Ad

செவ்வாய், 29 டிசம்பர், 2020

தே.மு.தி.க-வைக் கழற்றிவிடுகிறதா அ.தி.மு.க... வெளியேறினால் பாதகம் யாருக்கு? #TNElection2021

`நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போகிறோம்’ எனக் கடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி தன் மன்ற நிர்வாகிகளுக்குத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், `கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை’ என அறிவித்துவிட்டார். அதேவேளையில், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே, தனியாகப் போட்டியிட்டு எட்டு சதவிகித வாக்குகளை அள்ளிய நடிகர் விஜயகாந்த், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்டு சந்தித்த முதல் இரண்டு தேர்தல்களில், தனியாகப் போட்டியிட்டபோதும் அந்தக் கட்சிக்கு பத்து சதவிகித வாக்குகள் வரை கிடைத்தன. முதன்முறை, 2011 தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து, 29 சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தும் அந்தக் கட்சிக்குக் கிடைத்தது. ஆனால், அதன் பிறகு அந்தக் கட்சி சந்தித்ததெல்லாமே வீழ்ச்சிதான். கட்சியிலிருந்து கணிசமான எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க ஆதரவாளர்களாக அப்போது மாறினர். அதன் பிறகு, 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அந்தக் கட்சி எட்டு இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. வாக்கு சதவிகிதமும் சரி பாதியாகக் குறைந்தது.

மக்கள் நலக் கூட்டணி - தே.மு.தி.க

தொடர்ந்து, 2016 தேர்தலுக்கு முன்பாக, மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரானார் விஜயகாந்த். ஆனால், போட்டியிட்ட, 104 தொகுதிகளில் 103 தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு டெபாஸிட்கூட கிடைக்கவில்லை. முதல் தேர்தலிலேயே வென்று சட்டமன்ற உறுப்பினரான விஜயகாந்த், 2016 தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அந்தக் கட்சியின் வாக்குவங்கியும் 2.3 சதவிகிதமானது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. வாக்குவங்கியும் 2.2 சதவிகிதம்தான்.

இந்தநிலையில்தான், கடந்த சில மாதங்களாக, `வாய்ப்பிருந்தால் மூன்றாவது அணி அமைப்போம், 41 தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி' என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும், தே.மு.தி.க-வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் கருத்து தெரிவித்துவந்தனர். தற்போது, 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களையும் நியமனம் செய்திருக்கிறார் விஜயகாந்த். ஒருவேளை, அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறதா தே.மு.தி.க அல்லது அ.தி.மு.க-வால் கழற்றிவிடப்படுகிறதா... அப்படி தே.மு.தி.க வெளியேறினால் அது யாருக்கு லாபம் உள்ளிட்ட கேள்விகளை, மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் முன்வைத்தோம்,

``இந்தப் பொறுப்பாளர்கள் நியமனத்துக்கும், கூட்டணி விரிசலுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. கூட்டணியில் இருந்தாலும்கூட பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதில் தவறில்லை. பத்து நாள்களுக்கு முன்பாக, பா.ஜ.க-விலும் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமித்திருக்கிறார்கள்.அ.தி.மு.க-வில் ஏற்கெனவே ஒரு தொகுதிக்கு நான்கு அல்லது ஐந்து என ஒன்றியச் செயலாளர்கள் வலுவாக இருக்கிறார்கள்.

எஸ்.பி.லட்சுமணன்

அதேவேளையில், தே.மு.தி.க கூட்டணியிலிருந்து வெளியேறினாலும் அது குறித்து அ.தி.மு.க கவலைப்படப்போவதில்லை. பா.ம.க நிறுவனர் ராமதாஸை நேரடியாகச் சென்று பிரசாரத்துக்கு அழைத்த அ.தி.மு.க நிர்வாகிகள், தே.மு.தி.க-வைக் கண்டுகொள்ளவே இல்லை. தே.மு.தி.க-வின் மூன்று சதவிகித வாக்குவங்கியை அ.தி.மு.க பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தி.மு.க-வும் அப்படித்தான். சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்கும் முக்கியமானவைதான். ஆனால், கடந்த காலங்களில் இவர்கள் நடந்துகொண்டவிதம், காட்டிய வீராப்புதான் அவர்களை இரண்டு கட்சிகளும் தள்ளிவைக்கக் காரணம்'' என்கிறார் அவர்.

Also Read: தடாலடியான பேரமா... நிதானமான பயணமா? என்ன செய்யப்போகிறார் பிரேமலதா? #TNElection2021

அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம்,

``தே.மு.தி.க எங்களுடன் கூட்டணியில் நீடிப்பது மாதிரித் தெரியவில்லை. கூட்டணி தர்மத்தை மீறி, தி.மு.க-வுடன் பேசிவருவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. விஜயகாந்த் மகன் வெளிப்படையாகவே இரண்டு கட்சிகளுடன் பேசிவருவதாகப் பேட்டியில் சொல்கிறார். அங்கு சென்றுவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலைப்போல ஒரு அலையில் ஜெயித்துவிடலாம் என்று நினைக்கின்றனர். எங்கள் கூட்டணியிலும் அவர்களுக்கு 15 இடங்களுக்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை. எங்கள் கட்சித் தொண்டர்களும் தே.மு.தி.க கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை. அவர்கள் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் யாரும் இப்போது இல்லை. வேலை செய்யவும் ஆட்கள் கிடையாது. செலவும் செய்ய மாட்டார்கள்.அதனால், அவர்களுக்குக் கொடுக்கும் இடங்களில் கண்டிப்பாகத் தோற்றுவிடுவார்கள். அவர்களுக்கு அதிக இடங்களைக் கொடுத்து ஏன் தொகுதிகளை வீணாக்க வேண்டும் என நிர்வாகிகள் நினைக்கின்றனர். அதனால்தான் முதல்வரும் அவர்களைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை'' என்கிறார்கள்.

அ.தி.மு.க

தே.மு.தி.க தரப்பில் பேச, ``தேர்தலுக்கு முன்பாக பொறுப்பாளர்கள் நியமிப்பது எங்கள் கட்சியில் வழக்கமான ஒன்றுதான். யாருடன் கூட்டணி என்பது ஜனவரி மாதத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் எங்கள் கேப்டன் தெரிவிப்பார். தற்போது எதுவும் சொல்ல முடியாது'' என்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-the-aiadmk-remove-dmdk-from-the-alliance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக