Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

2020-ல் ஓடிடி-யில் கவனம் ஈர்த்த டாப் 16 இந்திய திரைப்படங்கள்! #Rewind2020

கொரோனா தொற்று காரணமாக லாக்டௌனில் திரையரங்குகள் மூடப்பட மக்களின் பொழுதுபோக்குக்கும், திரைத்துறைக்கும் ஆபத்பாந்தவனாக வந்தன ஓடிடி தளங்கள். தியேட்டரில் ரிலீஸாகாமல் படங்கள் நேரடியாக மக்களின் தொடுதிரைகளை வந்தடைந்தன. பல்வேறு சிக்கல்களால் முடங்கிக் கிடந்த சிறுபட்ஜெட் படங்களும் ஓடிடி-யில் வெளியாகி மக்களைச் சென்றடைந்தன. அப்படி இந்த வருடம் ஓடிடி-யில் வெளியாகி கவனம் ஈர்த்த படங்களின் பட்டியல் இது...
அந்தகாரம்

பகலில் நூலகத்தில் பணிபுரிகிறார் விழித்திறன் சவால்கொண்ட வினோத். நகரத்தின் மற்றொரு இடுக்கில் ஒருவித குற்றவுணர்ச்சியோடே காலத்தைக் கடத்தும் கிரிக்கெட் பயிற்சியாளராக அர்ஜுன் தாஸ். இன்னொருபக்கம் ஒரு அசம்பாவிதத்தில் குடும்பத்தை இழந்து தனிமையில் வாடும் மனநல மருத்துவர் குமார் நடராஜன். வெளிப்பார்வைக்கு சற்றும் தொடர்பில்லாத இந்த மூவரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய சரடு பிணைக்கிறது. அதனால் ஏற்படும் திக்திக் தருணங்களை இருட்டின் அதிகாரத்தோடு சொல்லிச் செல்கிறார் அறிமுக இயக்குநர் விக்னாராஜன். சிக்கலான கதைசொல்லல், அதற்குள் ஒளிந்திருக்கும் ட்விஸ்டுகள், ஒவ்வொன்றையும் காரணத்தோடு அவிழ்க்கும் திரைக்கதை என முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்தார் விக்னாராஜன். அந்தகாரம் இந்த ஆண்டு மிஸ் செய்யக்கூடாத த்ரில்லர்.

க பெ ரணசிங்கம்

வளர்ச்சி அரசியலின் பேரால் உறிஞ்சப்படும் தண்ணீருக்காக உரிமை தாகத்துடன் போராடும் போராளி ரணசிங்கம், குடும்பத்தைக் காப்பாற்ற துபாய்க்கு வேலைக்குச் செல்கிறார். திடீரென ஒருநாள் கலவரத்தில் அவர் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட, தன் கணவரின் சடலத்தைப் பெற துருப்பிடித்த அரசு இயந்திரங்களுடன் ‘ம/பெ அரியாநாச்சி’ நடத்தும் போராட்டம்தான் கதை. வளைகுடா நாடுகளில் வேலைக்குச் செல்பவர்களின் குடும்பம் அனுபவிக்கும் துயரங்களை ராமநாதபுரத்து வெயில் வாசனையுடனும் அரசியல் அடர்த்தியுடனும் முதல் படத்தில் பதிவுசெய்து கவனம் ஈர்த்திருந்தார் பெ.விருமாண்டி. சில குறைகள் இருந்தாலும் இதுவரை தமிழ் சினிமா பேசாத கதைக்களத்தைத் துணிச்சலுடன் பேசியதற்காக ‘க/பெ ரணசிங்க’த்துடன் கைகுலுக்கலாம்!

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்றாலும் புனைவிற்கான சுதந்திரத்தையும் ஒரேயடியாக எடுத்துக் கொள்ளாமல் தோல்விக்கு மேல் தோல்வி என முடிந்தவரை ஹீரோயிச திரைக்கதையைத் தவிர்த்ததற்கு இயக்குநர் சுதாவைப் பாராட்டலாம். கடைசியில் வெற்றி யாருக்கு என முன்பே தெரிந்திருந்தாலும் அதை சுவாரஸ்யமாகச் சொன்னவிதத்தில் கவர்கிறார் இயக்குநர். விமானப் பயணம் என்ற ‘ஏ’ கிளாஸ் கருவில் சென்டிமென்ட், காதல், நட்பு என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து பி, சி சென்டருக்குமான படமாகவும் மாற்றியதில் வெற்றிபெற்றிருக்கிறது படக்குழு. அந்நியத்தன்மை எழாமல் இருக்க உதவின`உறியடி' விஜயகுமாரின் வசனங்கள். சின்னச் சின்னக் குறைகளைக் களைந்துவிட்டுப் பார்த்தால், கேப்டன் மாறனுக்கு மட்டுமல்ல, தளர்ந்தபோயிருந்த தமிழ் சினிமாவிற்கும் மிகத் தேவையான வெற்றி இந்த ‘சூரரைப் போற்று.’

ராத் அகேலி ஹை

செல்வாக்கு மிக்க குடும்பத்தில் நடக்கும் பெரிய மனிதரின் கொலையும், அதற்கான காரணங்களையும் முடிச்சுகளால் சுவாரஸ்யமாக்கியது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருந்த 'ராத் அகேலி ஹை' திரைப்படம். குற்றமும், காதலுமென இரு தளத்தில் பயணிக்கும் அடர்த்தியான த்ரில்லர் கதையை புரியும்படி தன் அறிமுக படத்திலேயே இயக்கியிருக்கிறார் ஹனி ட்ரிஹான். யார் கொலை செய்திருப்பார்கள் எனும் ̀அதே கண்கள்' டைப் கதைதான். இணையத்திரை த்ரில்லர்கள் எல்லாம் 100 நிமிடங்களுக்குள் இருக்கும் காலமிது. 150 நிமிடங்கள், அதில் மான்டேஜ் பாடல்கள் என 'கதை சொல்லு ராம்' நிலையில் நகர்ந்த திரைக்கதைதான் படத்தின் வில்லன். ஒரு ஸ்லோ பர்ன் த்ரில்லராக 'ராத் அகேலி ஹை'யை பார்க்கலாம்.

ஒரு பக்க கதை

சில ஆண்டுகள் தாமதம்தான் என்றாலும், ஃபிரெஷ்ஷாகவே இருந்தது பாலாஜி தரணிதரனின் `ஒரு பக்க கதை'. ஆணின் துணையில்லாமல் பிறக்கும் அதிசயக் குழந்தையைக் கடவுளாக்கி அபகரிக்க நினைக்கும் மதத்தின் தந்திரத்தை நகைச்சுவையுடனும் உணர்வு பூர்வமாகவும் சுட்டிக் காட்டியது இந்தத் திரைப்படம். சாதாரண மனிதர்கள், அசாதாரண நிகழ்வுகள், அதையொட்டிய நகைச்சுவை, சின்னச் சின்னக் குழப்பங்கள் ஆகியவற்றைத் தனக்கான டெம்ப்ளேட்டாக உருவாக்கியிருந்தார். ஆனால், அவரின் கிளிஷேவான நீண்ட நெடிய டிராலி ஷாட்கள், தொடர்ந்து ரிப்பீட்டாகும் காட்சிகள், அதீத க்ளோஸ்அப் போன்றவை இதிலும் விரவிக்கிடப்பது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆன்மிக அரசியலைச் சாடியிருப்பதும் அதைப் பிரசாரமாக இல்லாமல் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யமான படமாகத் தந்த வகையில் ஒரு பக்க கதை, பக்கா கதை!

Axone

டெல்லியில் வசிக்கும் புலம்பெயர்ந்த வட கிழக்கு மக்களின் ஒரு நாள் வாழ்க்கையைப் பேசியது 'அக்கியோன்'. தங்களின் தோழிக்காக, ஒருவித கடுமையான வாடை வரும் வட கிழக்கு உணவான அக்கியோனை சமைக்க வேண்டும். ஆனால், அதற்கு வரும் இடையூறுகளும், வட கிழக்கு மக்களை அர்பன் வாழ் டெல்லி மக்கள் பார்க்கும் பார்வையும்தான் கதை. நம்முடன் இருக்கும் மனிதர்களின் உணவுமுறைகளையும், மக்களையும் புரிந்துகொள்ளாமல் நாம் ஏளனம் செய்யும் போக்கைக் கண்டித்து எடுக்கப்பட்டு இருக்கும் 'அக்கியோன்' மிக முக்கிய முயற்சி.

தில் பெச்சாரா

2020-ல் சுஷாந்த் சிங்கின் தற்கொலை நாட்டையே உலுக்கிய ஒன்றாகிப்போனது. அவரின் தற்கொலைக்குப் பிறகு அவரின் கடைசி படமான 'தில் பெச்சாரா' ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக, அதுவும் அனைவரும் இலவசமாகப் பார்க்கும்படி வெளியானது. ஆங்கிலத்தில் வெளியான அமரக்காதல் கதையான 'The Fault In Our Stars' படத்தையும் அதன் மூலக்கதையான புத்தகத்தையும், பாலிவுட் தன் பாணியில் இங்கே ரீமேக் செய்திருக்கிறது. தைராய்டு கேன்சரால் ஆக்ஸிஜன் சிலிண்டருடனே சுற்றும் கிஸி பாசுவும், எலும்புப் புற்றுநோயால் ஒரு காலை இழந்த ரஜினி ரசிகன் மன்னி என்கிற இமானுவேல் ராஜ்குமார் ஜூனியரும் காதலில் விழுகிறார்கள். ஒரு முடிவற்ற பாடல் கிஸி பாஸுவைத் துரத்த, அந்த இசையமைப்பாளரைத் தேடிப் பிடிக்க மன்னி உதவுகிறான். கூடவே பார்வையை இழந்துவரும் மன்னியின் நண்பனுக்காக அவனும் கிஸியும் ஒரு குறும்படத்தில் நடிக்கிறார்கள். தவிர்க்க முடியாத மரணம் மன்னி - கிஸி வாழ்வை மட்டும் விட்டுவிடுமா என்ன? சுஷாந்த்தின் மரணத்தோடு பொருந்திப் போகிற பல காட்சிகளை உள்ளடக்கிய படமாக இது இருந்ததால் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் ஏகப்பட்ட உணர்வுகளை இது கிளறிவிட்டது எனலாம். அதேபோல் ரஹ்மானின் இசை பெரிய டிரெண்டு ஆகவில்லை என்றாலும், சில பாடல்கள் படத்துடன் பார்க்கையில் கலங்கச் செய்தன. என்னதான் அசல் படைப்புக்கு நிகராக இது அமையவில்லை என்றாலும் சுஷாந்த் என்ற ஒற்றை காரணி படத்துக்கு ஆகப்பெரும் பலம் சேர்த்தது. அந்த வகையில் சுஷாந்த்துக்கான இறுதி அஞ்சலியை, பாலிவுட் சுஷாந்தை வைத்தே கொடுத்தது நெகிழ்ச்சியானதொரு நிகழ்வு!

லூடோ

ஹைப்பர்லிங்க் சினிமாக்கள் இந்திய அளவிலேயே மிகவும் குறைவு. அதிலும் ஹிட் ஆவது வெகு சொற்பம்தான். இந்தப் பட்டியலின் லேட்டஸ்ட் என்ட்ரி அனுராக் பாசுவின் 'லூடோ'. கிட்டத்தட்ட நூறாண்டுகளாக சினிமாவில் பேசப்படும் அதே 'எது தர்மம் - எது அதர்மம்' வகை கதைதான். ஆனால் அதை லூடோ ஆட்டத்தைப் போல நான்கு கதைகள் வெவ்வேறு மூலைகளிலிருந்து தொடங்கி நடுநடுவே ஒன்றை மற்றொன்று கடந்து இறுதியாக சுபம் போட்டு முடிக்கிறார் அனுராக். அபிஷேக் பச்சன், ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, ஃபாத்திமா சனா ஷேக், சன்யா மல்ஹோத்ரா என நடிகர்கள் தேர்விலேயே பாதி கிணறு தாண்டிவிட்டார் இயக்குநர். மீதிக்கிணறு தாண்ட காமெடி நிறையவே கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவும் அனுராக்கே செய்திருப்பதால் கலர்ஃபுல்லாய் மின்னுகின்றன காட்சிகள். சில க்ளிஷேக்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒரு ஜாலியான கமர்ஷியல் காமெடி படம் இந்த 'லூடோ'.

Welcome Home

'இதயம் பலவீனமானவர்கள் இந்தப் படத்தை பார்க்கவேண்டாம்' என்கிற டிஸ்க்ளையமரோடுதான் படத்தின் ட்ரெய்லரே வெளியிடப்பட்டது. 'ஏதாவது பப்ளிசிட்டி ஸ்டன்ட்டா இருக்கும்' என நினைத்தவர்களை 'இல்லை' என மாற்றி நினைக்க வைத்தது படத்தின் கதையும் படமாக்கப்பட்ட விதமும். மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக அந்த வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு எல்லாம் பயணப்படுகிறார்கள் இரு பள்ளி ஆசிரியைகள். வழியில் ஒரே ஒரு வீடு மட்டுமே உள்ள கிராமம் ஒன்றும் இருக்கிறது. அந்த வீட்டின் கதவை இவர்கள் தட்டும் சமயம் வெளியே அடைமழை பிடித்துக்கொள்கிறது. வீட்டுக்குள் போயே ஆகவேண்டும், ஆனால் கதவு திறப்பதாயில்லை என இவர்கள் பரிதவிக்கும் நேரம் மெதுவாக திறந்து வழிவிடுகிறது வாசல். அக்கதவுகளுக்கு பின்னால் இருக்கும் பயங்கரங்களே கதை. கேட்பதற்கு பேய்க்கதை போல இருந்தாலும் பேய்ப்படம் அல்ல. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நமக்கு திக்திக் தருணங்களை பரிசளித்துக்கொண்டே இருக்க, மற்றொருபக்கம் ஆசிரியைகளாக வரும் காஷ்மீரா இரானியும், ஸ்வர்தா திகலேயும் படத்தைத் தூக்கிச் சுமக்கிறார்கள். வன்முறைகள் நிறைந்த 18 பிளஸ் படம் இது. ஆனால் ஒரு சிறப்பான த்ரில்லர் அனுபவம்.

ஷகுந்தலா தேவி

பெங்களூரில் வறுமை சூழல் வாழ்க்கையில் பிறக்கும் சகுந்தலாதேவிக்கு, சிறு வயதிலேயே கணிதத்தின் மீதான ஆர்வம் வருகிறது. ஒரு ஷணத்தில் அவரால் எந்த சாதாரணமான கணக்குக்கும் பதில் சொல்ல முடிகிறது. ஷகுந்தலா தேவியை கணித மேதையென பலர் அறிந்திருந்திருப்பார்கள். அவரின் ஜோசிய நம்பிக்கைகளும், தன் பால் ஈர்ப்பாளர்கள் குறித்தான அவரின் புத்தமும் பலருக்கும் வெளியே தெரியாத விஷயங்கள். இந்திரா காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்ததைத் கூட பதிவு செய்யும் திரைப்படம், ஏனோ இவற்றை தொட்டும் தொடாமல் சென்றது சின்ன நெருடல். சகுந்தலா தேவியின் வாழ்க்கை சுவாரஸ்யங்களுக்காகவும், வித்யா பாலனின் அப்பழுக்கற்ற நடிப்புக்காகவும் பேசப்பட்டது ஷகுந்தலா தேவி!

கார்கோ

இறந்தபின்னர் கணக்குப் பார்த்து அடுத்த ஷிஃப்ட்டுக்கு ஆன்மாவை தயார் செய்யும் எமதர்மராஜா நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும். நெட்பிளிக்ஸில் வெளியான கார்கோ திரைப்படத்தின் ஒன்லைன் இதுதான். இறந்தவர்களின் உடல் கார்கோவில் வந்து இறங்க, அவர்களை கன்வின்ஸ் செய்து, மூளைச்சலவை செய்து, காயத்தை குணப்படுத்தி, அடுத்த பிறவிக்கு தயார் செய்யும் வேலை பிரஹஸ்தாவுடையது. பல ஆண்டுகளாக தனியாகவே வேலை பார்த்துப் பழகிய பிரஹஸ்தாவுக்கு புதிதாக ஒரு உதவியாளர் கிடைக்கிறார். அடுத்து என்ன என்பது மீதிக் கதை. கம்மியான பட்ஜெட்டில் இந்திய புராணங்களை சயின்ஸ் ஃபிக்‌ஷனுக்குள் நுழைத்து ஜாலியான திரைக்கதை மூலம் ஆச்சர்யப்படுத்தியிருந்தார் பெண் இயக்குநரான ஆரத்தி காதவ்.

சீரியஸ் மென்

இந்த உலகில் முன்னேற அனைவரும் ஏமாற்றுகிறார்கள் என்பதை நகைச்சுவைப் படமாக எடுத்திருந்தது 'சீரியஸ் மென்'. விண்வெளி ஆய்வாளர் அரவிந்த் ஆச்சார்யாவிடம் (நாசர்), உதவியாளராக வேலை பார்க்கிறார் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அய்யன் மணி (நவாஸூதீன் சித்திக்கி). நாசர், நவாஸுதீன் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருந்தான் சிறுவனான ஆக்‌ஷத் தாஸ். பத்திரிகையாளர் மனு ஜோசபின் நாவலை மையமாகக் கொண்ட படம் என்றாலும், ஜாதிய படிநிலைகள் பற்றிய புரிதல் போதாமையும், எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து விவாதம் செய்யும் விஷமத்தனமும் படம் முழுக்க விரவி இருந்தன. சர்ச்சைகள் இருந்தாலும், வாழ்க்கை போராட்டங்களின் தகிடுதத்தங்களைக் காட்டி சில இடங்களில் ரசிக்க வைத்தது சீரியஸ் மென்.

19-ம் நூற்றாண்டில் அப்போதைய பெங்கால் பிராந்தியத்தில் நடக்கும் கதை. திருமண உறவு என்றால் என்னவென்றே அறியாத 5 வயது புல்புல்லை வயதில் மூத்தவரான வசதிப்படைத்த ஒருவருக்குத் திருமணம் செய்துவைக்கின்றனர். மாப்பிள்ளையின் கடைசி தம்பி சத்யாவுக்குக் கிட்டத்தட்ட புல்புல்லின் வயது என்பதால் அவர்கள் இருவரும் நண்பர்களாக வளர்கின்றனர். இருவருக்கும் இடையே நெருக்கம் இருப்பதாய் உணரும் கணவன், தன் சகோதரன் சத்யாவை லண்டனுக்குப் படிக்க அனுப்பிவிடுகிறான். 20 வருடங்களுக்குப் பின் சொந்த ஊர் திரும்பும் அவன், இங்கே எல்லாம் தலைகீழாக மாறியிருப்பதை உணர்கிறான். ஊருக்குள் இரவானால் ஒரு விநோத சூனியக்காரி உலவுகிறாள். ஆண்களைக் குறிவைத்துக் கொல்கிறாள். யார் அவள், சூனியக்காரியா, மகா காளியா... விடைகளைத் தேடுகிறான் சத்யா. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இந்தப் படத்தைத் தயாரித்தது அனுஷ்கா ஷர்மா. புல்புல்லாக நடித்திருந்த திருப்தி டிமிட்ரி அட்டகாசமானதொரு நடிப்பை வழங்கியிருந்தார். 'விஸ்வரூபம்' வில்லன் ராகுல் போஸுக்கு இதில் டபுள் ரோல்! பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளைச் சாடும் இந்தப் படத்தில், முழுக்க முழுக்க ரத்த வண்ணத்தில் ஃபேன்டஸி இழையோடியது. நல்லதொரு திகில் படமாக இதை அணுகமுடியாது என்றாலும், கதைக்களம், சொன்ன மெசேஜ், நடிகர்களின் பங்களிப்பு, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்களுக்காகத் தாராளமாக ஸ்ட்ரீம் செய்யலாம்.

AK vs AK

40 வருடங்களாக பாலிவுட்டில் வலம்வரும் ஒரு பக்கா கமர்ஷியல் நடிகரும், சினிமா எனும் கலையைத் தன் வாழ்வாக நினைத்து, அதில் புதிய முயற்சிகளைத் தயங்காமல் செய்துவரும் ஒரு கிளாஸ் இயக்குநரும், நிஜ வாழ்வில் மோதிக்கொண்டால் எப்படி இருக்கும்? அனில் கபூரின் மகள் சோனம் கபூரை, அனுராக் காஷ்யப் கடத்திவிடுகிறார். விடிவதற்குள் மகள் இருக்கும் இடத்தை அனில் கண்டுபிடிக்க வேண்டும். ஆம், இதுதான் 'நிஜமான' ஒன்லைன். த்ரில், பரபரப்பு எல்லாம் தாண்டி, நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பாகப் படம் நகர்வது சுவாரஸ்யத்தைக் கூட்டியது. அனுராகுக்கும், அனில் கபூருக்கும் இருக்கும் தனிப்பட்ட பகை, பாலிவுட்டின் வாரிசு அரசியல், அனுராக் மீது தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனங்கள் என எல்லாவற்றையும் தன் வசனங்களால் சீண்டியிருக்கிறார் அனுராக் காஷ்யப். பலே சாரே! இப்படியொரு கதைக்கருவை உருவாக்கிய அவினாஷ் சம்பத்தும் அவருடன் இதற்குத் திரைக்கதை அமைத்து இயக்கவும் செய்த விக்ரமாதித்ய மோட்வானேவும் நிச்சயம் பாராட்டலாம். பிளாக் காமெடி வகையறாவான இந்தப் படம் ஒரு வித்தியாசமான, அதே சமயம் ஒரு பக்கா என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ்!

எல்லோரும் கொரோனா நாள்களில் முடங்கியிருந்த நேரத்தில் குறும்படம் எடுத்துக்கொண்டிருக்க, ஃபகத் பாசில் & குழு ஒரு முழு நீள த்ரில்லர் சினிமாவை எடுத்திருந்தார்கள். ஒரு த்ரில்லர், அதில் ஒரு சமூகப் பொறுப்புள்ள விஷயத்தை இணைத்தது என அட்டகாசமாக இதை எழுதி இயக்கி எடிட் செய்திருந்தார் மகேஷ் நாராயணன். ரோஷன் மேத்யூ காதலால் கசிந்துருகி மணமுடிக்கவிருக்கும் தர்ஷனா ராஜேந்திரன் சட்டெனக் காணாமல் யோய்விடுகிறார். இணைய வழியில்துப்புத் துலக்குவதில் கில்லாடியான ஃபகத் பாசில் அப்பெண்ணைக் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பது தான் 'C U SOON' படத்தின் கதை. கிரியேட்டிவிட்டிக்கு எந்த லாக்டெளனும் தடை விதிக்க முடியாது என்பதை அழுத்தமாய் நிரூபித்தது இந்த மலையாள சினிமா.

மிடில் கிளாஸ் மெலடீஸ்

மிடில் கிளாஸ் குடும்பங்களில் நிகழும் அன்றாடப் பிரச்னைகளைப் பற்றி ஜாலியாகப் பேசியது மிடில் கிளாஸ் மெலடீஸ். அப்படியே வசனங்களை மலையாளத்துக்கு மாற்றிவிட்டால் 'நமது அன்புடன் கிராமங்களிலிருந்து' ஒரு மலையாள சினிமா ரெடி. அந்த அளவுக்கு படம் இயல்பாக இருந்தது. மூட நம்பிக்கை எள்ளல்களைக்கூட எந்த சுளிப்பும் இல்லாமல் எளிதாக சொல்லியிருந்தார் இயக்குநர். 'சிங்கப் பெண்ணே' வர்ஷா பொல்லம்மாவைத் தவிர எல்லோருமே புது முகங்கள். விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த்துக்கு இது இரண்டாவது படம். கதையின் போக்கிலேயே வரும் செல்போன் கடைக் காதலி திவ்யாவும் அவ்வளவு அழகு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், மிடில் கிளாஸ் குடும்பங்களின் இயல்பான நகைச்சுவையைப் பேசிய விதத்தில் சிரிக்க வைத்தது இந்த தெலுங்கு சினிமா!



source https://cinema.vikatan.com/tamil-cinema/top-films-released-in-ott-2020-rewind2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக