"நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்குத்தான் தெரியும்" - மூன்று பக்க அறிக்கை மூலம் நேரடி அரசியலில் இருந்து அரசியலுக்கு வராமலேயே விலகுவதாக அறிவித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி ரஜினி, ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அவரின் குடும்பத்தினர், 'அரசியல், சினிமா என எதுவுமே இப்போது வேண்டாம்' என அவரிடம் கெஞ்சியபடியே இருந்தனர்.
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/c41fcb69-f121-4256-9338-22ad4912de44/20201229_122554.jpg)
Also Read: "அப்பா, இப்போ அரசியல் வேண்டாம்" - கெஞ்சும் மகள்கள்... ரஜினியின் முடிவு என்ன?! #Rajini
ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சிவியும், "நாங்களே சினிமா ஷூட்டிங்கை இன்னும் முழுமையாக ஆரம்பிக்கவில்லை. நீங்கள் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள். கொரோனா நோய் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கியப்பிறகு நடிக்க ஆரம்பிக்கலாம்" என ரஜினியிடம் பேசியிருக்கிறார். ஹைதரபாத்தில் ரஜினிக்குத் தேவையான உதவிகளை சிரஞ்சிவி, மோகன் பாபு குடும்பத்தினர் செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் மருத்துவமனையில் ரஜினியுடன் இருந்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தொடர்ந்து ரஜினியின் மன அழுத்தத்தைப் பார்த்து மிகவும் கலங்கியிருக்கிறார். அவர் தொடர்ந்து, "அப்பா, அரசியல், சினிமா என இரண்டுமே இப்போது வேண்டாம். நீங்கள் இருந்ததால்தான் நாங்கள் சந்தோஷமாக இருப்போம். தயவுசெய்து சென்னைக்குப் போனதும் ஓய்வெடுங்கள். அரசியல் வேண்டாம்" எனத் தொடர்ந்து அழுதபடியே பேசியிருக்கிறார். இரண்டாம் மகள் செளந்தர்யா, மனைவி லதா, அண்ணன் சத்யநாரயணன் என குடும்பத்தினரின் அன்பு வேண்டுகோளை மீறி அரசியலுக்குப்போவதும், உடல்நிலை சீராக இல்லாதபோது ரிஸ்க் எடுப்பதும் பேராபத்தில் கொண்டுபோய் விடலாம் என்பதால் 'அரசியல் வேண்டாம்' என்கிற முடிவை ரஜினி எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
![](https://gumlet.assettype.com/vikatan/2020-12/cd0a73c4-0b5b-4d1a-b908-b0e5bfe5898d/20201229_122442.jpg)
உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் ஸ்ட்ரெஸ் கூடாது என மருத்துவர்கள் சொல்லியிருப்பதால், ரஜினியை இரண்டு நாட்களுக்கு செல்போன், டிவி என எதையும் பயன்படுத்தவேண்டாம் என குடும்பத்தினர் அன்புக்கட்டளை போட்டிருக்கிறார்கள். ரஜினிக்கு சமூகவலைதளங்களில் கணக்கு இருந்தாலும், அவர் நேரடியாக அவற்றைப் பார்ப்பது இல்லை. வாட்ஸ்அப் மூலமாகத்தான் மக்களின் கருத்துகள், மீம்கள் அவருக்கு அனுப்பப்படும். இப்போது அரசியல் விலகல் அறிவிப்பால் அவதூறு விமர்சனங்கள் அதிகம் இருக்கும் என்பதால் செல்போன், டிவி எதையும் பார்க்கவேண்டாம் என குடும்பத்தினர் சொல்லியிருக்கிறார்கள்.
குடும்பத்தினரின் அன்பு வேண்டுகோளை ரஜினி நிச்சயம் காப்பாற்றுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
source https://cinema.vikatan.com/tamil-cinema/rajini-quits-politics-because-of-familys-request
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக