விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான திருமாவளவன் நேற்று அப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பரங்கிப்பேட்டை அருகே உள்ள பால்வாத்துண்ணான் கிராமத்தில் வெள்ள பாதிப்பின்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதற்கு முன்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நிவர், புரெவி புயலால் கடலோர மாவட்டங்கள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாகக் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் 94 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
பாதிப்புகளை மத்தியக் குழு ஆய்வு செய்துவிட்டு சென்று விட்டது. எவ்வளவு பாதிப்பு, எவ்வளவு நிதி தேவை, எவ்வளவு நிதி வழங்க பரிந்துரைக்கப்பட இருக்கிறது என்பது போன்ற எந்த விவரங்களும் இதுவரை தெரியவில்லை. தமிழக முதலமைச்சரும் இதில் முனைப்புக் காட்டவில்லை. ஆனால் அதற்கு மாறாக பொங்கல் பரிசாக ரூ.2,500 என அறிவித்து, அதையும் ஆளுங்கட்சியினர் மூலமே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பொங்கல் பரிசை அதிகாரிகளைக் கொண்டுதான் வழங்க வேண்டும். நிவாரண உதவியாக ரூ.10,000 கூட வழங்கட்டும். ஆனால், அதில் அரசியல் ஆதாயம் தேடும் எண்ணத்தோடு, அரசு பணத்தை எடுத்து ஆளுங்கட்சியின் பணத்தைப்போல மக்களுக்கு வழங்குவது ஊழலிலும் மோசமானதாகும்” என்றார்.
தொடர்ந்து கட்சி தொடங்க மாட்டேன் என்ற நடிகர் ரஜினிகாந்தின் முடிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ``அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என ரஜினிகாந்த் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்பே, நான் அவரை சந்தித்தபோது அரசியல் ஆர்வம் குறித்தும், உடல்நிலை குறித்தும் ரஜினி என்னிடம் பேசினார். அப்போதும் ஒருவிதத் தயக்கத்துடனேயேதான் பேசினார். அதன்பிறகு ரசிகர் மன்றங்களின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வந்தார்.
`அண்ணாத்த’ படப்பிடிப்பில் ஹைதராபாத்தில் இருக்கும்போது அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கி உள்ளனர். மன அழுத்தம் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. விருப்பத்திற்கு மாறாக கட்சி தொடங்க அழுத்தம் கொடுத்தவர்கள், இப்போது ஏமாந்து போயிருக்கின்றனர். குறிப்பாக பா.ஜ.க, சங்பரிவார அமைப்புகள் ஏமாந்திருக்கின்றன. அரசியலில் நீங்கள் இயக்குநராக இருக்க வேண்டும். யாரும் உங்களை இயக்குபவர்களாக இருக்கக் கூடாது என நான் ஏற்கெனவே அறிவுரை கூறி இருந்தேன்.
கட்சி தொடங்குவது தொடர்பாக அவர் ஊசலாட்டத்தில்தான் இருந்தார். 1996-ம் ஆண்டு முதலே அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அவரை அரசியலுக்கு இழுப்பதில் கூடுதல் கவனத்தைச் செலுத்துகின்றன. ஏதோ ஒரு அச்சுறுத்தலுக்கு இணங்கியே அவர் கட்சி ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளது தெரிகிறது. அவர் மதவாதியாக செயல்பட முடியாது என்பதால்தான், இப்போது இந்த முடிவை எடுத்திருக்கிறார் என நினைக்கிறேன்.
Also Read: `யாருடைய குரலைப் பிரதிபலிக்கிறார் ரஜினிகாந்த்?!' - நெல்லையில் கொதித்த திருமாவளவன்
இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. ரஜினி கட்சி தொடங்காததால் அ.தி.மு.க-வுக்கு ஏற்பட இருந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டு இருப்பதாகக் கருதுகிறேன். கட்சி தொடங்கி இருந்தால் அ.தி.மு.க-வை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்திருப்பார்கள். இந்த நேரத்தில் ரஜினி கட்சி தொடங்காததால் அ.தி.மு.க தப்பிப் பிழைத்திருக்கிறது. ரஜினி கட்சி தொடங்கினாலும், அவர் தொடங்காமல் விட்டிருந்தாலும் தி.மு.க கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தி.மு.க கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய அளவுக்கு பலமான கூட்டணியாக இருக்கிறது” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/thirumavalavan-speaks-about-rajinis-announcement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக