ரன்களின் அருமையை அடிலெய்டில் உணர்ந்துகொண்ட இந்திய அணி, மெல்போர்னில் ஒவ்வொரு ரன்னையும் பொன்னாய்ச் சேகரிக்க ஆட்டம் இந்தியாவின் கைகளில் வந்து சேர்ந்துள்ளது.
நேற்று பெளலிங்கால் ஆஸ்திரேலியாவை மிரள வைத்த இந்தியா, இன்று பேட்டிங்கால் பதற வைக்க, வாங்கிய அடியை திருப்பிக் கொடுப்பதற்கான முதல் அடியை, ராட்சச அடியாய் எடுத்து வைத்துள்ளது இந்தியா! சதம் கடந்து ரஹானே ரட்சகனாய் மாற, முதல் இன்னிங்சில் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 82 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது இந்தியா.
வலுவான முன்னிலை எடுக்கும் உத்வேகத்துடன் நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தது இந்தியா. இன்று ஆட்டக்களம் சில ஓவர்களுக்கு பேட்டிங் செய்யக் கடினமானதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்ததால், கில்லும் புஜாராவும் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வி இருந்தது. ஆஸ்திரேலியாவோ, வழக்கம் போல, தொடக்கத்திலேயே தாக்கி வீழ்த்தும் தந்திரத்தைக் கையிலெடுத்தது.
முதல் பந்திலிருந்தே மிரட்ட முடிவு செய்த ஆஸ்திரேலியா, ஷார்ட் லெக், லெக் கல்லி என ஃபீல்டிங் வியூகங்களால் சுற்றித் தாக்க, ஆட்டத்தின் முதல் பந்தே புஜாரா அடிக்க முயற்சி செய்து, பந்து பெய்னின் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. உடனே எழுந்த அப்பீலுக்கு அம்பயர் 'இல்லை!' என்று மறுக்க, ரிவ்யூவுக்குப் போனார் பெயின். அது 'நாட் அவுட்' என்று அறிவிக்கப்பட, ரசிகர்களுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. எனினும் பெய்ன் அண்ட் கோ கொஞ்சமும் தளரவில்லை.
அடுத்தடுத்து அம்புகள் போல கம்மின்ஸ், ஹேசில்வுட்டிடம் இருந்து ஏவுகணைத் தாக்குதலாய், விக்கெட் எடுப்பதற்கு முழுத் தகுதி உள்ள பந்துகள் வந்து கொண்டே இருந்தன. இந்தியாவின் ஸ்கோரோ 36 என்று நெடுநேரம் இருந்து ரசிகர்களைப் பதற்றமடையச் செய்து கொண்டே இருந்தது. நல்லவேளையாக, கில் அதனை ஒரு பவுண்டரி மூலமாய் 40 ரன்கள் ஆக்க, ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
போட்டிகளின் போது கில் வழக்கமாய் வைத்திருக்கும் 'லக்கி டவல்' இன்று அவரிடம் இல்லை. ஆனால் அதிர்ஷ்டம் அவருடனேதான் நேற்றிலிருந்து பயணித்தது. இன்று மட்டும் இரண்டு முறை அவரது கேட்ச் தவற விடப்பட்டது! புஜாராவுக்கும் அதேதான் நடந்தது. இரண்டு முறை கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன. ஆனாலும் இந்த இருவரணி கிடைத்த அந்த மூன்றாவது வாய்ப்பை கனகச்சிதமாய்ப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். நேற்றைய ஆட்ட நேர இறுதியில், 28 ரன்கள் எடுத்திருந்த கில், அறிமுகப் போட்டியாகவே இருந்த போதிலும், தன்னுடைய ஷாட் தேர்வுகள் மூலமாய் இன்று ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் அதனைப் பொய்யாக்கி, கம்மின்ஸ் வீசிய பந்தில் தவறான ஷாட் ஆடி, பெய்னிடம் கேட்ச் கொடுத்து, 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹனுமாவா, ரஹானேவா யார் வருவார்கள் என்ற எதிர்ப்பு எழுந்த தருணத்தில், ரஹானே உள்ளே வந்தார்.
புஜாராவும், ரஹானேவும் இணைந்து டிராவிட் - லட்சுமணன் போன்ற ஒரு அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தப் போகிறார்கள் என்ற எழுந்த எண்ணத்தை பொய் ஆக்கினார், புஜாரா. இன்றைய போட்டியின் தொடக்கத்தில் இருந்து, பதற்றத்துடன் நம்பிக்கையில்லாமலே ஆடிக் கொண்டிருந்தார் புஜாரா. அவரைச் சிக்க வைக்க, கம்மின்ஸ், அடிலெய்டு போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், செய்ததைப் போல, டாப் ஆஃப், ஆஃப் ஸ்டம்ப் லைனில் பந்து வீசி பொறியை வைத்தார். கொஞ்சம் கூட மாற்றமின்றி, கடந்த போட்டியில் செய்த அதே தவற்றைத் திரும்பச் செய்து, அதே கம்மின்ஸ் பந்தில் அதேபோலவே பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா. கோலியும் இல்லாத நிலையில், புஜாராவுக்கு இருக்கும் பொறுப்பை, அவர் உணர்ந்து ஆடி இருக்கலாம். அடுத்து உள்ளே வந்தார் ஹனுமா விஹாரி.
முதல் ஒரு மணி நேரத்தில், செட்டில் ஆகி இருந்த இரண்டு பேட்ஸ்மேன்களை வெளியேற்றிய ஆஸ்திரேலியா, உணவு இடைவேளைக்கு முன் இன்னும் ஒரு விக்கெட்டை எடுத்து, இந்தியாவை இக்கட்டுக்குத் தள்ள எல்லா முயற்சியும் செய்தது. ஆனாலும் இந்தக் கூட்டணி, விக்கெட்டை இழந்து விடக் கூடாது, அது அழுத்தத்தை அதிகரிக்கும் என்ற கவனத்துடன், உணவு இடைவேளையைக் கடந்தும் ஆடிக் கொண்டிருந்தது. பார்னர்ஷிப்பில் அரைச்சதத்தைக் கடந்த இவர்களது கூட்டணியை, லயான் 44.4-வது ஓவரில் விஹாரியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பிரிக்க, பன்ட் உள்ளே வந்தார்.
வந்தது பன்ட்டா அல்லது பட்டாசா என சந்தேகப்படும் அளவுக்கு, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் கொஞ்ச நேரம் ஆஸ்திரேலியாவை மிரள வைத்தார் அவர். விக்கெட் எடுக்கும் பந்துகளை வீசிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியர்களின் பெளலிங், ஃபீல்டிங் பிளான்களை எல்லாம் தவிடுபொடியாக்கி, தனது பேட்டின் அசைவுக்கு அவர்களை ஆட வைத்து, ஆட்டத்தின் போக்கை மாற்றிக் காட்டினார். அட்டாக்கிங் மோடில் இருந்து டிஃபென்சிவ் மோடுக்கு மாறிப் பணிந்தது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவில், இதற்குமுன்பு, விவ் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட மூன்று வீரர்கள் மட்டுமே தொடர்ந்து 8 போட்டிகளில், 25+ ரன்களை எடுத்த சாதனைக்குச் சொந்தமாய் இருந்தனர். அதனை இன்று, பன்ட்டும் நிகழ்த்த, அங்கிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸை அவர் ஆடப் போகிறார் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆனாலும் ஸ்டார்க்கின் வேகத்தில் சிக்கிய பன்ட், பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது ஸ்டார்க்கின் 250-வது விக்கெட் என்பதும், விக்கெட் கீப்பராக பெய்னின் 150-வது விக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா, ஆஸ்திரேலியாவைவிட 22 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில், தனது 50-வது டெஸ்ட் போட்டியை ஆட, ஜடேஜா உள்ளே வந்தார்.
விஹாரியுடனான கூட்டணியை தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்ட ரஹானே, பன்ட்டுடன் ஆட்டத்தைத் தொடர்ந்த போது, தனது ரன் விகிதத்தையும் கூட்டிக் கொண்டார். நிதானம், மன உறுதி, தன்னம்பிக்கை அத்தனையும் இன்று அவரது ஆட்டத்தில் நிரம்பி வழிந்தது. ஜடேஜா உள்ளே வந்த சில ஓவர்களில், தேநீர் இடைவேளையுடன் மழையும் குறுக்கிட இதனால் போட்டி தடைபடுமா என்ற எண்ணம் எழுந்தது. ஆனால், மழைமேகங்கள் மறைய, சற்று தாமதமாக போட்டி தொடர்ந்தது.
ஏற்கெனவே விஹாரி மற்றும் பன்ட்டுடன் தலா 52 மற்றும் 57 ரன்கள் பார்னர்ஷிப் போட்டிருந்தார், ரஹானே. எனவே களத்திலுள்ள ரஹானே - ஜடேஜா இடையிலும், ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் உருவாகும் பட்சத்தில், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆஸ்திரேலியா உணர்ந்திருந்தது. எனவே இந்தக் கூட்டணியை உடைக்க எல்லா வழிகளிலும் முயன்றனர்.
மறுமுனையிலோ, கடைசியாக இருக்கும் இரு பேட்ஸ்மேன்கள் நாமிருவருமே, நாம் சேர்க்கும் ஒவ்வொரு ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் நமது வேலையை இலகுவாக்கப் போகிறதென்பதை புரிந்து வைத்திருந்த ரஹானேவும், ஜடேஜாவும் ஒவ்வொரு பந்துகளையும் மிக கவனத்துடன் எதிர்கொண்டனர். ஒவ்வொரு ரன்னையும் பொன்னாய்ச் சேகரிக்கத் தொடங்கியது இந்தக் கூட்டணி. சரியான பந்துகள் சமாளிக்கப்பட்டன அல்லது தவிர்க்கப்பட்டன. தவறான பந்துகள் தண்டிக்கப்பட்டு ரன்களாக்கப்பட்டன.
முன்னதாய் பவுண்டரியுடன் அரைச்சதத்தைத் தொட்ட ரஹானே, அதே ஸ்டைலில், பவுண்டரியுடன் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரைத் தாண்டி, அணியை முன்னிலைக்கு எடுத்துச் சென்றார். கொஞ்சமும் கருணையின்றி எதிரணி பெளலர்களின் பொறுமையை ஜடேஜாவுடன் சேர்ந்து சோதித்த ரஹானே, சதத்தைத் கடந்ததும் பவுண்டரியுடன்தான். இது மெல்போர்னில் அவரது இரண்டாவது சதம் ஆகும். இதற்கு முந்தைய அவரது சதமும், 2014-ம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட்டின் போது வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப் பந்திலாவது விக்கெட் விழுமென்ற ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது! வலதுகை இடக்கை கூட்டணி ரஹானே - பன்டுக்கும், அதன்பின் ரஹானே ஜடேஜாவுக்கும் நன்றாகவே கை கொடுத்தது. 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தும் தொடர்ந்த இந்தக் கூட்டணி அடிக்கின்ற ஒவ்வொரு ரன்னும் ஆஸ்திரேலியாவை நெருக்கடியை நோக்கி நகர்த்துவதாகவே இருந்தது. ரஹானேவுக்குக் கொஞ்சம் கூட குறைவின்றி ஜடேஜாவின் இன்னிங்ஸும், இன்று சிறப்பாகவே இருந்தது. 40 ரன்களை எட்டி இருந்த அவர், தான் ஏன் 2016-ல் இருந்து உலகின் சிறந்த ஆல் ரவுண்டராகக் கொண்டாடப்படுகிறார் என்பதற்கான விளக்கத்தைக் கொடுத்தார்.
82 ரன்களுடன் இந்தியா முன்னிலை வகிக்கையில், ஆட்டம் மழையால் தடைபட, இன்றைய போட்டி முடிவுக்கு வந்தது.
முதல் மற்றும் இரண்டாவது செஷன்களில் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவால், கடைசி செஷனை தொட்டுக் கூடப் பாரக்க முடியாமல், மொத்தமாய் ஆதிக்கம் செலுத்தியது இந்தியா. விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு, ஆஸ்திரேலியா விட்ட கேட்சுகளின் எண்ணிக்கை போட்டியை அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டது.
முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில், கோலியின் ரன் அவுட்டால் போட்டி ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாகப் போவதற்கு ஒரு காரணமாக இருந்த அதே ரஹானே, இன்று இந்திய அணி, 82 ரன்கள் முன்னிலையுடன் நிமிர்ந்து நிற்கவும் காரணமாக இருந்தார்.
ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்துள்ள நிலையில், இந்தியா மிக வலுவான நிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தையும் இந்தியா தனதாக்கும் பட்சத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். மெல்போர்னில் மையம் கொண்டுள்ள ரஹானே புயல் சூறாவளியாக மாறுமா என்பதை காத்திருந்து நாளை பார்க்கலாம்.
source https://sports.vikatan.com/cricket/rahane-steers-indias-innings-with-a-century
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக