Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

7 புதிய அறிகுறிகள், 70% வேகம்... புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை! #FAQ

டந்த ஒரு வருட காலமாக உலகையே பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா. இதிலிருந்து தற்காத்துக்கொள்ள முகத்துக்கு மாஸ்க் போட்டோம். கைகளுக்கு சானிடைசர் போட்டோம். அலுவலகத்துக்கு லீவு போட்டோம். அப்பப்போ ஹாஸ்பிடலுக்கு அட்டனென்ஸ் போட்டோம். சில பல மருந்து மாத்திரைகளை வயிற்றுக்குள் போட்டோம். `இத்தனை போட்டும் தடுப்பூசி போட மறந்துட்டீங்களே பாஸு' என்ற கொரோனாவின் மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணி `தடுப்பூசி' கண்டறிய எஃபர்ட்டும் போட்டோம்.

Pfizer-BioNTech COVID-19 vaccine

2020 இறுதியில் தடுப்பூசியோடு கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து `ஹேப்பி நியூ இயர்' சொல்லிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், நாம் வைக்காத முற்றுப்புள்ளிக்கு அருகில் கமா போட்டு தன் அடுத்த கட்ட தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது கொரோனாவின் நியூ வெர்ஷன்!

சென்ற வருடத்தில் நாம் மாறினோமோ இல்லையோ... நம் அழையா விருந்தாளி கொரோனா நன்றாகவே மாறிவிட்டார். தற்போது `கொரோனா 2.0' ரேஞ்சில் உருவெடுத்துள்ளார். புதிய இந்த வெர்ஷனுக்கு மருத்துவ உலகம் `VUI202012/01' என்று பெயரிட்டுள்ளது.

தொற்று நோய் மருத்துவர் சுரேஷ் குமார்

ஒருவருடமாக நம்மை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் பழைய கொரோனா வைரஸிலிருந்து, இந்தப் புது கொரோனா வைரஸ் எவ்வாறு வேறுபடுகிறது... இதனால் என்னென்ன பிரச்னைகள் எல்லாம் ஏற்படும்... யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்... விளக்குகிறார் தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ் குமார்.

``பழைய கொரோனா வைரஸிலிருந்து, உருமாறிய புது வகை கொரோனா வைரஸ் எவ்வாறு வேறுபடுகிறது?"

``பொதுவாக, வைரஸில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று RNA வைரஸ். மற்றொன்று DNA வைரஸ். நமக்குப் பரவி தொற்றை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த கொரோனா RNA வகையைச் சார்ந்த வைரஸ். இந்த வகை வைரஸ்களின் குட்டிகள் தங்களின் தாயைப்போல் இல்லாமல் மரபுரீதியில் சிறிது மாறுபடும். இந்த மாற்றங்களை `மியூட்டேஷன் (Mutation)' என்பார்கள். நாள்கள் செல்லச் செல்ல இந்த வைரஸ் பல்கிப்பெருகி லட்சக்கணக்கான வைரஸ்களை உருவாக்கும். அப்போது புதிதாக உருவாகும் வைரஸ்கள் தன் தாய் வைரஸிடமிருந்து அதிக அளவில் வேறுபட்டிருக்கும். இதை `வேரியேஷன் (Variation)' என்பார்கள்.

corona

கடந்த ஆண்டிலிருந்து நமக்கு கோவிட்-19 தொற்றைப் பரப்பிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் `மியூட்டேஷன்' மற்றும் `வேரியேஷன்' அடைந்து தற்போது புது மூலக்கூறுகளைக் கொண்ட வைரஸாக உருமாறியுள்ளது. பழைய கொரோனா வைரஸோடு ஒப்பிடுகையில் உருவம் மற்றும் மரபணு மூலக்கூறு ரீதியில் இது 17 - 21 மாற்றங்களைக் கொண்டுள்ளது."

``இது ஏற்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன?"

``காய்ச்சல்,

இருமல்,

மூச்சுத்திணறல்,

வாசனை மற்றும் சுவை இழப்பு என ஏற்கெனவே இருக்கும் கொரோனாவின் வழக்கமான அறிகுறிகளோடு மேலும் 7 புதிய அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது இந்த புதிய வைரஸ்.

அதீத சோர்வு,

பசியின்மை,

தலைவலி,

வயிற்றுப்போக்கு,

மனக்குழப்பம்,

தசைவலி மற்றும் தோல் அரிப்பு போன்றவை புதிய வைரஸின் அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

AP Photo/Anupam Nath

``உருமாறிய கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்கும்?"

``பழைய கொரோனா வைரஸைவிட 70% வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது புது வகை வைரஸ்! மனித உடலுக்குள் எளிதில் நுழையும் தன்மையைப் பெற்றிருப்பதால் இது யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம். ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால்கூட குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் எளிதில் தொற்றுக்கு உள்ளாகலாம். இது பரவும் வேகம் அதிகம். எனினும் இதன் வீரியம் குறித்த ஆய்வு முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை."

Also Read: பிரிட்டனில் பரவும் புதிய கொரோனா வைரஸ்... உலகம் அச்சம் கொள்ள காரணம் என்ன?

``பழைய கொரோனா வைரஸுக்கு கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசி இதற்குப் பயனளிக்குமா?"

``பழைய கொரோனா வைரஸால் நாம் பாதிக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட சிகிச்சைகளே புதுவகை கொரோனா தொற்றுக்கும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பழைய கொரோனா வைரஸுக்கு கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசி இதற்கும் பயனளிக்கும் என்றே கூறப்படுகிறது. ஆனால், புது வைரஸின் தன்மைகள் குறித்த முழுத் தகவல்களும் ஆய்வில் தெரியவந்தால் மட்டுமே இந்தத் தடுப்பூசி பயனளிக்குமா... அல்லது இதற்கென பிரத்யேகமாக தடுப்பூசி உருவாக்கப்பட வேண்டுமா... என்று கூற முடியும்."

Boxes containing the Pfizer-BioNTech COVID-19 vaccine

``புது கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?"

``பழைய வைரஸோடு ஒப்பிடுகையில் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகத்தில் பரவக்கூடியது என்பதால், சமூக இடைவெளி அத்தியாவசியமாகிறது. லாக்டௌன் தளர்வுகளால் மாஸ்க், சானிடைசர்களை மறந்து வந்த நாம், மீண்டும் அவற்றைக் கையிலெடுக்க வேண்டும். கூட்ட நெரிசல்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சத்தான, நோய் எதிர்ப்புத்திறன் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழைய கொரோனா வைரஸுக்கு என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டோமோ... அவற்றை எல்லாம் மீண்டும் பின்பற்ற வேண்டும்."



source https://www.vikatan.com/health/healthy/differences-between-old-coronavirus-and-new-coronavirus-strain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக