சேலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்து சர்வதேச வீரராகி சாதனைப் படைத்துவிட்டார். கிரிக்கெட்டில் ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று ஃபார்மேட்கள் இருந்தாலும் ஒரு கிரிக்கெட் வீரனின் கனவு என்பது டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவேண்டும் என்பதாகவே இருக்கும். நடராஜனின் அந்த 'டெஸ்ட்' கனவு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நிறைவேற இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணியிலேயே இடம்பிடிக்காதவர் தமிழகத்தின் தங்கராசு நடராஜன். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவரின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருந்ததால், டெஸ்ட் அணிக்கான நெட் பெளலராகத் தொடர்ந்து இந்திய அணியுடனேயே தங்கவைக்கப்பட்டார். இந்நிலையில் முதல் டெஸ்ட்டில் முகமது ஷமி காயமடைந்துவிட, இரண்டாவது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ் காயமடைந்துவிட்டார். முகமது ஷமி ஆறு வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், உமேஷ் யாதவும் அடுத்த இரண்டு 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.
Also Read: ரஹானே... ஸ்டாண்ட் இன் கேப்டனா, அவுட் ஸ்டாண்டிங் கேப்டனா... மெல்போர்னில் நடந்தது என்ன?! #AUSvIND
இதனால் இந்திய அணிக்குள் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான இடம் காலியாகி இருக்கிறது. முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இந்திய டெஸ்ட் அணிக்குள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் இருவருடன் மூன்றாவதாக இணையப்போகும் பெளலர் யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
மூன்றாவது பெளலர் நவ்தீப் சைனியா, ஷர்துல் தாக்கூரா என எல்லோரும் எதிர்பார்க்க, கேப்டன் ரஹானேவோ நடராஜனை அணிக்குள் கொண்டுவர விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனால் நடராஜனே சிட்னி டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
இதுவரை இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் 298 வீரர்கள் விளையாடியிருக்கும் நிலையில் நடராஜன் சிட்னியில் களமிறங்கினால் அவர் இந்தியாவுக்காக களமிறங்கும் 299-வது வீரராக இருப்பார்.
ஜனவரி 7-ம் தேதி அதிகாலையில் நடராஜன் வெள்ளை உடையில் விளையாடுவதைப் பார்க்கத் தயாராகலாம்!
source https://sports.vikatan.com/cricket/t-natarajan-all-set-to-make-test-debut-for-india-at-sydney
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக