Ad

வியாழன், 31 டிசம்பர், 2020

புதுச்சேரி: `பள்ளி முதல் கல்லூரி வரை..!’ எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்றது அரசு

தி.மு.கவுடன் கூட்டணி வைத்து 2016 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டத்தினை கொண்டு வந்தது. அத்துடன் அதற்கான கோப்புகளை ஆளுநர் கிரண் பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அந்தக் கோப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பி கிரண் பேடி அமைச்சரவைக்கு அனுப்பி வைப்பதும், அவர்கள் விளக்கம் கொடுத்து மீண்டும் அவருக்கு அனுப்பி வைப்பது என ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

முதல்வர் நாராயணசாமி - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி

அந்த கோப்பு குறித்து பேச்சு எழும்போதெல்லாம் அமைச்சரவைக்கு அனுப்பிவிட்டேன் என்று கிரண் பேடி கூறுவதும், ஆளுநரிடம் கிடப்பில் கிடக்கிறது என்று அமைச்சரவை தரப்பிலும் மாறி மாறி தெரிவித்துவந்தனர். ஒருகட்டத்தில் இது தொடர்பாக அதிக விமர்சனம் எழுந்த நிலையில், கோப்பை அப்போது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார் கிரண் பேடி. நான்கரை ஆண்டுகள் முடிவடைந்து இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தற்போது அந்த கோப்புக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ``எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி தொடங்கி கல்லூரி வரை முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தும் புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

இதன்மூலம் தகுதி வாய்ந்த எஸ்.சி, எஸ்.டி குழந்தைகளின் கல்விக் கட்டணம், டியூஷன் கட்டணம், ஆய்வகம், புத்தகம் மற்றும் சீருடைக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும். அதேபோல இந்தத் திட்டத்தில் பேருந்து, உணவகம், பள்ளி மற்றும் கல்லூரிகளின் நன்கொடைக் கட்டணம் இடம்பெறாது. இந்தத் தொகை தகுதியுடைய குழந்தைகள் படிக்கும் கல்வி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அத்துடன் தனியார் பள்ளிகளை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பும் இதில் தரப்பட்டிருக்கிறது.

Also Read: பி.இ படிப்பில் சேர எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் தகுதி மதிப்பெண்ணை உயர்த்தியது தமிழக அரசு!

பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்கன நிதி வழங்கப்படுவதை உறுதி செய்யும்படி நலத்துறை மற்றும் நிதித்துறைக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 6,777 எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் பயன்பெரும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டொன்றுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/education/puducherry-governments-new-scheme-for-sc-st-students

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக