Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

`வேளாண் சட்டங்களை எதிர்ப்பதே சட்டவிரோதமா?' - எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த பல வாரங்களாக நடத்தி வரும் தொடர் போராட்டம், உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகிறார்கள். இச்சட்டங்கள் தங்களின் சுய சார்பையும் உரிமைகளையும் பறித்து, பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமையாக்கக்கூடியது எனத் தமிழக விவசாயிகளும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

விவசாயிகள்

ஆனால், தமிழக அரசோ, புதிய வேளாண் சட்டங்களைத் தீவிரமாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், இங்கு அமைதியான வழியில் விவசாயிகள் நடத்தக்கூடிய போராட்டங்களைக் காவல்துறை மூலம் கடுமையாக ஒடுக்குவதாக, ஆதங்க குரல்கள் ஒலிக்கின்றன. வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதகங்கள் குறித்து பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்படுவதாக விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். வேளாண் சட்டங்களை எதிர்ப்பது, சட்ட விரோதமா, ஏன் இத்தனை அடக்குமுறை என ஆதங்கத்தோடு கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கான விளைவுகளைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைப்பொருள் வணிகம் ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்த பண்ணைய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதாகவும் இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், பொருளாதார ஆய்வாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனப் பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில்தான் இச்சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாட்டில் விவசாயிகள் நடத்தக்கூடிய பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்டவற்றை ஒடுக்க, தமிழக அரசு, காவல்துறையினர் மூலம் அடக்குமுறைகளை ஏவுவதாக ஆதங்க குரல்கள் வெடிக்கின்றன.

விவசாயிகள்

``தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை மற்றும் இதன் சுற்றுவட்டார கிராம விவசாயிகள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் கண்டித்து, கடந்த 27-ம் தேதி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தார்கள்.

நம்மாழ்வார் பாசறையைச் சேர்ந்த விவசாயிகள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அமைதி வழியில் போராட்டம் நடத்துவதற்கு கூட, ஏகப்பட்ட கெடுபிடிகள்... சாமியான பந்தல் போடக்கூடாது, ஒலிப்பெருக்கி அமைக்கக் கூடாது, கூட்டம் அதிகமாகக் கூடக் கூடாது, காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணிக்குள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் எனக் கடும் அடக்குமுறை.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கலவரங்களை அடக்குவதற்காகக் கொண்டு வரப்படும் வஜிரா வாகனமும் அங்கு நிறுத்தப்பட்டது. காவல்துறையினரின் செயல்பாடுகள், அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் உளைச்சலை ஏற்படுத்தியது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் தஞ்சை திலகர் திடலில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள். பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிளம்பிய விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினரின் கடும் அடக்குமுறைகளையும் மீறி தஞ்சாவூரில் விவசாயிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து சிலர் கூட்டம் நடத்துவது போல, இச்சட்டங்களை எதிர்த்து, கூட்டங்கள் நடத்த விவசாயிகளுக்கும் உரிமை உள்ளது. இது அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமை" என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்ப்பது சட்டவிரோதமா எனப் பலரும் கொந்தளிக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், ``விவசாயிகள் தங்களது கருத்தை சொல்லக் கூட உரிமை இல்லையா. தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் பக்கம் நிற்காமல், விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார். இவர் உண்மையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்தானா என சந்தேகமாக உள்ளது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிளம்பி வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது சட்டவிரோதம்.

Edappadi Palanisamy

Also Read: `வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுக’ - கேரள சட்டசபையில் தீர்மானம்; பல்டியடித்த பா.ஜ.க எம்.எல்.ஏ

புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதகங்களை அமைதியான வழியில் பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் கொண்டு செல்ல முயல்கிறோம். ஆனால், காவல்துறையினரின் ஒடுக்குமுறையோ, விவசாயிகளை இன்னும் தீவிரமான போராட்டங்களை நோக்கி நகர்த்துகிறது. இதே நிலை தொடர்ந்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக விவசாயிகள் தக்க பதிலடி கொடுப்பார்கள். விவசாயிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பது அவருக்கு நல்லதல்ல. பக்கத்து மாநிலமான கேரளா அரசு, மூன்று வேளாண் சட்டங்களையும் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, ஆனால் தமிழக அரசோ, இச்சட்டங்களை ஆதரிப்பதோடு மட்டுமல்லாம், விவசாயிகளின் குரல்வளையை நெரிக்கிறது. சென்னையில் ஜனவரி 6-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.

விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்வதுதான் நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகு. இல்லாவிட்டால், இதன் விளைவுகள் கசப்பானதாக இருக்கும் என்பதே நிதர்சனம்.



source https://www.vikatan.com/news/agriculture/farmers-allege-tn-govt-suppressing-their-protest-against-farm-laws

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக