Ad

புதன், 30 டிசம்பர், 2020

`சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்!' - கமல்ஹாசன்

சட்டமன்றத் தேர்தலையொட்டி, புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ரஜினி அரசியலுக்கு வந்திருக்கலாம். வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. அவரது உடல் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்திருந்தால், இந்த முடிவை வரவேற்கிறேன். அவரது ஆரோக்கியமே முக்கியம். இந்தச் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை சென்றவுடன் விரைவில் ரஜினியைச் சந்தித்துப் பேசுவேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஆதரவு தருமாறு ரஜினியிடம் கேட்பேன். நான், என் ரஜினி என்று சொல்லிக்கொண்டிருந்தவன். அதனால் எனக்கு அந்த உரிமை உண்டு. கோபப்படமாட்டார் என்று நினைக்கிறேன்.

கமல் தேர்தல் பரப்புரை

புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கடுமையான தண்டனை வழங்கப்படுவது அவசியம்தான். அதே நேரத்தில், மரண தண்டனை விதித்து மற்றொரு உயிரைப் பறிப்பது இதற்குத் தீர்வாகாது. என்னுடைய தனிப்பட்ட கொள்கை மரண தண்டனைக்கு எதிரானது. ஆனால், காலத்திற்கேற்ப, கல்விக்கேற்ப பெற்றோர்கள் ஆண்,பெண் குறித்த புரிதலை ஏற்படுத்தி பிள்ளைகளை நன்கு வளர்க்க வேண்டும். ஆன்மிகத்துக்கும் எனக்கும் பெரிய விரோதம் எல்லாம் கிடையாது. ஆன்மிகத்தை ஏற்றுக்கொள்ளும்படி என்னை யாரும் என்னை நிர்ப்பந்திக்க முடியாது.

Also Read: ``ரஜினி-கமல், அ.தி.மு.க-வுக்கு வாக்கு சேகரிக்கிறார்கள்!''- சீமான் சொல்லும் ரகசியம் என்ன?

யார் மீதும் எதையும் திணிக்கக்கூடாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைத் தமிழக மக்களுக்கு பா.ஜ.க ஆட்சிவர வேண்டும் என்பதில் விருப்பமில்லை. திராவிடம் என்பது அனைவருக்கும் சொந்தம். எல்லாருக்கும் பொதுவானது. மொஹஞ்சதாரோ, ஹரப்பா காலத்திலிருந்தே திராவிடம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. திராவிட அரசியல்தான் செய்யப்போகிறேன். நிகழ்ந்த ஊழலை விட நிகழ்ந்து கொண்டிருக்கும் ஊழல் குறித்துப் பேசுவது மிகவும் அவசியம். அ.தி.மு.க-வில் தற்போது நடைபெறும் குற்றத்தைத் தடுக்க வேண்டும். அதற்காக அ.தி.மு.க-வை விமர்சனம் செய்கிறேன்.

கமல்ஹாசன்

அதற்காக, தி.மு.க-வுடன் மென்மையான போக்கை எல்லாம் கடைப்பிடிக்கவில்லை. என்னுடைய தேர்தல் அறிக்கை மக்களை மையப்படுத்தி இருக்கும். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, விவசாயிகளின் போராட்டங்களை வேடிக்கை பார்க்காமல் அவர்களை அழைத்துப் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும். எங்கள் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் நான்தான். எங்கள் தலைமையில்தான் கூட்டணி இருக்கும். யார் வருகிறார்களோ பரிசீலித்து முடிவெடுப்போம். மக்கள் நீதி மய்யம் யாரை இணைத்துக்கொள்ளும், கூட்டணி குறித்து எல்லாம் ஜனவரியில் அறிவிப்பு வெளியிட உள்ளேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/will-ask-rajini-for-support-in-assembly-election-says-kamalhassan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக