Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

புதுச்சேரி கடற்கரையில் குவிந்த மக்கள்; போலீஸ் தடியடி! - களையிழந்த புத்தாண்டுக் கொண்டாட்டம்

கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடற்கரை, கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சுற்றுலா மாநிலமான புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் இருக்கிறதா... இல்லையா... என்ற குழப்பம் நிலவியது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் கொண்டாட்டம் இல்லை என்றார் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

போலீஸ் தடியடி

அதேசமயம் கொண்டாட்டங்கள் உண்டு என்று தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் 2020 டிசம்பர் 31-ம் தேதி முதல் 2021 ஜனவரு 1-ம் தேதி மதியம் வரை ஒயிட் டவுன் பகுதிக்குள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதித்த காவல்துறையினர், கடற்கரை சாலை, முக்கிய வீதிகளை பேரிகார்டுகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

2020 டிசம்பர் 31-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வாருங்கள் என்று மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் அழைப்பு விடுத்தார். அடுத்த சில நிமிடங்களில், `புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வராதீர்கள், தீவிர கொரோனா பரவலின் ஒரு அங்கமாக ஆகிவிடாதீர்கள்’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டார் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

இந்த இருவேறு கருத்துகளாலும், குறிப்பிட்ட அளவிலான மக்கள் மட்டுமே கடற்கரை சாலையில் அனுமதிப்படுவார்கள் என்று காவல்துறையின் அறிவிப்பினாலும், மக்கள் வீடுகளில் முடங்கினர். அதனால், கடற்கரை சாலை வெறிச்சோடியது. கடற்கரை சாலையில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் நடமாட்டம் இருந்ததை ஊடகங்கள் மூலம் அறிந்தவர்கள் இரவு 10 மணிக்கு மேல் குடும்பத்துடன் கடற்கரையை நோக்கி படையெடுத்தனர்.

ஆனால், கடற்கரை சாலையில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மக்களை அனுமதித்துவிட்டதாகவும், இனி யாரையும் அனுமதிக்க முடியாது என்று கடற்கரை சாலையை பேரிகார்டுகள் மூலம் இழுத்து மூடியது காவல்துறை. ஆனாலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கேயே நின்று கொண்டு தங்களையும் அனுமதிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Also Read: புதுச்சேரி: `நாராயணசாமி Vs கிரண் பேடி; வாருங்கள்... வராதீர்கள்!’ - குழப்பும் `புத்தாண்டு அரசியல்’

ஒருகட்டத்தில் காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தத் தொடங்கியதால் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பல மீட்டர் தூரம் துரத்திச் சென்று தடியடி நடத்தியதால் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனால் புத்தாண்டு கொண்டாட வந்தவர்கள் சோகத்துடன் வீடுகளுக்குத் திரும்பினர்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/pondicherry-police-lathi-charged-on-people-gathered-in-seashore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக