewind: இந்திய ஆட்டோமொபைல் துறையின் சரிவும், எழுச்சியும்!

ஒட்டுமொத்த உலகைப் போலவே, இந்திய ஆட்டோமொபைல் துறையும் கொரோனாவால் ஆட்டம் கண்டுவிட்டது. . லாக்டெளன் 1.0-ல் மக்கள் தமது வீடுகளிலேயே அடைபட்டுக் கிடக்கவேண்டிய சூழல் இருந்ததால், வாகன விற்பனை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மொத்தமாக சரிந்தது. வருட இறுதியில் வரக்கூடிய பண்டிகைகள், எதிர்பார்த்தபடியே வாகன விற்பனையைச் சரிவிலிருந்து மீட்டுவிட்டன. 2021-க்காக நம்பிக்கையோடு கார்த்திருக்கும் ஆட்டோமொபைல் உலகம் 2020-ல் என்னென்ன சவால்களை எதிர்கொண்டது?! 2020 Rewind...

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் வருகை!

ஏற்கெனவே நம் நாட்டில் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகின என்றாலும், அவை பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. இவற்றின் விலை குறைவு என்றாலும், ஒட்டுமொத்தத் தரம் மிகவும் சுமாராக இருந்தது. ஆனால் இந்தப் போக்கை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, உள்நாட்டு உற்பத்தியாளர்களான பஜாஜ் (சேட்டக்) மற்றும் டிவிஎஸ் (ஐ-க்யூப்), எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் தமது தயாரிப்புகளை இந்த ஆண்டு களமிறக்கினார்கள். இவை இரண்டும் தற்போது பெங்களூரில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன என்றாலும், இது ஒரு நல்ல தொடக்கமாகவே தெரிகிறது. மற்றபடி ஏற்கெனவே இந்தப் பிரிவில் தனக்கான இடத்தைப் பெற்றிருந்த ஏத்தர் நிறுவனம், 450X எனும் மேம்பட்ட மாடலை அறிமுகப்படுத்தியது. இதன் விலை அதிகம் என்றாலும், டிசைன், தொழில்நுட்பம், பர்ஃபாமன்ஸ், தரம் ஆகியவற்றில் இது சொல்லி அடித்தது.

Auto Expo 2020

களையிழந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020

இந்தியா தவிர்த்து இதர உலக நாடுகளில், கொரோனா தனது கிளைகளை வேறூன்றிக் கொண்டிருந்த சமயம் அது. அந்த நேரத்தில் முன்பு திட்டமிட்டபடியே, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020 பிப்ரவரியில் நடைபெற்றது. இதில் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஃபோக்ஸ்வாகன் - ஸ்கோடா குழுமம் பங்கேற்றதால், மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஹோண்டா, டொயோட்டா, பிஎம்டபிள்யூ, ஆடி, ஃபியட் க்ரைஸ்லர் குழுமம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்த ஆட்டோமொபைல் திருவிழாவில் கலந்துகொள்ளாதது பெரிய ஏமாற்றமே. அதனை ஈடுகட்டும் விதமாக, Great Wall Motors & Haima எனும் இரு புதிய சீன நிறுவனங்கள், தமது தயாரிப்புகளை நம் நாட்டு மக்களுக்குக் காட்சிப்படுத்தினார்கள். ஆனால், இந்தியா - சீன நாடுகளுக்கு இடையே எல்லையில் நிகழும் பிரச்னையால், Great Wall Motors இந்தியாவுக்கு வருவதே கேள்விக்குறியாகி உள்ளது. இத்தனைக்கும் அந்த நிறுவனம், 7,600 கோடியை நம் நாட்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது. மஹாராஷ்டிராவின் தாலேகானவில் அமைந்திருக்கும் ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சாலையையும் இந்நிறுவனம் கைப்பற்றிவிட்டது. ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்பது மர்மமாகவே இருக்கிறது.

Automobile Industry

வாகன உற்பத்தி மற்றும் விற்பனை சரிவு!

இந்தியாவின் GDP-யில் கணிசமான இடத்தைப் பெற்ற ஆட்டோமொபைல் துறை, வேகமாக இயங்கிக்கொண்டிருந்த தனது சக்கரங்களை, அப்படியே நிறுத்தவேண்டிய கட்டாயம் கொரோனாவால் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பின் உச்சமாக, ஏப்ரல் 2020 மாதத்தில் நாடெங்கும் விற்பனையான புதிய வாகனங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம். தமது வர்த்தக்கத்தில் ஏற்பட்ட நெருக்கடியிலும், அவர்கள் கொரோனா நிதிக்கு அதிகளவில் பண உதவிகளைச் செய்தார்கள். மேலும் சோர்ந்து போய்விடாமல் மாற்றி யோசித்ததன் விளைவையும் பார்க்கமுடிந்தது. அதன்படி பலதரப்பட்ட வாகன உற்பத்தியாளர்கள், தமது ஆலைகளில் வாகனங்களுக்குப் பதிலாக, சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, வென்டிலேட்டர்களையும் PPE கிட்களையும் தயாரித்தது, உண்மையிலேயே வரவேற்கத்தக்க அம்சம்.

BS-6 விதிகள் அறிமுகம்!

குறுகிய 4 வருட காலத்திலேயே, வாகன உற்பத்தியாளர்கள் தமது தயாரிப்புகளில் பொருத்தப்பட்ட இன்ஜின்களை, BS-6 விதிகளுக்கேற்ப மேம்படுத்தி விட்டனர். இதனால் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு குறைந்தது ஒருபுறம் என்றால், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தால், டீசல் கார்களின் விலை அதிரடியாக மறுபுறத்தில் உயர்ந்தன. எனவே மாருதி சுஸூகி, ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா, ரெனோ, நிஸான் போன்ற சில நிறுவனங்கள், தமது புதிய கார்களில் டீசல் இன்ஜின் வழங்குவதையே நிறுத்திவிட்டார்கள். இதன் விளைவாக, டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் அந்த இடத்தை ஆக்ரமித்துவிட்டன. இதே BS-6 விதிகள் காரணமாக, டூ-வீலர்களின் விலை 10-15% வரை விலை உயர்வைப் பெற்றன. அவற்றின் இன்ஜினில் பயன்படுத்தப்படும் கார்புரேட்டருக்கு மாற்றாக, ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் அமலுக்கு வந்தது.

BS6

உதயமான புதிய கூட்டணிகள்!

அப்போ வரும், இப்போ வரும் என பைக் ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்பட்ட பஜாஜ் - ட்ரையம்ப் கூட்டணி, ஒருவழியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 200 முதல் 700சிசி வரையிலான பைக்குகளைத் தயாரிப்பதே இதன் முக்கிய நோக்கம். மேலும் இந்தக் கூட்டணியின் முதல் தயாரிப்பு, சுமார் 2 லட்ச ரூபாய்க்கு வரும் என்பதுதான் ஹைலைட். பின்னாளில் ட்ரையம்ப் பைக்குகளை நாடெங்கும் விநியோகிக்கும் பணியையும் பஜாஜ் செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவைச் சேர்ந்த க்ளாஸிக் லெஜண்ட்ஸ் நிறுவனம், BSA மோட்டார் சைக்கிள்களை இங்கிலாந்தில் அசெம்பிள் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள். இதில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் தயாரிப்புகள் அடக்கம். இவை நம் நாட்டுக்கு வருவது சந்தேகமே.

பிரிட்டனைச் சேர்ந்த நார்ட்டன் நிறுவனத்தை, டிவிஎஸ் வாங்கியது பெருமைமிகு தருணம். இந்தக் கூட்டணி இந்தியாவில் என்ன நிகழ்த்தப்போகிறார்கள் என்பது குறித்தத் தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனந்த அதிர்ச்சியாக, நெதர்லாந்தைச் சேர்ந்த EV Startup நிறுவனமான Etergo-வை ஓலா வாங்கிவிட்டது! இதன் வெளிப்பாடாக 2,400 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் டூ-வீலர்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை, சென்னையில் கட்டமைக்க உள்ளார்கள். டாக்ஸிகளை இயக்கும் ஓலா, எலெக்ட்ரிக் டூ-வீலர் துறையில் பலத்த அதிர்வலைகளை இப்போதே ஏற்படுத்திவிட்டது என்பதே நிதர்சனம்.

பஜாஜ் - கேடிஎம், டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ வரிசையில், ஹீரோ - ஹார்லி டேவிட்சன் கூட்டணி புதிதாகப் பிறந்திருக்கிறது. லாக்டவுன் காலத்தில் குறைவான விற்பனை காரணமாக, இந்தியாவிலிருந்து அந்த அமெரிக்க நிறுவனம் வெளியேறப் போவதாகச் செய்திகள் வந்தது தெரிந்ததே. முதற்கட்டமாக, ஹார்லி டேவிட்சனின் விற்பனை & சர்வீஸ் பிரிவைக் கையில் எடுத்துக்கொள்ளவிருக்கிறது ஹீரோ. பிறகு ஹரியானாவில் அமைந்திருக்கும் ஹார்லி டேவிட்சனின் தொழிற்சாலையில், இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து, நம் நாட்டுக்கு ஏற்றபடியான Mid Capacity பைக்குகளைத் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளார்கள். எனவே திட்டமிட்டபடி, ஹார்லி டேவிட்சனின் புதிய தயாரிப்புகள், நம் ஊர்ச்சாலைகளில் டயர் பதிக்கும் நாள், வெகுதொலைவில் இல்லை.

Ola Electric & Etergo

2021... எல்லாம் சரியாகிவிடுமா?

'ஆடி போய் ஆவனி வந்தால் டாப்பா வருவான்' எனச் சொல்வதுபோல, வருடம் மாறும்போது எல்லாம் உடனடியாகச் சரியாகிவிடும் என எண்ணுவது ஒரு நப்பாசைதான். கொரோனாதான் இன்னும் மனிதனைக் கட்டுப்படுத்துகிறதே தவிர, கொரோனா இன்னும் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதற்கான தடுப்பூசிகள் புழக்கத்துக்கு வந்துவிட்ட அதே நேரத்தில், புதிய வடிவில் கொரோனா பிரிட்டனில் இருந்து பரவத் தொடங்கியிருப்பது நெருடல். எனவே இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் சீரடைந்துவிட்டாலும், நிலைமையில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவைப்படவே செய்கிறது. 2021-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 75-க்கும் அதிகமான புதிய கார்கள், இந்தியச் சாலைகளில் டயர் பதிக்கவிருக்கின்றன. என்னதான் நிகழ்காலம் சிக்கலாகத் தெரிந்தாலும், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.



source https://www.vikatan.com/automobile/motor/automobile-industry-india-2020-rewind

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக