Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

மெல்போர்னில் மாபெரும் வெற்றி... அடிலெய்ட் அவமானத்தைத் துடைத்தெறிந்த இந்தியா! #AUSvIND

கிங் கோலி இல்லை, ஹிட்மேன் ரோஹித் இல்லை, ஸ்விங் புயல் முகமது ஷமி இல்லை... ஆனால், மெல்போர்னில் வரலாற்று வெற்றிபெற்று சாதனைப் படைத்திருக்கிறது இந்தியா. அடிலெய்ட் டெஸ்ட்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அவமானத்தைச் சந்தித்த இந்தியாவின் மெல்போர்ன் வெற்றி, அணியை 10 நாட்களில் அதலபாதாளத்தில் இருந்து உச்சத்துக்குக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

பாக்ஸிங் டே டெஸ்ட் என்று சொல்லப்படும் மெல்போர்ன் டெஸ்ட், பாக்ஸிங் தினமான டிசம்பர் 26-ம் தேதி தொடங்கியது. கோலி இல்லாததால் அஜிங்கியா ரஹானே தலைமைதாங்கினார். ரஹானே டாஸைத்தோற்றதுமே இந்த டெஸ்ட்டும் இந்தியாவுக்கானதாக இருக்காது என்று பேச்சுகள் கிளம்பியது. ஆனால், இந்திய பெளலர்கள் ஆஸ்திரேலியாவை 195 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தனர். மார்னஸ் லாபுசேன் அடித்த 48 ரன்கள்தான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர்.

பும்ரா 4 விக்கெட்களையும், அஷ்வின் 3 விக்கெட்களையும், சிராஜ் 2 விக்கெட்களையும் எடுத்தனர். கேப்டன் ரஹானே சதம் அடிக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்து 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

#AUSvIND

நம்பிக்கையோடு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மீண்டும் அச்சுறுத்தினர் இந்திய பெளலர்கள். 200 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்கவில்லை. 32 ஆண்டுகளுக்குப்பிறகு முதல்முறையாக ஒரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்காத போட்டி இது.

வெறும் 70 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற நிலையில் சேஸிங்கைத் தொடங்கிய இந்தியா, அகர்வால், புஜாரா என இரண்டு பேட்ஸ்மேன்களை இழந்தது. ஆனால், ஷுப்மான் கில்லும், கேப்டன் ரஹானேவும் மிகச்சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். கில் 35 ரன்களுடனும், ரஹானே 27 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

4 டெஸ்ட்கள் கொண்ட இந்தியா- ஆஸ்திரேலியா தொடர் 1-1 என சமநிலை அடைந்திருக்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டி ஜனவரி 7-ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கயிருக்கிறது.



source https://sports.vikatan.com/cricket/india-wins-melbourne-test-comfortably-by-8-wickets

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக