`ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை’ என அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். இந்நிலையில் நாஞ்சில் சம்பத்திடம் ரஜினியின் முடிவு குறித்து கருத்துக் கேட்டோம். மேலும் கேரளத்தின் ஆர்யா ராஜேந்திரனை உயர்த்தியும், ரஜினியின் முதல்வர் கனவை விமர்சித்தும் வந்த மீம்ஸ் பற்றியும், தமிழருவி மணியனின் முடிவு உள்ளிட்டவை குறித்த கேள்விகளையும் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம். அதற்கு அவர், அவரின் வழக்கமான பாணியிலே பதிலளித்தார்,
``ரஜினி கட்சி தொடங்கமாட்டாருன்னு தமிழ்நாட்டுல நான் ஒருத்தன்தான் சொல்லிகிட்டிருக்கிறேன். அதுக்கு, என்னுடைய உடல் நலம் ஒத்துழைக்காதுன்னு அவரே ஒரு காரணம் சொல்லிட்டார். அதைத் தாண்டி, அவருக்கான எந்த வாய்ப்பும் தமிழ்நாட்டுல இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அவரை ஏற்கக்கூடிய மனநிலையில் இல்லை. இது பெரியாரின் சுயமரியாதை திருத்தலம். அண்ணாவின் நந்தவனம், தலைவர் கலைஞரின் அசைக்கமுடியாத ஆஸ்பெஸ்டாஸ் கோட்டை.
திராவிட இயக்கத்தை வீழ்த்துவதுதான் அவர்களது இலக்கு. அதற்கான சாத்தியம் தமிழகத்தில் இல்லை என்று தெரிந்துகொண்ட பிறகு, இந்த முடிவை ரஜினி அறிவித்திருக்கிறார். தமிழருவி மணியனை யாரும் அரசியலுக்கு வான்னு கூப்பிடல. அதனால தமிழருவி மணியன் ரொம்ப அலட்டிக்காம இருக்கிறது உடலுக்கு நல்லது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனைகளின் நகரம் திருவனந்தபுரம். மகத்தான அரண்மனைகள் நிறைந்த மன்னர்களின் நகரமான திருவனந்தபுரத்தில், 21 வயது மாணவி ஆர்யா ராஜேந்திரன் இன்றைக்கு மாநகராட்சி மன்றத்தின் மேயராக முடிசூட்டப்பட்டிருக்கிறார். அவர் நினைவு தெரிந்த நாளில் இருந்தே கையில் செங்கொடி ஏந்தி களமாடியிருக்கிறார். மார்க்ஸிய கட்சியின் எல்லா போராட்டங்களிலும் பங்கெடுத்திருக்கிறார். அந்த வகையில் வளர்த்தெடுக்கப்பட்டவர், வார்த்தெடுக்கப்பட்டவர் ஆர்யா ராஜேந்திரன். அவருக்கு அந்த தகுதி இருக்கிறது. ஆனால் நீங்களெல்லாம் நகம் நனையாமல் நத்தை எடுக்கலாம் என்று முயற்சித்தீர்கள். காகித ஓடம் செய்து கடலை கடக்கலாம் என்று ஆசைப்பட்டீர்கள். ஆர்யா ராஜேந்திரனோடு ரஜினிகாந்தை ஒப்பிட முடியாது.
வருகிற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தி.மு.க-வின் தேவையும் இந்திய அரசியலில் அதிகமாகியிருக்கிறது. பாசிச பா.ஜ.க-வை எதிர்க்கக்கூடிய ஒரு வலிமையான அமைப்பு இன்னைக்கு தென்னகத்தை பொறுத்தவரை தி.மு.க-தான். வரும் தேர்தலில் நான் பி.ஜே.பி-யை எதிர்த்துதான் பிரசாரம் செய்வேன். பி.ஜே.பி-யையும், அ.தி.மு.க ஊழலையும் விமர்சித்து பிரசாரம் பண்ணுவேன்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/nanjil-sampath-talks-about-rajini-decision-on-his-politic-entry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக