Ad

செவ்வாய், 30 ஜூன், 2020

`வருமானமும் போச்சு.. கடையும் போச்சு!' -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி

கும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பிரமுகரின் தந்தை ஒருவர் பா.ஜ.க நிர்வாகி ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க நிர்வாகி சரவணன்

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் மடவிளாகம் தெருவைச் சேர்ந்தவர் கோபாலன் (68) இவருடைய மகன் வாசுதேவன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அப்பகுதியின் மண்டலப் பொறுப்பாளராக இருந்தவர். ஓய்வுபெற்ற ஆசிரியரான கோபாலன் ஸ்ரீ ஸ்ரீ 108 அபினவ உத்திராதி மடத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தமடத்தின் தலைமை அலுவலகம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ளது. இந்த மடத்திற்கு என நாச்சியார்கோயில் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனை கோபாலன் நிர்வகித்து வந்துள்ளார். இந்நிலையில் மடத்திற்குச் சொந்தமான 13 கடைகள் நாச்சியார்கோயில் பகுதியில் உள்ளது. இதில் பி.ஜே.பியின் நகரத் தலைவரான சரவணன் (48) என்பவர் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். அந்தக் கடையைக் காலி செய்ய வேண்டும் சில ஆண்டுகளாக கோபாலன் கூறிவந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட கோபாலன்

அதற்கு சரவணன், `எங்க அப்பா நடத்திய இந்தக் கடையை இப்போது நான் நடத்துகிறேன். நாங்க மூன்று தலைமுறையாக இங்கு கடையை நடத்தி வருகிறோம் நீதிமன்றத்திற்குச் சென்றால் எங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும்' எனக் கூறியதுடன் கடையைக் காலி செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். அதற்கு கோபாலன் தரப்பில், `கடையைக் காலி செய்வதற்கு 2 லட்ச ரூபாய் பணம் தருகிறோம். நீ கடையை ஒப்படைத்துவிட வேண்டும்' எனப் பேசியுள்ளனர்.

ஆனால், சரவணன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து மடத்தின் ஆலோசனையின் பேரில் கோபாலன் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார். அங்கு மடத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததுடன் கடையைக் காலி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சரவணன், கோபாலனிடம், `நான் கடையைக் காலி செய்து கொள்கிறேன். நீங்க கொடுப்பதாகச் சொன்ன 2 லட்சத்தைக் கொடுங்க' எனக் கேட்டுள்ளார்.

கும்பகோணம்

அதற்கு கோபாலன், `கோர்ட்டுக்குப் போறதுக்கு முன்னாடி பணம் தர்றேன் எனச் சொன்னேன். இப்ப தர முடியாது' எனக் கூறியதுடன், `உடனடியாகக் கடையில் உள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு போய்விடு இல்லையென்றால் நாங்க எடுத்து வெளியே வைத்து விடுவோம்' எனக் கூறியிருக்கிறார். இதனால் சரவணன் கோபாலன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கோபாலன் நேற்றிரவு 9 மணிக்கு மேல் தனது வீட்டிற்கு வெளியே நின்றுள்ளார். அப்போது போதையில் அங்கு வந்த சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபாலன் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முகம் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுப்பட்டதால் கோபாலன் அலறியபடி அப்படியே சரிந்து விழுந்தார். இதையடுத்து சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கொலை செய்யப்பட்ட கோபாலன்

இதையறிந்த அருகில் இருந்தவர்கள் நாச்சியார்கோயில் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததுடன், கோபாலனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள்ளாகவே கோபாலன் இறந்துவிட்டார். இதுகுறித்து நாச்சியார்கோயில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததுடன் நேற்று இரவே சரவணனைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``கடையை காலி செய்யச் சொன்னதால் கோபாலன் மீது கோபத்தில் இருந்துள்ளார் சரவணன். இவர் பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ளார். இந்நிலையில் கொரோனாவால் டெய்லர் கடை வருமானமும் போய்விட்டதால், பணரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் கோபாலன் மீதான ஆத்திரம் அதிகமாகியுள்ளது.

Also Read: `ராத்திரி முழுவதும் தலைவலி’ - கொரோனா தொற்று உறுதியான பெண் வெளியிட்ட வீடியோ

இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சரவணன் மாம்பழம் வெட்டுவதற்கு எனக் கூறி புதிய கத்தி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு முன் நின்றுகொண்டிந்த கோபாலனிடம், ` என் கடையைக் காலி செய்ய வைத்துவிட்டாயே.. உன்னை சும்மாவிடமாட்டேன்' எனக் கூறி கத்தியைக் கொண்டு முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சரவணனைக் கைது செய்துவிட்டோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/old-man-murdered-by-bjp-cadre-in-kumbakonam

`சாத்தான்குளம் வழக்கும், தமிழக அரசின் தந்திரங்களும்..!' - விளக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி

`சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணை செய்யும்' என்ற தமிழக அரசின் உத்தரவையடுத்து, `குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைத்துவிடும்' என்ற பொதுமக்களின் நிம்மதிப் பெருமூச்சை நீடிக்கவிடாமல் செய்திருக்கிறது, தமிழக அரசின் `உள்ளடி' வேலைகள். இந்தநிலையில், `சி.பி.ஐ விசாரணை, நீதியைத் தாமதப்படுத்தும் தந்திரம்' என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விகளும் இங்கே குறிப்பிடத்தகுந்தவை.

ப.சிதம்பரம் - கே.எஸ்.அழகிரி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்துவைத்து வியாபாரம் செய்ததாக, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். சாத்தான்குளம் காவல்நிலைய விசாரணைக்குப் பிறகு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்த நாள்களில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

இதையடுத்து, `காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தாக்குதலால்தான் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர்' என்ற செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவர, நாடே அதிர்ந்துபோனது. உலகையே உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாயிட், மரணத்தைப்போல கொடூர தாக்குதலாகக் கருதப்படும் சாத்தான் குளம் சம்பவத்துக்கு எதிராக, பொதுமக்களும் பிரபலங்களும் சமூக ஊடகம் வழியே காவல்துறைக்கு எதிரான கோபத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

இந்தநிலையில், உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தானே முன்வந்து இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தது. இந்தநிலையில், `காவல்துறையின் அட்டூழியங்களை மூடி மறைக்க அரசு முயல்வதாக' ஆளுங்கட்சி மீது சரமாரியான புகார்களை முன்வைத்தன எதிர்க்கட்சிகள். `சாத்தான்குளம் மர்ம சாவு சம்பவத்தை, தமிழக காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்' என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கொடுத்துவந்த அழுத்தத்தையடுத்து, வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

கமல்ஹாசன்

அதேநேரம், `சி.பி.ஐ வசம் வழக்கு மாற்றம் செய்யப்பட்டால், நீதி கிடைப்பதில் தாமதமாகும்' என்ற எதிர்ப்புக் குரல்களும் எழத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், `சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி, பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே' என்ற தலைப்பில் சமூக ஊடகம் வழியே தமிழக அரசைச் சாடியுள்ளார். அதில், `குற்றவாளிகள் மேல் ஐ.பி.சி 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். சி.பி.ஐ விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்துவிடுவார்கள் எனக் காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள்! ஏனெனில், காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி!' என்று உதாரணங்களோடு எச்சரித்திருக்கிறார் கமல்ஹாசன்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், `சி.பி.ஐ விசாரணை'யை வரவேற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி, `சி.பி.ஐ விசாரிக்கப் பரிந்துரைப்பது, நீதி கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும்' என எதிர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சி.பி.ஐ விசாரணையை வரவேற்பதும் எதிர்ப்பதுமாக கட்சிகளுக்கிடையே வேறுபாடுகள் இருக்கலாம். கட்சிக்குள்ளேயே வேறுவேறு நிலைப்பாடுகள் இருக்கலாமா... என்ற நமது சந்தேகத்தை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடமே கேட்டோம்... ``அப்படி எந்தக் கருத்தையும் நான் சொல்லவில்லையே...'' என்று அடியோடு மறுத்தார். ஆனால், இதுகுறித்த பத்திரிகைச் செய்தியைக் காட்டி நாம் விளக்கம் கேட்டதும்,

கே.எஸ்.அழகிரி

``என்னுடைய பேச்சைத் தவறாகப் புரிந்துகொண்டு இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. சாத்தான் குளம் சம்பவத்தில், `இதை சி.பி.ஐ விசாரணைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்' என்று நாங்கள்தான் முதன்முதலில் கூறினோம்.

ஏனெனில், இது மிகவும் சென்சிட்டிவானதொரு வழக்கு. சம்பவத்தில் இறந்துபோன அந்தத் தந்தையும் மகனும் எந்தவிதக் குற்றப் பின்னணியும் இல்லாத அப்பாவிகள். திருட்டு, பாலியல் வன்கொடுமை, கட்டப் பஞ்சாயத்து என இதுவரை எந்தவொரு வழக்கிலும்கூட சம்பந்தப்படாத சாதாரணச் சிறு வியாபாரிகள்.

பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சாத்தான்குளம் சென்றிருந்தேன். அங்கே அவர்களது வீடு என்பது சின்னதொரு குடில்தான். 2 பேர் நிற்பதற்குத்தான் இடம் இருக்கிறதே தவிர, உட்காருவதற்குக்கூட அங்கே இடமில்லை. ஆனால், அவ்வளவு ஏழ்மையான சூழலிலும்கூட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துவந்த குடும்பம் அது.

`மனமறிந்து எந்தவொரு தவறையுமே செய்யாத நாங்கள் இப்படியொரு கொடுமையை அனுபவிக்க நேர்ந்துவிட்டதே... இனி எங்களுக்கு கர்த்தர்தான் வழிகாட்ட வேண்டும்' என்று கதறியழுகிறார்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்.

அவர்களைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த நான் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, `இயேசு கிறிஸ்து எப்படி சிலுவை ஏந்தி ரத்தம் சிந்தினாரோ, அதேபோன்று அப்பாவியான தந்தையும் மகனும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ரத்தம் சிந்த சிந்த அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்' என்றேன்.

பாதிக்கப்பட்ட குடும்பம்

16 கி.மீ தூரத்துக்குள்ளாகவே பாளையங்கோட்டை கிளைச் சிறைச்சாலை இருக்கிறபோது, அதை விட்டுவிட்டு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் 100 கி.மீ தூரத்துக்கு அப்பால் உள்ள கோவில்பட்டி சிறைச்சாலைக்கு போலீஸ் அழைத்துச்சென்றது ஏன்?

அதுமட்டுமல்ல... இருவரையும் மிகக் கொடூரமாக போலீஸ் தாக்கியதால், இரண்டு, மூன்று லுங்கிகள் ரத்தத்தாலேயே நனைந்திருக்கின்றன. இப்படியொரு கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானவர்களைப் பரிசோதிக்காமலேயே மருத்துவர் எப்படிச் சான்றிதழ் வழங்கினார்?

இவையெல்லாவற்றையும்விட கொடுமையாக, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட், `குற்றவாளிகள் எனப்படுபவர்களைப் பார்க்காமலேயே எப்படி கஸ்டடி கொடுத்தார்?'

இப்படி இந்த வழக்கு மிகப்பெரிய கொடூர குற்றப்பின்னணியைக் கொண்ட வழக்காக இருக்கிறது. எனவே, இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்குத்தான் போகவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறிவந்தோம்.

ஆனால், ஆரம்ப கட்டத்தில் இதுகுறித்துப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் கருத்தைக் கேட்டறிந்துவிட்டு சி.பி.ஐ விசாரணைக்குச் செல்வோம்' என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து நிருபர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, `இந்த வழக்கை காலம் தாழ்த்துவதற்காக அதிபுத்திசாலித்தனமான விளையாட்டை விளையாடுகிறார் நமது முதல்வர். அதாவது `மக்களுடைய கோரிக்கை நிறைவேறுகிற மாதிரியும் இருக்கவேண்டும். அதேசமயம் அந்தக் கோரிக்கை நிறைவேறாததாகவே இருக்கவேண்டும்' என்ற பாணியை முதல்வர் கையாண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

உயர் நீதிமன்றத்தில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வழக்குகள் இருக்கலாம். அதற்காக உயர் நீதிமன்றத்திடம் கருத்து கேட்டுவிட்டுத்தான் சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்றுவதென்றால், அதற்கு நிறைய காலதாமதமாகும். `தலையைச் சுற்றித்தான் மூக்கைத் தொடவேண்டும் என்பது இல்லை. நேரடியாகவே மத்திய அரசிடமும் சி.பி.ஐ-யிடமும் இவ்வழக்கை எடுத்துக்கொள்ளும்படி அரசே முறையீடு செய்தால் போதும்' என்றும் தெளிவாகக் கூறினேன். நீதிமன்றமும்கூட, தற்போது இதைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதாவது, `வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுவது என்பது அரசின் முடிவு. இதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை' என்று சொல்லியிருக்கிறது.

ஆனால், என்னிடம் பேட்டி எடுத்து செய்தியை எழுதிய நிருபர், `வழக்கு சி.பி.ஐ-க்குச் சென்றால் காலதாமதமாகும்' என்று நான் சொன்னதாக அப்படியே மாற்றி எழுதிவிட்டார்'' என்றார் விளக்கமாக.

தொடர்ந்து, `சி.பி.ஐ-க்கு வழக்கைக் கொண்டுசெல்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சி.பி.ஐ வழக்குகளின் காலதாமதங்களுக்கான காரணங்கள் குறித்த தனது கருத்தையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார் கே.எஸ்.அழகிரி...

``பொதுவாக சி.பி.ஐ-க்குச் செல்லும் வழக்குகள் காலதாமதமாகிறது என்றால், அதற்கான முக்கியக் காரணம் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததாகத்தான் இருக்கும். இந்த வழக்கிலும்கூட நமது மாநில அரசின் ஒத்துழைப்பு நல்லவிதத்தில் இருந்தால்தான் வழக்கை சீக்கிரமாக முடிக்க முடியும். அதற்கான அழுத்தத்தை அரசுக்கு மக்களாகிய நாம்தான் கொடுக்கவேண்டும். இதை நாம் பின்னடைவாகப் பார்க்கக்கூடாது.

ஜெயராஜ் - பென்னிக்ஸ்

ஏனெனில், சி.பி.ஐ-க்கு வழக்கு போனால், குறைந்தபட்சம் ஆவணங்களில் மாற்றங்கள் எதுவும் செய்யமுடியாது என்ற நன்மையாவது கிடைக்கும். ஆனால், நம்மூர் போலீஸே வழக்கை விசாரிக்கட்டும் என்று விட்டுவிட்டால், ஒட்டுமொத்தமாக வழக்கின் போக்கையே திசைதிருப்பி, `தந்தையும் மகனும் தற்கொலை செய்துவிட்டார்கள்' என்றுகூட வழக்கை முடித்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

உதாரணமாகக் கீழமை நீதிமன்றத்தில், ஒரு வழக்குக்குப் பாதகமான தீர்ப்பு கிடைக்கிறது என்று மேல்முறையீட்டுக்குச் சென்றால் அங்கே நமக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம் அல்லவா? ஒரேயடியாக `இந்த நீதிமன்றங்களே இப்படித்தான்...' என்று நம் பிரச்னையை எடுத்துச்செல்லாமலேயே விட்டுவிட முடியுமா என்ன? எனவே, இந்த வழக்கைப் பொறுத்தவரையில், உள்ளூர் போலீஸிடம் போவதைவிடவும் சி.பி.ஐ-க்குச் சென்றால், `நல்லதொரு தீர்வு கிடைக்கலாம்' என்ற நம்பிக்கையில்தான் செல்கிறோம்.

சி.பி.ஐ விசாரணைக்குச் சென்றதால் நீதி கிடைக்கத் தாமதமாகிறது என்பதாலேயே சி.பி.ஐ விசாரணைக்குப் போகாமல் இருந்துவிட முடியாது. ஒருவேளை அப்படி காலதாமதமானால், அதற்கான காரணம் என்னவென்று கண்டறிந்து அதை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளில் சம்பந்தப்பட்ட துறைகளும் மாநில அரசும்தான் கவனம் செலுத்தவேண்டும்'' என்றார் தெளிவாக.

இதையடுத்து `சாத்தான்குளம் வழக்கு சி.பி.ஐ-க்குச் சென்றால், வழக்கின் முடிவுகளைத் தெரிந்துகொள்ளவும் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனை பெறவும் காலதாமதமாகுமா....' என்ற கேள்வியை சி.பி.ஐ-யின் முன்னாள் எஸ்.பி-யும், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியுமான ரகோத்தமனிடம் கேட்டோம்...

ரகோத்தமன்

``சாத்தான் குளம் வழக்கை மற்ற வழக்குகளோடு ஒப்பிட்டுப் பேசமுடியாது. ஏனெனில், இது மற்ற வழக்குகளைப் போன்று தனிப்பட்டதொரு வழக்காக இல்லாமல், இந்தியா முழுவதுமே பரபரப்பாகப் பேசப்படுகிற வழக்காக மாறிவிட்டது. அமெரிக்காவின் ஜார்ஜ் ஃப்ளாயிட் வழக்குக்கு இணையாக சாத்தான்குளம் வழக்கு பற்றியும் மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். எனவே, வழக்கை எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ அந்தளவுக்கு விரைவுப்படுத்தி நல்லதொரு தீர்வைத் தருவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

இது கொரோனா காலகட்டமாக இருப்பதால், விசாரணை அதிகாரிகள் டெல்லியிலிருந்து இங்கே வருவதற்குக் கொஞ்சம் காலதாமதமாகலாம். அதற்காக இங்கே உள்ள சி.பி.ஐ அதிகாரிகளே விசாரணை செய்யலாம் என்றால், அதில் குறுக்கீடு எதுவும் நிகழ்ந்துவிட வாய்ப்பிருப்பதால், டெல்லியிலிருந்துதான் அதிகாரிகள் வருவார்கள். நிச்சயம் அதற்குக் கொஞ்சம் காலதாமதமாகலாம்.

Also Read: சாத்தான்குளம்: `விடிய விடிய அடி; லத்தி, டேபிளில் ரத்தக்கறை’ -மாஜிஸ்திரேட் அதிர்ச்சி

சாத்தான் குளம் மர்ம மரணங்கள் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், அரசு கொடுத்திருக்கும் நோட்டிபிகேஷனில், சாத்தான்குளம் க்ரைம் நம்பரே கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஜெயராஜும் பென்னிக்ஸும் இறந்துபோன பிறகு கோவில்பட்டி ஜெயில் சூப்பிரன்டென்ட் கொடுத்த புகார்களின் அடிப்படையிலான `க்ரைம் நம்பர் 649 மற்றும் 650' என இந்த இரண்டு எண்கள் மட்டுமே அரசின் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும்கூட `இயற்கைக்கு மாறான மரணம்' எனும் பிரிவில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக இது சரியானதுதான் என்றாலும்கூட, இது வழக்கை தாமதப்படுத்துவதற்கான முயற்சிதான்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள்

ஏனெனில், இந்த வழக்கின் முக்கிய அம்சமே சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவங்கள்தான். எனவே சாத்தான்குளத்தில் பதிவான க்ரைம் நம்பர்தான் முக்கியமாகக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், கோவில்பட்டியில் பதிவான புகார் எண்களை மட்டுமே அரசுத் தரப்பிலான அறிவிப்பில் கொடுத்திருக்கிறார்கள். எனவே, சி.பி.ஐ., இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரிக்கும்போது, `இவ்வழக்கின் முக்கிய சம்பவமான சாத்தான்குளம் க்ரைம் நம்பர்கள் கொடுக்கப்பட வேண்டும்' என்று கேட்பார்கள். இப்படியெல்லாம் கேட்டு வாங்கி விசாரணை செய்வதற்கு நிச்சயம் காலதாமதம் ஆகத்தான் செய்யும்.

`சாத்தான்குளம் க்ரைம் விவகாரத்தை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என்றுதான் பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு, மிகத்தெளிவாக சாத்தான்குளம் க்ரைம் நம்பரை மட்டும் கொடுக்காமல் மறைத்து, கோவில்பட்டி சம்பவங்களிலிருந்து மட்டுமே சி.பி.ஐ விசாரணையை ஆரம்பிப்பதற்கான வேலைகளைச் செய்திருக்கிறது!'' என்றார் தெளிவாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-cbi-enquiry-delay-justice-in-sathankulam-police-brutality-case

கரூர்: `300 மரக்கன்றுகள்; 3,000 வாட் சூரிய மின்சாரம்' -அசத்தும் அரசுப் பள்ளி

கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில், மின்சாரத் தேவையை இயற்கை முறையில் உற்பத்திசெய்ய ஏதுவாக, 3000 வாட் மின்சாரம் வழங்கக்கூடிய சூரிய ஒளி தகடுகளை அரசே முன்வந்து அமைத்திருப்பது, பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

சூரிய ஒளி மின்தகடுகள்

Also Read: `எதிரிக்குக்கூட என் நிலைமை வரக்கூடாது!' -டெக்ஸ்டைல் தொழிலாளி டு பொரிகடலை வியாபாரம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, பஞ்சப்பட்டி. இந்தக் கிராமத்தில் செயல்பட்டுவருகிறது, ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி. மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் இருக்கும் இந்த அரசுப் பள்ளியில், சுமார் 890 மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளி, சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. அதனால், இந்தப் பள்ளி வளாகத்தில் பூவரசு, புங்கன், வேம்பு என்று 300 நாட்டு மரங்களை நட்டு, பள்ளியின் இயற்கைச் சூழலை செம்மையாக்கியிருக்கிறார்கள்.

பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்

அதோடு, இந்தப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், சிறப்பான இயற்பியல் ஆய்வகம், கணினி முறையில் கற்பித்தல் என்று தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனால், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி இருந்தாலும், பள்ளியின் சிறப்புகளால் மாவட்ட அளவில் பலரின் கவனத்தை ஈர்க்கும் பள்ளியாக இருந்துவருகிறது.

இந்தச் சூழலில், பஞ்சப்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும்பொருட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட நிதியின் மூலம், ரூ. 4 லட்சம் மதிப்பில், பள்ளியின் அலுவலகம், ஸ்மார்ட் வகுப்பறை, அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் ஆகியவை 3000 வாட் சூரிய மின்சாரம் உற்பத்தி மூலம், வரும் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், பள்ளியின் மாடியில் சூரிய சக்தியைப் பெற்றுத்தரும் சூரிய மின் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இயற்பியல் ஆய்வகம்

இதனால், பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் மின்கட்டணம் செலுத்துவது வெகுவாகக் குறைவதுடன், தடையற்ற மின்சாரமும் கிடைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம், நகர்புறத்திற்கு இணையாக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வம் மிகும்.

இதுகுறித்து பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றிவரும் தனபாலிடம் பேசினோம்.

"எங்க பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெய்பீம்ராணி வழிகாட்டுதலில், பள்ளியில் எண்ணற்ற விசயங்களைச் செய்துள்ளோம். கரூர் மாவட்ட அளவில் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஓர் அரசுப் பள்ளி, எங்க பள்ளிதான். அதனால், பள்ளி வளாகம் முழுக்க நாட்டு மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அதோடு, பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கல்வியை ஸ்மார்ட்டாகக் கற்கும் வகையில் பல வசதிகளைச் செய்திருக்கிறோம்.

சூரிய ஒளி மின்தகடுகள்

எங்க பள்ளியின் வளர்ச்சியைப் பாராட்டி, அரசு தரப்பில் எங்கள் பள்ளியின் மின்சாரத் தேவையை உணர்ந்து, அதற்கு பயனளிக்கும் வகையில், 3000 வாட் மின்சாரத்தை பெற்றுத் தரக்கூடிய சூரிய ஒளி மின்தகடுகளை அமைத்திருக்கிறார்கள். இது, எங்களின் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்" என்றார், மகிழ்ச்சியாக!



source https://www.vikatan.com/news/education/government-school-implement-solar-energy

தஞ்சை: ஆன்லைனில் ஜமாபந்தி நடத்துவது நியாயமா? -சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

ஜமாபந்தி: 

மக்களின் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மன்னர்கள், ஆங்கியேர்கள் ஆட்சிக்காலம் எனத் தொன்று தொட்டு, ஆண்டுதோறும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்களால் நீண்டநாள்களாக இழுத்தடிக்கப்படும் மக்களின் கோரிக்கைகளுக்கும் புகார்களுக்கும் ஜமாபந்தியில் பெரும்பாலும் தீர்வு கிடைத்துவிடும்.

இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியானது, கிராமப்புற மக்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் மக்கள் தங்களது மனுக்களை ஜமாபந்தி கூட்டத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் ஜமாபந்தியின் அடிப்படையான நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.

வீரசேனன்

தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. என்னதான் விதவிதமாக ஆட்சிகள் மாறினாலும், ஜமாபந்தி நடைபெறாமல் இருந்ததே இல்லை. இதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கட்டாயம் கலந்து கொள்வார்கள். ஜமாபந்தி என்பது இந்தி சொல் என்பதால், தி.மு.க ஆட்சிக்காலத்தில் இது, வருவாய் தீர்வாயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வருவாய்த்துறை உயர் அலுவலர் தலைமையில் தாலுகா தோறும் இக்கூட்டம் நடைபெறும். இக்கூட்டம் நடைபெறுவது, வீடுகள்தோறும் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். மக்கள், தங்களது மனுக்களோடு ஜமாபந்திக்கு வருவார்கள். அங்கேயே பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

ஆனால் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ஜமாபந்தியில் பல்வேறுவிதமான குளறுபடிகள் உள்ளதாகவும் இதனால் மக்களுக்குப் பல்வேறுவிதமான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வீரசேனன், ‘’விவசாயிகளுக்கு, ஜமாபந்தி ரொம்பவே உதவியாக இருக்கும். வாய்க்கால்கள், ஏரி, குளங்கள்ல ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்து, பாசனத்துக்குத் தண்ணீர் வரலைனா, இங்க மனு கொடுப்பாங்க. பெரும்பாலும் இதுக்குத் தீர்வு காணப்படும். இயல்பாக மற்ற நாள்கள்ல பட்டா பெயர் மாற்றம், கூட்டுப்பட்டாவுல இருந்து, தனிப் பட்டா வாங்குறதெல்லாம் சாதாரண காரியமல்ல. சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், இழுத்தடிச்சிக்கிட்டே இருப்பாங்க.

மக்களுக்கே தெரியல...!

ஆனால் ஜமாபந்தியில் முறையிட்டால், உடனடியாகத் தீர்வு காணப்படும். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற முதியோர்கள் உட்பட இன்னும் பல எளிய மக்கள், அரசின் சலுகைகளைப் பெறவும் ஜமாபந்தி உதவியாக இருக்கும். இதுக்கான முன் அறிவிப்பை, ஊர் தலையாரி, வீடுகள்தோறும் தெரிவிச்சி,கையெழுத்து வாங்குவார். தாலுகா அலுவலகத்துல பத்து நாள்கள் இது நடைபெறும். ஒவ்வொரு நாளும், ஒரு வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மனு கொடுப்பாங்க. இறுதி நாள்களுக்குள் தீர்வு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்துல இதுல ஏகப்பட்ட குளறுபடிகள்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ஜமாபந்தி நடத்தப்படுவது மக்களுக்கு தெரிவிக்கப்படல. பட்டுக்கோட்டை தாசில்தார் ஆபீஸ் பக்கம், யதார்த்தமாகப் போனேன். வழக்கத்தை விட, அதிகாரிகளின் கூட்டம் பல மடங்கு அதிகமாக இருந்துச்சு. சுமார் முந்நூறு பேர் இருந்தாங்க. ஏதோ பிரச்னைனு நினைச்சி, விசாரிச்சப்பதான், ஜமாபந்தி நடக்குதுனு சொன்னாங்க. ஆனால் பொதுமக்கள் ஒருந்தர் கூட இல்லை. மக்கள் நேரடியாக மனு கொடுக்க அனுமதி இல்லை. ஆன்லைன்ல மட்டும்தான் கொடுக்க முடியும்னு சொன்னாங்க. கிராமப்புற மக்களுக்கு இது சாத்தியமே இல்லை. மக்கள் முன்னிலையில் மனுக்களை பரிசீலிச்சாதான் உடனடியா தீர்வு, கிடைக்கும். கொரோனாவைக் காரணம் காட்டி, இதுமாதிரி செஞ்சிருக்காங்க. ஆனால், மூணு பீர்காவைச் சேர்ந்த அனைத்துத் துறை அதிகாரிகளும், ஒரே நாள்ல, பட்டுக்கோட்டை தாலுகா ஆபீஸ்ல கூடியிருக்காங்க. இன்னும் பல அரசு நிகழ்ச்சிகள் கூட்டம் கூட்டமாக நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனால் சாமானிய மக்களின் நீண்டகாலப் பிரச்னையை எளிதாகத் தீர்க்கக்கூடிய ஒரே வாய்ப்பாக இருந்த ஜமாபந்தியில் கை வச்சிட்டாங்க. முறையாக மக்களுக்குத் தெரிவிச்சி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிச்சி, இதை நடத்தியிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

வருவாய்த்துறை அலுவலர்களிடம் பேசியபோது ‘’கொரோனா பிரச்னை பூதாகரமாக இருக்கு. இதனால்தான் நாளிதழ்கள்ல அறிவிப்பு வெளியிட்டு, ஆன்லைன்-ல மனுக்கள் அனுப்பச் சொன்னோம். தமிழக அரசின் வழிகாட்டுதல்படிதான் செயல்படுகிறோம்” எனத் தெரிவித்தார்கள்.

ஆட்சியர் கோவிந்தராவ்

இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவிடம் பேசியபோது, ``பொதுவா, ஜமாபந்தி பெரிய அளவுல நடக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனாவால், தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, மனுக்களை ஆன்லைன்ல அனுப்ப சொன்னோம். இதுகுறித்த அறிவிப்புகளை பத்திரிகைகளில் வெளியிட்டு இருக்கிறோம். சமூக இடைவெளியை கடைப்பிடித்து, நேரடியாக மனுக்களை வாங்குவதில் வேறு சில சிரமங்கள் உள்ளது. வருவாய்த்துறை அலுவலர்கள் பெரும்பாலானோர், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வர்றாங்க. கொரோனா பிரச்னையால், போக்குவரத்து வசதிகள் இயல்பு நிலையில் இல்லை. ஜமாபந்திக்கு நேரடியாக வர மக்களும் சிரமப்படுவாங்க. மனுக்கள் ஆன்லைன்ல பெறப்பட்டாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/social-activist-upset-over-jamapanthi-event

கொரோனா கொசுவை அடிக்கும் கோடாரி... பலன் அளித்துள்ளதா 100 நாள் ஊரடங்கு?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்வுக்கு குஜராத்தில் பிரமாண்டமான வரவேற்பு கொடுப்பதற்கு பிரதமர் மோடியின் உத்தரவில் பரபரப்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவுக்குள் தனது பயணத்தை கொரோனா ஆரம்பித்துவிட்டது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தீவிரமாகப் பரவ ஆரம்பித்த நேரத்தில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. `சமூக இடைவெளி முக்கியம்’, `தனித்திருங்கள்… விழித்திருங்கள்’ என்று மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், `மக்களுக்கு அறிவுரை சொல்வது இருக்கட்டும். முதலில் சட்டமன்றக் கூட்டத் தொடரை உடனே முடியுங்கள்’ என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை முதல்வர் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. வயதானவர்களுக்குத்தான் கொரோனா வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் கிண்டல் செய்துகொண்டிருந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Also Read: சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் கொரோனா... முதல்வர் சொல்வது உண்மைதானா?

அதன் பிறகு தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 144 தடை உத்தரவுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் இதுவரை ஐந்து முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரையிலான ஐந்தாம் கட்ட ஊரடங்கு முடிவடையவிருந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7-வது முறையாக ஜூன் 29-ம் தேதி ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இன்று முதல் (ஜூலை 1-ம் தேதி) ஜூலை 31-ம் தேதிவரை ஆறாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும்.

சென்னை - ஊரடங்கு

கொரோனா பரவலில் முதன்மை நகரமாக சென்னை விளங்கிவருகிறது. சென்னையின் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியவற்றிலும் வைரஸ் தொற்று அதிகளவில் உள்ளது. இதனால் இந்த மாவட்டங்கள் முழு ஊரடங்கில் உள்ளன. இதற்கு முன்பு தமிழகத்தின் பல நகரங்களிலும் தனித்தனியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை நான்கு நாள்களும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை மூன்று நாள்களும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உரிய காலஅவகாசம் அளிக்கப்படாமல் ஊரடங்கு அறிவிக்கப்படாததால், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டனர். வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்கு சமூக இடைவெளி கடைப்பிடிப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுவரும் வேளையில், சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில்தான் சென்னை நகரில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்ததாகச் சொல்லப்பட்டது. அப்போதுதான், கோயம்பேடு காய்கறிச் சந்தை கொரோனா உற்பத்தி மையமாக உருவெடுத்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, காய்கறி மொத்த வியாபாரம் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அதற்குள் கோயம்பேட்டுக்கு வந்துசென்ற வியாபாரிகள் மூலமாக திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் கொரோனா பரவிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு நீடித்துவருகிறது. மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் இ பாஸ் வாங்கிச் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனாலும், சென்னையில் நாளுக்குள் கொரோனா தாக்கம் அதிகரித்துவந்த காரணத்தால், சென்னையை காலிசெய்துவிட்டு பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். அதனாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா பரவியதாக செய்திகள் வருகின்றன. அதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது.

சென்னை - முழு ஊரடங்கு

ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலான ஊரடங்கின்போது, இடைப்பட்ட இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதத் தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைப்போல, ஜூலை மாதத்தில் வரக்கூடிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 5, 12, 19, 26 தேதிகள்) எந்தவிதமான தளர்வுகளும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பிற மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் ஜூன் 30-ம் தேதிவரை வழங்கப்பட்ட இ பாஸ் ஜூலை 5-ம் தேதிவரை செல்லும் என்றும், இதற்கு மீண்டும் புதிய இ பாஸ் பெறத் தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, பிற மாநிலங்களுக்கான போக்குவரத்துத் தடை நீட்டிக்கப்படுவதாகவும், ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்துக்கு பயணம் செய்ய இ பாஸ் வாங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

அம்மா உணவகம்

நகர்ப்புறங்களில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், பெரிய வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் வழிபாடு நடத்தவும், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தவும், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது. தங்கும் வசதியுடன் கூடிய விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் மற்ற விருந்தோம்பல் சேவைகளுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் தடை நீட்டிக்கப்படுகிறது. ஆனாலும், இந்த நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை, மெட்ரோ ரயில், மின்சார ரயிலுக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்களால் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஜூன் 1-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழகம் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 50 சதவிகிதப் பேருந்துகள் இயங்க ஆரம்பித்தன. பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவிகிதம் மட்டுமே சமூகஇடைவெளியுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், பெரும்பாலும் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல்தான் பயணிகள் செல்கிறார்கள் என்ற புகார் உள்ளது. பிற மாநிலங்களுக்கான போக்குவரத்துத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம்

ஜூன் 1-ம் தேதி முதல் சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள், தேநீர் கடைகள், பெரிய கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி அனுமதி வழங்கப்பட்டது. சலூன் கடை, அழகு நிலையங்கள் ஏ.சி வசதியைப் பயன்படுத்தாமல் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. ஆட்டோக்களில் பயணிகள் இரண்டு பேர் வரை பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள், கூட்ட அரங்குகளைத் திறக்க தடை நீட்டிக்கப்பட்டது. ஜூன் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆறாம் கட்ட ஊரடங்கு இன்று (ஜூலை 1-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததால் பல்வேறு தொழில்கள் ஓரளவுக்கு நடைபெற்ற போதிலும் பெரும்பாலான மக்கள் இன்னமும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். இந்நிலையில், ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றை தமிழக அரசு வழங்கிவருகிறது. ஆனாலும் மூன்று மாதங்களுக்கு மேல் வேலையின்றி தவிக்கும் மக்கள் வாழ்க்கையை நகர்த்துவதற்கு பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

தாஜ் ஃபிஷர்மேன் கோவ் அருகே வாகன சோதனை

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20 சதவிகிதப் பணியாளர்களுடன், அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம் என்றும், 50 சதவிகித ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை... திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இப்படியான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில், தற்போது பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுவருகிறது. ஆனால், ஒப்பீட்டளவில் தலைநகர் சென்னையில் மட்டும் அதிகமாக பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இன்னும் அதிகளவில் சென்னையில் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று மருத்துவ செயற்பாட்டாளர்கள் கூறிவருகிறார்கள்.

சு.வெங்கடேசன்

பிற மாவட்டங்களில் பரிசோதனைகள் மிகக் குறைவாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, மதுரையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அதிகமான சோதனைகளை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி-யான சு.வெங்கடேசன் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறார். மேலும், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதமும் அவர் எழுதியுள்ளார். அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ``முதல்வருக்கு கடிதம் எழுதுவதாகக் கூறி சு.வெங்கடேசன் எம்.பி., மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திவருகிறார்” என்றார். அத்துடன் நிற்காமல், ``தவறான தகவல் பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மக்கள் பிரதிநிதி என்ற முறையில் முதல்வருக்கு கடிதம் எழுதினால், ஒரு எம்.பி மீது வழக்குப் போடுவதாக அமைச்சர் மிரட்டுவதா என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயக்குமார்

தலைமைச்செயலகத்தில் முதல்வருடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவ நிபுணர்கள் குழுவினர், ``ஊரடங்கு என்பது கோடாரியைக் கொண்டு கொசுவை அடிப்பது போன்றது” என்று குறிப்பிட்டனர். ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென்று தாங்கள் அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். எனவே, தமிழக அரசு ஊரடங்கை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பதில் பயனிருப்பதாகத் தெரியவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் கேரளா, ஒடிஷா போன்ற மாநிலங்களிடமிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த மாநிலங்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து, அதற்கேற்ப தமிழகத்தில் புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.



source https://www.vikatan.com/government-and-politics/news/what-happened-in-100-days-of-lockdown-in-tamilnadu

Corona Live Updates: இந்தியாவில் ஒரே நாளில் 18,653 பேருக்கு பாசிட்டிவ்... 17 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா நிலரவம்!

கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,66,840 -லிருந்து 5,85,493 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், 24 மணி நேரத்தில் 18,653 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 507 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,893 -லிருந்து 17,400 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,47,979 ஆகவும் உயர்ந்துள்ளது. 2,20,114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/01-07-2020-corona-live-updates

ஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்! - பின்னணி என்ன?

அதிரடி இடமாற்றம்:

தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேற்றிரவு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

``சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக இருந்த சுனில்குமார், மனித உரிமை கமிஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய டேவிட்சன் ஆசீர்வாதம், மாநில தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

மகேஷ்குமார் அகர்வால்

சென்னை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், ஏடிஜிபி operation - ஆக இடமாற்றப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியாற்றிய எம்.ரவி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி operation - ஆக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னைத் தலைமையக ஐஜியாகப் பணியாற்றிய ஜெயராம், திருச்சி மண்டல ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மண்டல ஐஜியாகப் பணியாற்றிய அமல்ராஜ், சென்னைத் தலைமையகக் கூடுதல் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னைப் பொருளதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக கணேஷ் மூர்த்தியும், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராகப் பணியாற்றும் தினகரன், தெற்கு மண்டலக் கூடுதல் கமிஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஜிபி ரவி

சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகப் பணியாற்றிய பிரேம்ஆனந்த் சின்ஹா மதுரை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னைப் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராகப் பணியாற்றிய அருண், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய சஞ்சய்குமார், தொழில்நுட்பப் பிரிவு ஐஜியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

பதவி உயர்வு

சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராகப் பணியாற்றிய கபில்குமார் சரத்கர், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்பு டிஐஜியாக கண்ணன், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னைப் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் சரக டிஐஜியான சந்தோஷ்குமார், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னை நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்

காஞ்சிபுரம் டிஜஜியான தேன்மொழி, ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை சரக டிஐஜியான கார்த்திகேயன், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று திருப்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் சரக டிஐஜியான ஜோஷி நிர்மல்குமார், பதவி உயர்வு பெற்று எஸ்டாபிளிஸ்மென்ட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கடலோரப் பாதுகாப்பு பிரிவு டிஐஜியான பவானீஸ்வரி, ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னைப் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி சரக டிஐஜியான பாலகிருஷ்ணன், சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார், கடலோரப் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி:

சென்னைத் தலைமையக இணை கமிஷனரான ஏ.ஜி பாபு, சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனரான மகேஷ்வரி, தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை தெற்குப் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான எழிலரசன், விழுப்புரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை டிஐஜி செந்தில்குமாரி, சென்னை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா, திருச்சி சரகத்துக்கும் ராமநாதபுரம் டிஐஜி, ரூபேஷ்குமார் மீனா தஞ்சைக்கும் சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜி நரேந்திரன் நாயர் கோவை சரகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இடமாறுதல் உத்தரவு

எஸ்.பிஅபிஷேக் தீட்சீத், டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா, டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சாமுண்டீஸ்வரி, பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி லட்சுமி, பதவி உயர்வு பெற்று சென்னை தெற்குப் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி ராஜேஸ்வரி பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். சீருடைப் பணியாளர் தேர்வாணை எஸ்.பி பாண்டியன் பதவி உயர்வு பெற்று ரயில்வே டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

இடமாறுதல் உத்தரவு

சென்னை பூக்கடை துணை கமிஷனராகப் பணியாற்றிய ராஜேந்திரன் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று மதுரை சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துச்சாமி டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை தெற்குப் போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனரான மயில்வாகனன், டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னைப் பாதுகாப்புப் பிரிவு துணை கமிஷனரான ராதாகிருஷ்ணன், விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிரடி இடமாற்றம் ஏன்?

ஒரே நேரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 39 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ்குமார் அகர்வால், 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. இவர் சட்டம் பயின்றவர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 22 வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியானார். தேனி எஸ்பி, தூத்துக்குடி எஸ்பி, 2001-ல் சென்னைப் பூக்கடை துணை கமிஷனர், சென்னைப் போக்குவரத்துக் காவல் தெற்கு துணை கமிஷனராகப் பணியாற்றியுள்ளார். சிபிசிஐடி ஐஜியாகவும் மதுரை கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். இவரின் மனைவி பேராசிரியை.

மகேஷ்குமார் அகர்வால்

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து விசாரித்தபோது, ``இது வழக்கமான நடைமுறைதான். பதவி உயர்வு பெற்றவர்களுக்குப் புதிய பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதனுக்கு மூன்றாண்டுகள் பணி நிறைவுபெற்றதையடுத்து அவர் இடமாற்றப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் ஏற்கெனவே பணியாற்றிவர். அதனால்தான் அவரை சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்துள்ளனர்" என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/reason-behind-the-39-ips-transfer-in-tamilnadu

ஒரு கார்... ஒரு கனவு! - ஆன்லைன் கார் டிசைன் பயிலரங்கம்

ஒரு கார்... ஒரு கனவு


source https://www.vikatan.com/news/announcements/online-training-about-car-design-2

ஹலோ வாசகர்களே...

மோட்டார் விகடன்


source https://www.vikatan.com/news/announcements/hello-vikatan-readers-179

டிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - அடுத்து என்ன நடக்கும்?

இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ராணுவ மோதல் என்பது நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தியச் சீனா உறவு என்பது இந்த மோதலுக்குப் பின் ஊசலாடித்தான் வருகிறது. எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கடும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என #BoycottChineseProducts ஹேஷ்டேக்கில் இந்தியர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் வணிக ரீதியாகச் சீனாவுக்குப் பதிலடி கொடுக்கமுடியும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.

Boycott Chinese Products

இது குறித்து, `இந்தியர்கள், சீன தயாரிப்புகளைத் தவிர்க்க முடியுமா? - உண்மை நிலை என்ன?' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அதில் ஸ்மார்ட்போன் மற்றும் பிற எலெக்ட்ரானிக் சந்தைகளில் சீனாவை உடனடியாக தவிர்ப்பது என்பது மிகவும் கடினமானது. ஆனால், ஒரு விஷயத்தை நம்மால் முழுவதுமாக புறக்கணிக்க முடியும் என்றால் அது இன்டர்நெட் ஆப்ஸ்தான் எனக் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையைக் கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.

Also Read: இந்தியர்கள், சீன தயாரிப்புகளைத் தவிர்க்க முடியுமா? - உண்மை நிலை என்ன?

இப்போது மத்திய அரசு, 59 சீன ஆப்களை தடைசெய்வதாக அறிவித்திருக்கிறது. ``தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின்படி கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்கீழ் அவசரக் கால அடிப்படையில், தொடர்ந்து இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இந்த 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன" என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 130 கோடி இந்தியர்களின் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆப்கள் தொடர்ந்து பயனர் தகவல்களை இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்பிவருகின்றன என்றும் தெரிவிக்கிறது இந்த அறிக்கை.

கடந்த வாரம்தான் சீனாவோடு தொடர்புடைய 52 செயலிகளை ஒன்று தடைசெய்ய வேண்டும் அல்லது மக்களுக்கு அதைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அப்போது இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்பட்டது. அந்தப் பரிந்துரையின்படியே இந்தத் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

தடைசெய்யப்பட்ட ஆப்களின் பட்டியல்

தடைசெய்யப்பட்ட ஆப்களின் பட்டியல்

பிரவுசர், ஃபைல் ஷேரிங், சமூக வலைதளம் என அனைத்து விதமான ஆப்களுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆப்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை இவை அனைத்துமே சீன நிறுவனங்களின் தயாரிப்பு என்பது மட்டும்தான். ஆனால், அரசு தரப்பில் இவற்றைச் சீன ஆப்கள் என்றோ, சீனாவுடனான தற்போதைய உறவு குறித்தோ எங்குமே வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

ஆனாலும், சீனாவுக்கு நேரடியாக இந்தியா அனுப்பிய மெசேஜ்தான் இது என்கின்றனர். மீடியானாமா (Medianama) நிறுவனரும், டிஜிட்டல் உரிமை செயல்பாட்டாளருமான நிகில் பாவ்ஹா இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தார். "எனக்கு தெரிந்து இந்த 69-வது பிரிவின் கீழ் ஆப்கள் தடைசெய்யப்படுவது குறித்து இப்படியான ஓர் அறிக்கை வெளியிடப்படுவது இதுவே முதல்முறை. 69-வது பிரிவின் கீழ் எந்த ஓர் அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாகவே ஆப்களையும் இணையதளங்களையும் அரசால் தடைசெய்ய முடியும். அதனால் இதை ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்க முடிகிறது. இதன்மூலம் சீனாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது இந்தியா" என்றார் நிகில்.

இவர் சொல்வது போல தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69-ம் பிரிவின் கீழ் குறிப்பிட்ட இடைவெளியில் தளங்கள் நீக்கப்படுவது வழக்கம்தான். ஆனால், அதற்கு இப்படியான அறிவிப்புகள் வெளிவருவதில்லை. இந்த ஆப்களின் செயல்பாடு திடீரெனவெல்லாம் மாறவில்லை. பல மாதங்களாகவே ஒரே மாதிரியாகத்தான் செயல்பட்டு வருகின்றன. அதனால் இவ்வளவு நாள்கள் இல்லாமல் இப்போது தடைசெய்வது என்பது தெளிவாக இது சீனாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைதான் என்பது உறுதியாகிறது.

இணையம் சார்ந்த உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் இன்டர்நெட் ஃபிரீடம் பவுன்டேஷன் (IFF) `இதில் இன்னும் கூட தெளிவு வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறது. அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் அபர் குப்தாவை தொடர்புகொண்டு பேசினோம், "இந்தத் தடை குறித்து இதுவரை வெறும் ஓர் ஊடக அறிக்கை மட்டுமே அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. தேசியப் பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தடை போடப்படுவதாக அரசு தெரிவித்திருக்கிறது. இதில் சில சிக்கல்கள் உண்டு. இதற்கு முன்பு எந்த ஒரு தடையும் நேரடியாக இத்தனை கோடி பயனர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், இந்தத் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69-வது பிரிவின் கீழ் ஒவ்வொரு இணையதளம்/ஆப் ஏன் நீக்கப்படுகிறது என்பதற்கான காரணம் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், இப்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் அனைத்தையும் பட்டியலிட்டுத் தடைசெய்வதாகக் கூறியிருக்கிறார்கள்.

அபர் குப்தா

இந்திய அரசின் தகவல் பாதுகாப்பு குறித்த இந்த அக்கறை நியாயமானதுதான். ஆனால், இப்போது இது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றால் தடைசெய்யும் அதிகாரத்தைக் கொடுக்கும் இந்தச் சட்டம் வருங்காலத்தில் மோசமான முறையில் பயன்படுத்தப்படலாம். சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதாக நமது ஜனநாயகக் கொள்கைகளை விட்டுத்தந்துவிடக் கூடாது" என்று தெரிவித்தார் அவர்.

இதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பது உண்மைதான். இன்னும் இந்தியாவில் `Data Protection bill' சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதனால் டேட்டா சார்ந்த விஷயங்களில் இன்னும் தெளிவான ஒழுங்குமுறை இல்லைதான். இப்போது தடைசெய்யப்பட்டிருக்கும் ஆப்கள் அனைத்தும் ஒவ்வொரு விதமாகச் செயல்படுபவை. ஒரே ஒற்றுமை சீன ஆப்கள் என்பதுதான். ஆனால், இது இல்லாமல் இன்னும் பல சீன ஆப்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது இவற்றை மட்டும் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்துத் தடைசெய்தார்கள் என்பதில் எந்தத் தெளிவுமே இல்லை.

டிக் டாக், ஷேர்இட் போன்ற சில சேவைகள் மட்டுமே நம்மால் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகள். அதிக `Monthly Active Users' கொண்ட சீன ஆப்கள் இவைதான். சராசரியாக ஒரு மாதத்தில் சுமார் 20 கோடி இந்தியர்கள் ஷேர்இட் ஆப்பை பயன்படுத்துகின்றனர். அடுத்ததாக UC பிரவுசர் இருக்கிறது. இதைச் சராசரியாக சுமார் 13 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். டிக் டாக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என்பது 12 கோடியாக இருக்கிறது. மொத்தம் இருக்கும் 45 கோடி இந்தியப் பயனர்களின் 30 கோடி இந்தியப் பயனர்கள் ஒரு சீன ஆப்பையாவது பயன்படுத்துகின்றனர். மீண்டும் வருமா இந்த ஆப்கள்?

டிக் டாக்கின் இந்திய தலைவர் நிகில் காந்தி.

"டிக் டாக் உட்பட 59 ஆப்களுக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது இந்திய அரசு. இந்த உத்தரவுக்கு டிக் டாக் அடிபணிகிறது. பிரச்னைகளை கலந்துபேச அரசு தரப்பில் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு சட்டங்களையும் சரிவரப் பின்பற்றி வருகிறோம். இதுவரை இந்தியப் பயனர்கள் தகவல்களைச் சீனா உட்பட எந்த அரசிடமும் நாங்கள் பகிரவில்லை. அப்படி செய்ய நிர்பந்திக்கப்பட்டாலும் அதை நாங்கள் செய்யமாட்டோம். பயனர்களின் பிரைவசியை பாதுகாப்பதற்கே எங்களது அதிகபட்ச முன்னுரிமை" என்று தெரிவித்திருக்கிறார் டிக் டாக்கின் இந்திய தலைவர் நிகில் காந்தி.

இந்தத் தடையானது எப்படி அமல்படுத்தப்படப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், முதல்கட்டமாக ஆப்பிள் ஆப் ஸ்டார் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இவை அரசின் ஆணைக்கு இணங்கி நீக்கப்படும். அடுத்து இந்த ஆப்களுக்கு இணையம் வழங்க வேண்டாம் என்ற உத்தரவு ஏர்டெல், ஜியோ போன்ற இணைய சேவை நிறுவனங்களுக்கு (ISP) பிறப்பிக்கப்படும். ஆனால் UC பிரவுசர் போன்ற பிரவுசிங் ஆப்களை எப்படி முழுவதுமாக கட்டுப்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், வெகுஜன மக்களுக்கு இனி இந்த ஆப்கள் எளிதாகக் கிடைக்காது என்பது மட்டும் உறுதி.

மீண்டும் வருமா இந்த ஆப்கள்?

ஏற்கெனவே இந்தியாவில் ஒரு முறை தடையைச் சந்தித்து மீண்டும் வந்த வரலாறு டிக் டாக்கிற்கு உண்டு. அப்படியிருக்கையில் தற்போதும் அப்படித் திரும்பிவருமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. வருவதற்கான வாய்ப்புகள் உண்டுதான். டிக் டாக் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இதைத் தற்காலிக தடை என்றுதான் குறிப்பிட்டிருக்கிறது. இந்த தடைக்கு அரசு சொல்லும் முக்கியக் காரணம் இந்தியா அல்லாத இடங்களிலுள்ள சர்வர்களில் இந்தியப் பயனர்களின் தகவல்கள் சேமிக்கப்படுகிறது என்பதுதான். இதையும் இந்திய அரசு சுட்டிக்காட்டும் மற்ற சிக்கல்களையும் இந்த ஆப்களால் சரிசெய்ய முடியும்பட்சத்தில் அவற்றால் மீண்டும் இங்கு செயல்பட முடியும். ஆனால், இவற்றின் மீது அரசின் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் ஏற்கெனவே சீனாவிலிருந்து படிப்படியாக வெளியில் வரும் திட்டத்தில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/technology/tech-news/the-ban-of-59-chinese-apps-explained

`சாக்டெங் சரணாலயம்!’ -இந்தியாவைத் தொடர்ந்து பூட்டான் எல்லையில் அத்துமீறும் சீனா

சீனா மிகப்பெரிய நாடு என்பதால் பல்வேறு நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து வருகிறது. இதனால், எல்லையில் உள்ள சில நாடுகளுடன் எல்லைப் பிரச்னை தொடர்பாக மோதியும் வருகிறது. குறிப்பாக தென் சீனக்கடல் முதல் லடாக் வரை உள்ள பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏற்கெனவே, இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை அதிக பதற்றத்தை இருநாட்டு எல்லைகளிலும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீனா தற்போது பூட்டான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது. இதனால், பூட்டான் மற்றும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்னை தொடர்பான பதற்றங்கள் தற்போது தொடங்கியுள்ளன.

உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சில்

உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின் 58-வது கூட்டத்தில் சீனா, பூட்டானில் அமைந்துள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற உள்ள புதிய திட்டம் ஒன்றுக்கு நிதி ஒதுக்குவதை தடுத்து நிறுத்த முயன்றதோடு அந்த நிலப்பகுதி `சர்ச்சைக்கு உரியது’ என்றும் கூறியுள்ளது.

பூட்டான் மற்றும் சீனா இடையிலான எல்லையில் அமைந்துள்ள சாக்டெங் சரணாலயத்தின் நிலப்பகுதி தொடர்பான எந்தப் பிரச்னையும் கடந்த காலங்களில் ஏற்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் இந்த சர்ச்சைக்குரிய பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் பூட்டான், ``சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் பூட்டானின் ஒருங்கிணைந்த மற்றும் இறையாண்மைக்கு உரிய பகுதியாகும்” என்று கூறியுள்ளது.

Also Read: ``இந்திய மக்களின் பலத்தை சீனா உணரவில்லை!" - விகடனுக்கு 1962ல் பாதுகாப்பு அமைச்சர் சவான் அளித்த பேட்டி

பிரச்னைகளுக்கு இடையே உள்ள சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்துக்கு இதுவரை உலகளாவிய அளவில் இருந்து எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. எனவே, சர்வதேச அளவில் இருந்து முதன்முறையாக அந்த வனவிலங்கு சரணாலயம் தொடர்பான திட்டம் ஒன்றுக்கு நிதி ஒதுக்கப்படும் நிலையில் சீனா அந்த சரணாலயம் அமைந்துள்ள நிலத்தை உரிமை கோருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனா இந்தத் திட்டத்துக்குப் பல எதிர்ப்புகளைக் கூறினாலும் கவுன்சிலின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த கவுன்சிலில் சீனாவுக்கான ஒரு பிரதிநிதி உள்ளார். ஆனால், பூட்டானுக்கென நேரடியாக ஒரு பிரதிநிதிகூட இந்த கவுன்சிலில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த விஷயம் பூட்டானுக்கு பாதகமாக உள்ளது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை நாடுகளின் உலக வங்கியின் பொறுப்பாளராக இருக்கும் இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரியான அபர்ணா சுப்ரமணிதான் பூட்டானின் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த கலந்துரையாடலின்போது சீனாவின் கவுன்சில் உறுப்பினர் ஜாங்ஜிங் வாங், பூட்டானில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம் குறித்து முறையான சான்றுகள் அளிக்கப்பட வேண்டும் என்று கூறி தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பூட்டான் சார்பாக உள்ள இந்திய அதிகாரி அபர்ணா, சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் நியாயமில்லாதவை என்று கூறினார். கவுன்சிலின் தலைவரான நவோகோ இஷி, இருநாடுகளில் கருத்துகளையும் கேட்டு நடுநிலைமையான ஒரு முடிவுக்கு வர முயன்றார். ஆனால், சீனப் பிரதிநிதிகள் பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்தநாள் இந்தப் பிரச்னை மீண்டும் விவாதிக்கப்பட்டுள்ளது. இறுதியாக சபையின் பெரும்பாலான ஆதரவுடன் சரணாலயம் திட்டம் தொடர்பாக பூட்டானுக்கு நிதி வழங்குவது உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் இத்தகைய நிலைப்பாடுகள் பலருக்கும் அதிருப்தி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read: `அமெரிக்கா.. இந்தியா.. தைவான்.. ஹாங்காங்!’ - போருக்குத் தயாராகச் சொல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்



source https://www.vikatan.com/news/world/china-claims-bhutans-sakteng-wildlife-sanctuary

சீர்காழி அதிர்ச்சி: பழிவாங்க ஃபேஸ்புக்கில் போட்டோ பதிவிட்ட காதலன்! -தீக்குளித்த காதலி

காதலித்தபோது எடுத்த புகைப்படங்களைக் காதலன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாலும், வீடு புகுந்து தன்னையும், தன் சகோதரியையும் தாக்கியதாலும் அவமானம் தாங்க முடியாமல் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சீர்காழியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உதயபிரகாஷ் சுபஸ்ரீ

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் ஊராட்சி ராதாநல்லூரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகள் சுபஸ்ரீ. கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவந்த சுபஸ்ரீ, படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிஷியன் உதயபிரகாஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், உதயபிரகாஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரிடம் பேசுவதை கடந்த சில நாள்களாகத் தவிர்த்துள்ளார். இதையடுத்து, உதயபிரகாஷ் சுபஸ்ரீயுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனால், உதயபிரகாஷுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்தியுள்ளார் சுபஸ்ரீ.

Also Read: `மனைவி மீது சந்தேகம்; குடும்பத்துக்கே தீ வைத்த ஊழியர்’ -சென்னையில் தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம்

இதனால் கோபமடைந்த உதயபிரகாஷ், கடந்த 24-ம் தேதி சுபஸ்ரீயின் வீட்டுக்குச் சென்று அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத் தட்டிக்கேட்ட சுபஸ்ரீயின் சகோதரி கர்ப்பிணியான கலைமதியையும், சுபஸ்ரீயையும் உருட்டுக்கட்டையைக் கொண்டு உதயபிரகாஷ் கடுமையாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

இதை அவமானமாகக் கருதிய சுபஸ்ரீ தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். எரியும் தீயோடு வீட்டைவிட்டு வெளியே அலறிக்கொண்டு ஓடிவந்தவரை, அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 85 சதவிகித தீக்காயங்கள் இருந்ததால் மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிருக்குப் போராடியவர், இன்று காலை உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மருத்துவமனை

இதுபற்றி சுபஸ்ரீயின் உறவினர்களிடம் பேசினோம். ``சீர்காழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உடலெங்கும் தீக்காய எரிச்சல் காரணமாய் நடந்த முழு விவரத்தையும் நீதிபதியிடம் சொல்லமுடியல. தானாகவே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டதாக மட்டுமே சுபஸ்ரீ கூறினாள். அதனடிப்படையில், சீர்காழி போலீஸார் தற்கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன்பின்னர், மயிலாடுதுறையில் அனுமதிக்கப்பட்ட சுபஸ்ரீயிடம் அன்று நடந்த கொடுமையை அவளிடம் கேட்டு அதை செல்போனில் படமாக்கியுள்ளோம். இதைப் போலீஸிடம் சொல்லியுள்ளோம். சுபஸ்ரீயின் உயிரிழப்புக்குக் காரணமான உதயபிரகாஷை கைது செய்து அவன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீரோடு கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``சீர்காழி நீதிபதியிடம் சுபஸ்ரீ கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இறந்துவிட்ட நிலையில், எஸ்.பி. உத்தரவின் பேரில் சுபஸ்ரீயை தற்கொலைக்குத் தூண்டியதாக உதயபிரகாஷ் மீது வழக்கு பதிந்து அவரைக் கைது செய்ய உள்ளோம் " என்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/young-woman-commits-suicide-near-sirkali

சாத்தான்குளம்: `தடயங்கள் அழிக்கப்படலாம்!’ -விசாரணையைத் தொடங்க சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவு

சாத்தான்குளம் காவல்நிலைய போலீஸாரின் தாக்குதலில் தந்தையும் மகனும் மரணமடைந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

சாத்தான்குளம் காவல் நிலையம்

சாத்தான்குளத்தில் இந்த வழக்கு விசாரணையை கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து வரும் நிலையில், அவருக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் ஒத்துழைக்க மறுத்ததாகவும், `உன்னால் ஒன்றும் செய்ய முடியாது' என்று காவலர் மகாராஜன் இழிவுபடுத்தி பேசியதாகவும், மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் நேற்று புகார் அளித்தார்.

Also Read: சாத்தான்குளம்: `உழைப்பைத் தவிர வேறெதுவும் தெரியாதுண்ணே!' -உதயநிதியிடம் கலங்கிய சகோதரி

இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டு பின்பு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். அவதூறாகப் பேசிய காவலர் மகாராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நீதிபதிகள்

இந்தநிலையில், மூவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இன்று காலை வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் மாஜிஸ்திரேட்டிடம் நடந்துகொண்ட விதத்துக்காக காவல்துறை தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கப்பட்டது.

மன அழுத்தத்தினால் அப்படிக் காவலர் நடந்துகொண்டதாக நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. `மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது' என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், அவமதிப்பு செய்த மூவரும் வழக்கறிஞர்கள் மூலம் தங்கள் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

``இந்த வழக்கில் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. ஜெயராஜ்-பென்னிக்ஸ் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் அவர்களுக்கு மோசமான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது” என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு, சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்படும் வரை நெல்லை சரக ஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? எனக் கேள்வி எழுப்பியது. `சி.பி.ஐ பலவித அனுமதிகளைப் பெற்று விசாரணை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

`அனைத்து காவல்துறையினரும் மோசமானவர்கள் அல்ல என்றாலும், ஒரு சிலரின் நடவடிக்கைகளால் இதுபோன்ற பிம்பம் ஏற்பட்டுவிடுகிறது’ எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஜெயராஜ்-பென்னிக்ஸ் முதல்நிலை பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.

நீதிமன்றம் வந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள்

தொடர்ந்து `அதனடிப்படையில் பார்க்கும்போது, சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருந்ததும், ஐ.பி.சி 302-வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யவும் முகாந்திரம் உள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சாட்சி அளிக்கையில் காவலர் ரேவதி மிகவும் அச்சமடைந்து காணப்பட்டதாக நீதித்துறை நடுவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

``பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கிக் காத்துள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை, ஒரு நொடிகூட வீணாகக் கூடாது. சி.பி.ஐ விசாரணையைத் தொடங்கும் முன் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிஐ எடுக்கும்வரை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும். நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி அனில்குமார் இன்றே விசாரணையை துவக்க வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madurai-hc-order-on-sathankulam-issue

கோவைச் சிறுவன்-எஸ்ஐ மோதல்: `2 வார அவகாசம்' -கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆணையம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், கோவை ரத்தினபுரி என்று அடுத்தடுத்து காவல்துறையின் கறுப்புப் பக்கங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதி பகுதியில், ஒரு தம்பதியினர் தள்ளுவண்டிக் கடை நடத்திவருகின்றனர். கடந்த 17-ம் தேதி இரவு 9 மணிக்கு, அங்கு போலீஸார் ரோந்துப் பணியில் இருந்தபோது, அந்த தள்ளுவண்டிக் கடையை மூடச் சொல்லியுள்ளனர்.

சிறுவன் போலீஸ்

Also Read: `போலீஸ் வேலை டு கொலை வழக்கு..!’- கோவை சிறுமி பாலியல் வழக்கில் தேடப்படும் மணிகண்டனின் பின்னணி

இதுதொடர்பாக, போலீஸாருக்கும் அந்தத் தம்பதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த போலீஸ் எஸ்.ஐ செல்லமணி, அவர்களை ஒருமையில் திட்டி, சம்பவத்தை வீடியோ எடுத்த போனையும் பிடுங்கியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்தத் தம்பதியின் 16 வயது மகன், எஸ்ஐ செல்லமணி கிளம்பும்போது, அவரது பைக் சாவியைப் பறித்துள்ளார். இதில், இன்னும் ஆத்திரமடைந்த செல்லமணி பைக்கில் இருந்து இறங்கி, அந்தச் சிறுவனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அருகில் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரியும், சிறுவனை லத்தியால் தாக்கியுள்ளார்.

சிறுவன் போலீஸ்

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த சிறுவனின் பெற்றோர், போலீஸிடமிருந்து தம் மகனை பாதுகாக்க, கதறியழுது பாசப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, போலீஸார் அந்தச் சிறுவனை ஜீப்பில் ஏற்றி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக, சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்த வீடியோ வைரலாகி, போலீஸாருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸ்

அதில், “16 வயது சிறுவனை போலீஸ் தாக்கிய விவகாரத்தில், ஆணையத்துக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். உங்களது பதிலை தபால் மூலம் தவறாமல் தெரிவிக்க வேண்டும். இதில், ஏதாவது தவறு நடந்தால் ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: `போலீஸுக்கு ஏன் இவ்வளவு கோபம்?' - வைரலான கோவைச் சிறுவன்-எஸ்.ஐ மோதல்



source https://www.vikatan.com/news/tamilnadu/shrc-notice-to-coimbatore-police-commissioner-over-cop-attacks-16-year-old-boy