Ad

திங்கள், 28 டிசம்பர், 2020

சரிந்த ஜி.டி.பி, முடங்கிய தொழில், திணறிய அரசு... 2020-ல் இந்தியப் பொருளாதாரத்தில் நடந்தவை என்ன?

கோவிட் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கோவிட் காலத்தில் எதிர்மறை வளர்ச்சி இருந்தாலும் கோவிட்டுக்கு முன்பும் இந்தியப் பொருளாதாரம் ஒன்றும் சிறப்பாக இல்லை என்றே சொல்ல வேண்டும். 2018-ம் ஆண்டு மார்ச் காலாண்டு ஜி.டி.பி வளர்ச்சி 8.2% என்ற அளவில் இருந்தது. ஆனால், அதன்பிறகு பொருளாதார வளர்ச்சி ஒவ்வொரு காலாண்டிலும் குறையத் தொடங்கியது. தொடர்ந்து எட்டு காலாண்டுகளாகச் சரிந்து 2020-ம் ஆண்டு மார்ச் காலாண்டில் 3.1% என்கிற அளவுக்கு வளர்ச்சி சரிந்தது.

மார்ச் மாதத்தில் லாக்டௌன் அறிவிக்கப்பட்டாலும் கடைசி வாரத்தில் மட்டுமே லாக்டௌன் இருந்தது. ஒருவேளை லாக்டௌன் இல்லை என்றாலும் இந்த வளர்ச்சி விகிதத்தில் பெரிய வித்தியாசம் இருந்திருக்க வாய்ப்பில்லை.

Finance Minister Nirmala Sitharaman

-23.9% சரிந்த வளர்ச்சி....

மார்ச் மாதம் 25-ம் தேதி லாக்டௌன் அறிவிக்கப்பட்டதிலிருந்து பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அதன் தாக்கம் பொருளாதாரத்தில் எதிரொலிக்க காலம் ஆனது. ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் -23.9% என்கிற அளவுக்கு சரிந்தது. செப்டம்பர் காலாண்டில் பொருளாதாரம் கொஞ்சம் முன்னேறினாலும் -7.5% என்கிற அளவுக்குத்தான் வளர்ச்சி இருந்தது.

இந்த நிலையில், ``எதிர்பார்த்ததைவிட இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது. அதனால் மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பாசிட்டிவ்வாக இருக்கும்" என ரிசர்வ் வங்கி கணித்திருக்கிறது. 0.1% என்கிற அளவுக்கு இந்த வளர்ச்சி இருக்கக்கூடும் எனத் தெரிவித்திருக்கிறது.

எப்படி இருந்தாலும் நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி எதிர்மறையில்தான் இருக்கும். ரிசர்வ் வங்கியின் தற்போதைய கணிப்பின்படி, -7.5% என்கிற அளவுக்கு பொருளாதாரம் சரியும் என கணிக்கப்பட்டிருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் -10.3%, மூடிஸ் -10.6% மற்றும் பிட்ச் -9.4% என்கிற அளவுக்குப் பொருளாதாரத்தில் சரிவு இருக்கும் எனக் கணித்திருக்கின்றன.

RBI

ரிசர்வ் வங்கி என்ன செய்தது?

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்தது. பொருளாதாரத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்பதால், பலர் வேலை இழப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. அதனால் கடன்கள் மீது மொரட்டோரியம் அறிவித்தது. முதல் கட்டமாக மார்ச் முதல் மூன்று மாதங்களுக்கு இது அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, இந்தச் சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது, இந்த ஆறு மாத காலத்துக்கு கடன் தவணையை செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. (மார்ச் முதல் ஆகஸ்ட் வரை)

ஆனால், இந்தக் காலத்தில் செலுத்தப்பட வேண்டிய வட்டி மீது வட்டியை வங்கிகள் வசூலிக்க திட்டமிட்டன. இதனால் உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்தனர். அதனால் வட்டி மீது வட்டி வசூலிப்பது ரத்துசெய்யப்பட்டது. ரிசர்வ் வங்கி வழங்கிய சலுகையைப் பயன்படுத்தாமல் தொடர்ந்து கடன் தவணையை செலுத்தியவர்களுக்கு இந்த வட்டி மீதான வட்டித் தொகை கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசு ரூ.6,000 கோடியை ஒதுக்கியது.

குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம்...

மேலும், பொருளாதார நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக ரெப்போ விகிதத்தை வெகுவாகக் குறைத்தது. கடந்த பிப்ரவரியில் ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக இருந்தது. ஆனால், மார்ச் மாதம் 27-ம் தேதி நடந்த முதல்கட்ட அறிவிப்பில் 0.75% என்கிற அளவுக்கு ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. அடுத்தகட்டமாக மே மாதம் 0.40% என்கிற அளவுக்கு ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டது. தற்போது ரெப்போ விகிதம் 4% என்கிற அளவில் இருக்கிறது. 2014-ம் ஆண்டு ரெப்போ விகிதம் 8% என்கிற அளவுக்கு இருந்தது நினைவுகூரத்தக்கது. ரெப்போ விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டதால், கடன்களுகாக வட்டி விகிதம் மட்டுமல்லாமல் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் வெகுவாகக் குறைந்தது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் குறைந்தது.

வீட்டுக்கடனை எடுத்துக்கொண்டால் 6.90% வட்டியில் எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளில் வீட்டுக்கடன் கிடைக்கிறது. அதேபோல, தனிநபர், எஸ்.எம்.இ மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருமுறை கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. தெளிவான திட்டமிடலுடன் இந்த மறுசீரமைப்பு இருக்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தது.

நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சகம் செய்தது என்ன?

பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் மத்திய நிதி அமைச்சகமும் இறங்கியது. 20 லட்சம் கோடி ரூபாய் ஆத்மநிர்பார் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு வழங்கப்பட்டது என்பதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதுவரை மொத்தமாக 29.5 லட்சம் கோடிக்கான சலுகைகள், அதாவது இந்திய ஜி.டி.பி-யில் சுமார் 10% என்கிற அளவுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்தாலும், அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

இந்த ரூ.20 லட்சம் கோடியில் எவ்வளவு தொகை சம்பந்தப்பட்டவர்களுக்குச் சென்றைடைந்தது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டதின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபுல் சர்தா கேள்வி எழுப்பியிருந்தார். உதாரணத்துக்கு, சிறுகுறு நிறுவனங்களுக்காக Emergency Credit Line Guarantee திட்டத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 31-ம் தேதிவரை 1.2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டிருப்பதாக ஆர்.டி.ஐ மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்த ஒரு திட்டத்தின் கீழ் 40% மட்டுமே பயன் கிடைத்திருக்கிறது என சர்தா தெரிவித்திருக்கிறார். டிசம்பர் 4-ம் தேதி நிலவரப்படி, ரூ.2.05 லட்சம் கோடி வழங்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

GST

ஜி.எஸ்.டி வசூல் குறைவு

லாக்டௌன் காரணமாகப் பல தொழில்கள் முடக்கப்பட்டன. அதனால் நடப்பு நிதி ஆண்டின் ஜி.எஸ்.டி வசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.10 லட்சம் கோடிக்கு மேல் இருந்த ஜி.எஸ்.டி வசூல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 32,172 கோடி அளவுக்கு மட்டுமே இருந்தது. ஜி.எஸ்.டி தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்ததும் வசூல் குறைவதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். தளர்வுகள் வழங்கப்படுவதற்கு ஏற்ப ஜி.எஸ்.டி வசூல் உயர்ந்து வந்தது. கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் மீண்டும் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி வசூல் உயர்ந்தது.

இருந்தாலும் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மொத்த ஜி.எஸ்.டி வசூல் 17.4 சதவிகிதம் அளவுக்கு குறைந்திருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை எவ்வளவு?

நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறையை ஜி.டி.பியில் 3.5 சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால், ஜி.டி.பி-யில் ஏற்படும் சரிவு மற்றும் அரசின் நடவடிக்கைகள் காரணமாக நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 8 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு

தர மதிப்பீட்டு நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் உள்ளிட்டோர் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், ``இப்போதைக்கு செலவு செய்வதைக் குறைக்க மாட்டோம். பொருளாதாரத்தை மீட்பதற்கு செலவு செய்வது முக்கியம்" என நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்பட இருக்கிறது. ``இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் பட்ஜெட்டாக அது இருக்கும்" என்றும் நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

``கொரோனாவைத் தடுப்பதற்கு தடுப்பூசி தேவை. அதேபோல வளர்ச்சிக்கான ஊசியும் தேவை (We need a Growth Vaccine)" என பொருளாதார நிபுணர் கௌசிக் பாசு கூறியிருக்கிறார். அந்த ஊசி பட்ஜெட்டில் கிடைக்கும் என நம்புவோம்.



source https://www.vikatan.com/business/finance/major-economic-events-which-are-happened-in-india-this-year-rewind-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக