Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

`பாகிஸ்தானிடமிருந்து சியாச்சினை மீட்ட ஹீரோ!’- கர்னல் நரேந்திரக் குமார் மறைவுக்கு ராணுவம் அஞ்சலி

இந்திய ராணுவத்தின் முன்னாள் கர்னலும் சிறந்த மலையேற்றப் பயிற்சியாளருமான கர்னல் நரேந்திர குமார் வயது மூப்பின் காரணமாக நேற்று (31.12.2020) டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 87.

கர்னல் நரேந்திர குமார் கடந்த 1933-ம் ஆண்டு ராவல்பிண்டியில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தார். மலையேற்றத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த இவர், கடந்த 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட `ஆபரேஷன் மேக்தூத்’-தில் முக்கியப் பங்காற்றினார். பாகிஸ்தான் பிடியில் இருந்த சியாச்சின் மலைச் சிகரத்தை மீட்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒப்புதலோடு முன்னெடுக்கப்பட்டதுதான் ஆபரேஷன் மேக்தூத்.

கர்னல் நரேந்திர குமார்

அதில். தன்னை உளவாளி போல் செயல்படுத்திக்கொண்டு பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி இறுதியில் சியாச்சின் பகுதிகளைப் பாகிஸ்தான் பிடியிலிருந்து மீட்டெடுத்தார். இதனால் இவரை `சியாச்சின் ஹீரோ’ என்று எல்லோரும் அழைத்தனர்.

Also Read: 6 நாட்களுக்கு பின் சியாச்சின் பனிச்சரிவில் ராணுவ வீரர் உயிருடன் மீட்பு! (வீடியோ)

பின்னர் 1965-ம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை கணக்கிடும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினரோடு சேர்ந்து பணியாற்றினார். அதேபோல் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள பிளாங்க் சிகரம் உள்ளிட்ட பல்வேறு சிகரங்களில் ஏறி சாதனை புரிந்துள்ளார். மேலும் உத்தரகாண்டிலுள்ள நந்தா தேவி மலையின் சிகரத்தை தொட்ட முதல் இந்தியர் இவரே. அதுமட்டுமல்லாது, கடந்த 1978-ம் ஆண்டு 45வது வயதில் கஞ்சன்ஜங்கா மலைச்சிகரத்தில் ஏறினார். ராணுவத்தில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட பலத்த காயத்தினால் தனது நான்கு கால்விரல்களை இழந்த கர்னல் நரேந்திர குமார், அந்த வலியைப் பொருட்படுத்தாமல் பல்வேறு மலைச் சிகரங்களில் ஏறி சாதனை புரிந்துள்ளார். கர்னல் நரேந்திர குமார், இந்திய ராணுவத்தின் பல்வேறு சிறப்புப் படைப்பிரிவுகளில் பணியாற்றியிருக்கிறார்.

கர்னல் நரேந்திர குமார்

நரேந்திர குமார், இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, அர்ஜுனா விருது, ராணுவத்தின் உயரிய விருதான மெக் கிரிகோர் பதக்கம் (McGregor medal) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். மேலும், தனது சிறப்பான பணிக்காக நாட்டின் தலைவர்கள் பலரிடம் பாராட்டு பெற்றுள்ளார். இவரது சேவையை பாராட்டி இந்திய அஞ்சல்துறை அலுவலகம் கடந்த 1965-ம் ஆண்டு இவருக்கு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு கௌரவித்தது.

வேகமான செயல்பாடுகளுக்காக `காளை’ என்ற புனைப்பெயரில் தனது படைப்பிரிவினரால் அழைக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்துவந்த கர்னல் நரேந்திர குமார், நேற்று டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இவரது இழப்பிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/death/colonel-narendra-kumar-passed-away

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக